Tuesday, April 17, 2012

17-சேற்றில் செந்தாமரை

. ஒரு முறை நாங்கள் பழனிக்கு முருகனை தரிசிக்கச் சென்றோம்.நாங்கள் சென்ற ரயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.மலைப் பகுதி வந்தவுடன் விரைவில் பழனி வந்துவிடும் என்று வெளியே பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.பழனியை நெருங்கியபோது ரயில் மெதுவாகச் சென்றது.
அந்த மலைகளின் இடையே இரண்டு பெண்கள் பதினாறு பதினேழு வயதிருக்கும் குட்டைப் பாவாடை அணிந்து தோளிலே ஒரு பையை மாட்டிக் கொண்டு நின்றிருந்தனர்.அவர்களின் உடை அலங்காரத்திளிருந்தே அவர்கள் இருவரும் நரிக்குறவர் என்னும் நாடோடிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று புரிந்து கொண்டேன்.
சற்று அருகே நின்றிருந்தவர்கள் ரயிலை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்களில் ஒருத்தியின் கண்களைப் பார்த்தபோது என்னால் அந்தக் கண்களை விட்டு வேறு எதையும் பார்க்க இயலவில்லை. மதுரை மீனாட்சியை கயல்கண்ணி என்பார்கள் அந்தக் கண்களைத்தான் அந்த அம்பாள் இவளுக்குக்  கொடுத்திருக்கிறாள் என்னும் படி அந்தக் கண்கள் பிரகாசித்தன.
ஊருக்குள் சென்று முருகனைத் தரிசித்தபின்பும் அதை என்னால் மறக்க முடியவில்லை.
       ஊர்திரும்புவதற்காக ரயிலடியில் அமர்ந்திருந்த போது அந்தப் பெண்களை அருகில் பார்க்க நேர்ந்தது.
அந்த அழகிய கண்களால் அவள் முகமே அந்த அம்பாளின் முகமாக எனக்குத் தெரிந்தது.
"உன் பெயர் என்னம்மா?"
"எம்பேரு மதுராந்தகி.இவ என் சிநேகிதி இவ பேரு செங்கல்பட்லா"
மதுராந்தகி என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்."பொருத்தமான பேரு.அது என்ன செங்கல்பட்லா?அவளுக்கும் உன்னைப் போல நல்ல பேரு இல்லையா?" என்றேன் புன்னகையோடு.
"அதுவா அம்மா, நானு மதுராந்தகத்திலே இருக்கும்போது பொறந்தேனாம்.அதனாலே மதுராந்தகி. இவ செங்கல்பட்டிலே இருக்கும்போது பொறந்தா. அதனாலே செங்கல்பட்லா.நாங்க எந்த ஊருலே பொறந்தோமோ அந்த ஊரு பேரைத்தான் வச்சுக் கூப்புடுவாங்கோ." என்று விட்டுச் சிரித்தாள் அந்தப் பெண்.இன்னும் சற்று நேரம் அவளின் அந்த அழகு முகத்தையும் அம்பாளின் அந்தக் கண்களையும் பார்த்துக் கொண்டே இருக்க ஆசையால் அவர்களிடம் பேசிக்கொண்டே இருந்தேன்.ஆனால் ரயில் அன்று சரியான நேரத்திற்கு வந்துவிடவே அந்தப் பெண்களுக்கு ஒரு ஐந்து ரூபாய்த தாளைக் கொடுத்துவிட்டு எழுந்தேன்.
"நீங்க நல்லாயிருக்கோணும்" அந்த வாழ்த்து அம்பாள் எனக்கு அளித்த ஆசியாக எண்ணிக் கொண்டேன்.
இந்த நிகழ்ச்சி நடந்து நாற்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகிறது.
அழகு என்ற சொல்லைக் கேகும்போதோ படிக்கும் போதோ மதுராந்தகியின் நினைவு வராமல் இருப்பதில்லை.ஆண்டவன் எங்கெல்லாம் அழகை மறைத்து வைத்துள்ளான் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.
சேற்றிலே செந்தாமரை என்பதைமட்டுமல்ல குறப் பெண்ணிடமும்  கொஞ்சும் அழகை வைத்த அந்த ஆண்டவனின் விளையாட்டை  எண்ணி வியக்கிறேன். என்னால் படைக்கப்பட்ட எல்லாப் பொருள்களிலும் உள்ள சிறப்பைத் தேடிப் பார் என்று இறைவன் நமக்குச் சொல்லாமல் சொல்கிறான் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும் போலும்.
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Wednesday, April 4, 2012

16.உண்மை அன்பு.

             சுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள்  குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும்ப எண்ணினால் எந்த பேருந்திலும் இடம் கிடைக்கவில்லை. எல்லாப்  பேருந்திலும் கூட்ட நெரிசல். சீர்காழியில் கோயிலில் ஏதோ விசேஷம் எனத் தெரிந்தது. மறுநாளைக்கு பயணச் சீட்டை நிர்ணயம் செய்து கொண்டு ஹோட்டலுக்கு வந்து அமர்ந்து கொண்டு யாரேனும் உறவினர் தெரிந்தவர் அந்த ஊரில் இருக்கிறார்களா ஒரு இரவு மட்டும் தங்க என்று யோசித்தோம்.
            நல்லவேளையாக அந்த ஊரில் என் நண்பருக்கு உறவினர் இருப்பது நினைவுக்கு வந்தது.எப்போதோ அவரைச் சந்தித்திருந்ததால் அவரது இல்லத்தில் அன்றிரவைக் கழிக்கலாம் என முடிவு செய்து அவர் வீட்டுக் கதவை இரவு எட்டு மணிக்குத் தட்டினேன்.ஒரு பத்து வயது சிறுமி கதவைத் திறந்தாள்.அவளது பின்னாலேயே என் நண்பரின் உறவினரும் வ்ந்தார்.எங்களைப் பார்த்து சற்றே யோசித்தவர் நான் நண்பரின் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வந்தவராய் முக மலர்ச்சியுடன் வரவேற்றார்.நடுக்கூடத்தில்மூன்று வயது சிறுவன் சாப்பிடத் தெரியாமல் சிந்தியவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.வீட்டின் தலைவர் எங்களை கை கால் அலம்பிக் கொண்டு வாருங்கள் சாப்பிடலாம் என்று உபசரித்தார்.
           அவர் பேசிக்கொண்டே குழந்தையைத் தூக்கி சுத்தம் செய்து அந்த இடத்தையும் சித்தம் செய்தார். அதே சமயம் சமையல் கட்டிலிருந்து தாளிக்கும் சத்தம் கேட்டது.பத்து வயதுப் பெண் உள்ளே எங்களுக்காக உப்புமா தயாரித்துக் கொண்டிருப்பது புரிந்தது.அந்தச் சிறுமியின் பொறுப்புணர்ச்சியைக் கண்டு வியந்து போனேன் நான்."நான் செய்வேனே ஏன் குழந்தை சிரமப்பட வேண்டும்" என்றேன்.அப்போது அங்கு வந்த அந்தப் பெண் ஒரு புன்னகையாலே தன் மறுப்பைத் தெரிவித்து உள்ளே சென்றாள்.
            திடீரென உள்ளே ஏதோ சத்தம் கேட்டது.அந்தப் பெண் தன் அப்பாவிடம் ஏதோ பேசினாள்.அவரும் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு உள்ளே சென்று விட்டு வ்ந்தார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.உள்ளே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஒரே ஆவல். இருப்பினும் நாங்கள் அமைதியாகசாப்பிட அமர்ந்தோம்.எல்லோரையும் அமரச் சொல்லி அந்தசிறுமி பரிமாறத் தொடங்கினாள்.அப்போது பின் பக்கமிருந்த ஓர் அறையிலிருந்த பெரும் குரல் கேட்டது.
            அந்தப் பெண் தன் தந்தையைப் பரிதாபமாகப் பார்த்தாள்.அவரும் "பரவாயில்லை அம்மா.அவளை இங்கேயே அழைத்து வந்து உட்காரவை.
அவளை விட்டு விட்டு எனக்கென்ன சாப்பாடு வேண்டியிருக்கிறது."என்றவுடன் தயங்கியவாறே அந்தப் பெண் உள்ளே சென்று ஒரு பெண்மணியை அழைத்து வந்தாள்.அங்கேயே உட்கார வைத்து அந்த அம்மாவுக்கும் ஊட்டி விட்டாள்.சாப்பிட அடம் செய்த அந்தப் பெண்மணியை கெஞ்சியும் கொஞ்சியும் ஊட்டிவிட்டாள் அந்தச் சிறுமி.
           இரவு அனைவரும் தூங்கச் சென்றபின் வீட்டின் தலைவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் கூறினார்."எனக்குத் திருமணமாகி பதினைந்து வருடங்களாகின்றன.ஐந்து வருடம்  கழித்து மூத்த மகள் பிறந்தாள்.பலவருடங்கள் கழித்து மகன் பிறந்தான். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என எண்ணியபோது என் மனைவிக்கு சித்த பிரமை ஏற்பட்டது.நினைத்ததைப் பேசுவாள். சில சமயம் பொருள்களை விசிறி அடிப்பாள். என்மகள் தான் இப்போது அவளுக்கு தாயாக இருந்து கவனித்துக் கொள்கிறாள்.மருந்து மாத்திரை எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.நீங்கள் வந்திருக்கும்போது ஏதேனும் ரகளை செய்தால் என்ன செய்வது என்று அவளை அறையில் போட்டுப் பூட்டி விட்டாள் என் மகள். அதுவே என்னால் தாங்க முடியவில்லை."
அவரின் அன்புள்ளத்தை எண்ணி நான் வியந்தேன்.அப்போது "அப்பா, தூங்கப் போங்கள். அம்மா தூங்கியாச்சு"என்றபடியே அங்கு  வந்த அந்தச் சிறுமியை மானசீகமாக  வணங்கினேன்.
துன்பத்திலும் புன்னகை முகம் காட்டும் பண்பு, தாயிடம் கொஞ்சவேண்டிய குழந்தை அந்தத் தாய்க்கே தாயாக இருந்து ஊட்டி வளர்க்கும் கனிவு, 
வீட்டிற்கு வந்த விருந்தினரை தந்தை சொல்லாமலேயே உபசரித்த சிறப்பு, தந்தையிடம் தாய் தூங்கிவிட்டாள் எனச் சொன்ன பொறுப்புணர்ச்சி,தந்தையைத் தூங்கச் சொன்ன கடமையுணர்ச்சி இத்தனை பண்புகளையும் ஒருங்கே பெற்ற அந்த சிறுமியை நான் வணங்கியது சரிதானே.--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com