Monday, August 29, 2011

8. இவர்கள் மனிதர்கள்

இவர்கள் மனிதர்கள்.
ஒரு  ஞாயிற்றுக்கிழமையன்று அம்பத்தூரிலிருக்கும் என் உறவினரைப் பார்த்து வரலாம் எனப் புறப்பட்டோம்.நாங்கள் செல்லும் வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். அத்துடன் இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.அதனால் கொஞ்சம் பழங்களும் பிஸ்கட் பாக்கெட்டுகளும் வாங்கிக் கொண்டு போனோம்.
வீட்டுக்குள் நுழைந்தவுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.நாங்களும் கொண்டுவந்த பழங்களைப் பெரியவரிடமும் பிஸ்கட்டுகளைக் குழந்தைகளிடமும் கொடுத்தோம்.
அந்தப் பெரியவரின் நலம் விசாரித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தோம்.அந்த வீட்டு இல்லத்தரசி எங்களை சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும் என்று வற்புறுத்தவே சம்மதித்துவிட்டு மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது வாயிலில் "சாமீ..".என்ற குரல் கேட்டது. சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த பெரியவர் "யாரது வள்ளியா? வா..வா..நல்லாருக்கியா?" என்று வரவேற்றார்.
சுமார் எழுபத்தைந்து வயதுகொண்ட முதிய பெண் உள்ளே வந்து மூலையில் அமர்ந்தாள்.உழைத்து ஓடான ஒல்லியான உடல்.கண்கள் ஒளியிழந்து காணப்பட்டன.
அவளிடம் அவள் குடும்பத்தைப் பற்றியும் பிள்ளைகள் கவனிப்பதைப் பற்றியும் அக்கறையுடன் விசாரித்தார்.
அந்தப் பெண்ணும் தன் உடன் பிறந்தவரிடம் கூறுவது போல்  தன்னைப் பற்றிய விவரங்களைஎல்லாம் ஒன்று விடாமல் கூறினாள்.அவளுக்குக் காப்பி கொடுக்குமாறு கூறியவர் நாங்கள் கொண்டுபோய்க் கொடுத்த பழங்களிலிருந்து சில பழங்களை அவளுக்குக் கொடுத்தார். மிக்க சங்கோஜப் பட்டவளாய் "இதெல்லாம் எனக்கெதுக்கு சாமீ.நீங்க சாப்புடுங்க."
என்று மறுத்தபோதும் வற்புறுத்தி அவளை சாப்பிடச் சொன்னார்.
சற்று நேரத்தில் அவரது மருமகள் அவரிடம் கொஞ்சம் பணம் கொண்டு வந்து கொடுத்தாள்.அதை எண்ணிப் பார்த்த அவர்,"ஏம்மா, ஒரு அம்பது ரூபாய் கூடக் கொண்டு வா."
என்று கூறியவர் அந்தப் பணத்தை அந்த முதியவளிடம் கொடுத்தார்."வள்ளி, இந்த மாசத்திலிருந்து அம்பது ரூபாய் கூடக் கொடுத்திருக்கேன்.இனிமேல் இருநூறு ரூபாய் உனக்கு பென்ஷன்." என்றவர் சிரித்தபடியே அவளுக்கு விடை கொடுத்தார்.காலில் விழாத குறையாக அவரை வணங்கி விடை பெற்றாள் அந்த முதியவள்.
இப்போது என்னைப் பார்த்துச் சிரித்தவர் "இந்தக் கிழவி சிறுவயதிலிருந்து எங்கள் வீட்டில் வீட்டுவேலை செய்து வந்தவள். இப்போது முடியவில்லை. அதனால் அவளை நிறுத்திவிட்டேன்.ஆனால் நாமெல்லாம் பென்ஷன் வாங்கும் போது இருபது வருடமாக வேலை பார்த்த வேலைக் காரிக்கும் நாம் பென்ஷன் கொடுப்பதுதானே முறை."
என்று சொல்லிச் சிரித்தார்.
நான் திகைத்தேன். மனிதநேயம் என்பது இதுதானோ. தன்னைப்போல் பிறரை நினைப்பதை விட சிறந்த மனித நேயம் வேறு உண்டோ. 
என் மனதுக்குள்ளும் ஒரு புரட்சி தோன்றியது. வள்ளலாரும் வள்ளுவனாரும் மற்ற மகான்களும் இதைத்தானே கூறினார்கள்!
மறுநாள் என் வீட்டு வேலைக்காரியை ஒரு சகோதரியைப் போலப் பார்த்தேன்.



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Sunday, August 7, 2011

அப்பாவின் பரிசு

அப்பாவின் பரிசு.

பள்ளிப் பருவத்தில் பல பரிசுகளைப் பெற்றிருந்தாலும் அவை நினைவில் இல்லை.ஆனால் யாரை மிகக் கண்டிப்பானவர் என்று நினைத்து அருகில் நெருங்கவே அச்சப்பட்டுக் கொண்டிருந்தேனோ அவர் எதிர்பாரா விதமாக எதிபாரா சமயத்தில் பரிசளித்தார் என்றால் அதை மறக்க முடியுமா? ஆம். என் தந்தையார்தான் எனக்கு எதிர்பாரா பரிசளித்தவர். எப்பேர்ப்பட்ட பரிசு அது!.
அந்தக் காலத்தில் பத்திரிகைகளும் வார மாதப் புத்தகங்களும் அதிகமாக இல்லை. கல்கி விகடன் குமுதம் போன்ற ஒரு சில பத்திரிகைகளே உண்டு.அவற்றுள் கல்கண்டு என்ற சிறுவர் பத்திரிகையும் வந்து கொண்டிருந்தது.அப்போது அது சிறுவர் பத்திரிகையாக இருந்தது.
தமிழ்வாணனின் தொடர்கதையைப் படிக்க நாங்கள் ஆவலாகக் காத்துக் கொண்டிருப்போம்.மர்ம மனிதன் ,பயங்கர நகரம் போன்ற துப்பறியும் நாவல்கள் எங்கள் வாழ்வின் அங்கமாக இருந்த காலம்.
அப்போதுதான் கல்கண்டு பத்திரிகையின் தீபாவளி மலர் பற்றிய விளம்பரம் வந்தது.சாதாரண பத்திரிகைமீதே நாங்கள் அளவு கடந்த ஆவல் கொண்டிருக்கும்போது மலர் வெளிவருகிறது என்றால் கேட்கவேண்டுமா? தீபாவளியை நாங்கள் எதிர்பார்த்ததை விட கல்கண்டு பத்திரிகையின் தீபாவளி மலரைத்தான் அதிகமாக ஆவலுடன் எதிர்பார்த்தோம்.நண்பர்களுள் யார் வாங்கப் போகிறார்களோ என எதிர்பார்ப்பு வேறு.கதைப் புத்தகம் படிக்கும் நேரத்தில் பாடத்தைப் படித்தால் மதிப்பெண் அதிகம் வாங்கலாமே என்ற தந்தையாரின் கண்டிப்பினால் கிடைக்கும் கல்கண்டு பத்திரிகையை மறைத்து மறைத்து வைத்துப்  படிப்போம்.
தீபாவளிமலர் விலை ஒரு ரூபாய்.எங்களுக்கு அது அதிகம்தான்.பத்திரிக்கையின் விலை இரண்டணா.அதை வாங்குவதே மிகுந்த சிரமம்.
ஒரு ரூபாய்க்கு எங்கே போவது. அம்மாவிடம் சொல்லிப் புலம்புவதைத் தவிர வேறு வழி தெரிய வில்லை.பத்திரிக்கை படிப்பதையே தவறென்று சொல்லும் அப்பாவா மலர் வாங்கித்தருவார்?அவரே எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் வேறு.அவரே ஆங்கிலப் பாடம் எடுக்கும் ஆசிரியரும் கூட.வீட்டில் இருக்கும்போது கூட ஏதேனும் பாடம் பற்றிக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பார்.நாட்கள் நகர்ந்து தீபாவளி நாளும் வந்தது.
அதிகாலை கங்கா ஸ்நானம் முடித்து அப்பா எல்லோருக்கும் புதுத் துணி கொடுத்து ஆசி கூறுவார்.அந்த நிகழ்ச்சியின் போது வீட்டு அங்கத்தினர் அனைவரும் நடுக்கூடத்தில் ஆஜரானோம். அப்பா அனைவருக்கும் புதுத் துணியைக் கையில் கொடுத்தார்.எப்போதும் போல நானும் கையை நீட்டி வாங்கிக் கொண்டேன். உனக்கு ஸ்பெஷல் பரிசுடீ பிரித்துப் பார்  என்றார் அம்மா. அப்பா புன்னகைத்தார்.நான் என்புதுத்துணியைப் பிரித்துப் பார்த்தேன்.
ஆடையின் நடுவே புத்தம்புதிய கல்கண்டு தீபாவளி மலர் சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். என்னால் மகிழ்ச்சியையும் திகைப்பையும் அடக்கமுடியவில்லை.அப்பா!.....என்று மகிழ்ச்சியில் கூவிவிட்டேன்.அந்த நிமிடம் என் மனநிலை எப்படி இருந்தது என்பதைக கூறவே இயலாது.அந்த நிகழ்ச்சியை இன்று நினைத்தாலும் மனம் தந்தையாரின்  அன்பை எண்ணி பெருமிதம் கொள்கிறது.
எதிர்பாராமல் கிடைத்த அப்பாவின்  அந்தப் பரிசுக்கு இணையாக என்னால் வேறு எந்தப் பரிசையும் எண்ண முடியவில்லை.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com