Friday, December 13, 2013

பண்பை வளர்க்கும் பண்டிகைகள்


நம் பண்டிகள்கள் எல்லாமே அன்பையும் ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிறந்தவைதான் என்றாலும் அவற்றின் உள்  நோக்கமே வேறு. குடும்ப ஒற்றுமை, பாசம் மரியாதை ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அக்கறை  இவற்றை வளர்ப்பதே முக்கியமாகக் கருதப் படுகிறது.
                         எங்கள் இல்லத்தில் நடக்கும் தீபாவளி ப்பண்டிகையை 
இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.எங்கள் குடும்பம் மிகப் பெரியது.
எங்கள் பெற்றோருக்கு நாங்கள் எட்டுக் குழந்தைகள்.இப்போது அனைவரும் ஐம்பது வயதைத் தாண்டியவர்களாக உள்ளோம்.எல்லோரும் பேரக்குழந்தைகள் எடுத்து அவர்களுக்கும் திருமனமாகியுள்ளது.
                      ஒவ்வொரு தீபாவளியன்றும் அதிகாலை கங்கா  ஸ்னானத்தை 
முடித்து புத்தாடை புனைந்து அனைவரும் எங்கள் குடும்பத்தின் பெரியவர் வீட்டில் கூடுவோம்.ஒவ்வொருவருக்கும் அவர்கள் வீட்டில் காலைச் சிற்றுண்டி இனிப்புடன் பரிமாறப்படும். எல்லோரும் ஆங்காங்கே அமர்ந்து பேசி மகிழ்வோம். இனிப்புகளையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்வோம். ஒரு குடும்பம் வர சற்று தாமதமானாலும் அனைவரும் கூடும் வரை காத்திருப்போம்.யாரேனும் வெளிநாடு சென்றிருந்தால் ஒழிய மற்றையோர் அனைவரும் சேர்ந்திருப்பர்.எங்களின் எட்டு குடும்ப அங்கத்தினர்களும் குறைந்தது ஐம்பது பேர் ஒன்றாய்க் கூடியிருப்போம்.
                       அனைவரும் வந்து சேர்ந்தபின் வீட்டின் பெரியவர் தன மனைவியுடன் வந்து நிற்பார்.அவரை முறைப்படி அவருக்கு அடுத்தவர் அவருக்கு அடுத்தவர் என வயது வாரியாக காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவர்.பெரியவர் வணங்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பணம் கொடுப்பார்.மூன்று வயது கொள்ளுப்பேரக் குழந்தை வணங்கி கைநீட்டி பணம் பெற்று மகிழ்வதை நாங்கள் கைதட்டி வரவேற்போம்.நாற்பத்தி எட்டுப் பேரும் வணங்கி ஆசிபெற்றபின் அவருக்கு அடுத்தமூத்தவர் வந்து நிற்பார் அவருக்கு இளையவர்கள காலில் விழுந்து ஆசி பெறுவர். இந்த வரிசையில் கடைசிப் பேரக் குழந்தை தன்னை விடஇளையவருக்கு ஆசிவழங்கி கையில் பணம் கொடுக்கும் போது அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரிப்போம்.ஏனெனில் ஆசிவழங்கும் ஒவ்வொரு மூத்தவரும் பணம் கொடுப்பார்கள்.அவரவர் வருமானத்திற்கு ஏற்ப பத்து ஐந்து என அனைவருக்கும் அளிப்பார்.
                          சிறுவர்களுக்கு இது மிகுந்த உற்சாகத்தைக் கொடுப்பதுடன் கொடுக்கும் குணம் ஆசிகூறுவது  அன்பு செலுத்துவது ஆகிய  நல்ல பண்புகள் அவர்களுக்கு வளர்வது உறுதியன்றோ. அதன்பின் அனைத்து சிறுவர்களும் பட்டாசு கொளுத்தி மகிழ்வர்.அதன்பின் தேநீர் அருந்தியபின் அவரவர் இல்லம் திரும்புவோம்.
                   இந்தமாதிரி தீபாவளி நாளில் நாங்கள் கூடுவது சுமார் ஐம்பது வருடங்களாக நடந்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டு பண்டிகை முடிந்தபின்னும் அடுத்த தீபாவளியை எதிர்பார்த்திருப்போம்.இது எங்கள் அனைவருக்கும் ஒரு ஊக்க டானிக் போல உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com