Thursday, September 22, 2011

10- குழந்தைத் தனம்.

என் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு அவன் அப்பா ஒரு சின்ன சைக்கிள் வாங்கித் தந்தார்.அந்த சைக்கிளில் அவன் ஏறிக்கொண்டு என் நான்கு வயது மகளைச் சுற்றிச் சுற்றி வந்து விளையாட்டுக் காட்டுவான். ஆனால் அவளைத் தன் சைக்கிளைத் தொட விடமாட்டான்.
ஒவ்வொரு முறையும் விளையாடச் சென்று விட்டு அழுது கொண்டே வீட்டுக்குள் வருவாள என்மகள்.அன்றிலிருந்து தனக்கும் அதேபோல் சைக்கிள் வேண்டும் என்று கேட்கத் தொடங்கினாள். நாங்கள் இருவரும் அலுவல் முடிந்து வீட்டுக்குள் நுழையும் போதே அப்பா, சைக்கிள் எங்கே? என்று அழ ஆரம்பிப்பாள்.எங்களின் நிதி வசதி அப்போது உடனே சைக்கிள் வாங்கித் தரும் நிலையில் இல்லாததால் அவளைச் சமாதானம் செய்தும் வேறு விளையாட்டுக் காட்டியும் ஏமாற்றி வந்தோம்.
ஒருநாள் என் மாணவர்கள் பரீட்சைக்காகக் கட்டவேண்டிய பணத்தையெல்லாம் சரிபார்த்துக் கொண்டிருந்தேன்.
எல்லா மாணவர்களும் கொடுத்தார்களா, அத்தனை பேரின் பணமும் வந்துவிட்டதா,என சரி பார்த்துக் கொண்டிருந்தேன் மறுநாள் அப்பணத்தைக் கட்டவேண்டும்.என் மகளும் என் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது மளிகைக் கடைக்காரர் அவசரமாகப் பணம் வேண்டும் எனக் கேட்டு வந்து நின்றார்.
அவரிடம் இன்னும் நான்கு நாட்கள் கழித்துத்தான் சம்பளம் வரும் அன்று மாலையே கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் மகள் குறுக்கிட்டு" இல்லே அங்கிள், அம்மா பொய்சொல்றாங்க. நிறைய ரூபா வச்சிருக்காங்க. எனக்குக் கூட சைக்கிள் வாங்கித் தரமாட்டேங்கிறாங்க,"என்று விம்மும் குரலில் கூறினாள். 
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. கடைக்காரர் என்ன நினைத்துக் கொள்வார் என்னைப் பற்றி என நினைத்துப் பதைத்துப் போனேன்.
அவரிடம் பரீட்சைக்கான மாணவர்களின் பணம் என்ற உண்மையைச் சொல்ல  அவரும் அதைப் புரிந்து கொண்டு,
"அதாம்மா,குழந்தைகளை வச்சிக்கிட்டு எந்தமாதிரியான காரியங்களைஎல்லாம் செய்யக் கூடாதுன்னு இப்பப் புரியுதுங்களா" என்று  எனக்கு அறிவுரை கூறிச் சென்றார்.அதன் பின்னரே நான் அப்பாடா என மூச்சு விட்டேன்.
குழந்தைகளுக்கு எந்த சமயம் எதைச் சொல்லக் கூடாது என்பதோ உண்மையைப் புரிந்து கொள்ளும் நிலையோ இல்லை.அதனால் அவர்கள் குழந்தைத் தனமாக எதையாவது பேசி நம்மை சிக்கலில் மாட்டி விடுவார்கள்.
அந்தக் குழந்தைத் தனத்தை எதிர்பார்த்து நாமும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன்.


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

4 comments:

  1. சரியாச் சொன்னீங்கம்மா... குழைந்தையை வைத்துக் கொண்டு நிறைய விஷயங்கள் பேசக் கூடாது என்பது உண்மை தான்...

    ReplyDelete
  2. வணக்கம்...

    அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி அம்மா...

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு.பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete
  4. இன்றைய வலைச்சரத்தில் உங்களின் இந்தப் பதிவு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதற்கு வாழ்த்துகள், ருக்மிணி!

    ReplyDelete