Thursday, July 19, 2012

25-பிஞ்சு நெஞ்சம்.

நான் ஆசிரியையாகப் பணியேற்ற புதிது. முதலில் ஐந்தாம் வகுப்பிற்குதான் ஆசிரியையாகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.அந்த பிஞ்சுக் குழந்தைகளைப் பற்றிய போதிய அறிவும் அனுபவமும் எனக்கு அப்போது இல்லை.அதனால் எனக்குத் தெரிந்த சில விஷயங்களைக் கதை மூலமாகக் குழந்தைகளுக்குச் சொல்வது வழக்கம்.கதை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது/ அதுவும் குழந்தைகளுக்குப் பிடிக்கக்கேட்பானேன்.அப்படி ஒருநாள் அம்மாவைப் பற்றிய என் கற்பனைக் கதையைச் சொல்லத் தொடங்கினேன்.
அம்மாவின் அன்பு நம்மீது அவள் கொண்டுள்ள  ஆசை அக்கறை நமக்காக அவள் செய்யும் தியாகம் வேலைகள் என்றெல்லாம் சொல்லிவந்தேன்.சில குழந்தைகள் தன் அம்மாவும் அப்படித்தான் என பெருமையாகச் சொல்லிக் கொண்டனர். வகுப்பு மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று ஒரு கேவல் சத்தம் எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறுமி அழுவது தெரிந்தது.கண்கள் குளமாக கேவலுடன் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணைப் பார்க்க மிகவும் வருத்தமாகிவிட்டது எனக்கு. அவளை அருகே அழைத்தேன்.தயங்கியவாறு வந்த பெண் தன் அழுகையை நிறுத்தமுடியாமல் தவித்தாள்.அருகே இருந்தவள்" டீச்சர், அவளோட அம்மா இறந்துட்டாங்க அவளுக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்குமாம்." என்ற போது என் மனத்துக்குள் யாரோ சாட்டையால் அடிப்பதைப்போல் வலியை உணர்ந்தேன்.
.
ஏதோ அறிவுரை கூறுவதாக என்ணிக் கொண்டு சற்று மிகைப் படுத்திக் கூறி இந்தப் பெண்ணின் மனப் புண்ணைக் கீறி வேதனைப் படுத்தி விட்டதற்காக மிகவும் வருந்தினேன்.

பின்னர் பேச்சை மாற்றி வகுப்பை சமநிலைக்குக் கொண்டு வந்தேன். ஆனால் அந்தப் பெண்ணின் வேதனை படிந்த கண்களையும் ஏக்கத்தில் துவண்ட மனவாட்டத்தையும் என்னால் மறக்க இயலவில்லை.
 
அன்று மாலையே அவள் இல்லம் சென்று அவளையும் அவள் தந்தையையும் பார்த்துப் பேசினேன். மீண்டும் அந்தப் பிஞ்சு நெஞ்சத்தில் மகிழ்ச்சியையும் முகத்தில் மலர்ச்சியையும்  பார்த்தபிறகே என் மனம் ஓரளவு அமைதியடைந்தது.
யார் மனமும் புண்படாமல் பேசவேண்டும் என்ற அனுபவத்தை இந்த நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன்.என் மனதை விட்டு அகலாத நினைவு என்றே சொல்லலாம்.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Sunday, July 8, 2012

24.அமெரிக்க தீபாவளி

அமெரிக்க தீபாவளி.
நாட்டுக்கு நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அந்தந்த  நாட்டுக் கலாச்சாரத்தின்படி சுதந்திர நாளைக் கொண்டாடுகின்றனர். அமெரிக்காவிலும் இந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் நான்காம் நாளை
சுதந்திர தினமாகக் கொண்டாடுகின்றனர். அரசாங்க விடுமுறை நாளான இன்று மாலையில் நமது நாட்டு தீபாவளி நாள் போல இங்கும் மத்தாப்பு கொளுத்தி ஊரையே ஒளி வெள்ளமாக மாற்றுகின்றனர்.
ஒவ்வொரு நகரிலும் ஒரு பெரிய மைதானத்தில் மக்கள் அனைவரும் கூடுகின்றனர்.இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் வண்ண மயமான  மத்தாப்பு கொளுத்தும் காட்சி சுமார் நாற்பது நிமிடங்கள் நடைபெறுகின்றது.
இந்த வண்ணக் காட்சியைக் காண அமெரிக்க மக்கள் கூடியிருக்கும் காட்சியை படத்தில் பாருங்கள்.







தீப ஒளியையும் மக்கள் கூட்டத்தையும் காணும் போது பெரிய பண்டிகையைக் கொண்டாடிய
திருப்தி நம் மனதுக்கு ஏற்படுகின்றது.
எந்த நாடாக இருந்தாலும் குழந்தைகள் உலகமே ஒன்றுதான் என்பதை அந்நாட்டுக் குழந்தைகள் ஆரவாரத்துடன் பூவாணத்தை ரசித்ததன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
காட்சி முடிந்தபின் எங்கள் கார் நிறுத்தியிருந்த இடத்தை நாங்கள் அடைய அரைமணி நேரம் ஆயிற்று எங்கள் கார் இருந்த இடத்திலிருந்து நகர் அரைமணி நேரம் ஆயிற்று.அத்தனை நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்துச் சென்று கொண்டே இருந்தன.ஒன்பது நாற்பதுக்குப் புறப்பட்ட நாங்கள் வீட்டை அடைய சுமார் பதினொன்றரை மணி ஆயிற்று. இத்தனை கூட்டம் இருந்தாலும் எந்த சத்தமும் இன்றி அமைதியாக நகர்ந்துகொண்டு  இருந்ததுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்..


















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Friday, July 6, 2012

23--அமெரிக்காவில் இந்தியா.

அமெரிக்காவில் இந்தியாவா  என்று ஆச்சரியப்படலாம். எனக்கும் கூட அப்படித்தான் இருந்தது.ஆனால் நியூஜெர்சியில் எடிசன் என்ற இடத்தில் பெரிய தெருவில் நுழைந்தால் வரிசையாக புடவை அழகழகான உடைகள் நகைக் கடைகள், சிறுவர்க்கான உடைகள் நமது சிற்றுண்டி வகைகள், முக்கியமாக தோசை வடை போன்றவை விற்கும் கடைகள் வரிசையாக இருப்பதைப் பார்த்து அசந்து போனேன்.

--
     இதோ மேலே உள்ள படத்தில் நம் ஊர் பொம்மைக் கடைபோல வரிசையாக பொம்மைகளை அடுக்கி வைத்துள்ளனர்.அத்துடன் இங்கு பெரிய மண் பொம்மைகள் கிடைக்கும் இடமும் இருப்பதாகச் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது.
அருகே உள்ள இன்னொரு படத்தில் நான் பார்த்து மகிழ்ந்த புடவைகளை  நீங்களும் கண்டு மகிழுங்கள்.  மிகப் பிரம்மாண்டமான இடத்தில்  புடவைகளை வைத்துள்ளனர். நான் சுட்டிக் காட்டுவது ஒரு துளிதான்.                         
    

இதுதான் இந்தியன் ரெஸ்டாரென்ட்.நாங்கள் தேநீர் குடிக்கும் அழகை நீங்களும் பாருங்கள்.எங்களுடன் வந்திருந்த குழந்தைகள் விரும்பிய உணவை இங்கு சுவைத்து மகிழ்ந்தனர்.
அமெரிக்கா வந்து மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் இந்தியாவைப் பார்த்த திருப்தி என் மனதுக்கு ஏற்பட்டது. சென்னை திரும்பும் ஆவலை இந்த நிகழ்ச்சி எனக்குள் தூண்டிவிட்டது என்பது என்னவோ உண்மை.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com