Tuesday, June 19, 2012

22.தொலஞ்சது கெடச்சுது.

கடந்த வாரம் ஒரு நாள் நானும் என் மகளும் ஒரு விசேஷ நாளில் இங்குள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குப் போயிருந்தோம்.தீபாராதனை முடிந்தபின் ஒரு தோழி என் மகளிடம் பேசிக்கொண்டிருந்தாள்.நான் கோயிலை பிரதக்ஷணம் செய்து கொண்டிருந்தேன்.சுற்றிக்  கொண்டிருந்த நான் என் மகளிடம் அவள் தோழி ஏதோ காகிதத்தைக் கொடுத்தாள்.என் மகளும் அதை வாங்கிக் கொள்வதைப் பார்த்தேன்.அதன் பின் அதைப் பற்றி நானும் மறந்தேன் அவளும் மறந்து விட்டாள்.அதன்பின் கடைகளுக்குப் போனோம். சில பொருட்கள் வாங்கினோம். வீடு வந்து சேர்ந்தோம்.
             ஒரு வாரம் கடந்தது.ஒருநாள் என் மகள் பரபரப்புடன் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.வாய் விட்டு அழாத குறை.எங்கே வைத்தேன் என்று தனக்குத் தானே பேசிக் கொண்டாள்.அவள் தவிப்பைப் பொறுக்காத நான் "என்ன தேடுகிறாய் காலையிலிருந்து?"என்றேன்
            "அம்மா, அதுவந்து போனவாரம் கோயிலில் என் தோழி கொடுத்தாளல்லவா ஒரு செக் அதைக் காணவில்லை.இன்னிக்கி பேங்கில டெபாசிட் பண்ணனும் என்றாள் அழாத குறையாக.நானும் தேடத் தொடங்கினேன்.தேடிக் கொண்டே "எத்தனை டாலர்டீ?"என்றேன்
"நூறு டாலர் அம்மா" என்றாள் பதட்டத்தோடு.
எங்கு விழுந்ததோ என்னவாயிற்றோ. சரி விடு. ஒருவாரம் பார்ப்போம் அநேகமாகக் கிடைத்துவிடும் என்றார் என் மருமகன் கூலாக.
அவர் சொன்னது போலவே ஒரு வாரம் கழிந்தது. ஒரு மாலைநேரம் என் மகளுக்கு ஒரு போன் வந்தது.அதைக் கேட்டு அவள் துள்ளிக் குதித்து என்னிடம் அம்மா, செக் கெடச்சுடுச்சும்மா என்றாள்.
"எப்படிகெடச்சுது?" என்றேன் ஆர்வத்துடன்.
"அது ஒரு கதை மாதிரியாச்சும்மா என்றவள் கூறினாள்.நான் அந்தசெக்கை கோயிலிலேயே தவறவிட்டுட்டேன். கோயிலுக்கு வந்த யாரோ அதை அது எந்த பேங்க்  செக்கோ அதே பாங்கிலே கொடுத்துட்டார்.அந்த பேங்கிலே நம்ம கஸ்டமர் கொடுத்த செக் அப்படின்னு பார்த்து அந்தத் தோழிக்கே சொல்லியிருக்கார். அவளும் பேங்குக்குப் போயி அந்த செக்கை வாங்கி வச்சிருக்கா . இப்போ கொண்டு வந்து தரேன் என்று இப்போ சொன்னா. என்றாள் புன்னகையுடன். இது எப்படியிருக்கு. கையை விட்டுப் போன சிறு துண்டுப் பேப்பர் எங்கேயோ போய் மீண்டும் கொடுத்தவருக்கே போய் உரியவரிடம் வந்து சேரும் விந்தையை எண்ணி நான் சிரித்தேன்.
அப்போது ஒரு பெட்டி பார்சலில் வந்தது. யார் அனுப்பியிருக்கா பார்.என்றேன் ஆர்வமாக. யாருன்னே தெரியலையம்மா என்றபடியே பார்சலைப் பிரித்தாள். அதிலிருந்த பொருளைப் பார்த்ததும் துள்ளிக் குதித்தாள்.
"அம்மா, போன மாசக் கடைசியிலே நாம பீச்சுக்குப் போயிருந்தோமே அங்கே என்னோட சின்ன பணப் பையைத் தவற விட்டுட்டேன்னு சொன்னேனில்லையா.அதுக்குள்ளேதான் என்னோட ஏ, டி எம் கார்டு, கிரெடிட் கார்டு, கார் லைசன்சு எல்லாம் இருந்துது.அதெல்லாம் அப்படியே இருக்கும்மா. ஒரு கடிதமும் இருக்கும்மா.பீச்சிலே கெடச்சுதாம் என்னோட அட்ரெஸ் லைசென்சுல பார்த்து இதை அனுப்பியிருக்கார்.என்றாள். நான் ஆச்சரியத்தில் மலைத்துப் போனேன்.என்றோ தொலைந்த பொருள் இன்று கிடைப்பது என்னால் நினைக்க இயலாத ஒன்று.
"சரிதான் தொலஞ்சது கெடைக்கும் வாரமா இது."என்றேன் புன்னகையோடு என் மகளும் சேர்ந்து சிரித்தாள்.அத்துடன் "அமெரிக்காவில் இதெல்லாம் சகஜமாக நடப்பதுதான் அம்மா"என்றாள் .





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Wednesday, June 13, 2012

21- அவசரகாலம்

அமெரிக்காவில் ஒரு மாலை நேரம் நானும் என் மகளும் காரில் சென்று கொண்டிருந்தோம்.திடீரென்று பின் புறமாக போலீசின் அபாய மணி ஒலி கேட்டது. எங்கள் கார் அறுபது மைல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.காரோட்டி வந்த  என் மகள் சட்டென வண்டியை  ஓரமாக நிறுத்தி விட்டாள். போலீஸ் வண்டி, ஒரு ஆம்புலன்ஸ், ஒரு தீயணைக்கும் வண்டி ஆகியன எங்களைக் கடந்து சென்றன.அதற்குள் எங்களைச் சுற்றி நான்கு சாலைகளிலும் நூற்றுக் கணக்கான வண்டிகள் வரிசையில் நின்றிருந்தன.
எங்கோ விபத்து நேர்ந்துள்ளது.அதற்கு உடனடியாக போலீஸ்  உதவி செல்கிறது அதற்கு நாங்கள் முதலில் வழி விட்டுதான் ஆகவேண்டும்.என்ற அவள் செய்தியை கேட்டபோது பெங்களூரில் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு  வந்து என்னைத் துயரத்தில் ஆழ்த்தியது.
என் உறவினர் ஒருவர் மிகவும் நலமாக இருந்தவர் எந்த நோயும் இல்லாதவர்.நன்றாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று மார்பு வலிக்கிறது என்றார்.அவரை ஆம்புலன்ஸ் வரவழைத்து சற்றுத் தொலைவில் இருந்த மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றார்கள்.ஆனால் வழியில் போக்குவரத்தில் நெரிசல் (டிராபிக் ஜாம்) ஏற்பட்டதால் வண்டிகள் நகர இயலவில்லை.ஒரே சத்தம். ஆம்புலன்சுக்குள்ளே மரணத்தோடு போராடும் நோயாளி. வெளியே கார்கள் நகர முடியாமல் போடும் சத்தம். கணவரின் உயிர் பிரிவதைப் பார்த்து மனைவி துடிப்பு. அரைமணி நேரம் கழித்து அந்த நண்பரை மருத்துவ மனைக்குள் அழைத்துச் செல்லும்போது அவர் உயிர பிரிந்து அரைமணி நேரம் ஆகியிருந்தது. இந்நேரம் அமெரிக்காவாக இருந்திருந்தால் அந்த நண்பரின் உயிர் காப்பாற்றப் பட்டிருக்கும்.
இந்த நிலைக்கு யார் காரணம்? எது காரணம் ?என்னகாரணம்?பொதுமக்களாகிய நாம் சிந்திக்க வேண்டும். இதற்கொரு வழி காண வேண்டும்
அவசர காலத்திற்கென்று வண்டி இருப்பது போல் வழியும் இருக்கவேண்டும்.







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com