Wednesday, January 7, 2015

சனியின் ஆதிக்கம்.
















சனியின் ஆதிக்கம் எல்லா மனிதரையும் பற்றுவது போலவே தேவர்களையும் பற்றும் என்பதை அனைவரும் அறிவர்.ஒருமுறை தேவர்கள் அனைவரும் கயிலைக்கு சிவபெருமானை தரிசிக்கச் சென்றனர்.நவக்ரஹங்களும் உடன் சென்றனர். சப்த ரிஷிகள் பூதகணங்கள், தேவர்கள், நவக்ராகங்கள், இந்திரன் முதலான அனைத்து தேவர்களும் சிவபெருமான் தரிசனம் காணச் சென்றனர்.
                                                                                                    இறைவன் உமாதேவியுடன் வீற்றிருந்த காட்சியைக் கண்டு  அனைவரும் மகிழ்ந்து வணங்கினர்.
அப்போது புன்னகையுடன் இறைவன் சனியிடம் கேட்டார்."சனியே, நீ அனைவரையும் பிடிக்கும் தொழில் புரிகிறாயே.அது எனக்குப் பொருந்துமா?"என்றார் 
அதே புன்னகையுடன் சனி"மகாதேவா, இன்னும் ஒரு நாழிகைப் பொழுதில் உங்களைப் பிடிக்கவேண்டும் என்பது எனக்கிடப் பட்டுள்ள கட்டளை. அந்த விதியை என்னால் மீற  முடியாது. தாங்களும் என் பார்வைக்குக் கட்டுப் பட்டே ஆகவேண்டும்." என்றார் பணிவோடு.
பெருமான் கோபத்தோடு புருவம் சுருக்கினார்."என்ன?"என்றவர் சிந்தனை வயப்பட்டார்.தேவர்கள் இறைவனை 
மிகப் பணிவோடு வணங்கியபடி இருப்பிடம் வந்தனர் . சிந்தனை வயப்பட்டசிவபெருமான் எப்படியாவது இன்னும் ஒரு நாழிகைப் பொழுதுக்குள் சனியின் கண்ணில் படாத இடத்தில் சென்று ஒளிந்து கொள்ளவேண்டும் என்று இடத்தைத் தேடிப்  போனார்.
யாரும் அறியமுடியாத இடமாகப் பார்த்து ஒளிந்து கொண்டார் இறைவன். அவருக்குரிய காலம் கடந்தது.வெற்றிப் பெருமிதத்துடன் தன்  இருப்பிடமான கயிலாயம் வந்து சேர்ந்தார்.
காலம் முடிந்துவிட்டதே, இறைவன் இப்போது கயிலையில் இருப்பார். அவரைத் தரிசிக்கலாம் என்று சனி தன்  மற்ற க்ரகங்களுடன்  கயிலைக்கு வந்து சேர்ந்தார்.
பெருமிதத்துடனும் கர்வத்துடனும் சனியை நோக்கிய பெருமான். "என்ன, சனியே நீ சொன்ன காலம் வரை  நான் உன் கண்ணில் படாமல் மறைந்து விட்டேனல்லவா? என்னைப் பிடிக்க முடிந்ததா உன்னால்?" என்றார் புன்னகையுடன்.
"பரமேஸ்வரா , தாங்கள் மறைந்திருந்த இடம் எது என்று இப்பொழுது சொல்லலாமே."குறுநகையுடன் கேட்டார் சனி பகவான்.
"ஒரு பாதாளக் கழிவு நீர் தொட்டியில் ஒரு சிறு புழுவாகி மறைந்து கொண்டிருந்தேன். உன்னால் என்னைக் காண இயலவில்லை அல்லவா?"
"சுவாமி, மன்னியுங்கள்.நான் பிடித்ததால்தான் தாங்கள் நாற்றமெடுக்கும் கழிவு நீர் தொட்டியில் இரண்டரை நாழியும் அமர்ந்திருந்தீர்கள்.நறுமணமும் இனிய சூழலையும் விட்டு இப்படி நீங்கள் இருந்ததற்கு என் பார்வையே காரணம்."
பரமன் திகைத்தார்.
"உண்மையே நான் தவறாக நினைத்திருந்தேன்.உன்னை ஏமாற்றியதாக எண்ணிய நான்தான் ஏமாந்திருந்தேன்.விதியை மீள இறைவனாக இருந்தாலும் முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்வர்.என்னையும்  பிடித்த நீயும் ஈஸ்வரனுக்கு இணையானவனே. சனீஸ்வரா உன் கடமையை நீ தொடர்ந்து செய்வாயாக."என்று வரமளித்து அனுப்பினார்.
                  


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com