Wednesday, October 30, 2013

நீங்களே நீதிபதிகள்.



--


         ஸ்ரீரங்கம் ரங்கனாதர் கோவிலில் உள்ள தாயாரைத் தரிசித்து விட்டு கோதண்டராமரைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு முதிய பெண்மணி எண்பது வயதிருக்கும்  பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார்.அவரைத் தாண்டி சென்ற பின் என்  பின்னால் பெரியதாகப் பேச்சுக் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன்.ஆச்சரியப் பட்டுப் போனேன். அந்த பெண்மணி செல்போனைக் கையில் வைத்துப்  பேசிக் கொண்டிருந்தார்.
         அடுத்தநாள் காலையில் காவிரியாற்றில் குளிப்பதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். வழியில் நெடுக இருந்த குடிசைவீடுகளில் இருந்து தொலைக் காட்சிகளின் ஒலி  கேட்டுக் கொண்டிருந்தது.ஒரு வீட்டின் வாயிலில் இருந்து இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
"இவ்வளவு தூரம் வரணுமா?ஒரு போன் அடிக்கலாமில்லே?"
"உன் நம்பர் தெரியல்லே.என் போன்ல வரிசையா இருவது நெம்பர் இருக்கு."
"எப்படி வந்தே? சைக்கில்லையா?"
"டூ வீலர்லதான்"
இந்த உரையாடலும் ஒரு குடிசை வீட்டின் முன்னாலிருந்துதான் வந்தது.
இந்த நாட்டை ஏழை நாடு என்றோ வளரும் நாடு என்றோ சொல்ல முடியுமா, என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.
              மறுநாள் அதிகாலை துலா ஸ்நானம் செய்வதற்காக காவிரிக்குச் சென்றேன்.அங்கே ஒலிபெருக்கியில் "கம்பியைத் தாண்டிச் செல்லாதீர்கள்.
காவிரியில் புதைகுழிகள் உள்ளன.கம்பிக்கு உள்ளேயே குளியுங்கள்"என்று அறிவிப்புச் செய்து கொண்டிருந்தனர்.  உள்ளே கால் வைக்கவே கூசும் அளவுக்கு குப்பையும் துணிகளும் நிறைந்திருந்தது.ஒருபக்கம் துணி துவைப்பவர்கள் பல் துலக்குபவர்கள் என உள்ளூர் மனிதர்கள் நிறைந்திருந்தனர்.
                தைரியமாகக் கம்பியைத் தாண்டி நடுஆற்றில் சென்று பலரும் குளித்தனர். நாங்களும் அங்கே சென்று குளித்துக் கரையேறினோம். படித்துறையைத் தாண்டி வர இயலாதபடி சிறுநீர் நாற்றம் குடலைப் புரட்டியது.பூலோக வைகுண்டம் என்று புகழப் படும் ஸ்ரீரங்கத்தின் புனிதத் தன்மை  இந்த நிலையால் பங்கப் பட்டிருப்பதை எண்ணி மனதுக்குள் புழுங்கினேன். ஆற்றின் கரையைச் சுத்தப் படுத்த அங்கங்கே ஆட்கள் இருந்து சுத்தம் செய்தால் ஆற்றின் பரிசுத்தமும் புண்ணிய க்ஷேத்திரத்தின் புனிதமும் காப்பாற்றப் படுமே என்று எண்ணினேன்.இப்போது இந்த நிலையைப் பார்த்தால் நம் நாடு முன்னேறியுள்ளது என்று சொல்லமுடியுமா?இரண்டு காட்சிகளையும் பார்த்து நாட்டின் நிலையைக் கூறுங்கள். நீங்களே நீதிபதிகள்.









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Tuesday, October 22, 2013

பழக்கப் படுத்திக் கொள்ளவேணும்.

பழக்கப் படுத்திக் கொள்ளவேணும்.

நாம் சாதாரணமாகவே  தினமும் தவிக்கும் காரியம் ஒன்று உண்டு.தேடுவது. ஒரு பொருளை ஒரு இடத்தில் வைத்துவிட்டு வீடு முழுவதும் தேடும் நிகழ்ச்சி எல்லோர் வீடுகளிலும் நடக்கும் காரியம்.இப்படித் தேடுவதால் எத்தனை நேரம் விரயம். சில சமயங்களில் முக்கிய நிகழ்ச்சிகளுக்குப் போக முடியாமல் போவதும் உண்டு.
ஒரு பொருளை அததற்குண்டான இடத்தில் வைப்பதும் வைத்த இடத்தை நினைவில் வைத்துக் கொள்வதும் மிக மிக அவசியமான ஒன்று.
அப்படியிருந்தால் நமக்கு நேரம் மிச்சம் வேலை மிச்சமாகும். அதனால் உண்டாகும் அவசரமும் பதட்டமும் இருக்காது. இதை நினைவில் வைத்துக் கொண்டு நாமும் சரி பள்ளி கல்லூரிக்குப் போகும் பிள்ளைகளும் சரி நன்கு பழக்கப் படுத்திக்  கொள்ளவேண்டும்.
எல்லா வீடுகளிலும் காலை நேரம் பாருங்கள் எவ்வளவு கலாட்டா நடக்கிறது.
பென்சிலைக் காணோம், என் சாக்ஸ் எங்கே, என் ஹோம்வொர்க் நோட்டைக் காணோம் இங்கேதான் வைத்தேன் என்னும் குரல்கள் இப்போதும் என் காதுகளில் ஒலிக்கிறது. இதில் சில பள்ளி செல்ல விருப்பமில்லாதவர்கள் வேண்டுமென்றே நோட்டை ஒளித்துவிட்டு நோட்புக் இல்லை அதனால் இன்று பள்ளிக்குப் போகமாட்டேன் என்று அடம் பிடிப்பதும் உண்டு.
இவர்கள் மட்டுமல்ல ஆபீஸ் போகும் பெரியவர்களும் இந்த கலாட்டா செய்வது உண்டு.இதற்கெல்லாம் காரணம் முக்கியமான பொருள்களை உரிய இடத்தில் வைக்காததும்  வைத்த இடத்தை மறந்து போவதும்தான் 
இப்படிப்பட்ட நிலைமை ஏற்படாதிருக்க சிறு வயதிலேயே பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும் குழந்தைகளையும் பழக்கப் படுத்த வேண்டும்.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Friday, October 4, 2013

கற்றுக் கொடுங்கள்.

ஒருமுறை அருகே இருந்த ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன்.எங்கள் அருகே இருந்த ஒரு பெண் தன மூன்று வயது கூட நிரம்பாத மகளுக்கு தன கைபேசி எண்ணைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.என் உடன் வந்திருந்த தோழி அதைப் பார்த்துக்  கிண்டலாகச் சிரித்தாள்.
     நான் அவளிடம் என் சிரிக்கிறாய்? என்று கேட்டேன்.அதற்கு அவள்,"
"இந்த சின்ன வயதிலேயே பத்து எண்களை இந்தக் குழந்தையால் 
எப்படி நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.இந்தப் பெண் தன மகளை இப்போவே பெரிய அறிவாளியாகக முயற்சிப்பது பைத்தியக்காரத்தனமாகப் படவில்லையா?"என்று சிரித்தாள்.
அப்போது நான் சிரித்தேன்.இந்தக் காலத்துப் பெண்களுக்கு  எத்தனை கெட்டிக்காரத்தனம்? இதை இவள் புரிந்து கொள்ளவில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.
     சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை அவளுக்குக் கூறினேன் அதையே இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
"அப்போது என் மகனுக்கு ஐந்து வயது. அப்போதுதான் சற்றுத தொலைவில் உள்ள  பெரிய பள்ளியில் சேர்த்திருந்தோம் தினமும் பள்ளி வண்டியிலேயே சென்று வந்தான்.கொஞ்ச நாட்கள் வரை எந்த பிரச்னையும் இல்லை. நிம்மதியாக இருந்தேன்.ஒருமுறை நான் விடுமுறையில் இருந்தேன். அன்று மாலையில் மகனுக்குப் பிடித்த பூரி கிழங்கு செய்து வைத்துக் காத்திருந்தேன்.
பள்ளிவிடும் நேரம் கடந்து ஒரு மணி நேரம் ஆனபின்னரும் குழந்தை வரவில்லையே என்று ஆட்டோ பிடித்துப் பள்ளிக்குச் சென்று பார்த்தபோது,  
பள்ளி காலியாக இருந்தது.எல்லோரும் போய்விட்டார்கள் யாரும் இல்லையென்று காவல்காரர் சொல்லிவிட்டார்.எனக்கு என்ன செய்வது என்று புரியவேயில்லை.வேண்டாத தெய்வமில்லை.அடுத்து ஒருமணி ஓடிவிட்டது.நான்கு மணிக்கு வரவேண்டிய பையன் ஆறு மணியாகியும் வரவில்லையே என்று தவித்தபடியே இருந்தேன். அப்போதெல்லாம் இப்போது இருப்பது போல் தொலைபேசி வசதி பரவலாக இல்லை.அதனால் என் கணவர் வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
வாசலிலேயே காத்திருந்தேன். அப்போது அடுத்தவீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது என்று அழைத்தனர். ஓடினேன். என்ன செய்தியோ என்று என் உள்ளம் தவித்தது."ஹலோ,யார் பேசுவது?"
"அம்மா, உங்க பையன் எங்க கூட இருக்காம்மா."
உடனே ஒரு நிம்மதி என் மனதில் பரவியது.மகன் நலமாக இருக்கிறான்."ரொம்ப நன்றிங்கய்யா. எந்த இடத்திலே இருக்கான்? நான் வந்து அழைத்து வரேன் "
"சரிங்கம்மா. கவலைப் படாதீங்க. பயல் ஜாலியா எங்களோட அரட்டை அடிச்சுகிட்டு இருக்காம்மா.கேக் பிஸ்கட் குடுத்து உக்கார வச்சிருக்கோம்.அடையாறு பஸ் டிப்போவுக்கு வாங்க"என்று கூறி முடித்தார் அந்த நடத்துனர்.அதே சமயம் என்கணவரும் உள்ளே வந்தார்.அவரிடம் செய்தியைச் சொன்னவுடன் அப்படியே அடையாறு நோக்கிப் புறப்பட்டார்.
                      சுமார் அரைமணி நேரம் கழித்து மகனுடன் அவர்  வந்ததைப் பார்த்தவுடன்தான் என் தவிப்பு அடங்கியது.அவன் "அம்மா, எங்கள் பள்ளி வேன் ரிப்பேர்.அதனால எங்களை பஸ்ல எத்திவிட்டுட்டாங்க.அந்த பஸ் நம்ம ஸ்டாப்புக்கு வரவேயில்லை.அதனால நான் இறங்கவேயில்லை.எல்லா பஸ்ஸும் நிக்கிற இடத்துக்குப் போயிட்டேன். அந்த அங்கிள் டீ கேக் வாங்கிக் குடுத்தாரு.அப்புறமாதான் அடுத்தவீட்டு போன் நம்பர் குடுத்து உங்களுக்கு போன் பண்ணச் சொன்னேன்.
  "போன் நம்பர் உனக்கு எப்படித் தெரியும்?"
 "நானே பார்த்து வச்சிகிட்டேன்."
நல்லவேளையாக தொலைபேசி எண் தெரிந்திருந்தது.இல்லையேல் போலீசில்தான் ஒப்படைத்திருப்பார்கள்.போன் எண்ணைப் போலவே வீட்டு விலாசத்தையும் கற்றுக் கொடுத்திருந்தால் இத்தனை கஷ்டம் இருந்திருக்காது.
இந்த அனுபவம் இல்லாமலேயே இந்தக் காலத்துப் பெண் எவ்வளவு கவனமாகக் கற்றுக் கொடுக்கிறாள். இதை நாம் பாராட்டவேண்டும்."என்றவுடன் அந்தப பெண்ணை இப்போது மரியாதையுடன் பார்த்தாள்  என் தோழி.
இந்த என் அனுபவத்தை அறிந்த பிறகேனும் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் முன் பெயர் விலாசம் தொலைபேசி எண் இவற்றைக் கற்றுக் கொடுங்கள்.








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com