Tuesday, October 16, 2012

33 amma sonna kadhai.

                        அம்மா சொன்ன கதை.
 மாலை நேரம். அந்தக் காலத்தில் மின்விளக்கு கிடையாது. லேசாக இருட்டும்  நேரம். வாசலில் அமர்ந்திருந்த அம்மா சமயலறையில் இருந்த கைவிளக்கை ஏற்றிவிட்டு வரும்படி கூறினார்.எனக்கு அப்போது பனிரெண்டு வயது.இருட்டி உள்ளே போக எனக்குப் பயம் ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் விளையாட்டு மும்முரத்தில் இருப்பது போல் காட்டிக் கொண்டேன். அவர்கள் சொல்வது காதில் விழாதது போல் இருந்தேன்.ஆனால் அம்மாவோ விடுவதாக இல்லை.அதனால் பயமாக இருக்கும்மா என்று அழுவதுபோல் கூறினேன்.
அதற்கு அம்மா,"இதோபார்.அஞ்சுவதற்கு அஞ்சு.ஆனால் அச்சம் தவிரனு படிச்சது மறந்துபோச்சா?" என்றார் சற்றே கடுமையாக.அப்போதும் என் மனம் துணியவில்லை உள்ளே செல்ல.
உனக்கு ஒரு கதை சொல்றேன் கேளு.என்று ஆரம்பித்தார்."ஒரு முறை பாரதியார் சிந்தனையோடு அமர்ந்திருந்தார்.அப்போது அஷ்டலக்ஷ்மிகளும் அவர் முன் வந்து நின்றார்களாம்.அவர்கள் பாரதியாரிடம்,"பாரதி, நாங்கள் எட்டு பெரும் உன்னை விட்டு விலகப் போகிறோம் என்று சொன்னார்களாம்.நான் குறுக்கே கேட்டேன்."யாரம்மா அந்த எட்டுப்பேர்?"
அவர்கள்தான் செல்வம் தரும் தனலட்சுமி, குழந்தைப்பேறு தரும் சந்தானலட்சுமி, வெற்றியைத் தரும் விஜயலட்சுமி,தான்யலட்சுமி , வீரலட்சுமி, தைரியலட்சுமி ஆதிலட்சுமி,போன்ற எட்டுப்பேர்.உடனே இவர்கள் இப்படிச் சொன்னதும் பாரதி மறுப்புச் சொல்லலே. ஆனால் நீங்கள் போகும்போது ஒவ்வொருத்தரும் என்னிடம் சொல்லிட்டுத்தான் போகணும்னு சொன்னார்.அதனாலே மறுநாள் நாங்க இப்போ போகப்போறோம்னு சொன்னவுடனே பாரதி ஒரு கம்பிக் கையிலே எடுத்துக் கொண்டு வாசலிலே நின்னாராம்.ஒவ்வொருத்தரா வெளியே போகச் சொன்னாராம்.வெளியே போகும் ஒவ்வொருத்தரையும் உன் பேர் என்னனு கேட்டார்.நான் தன லக்ஷ்மின்னதும் போன்னு அனுப்பினார். நான் தான்யலக்ஷ்மின்னதும் போன்னார்  இப்படியே ஏழு பேர் போயாச்சு. கடைசியா வந்தவ தைரியலட்சுமி.அவள் நான் தைரியலக்ஷ்மின்னு சொன்னதும் பாரதி என்ன சொன்னார் தெரியுமா "
நான் ஆவலோடு "என்னம்மா சொன்னார்?"என்றேன்.
"நீ மட்டும் என்னை விட்டுப் போகக் கூடாது உன்னை நான் விடமாட்டேன்.எந்தக் கஷ்டம் நஷ்டம் போராட்டம்  துன்பம் எதுவந்தாலும் தாங்கற துக்கும் எதிர்த்து நிக்கறதுக்கும் மனசிலே தைரியம் வேணும் அதனாலே நீ உள்ளே போன்னு  அவளை மட்டும் நிறுத்திக் கொண்டாராம்.
இதிலேருந்து என்ன தெரியுது?மனுஷனாப் பிறந்தப்புறம் எத்தனையோ கஷ்டங்களைத் தாங்கணும் அதுக்கெல்லாம்தான் தைரியம் வேணும் நீ  இந்த மாலைவேளை இருட்டைப் பார்த்துப் பயப்படறே"
என்று அம்மா சொல்லி முடிக்கும் முன்னரே நான் உள்ளே போய் அந்த விளக்கை ஏற்றிவிட்டு வந்து விட்டேன்.என் அம்மாவும் மகிழ்ச்சியுடன்,"சமத்துக்குட்டி இப்படித்தான் எப்போதும் தைரியமாக இருக்கணும்"என்றார்.இது நம் அனைவருக்குமே பொருந்தும்தானே?











ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Sunday, October 7, 2012

32. உடனே செய்யுங்கள்

.
சுமார் அறுபது ஆண்டுகளுமுன் நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் காலை நேரம் என் அத்தை மகளை எங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வ்ந்தார் என் தந்தையார். அவள் பெற்றோரை இழந்துவிட்டதால் என்னுடன் என் வீட்டில் வளர்ந்து வந்தாள்.எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என்னுடன் பிறந்த சகோதரி யாருமில்லாததால் அவளை நான் என் சகோதரியாகவும் உற்ற தோழியாகவும் ஏற்றுக் கொண்டேன்.நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் சேர்க்கப்பட்டோம்.ஒரே பெஞ்சில் அருகருகே அமர்ந்து கொண்டோம்.
இரவு ஒரே பாயைப் போட்டுக்கொண்டு படுத்துக் கொண்டு ஊர்க்கதைகள் பேசி இரவைக் கழித்தோம்.தாயார் அதட்டும் வரை பேச்சு நீளும். இரவு நேரம் கதை பேசுவது எங்களுக்குப் பிடித்தமானது.குளிர் நாட்களில் அதிகாலையிலேயே எழுந்து வெந்நீர் அடுப்பைப் பற்றவைத்து குளிர் காய்ந்தபடி கதை பேசுவது அதைவிடப் பிடித்தமானது.
இப்படி ஒன்றாகப் படித்து படுத்து ஆடிப்பாடி வாழ்ந்தவர்கள் வாழ்க்கை வேறு வேறு திசைகளுக்கு பயணப் பட்டது.
சில ஆண்டுகள் கழித்து என் தோழியின் கணவருக்கு எங்கள் ஊருக்கே மாற்றல் கிடைத்தது. ஆனால் என்தோழி பார்க்க பரிதாபமாக இருந்தாள். உடல்நிலை சரியில்லையென அறிந்தேன்.
ரத்தமில்லாமல் வெளுத்துப் போயிருந்தாலும் அவளது வேடிக்கைப் பேச்சும் ஜோக்கடிக்கும் திறமையும் சற்றும் குறையவில்லை.நான் என் தந்தையாரைப் பார்க்க பணியிடத்திலிருந்து நேரே போகும்போதெல்லாம் அவளும் அங்கு வந்துவிடுவாள் வெகு நேரம் பழங்கதைகள் பேசுவோம். அப்போது என் தாயார் காலமாகியிருந்தார்கள். அவர்களிடம் வளர்ந்த காரணத்தால் அவளுக்கு என் தாயார் மேல் மிகுந்த பிரியம். சில மணித் துளிகளாவது அவர்களைப் பற்றிப் பேசாமல் போகமாட்டாள்.
ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அவள் கூறினாள்."ருக்கு, அம்மா நம்ம சின்ன வயசிலே கேழ்வரகு தோசை செய்து போடுவார்களே, எவ்வளவு ருசியா இருக்கும்!தேங்காய்ச் சட்டினி வைத்துச் சாப்பிட்டால் எவ்வளவு தோசை வேண்டுமானாலும் சாப்பிடலாம்போலத் தோணும்.எனக்கு அந்த மாதிரி செய்யத் தெரியவில்லை.ஆனா சாப்பிடணும் போல இருக்கு.நீ செஞ்சு தரியா?"
நான் மனம் நெகிழ்ந்து போனேன்."ரெசிப்பி சொல்றேன் அதே மாதிரி செய்யேன்." ஆனால் " எனக்கு வரலை.நீதான் செஞ்சு தரணும்."என்று கூறியபோது மறுநாளே செய்து கொண்டு வருவதாகச் சொல்லிப் புறப்பட்டேன்.
ஆனால் மறுநாள் நான் வேலை விஷயமாகக் கடலூர் செல்ல வேண்டி இருந்தது.ஒரு வார வேலை என்று எண்ணியவள் இரண்டு வாரங்கள் தங்க வேண்டி வந்து விட்டது.ஊர் வந்து சேரும் முன்பாகவே அவள் திடீரென்று காலமாகிவிட்டதாகச் செய்தி வந்தது.
உடனே எனக்கு கேழ்வரகு தோசைதான் நினைவுக்கு வந்தது. என்முன் நின்று எங்கே தோசை என்று கேட்பது போல் தோன்றும். இன்று அவளை நினைத்தாலோ  அல்லது கேழ்வரகு என்ற சொல்லைக் கேட்டாலோ அவளின் முகம் என் முன்னே வந்து என்னை வேதனைப் படுத்தும். பணி முடிந்து திரும்பியபின் செய்து கொடுக்கலாம் என நினைத்த என் கணக்குத் தவறி விட்டது.மனித வாழ்க்கையில் எப்போது அது முடியும் என்பதை கணக்குப் போட நம்மால் இயலுமா? உடனே அவள் கேட்டதை செய்து கொடுத்துவிட்டு நான் ஊருக்குப் போயிருந்தால் இந்த மனக் குறு குறுப்பிலிருந்து  தப்பியிருக்கலாம். அவளைப் பிரிந்த வேதனையை விட இந்த வேதனையே என்னை இன்றளவும் வாட்டுகிறது.
அதன்பின் யாருக்கேனும்  ஏதேனும் செய்யவேண்டுமென்று தோன்றி விட்டால்  இயன்றவரை உடனே அதைச்செய்து விடுவதைப் பழக்கமாகக் கொண்டேன். இதை ஒரு வாழ்க்கைப் பாடமாக நான் நினைத்ததால் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com