நாம் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகள் நம் வாழ்க்கையில் எங்கும் எந்த இடத்திலும் தோன்றும்.எனக்கும் அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.
ஒருமுறை நாங்கள் திருப்பதி செல்ல ரயில் நிலையம் சென்றோம். ரயில் நிலையத்தில் நல்ல கூட்டம் நாங்கள் இருக்கையைத் தேடி வேகமாக நடந்தோம்.அப்போது ஒரு கம்பத்தின் அருகே ஒரு வயதான பிச்சைக்காரன் கால் நீட்டி அமர்ந்திருந்தான். நான் என் இருக்கையைத் தேடும் வேகத்தில் அவனது காலை நன்கு மிதித்து விட்டேன். அவனும் காலை மடக்கமுடியாமல் திசை மாற்றி வைத்துக் கொண்டான். ஒரு நிமிடம் அவனைத் திரும்பிப் பார்த்தேன். அந்தக் கண்களில் வேதனை தெரிந்தது.ஆனால் அதை அவன் கால் நீட்டி அமர்ந்த தவறு என்மீது எந்தத் தவறும் இல்லையெனஎன்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.
ஒருவழியாக எங்கள் இருக்கையைத் தேடி அமர்ந்தபின் சற்றே நீண்ட மூச்சு விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.அப்போது ஒரு சிறுவன் சுமார் எட்டு வயதிருக்கும் கைநிறைய புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டு ஒவ்வொரு பயணியிடமும் நூல்களின் பெ யர் சொல்லி "வேணுமா சார்?" என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
அவனிடம் "எனக்கு எதுவும் வேண்டாம். என்னிடமே இருக்கு" என்று சொல்லிவிட்டதால் என்னைத்தாண்டி அடுத்து அமர்ந்திருப்பவரிடம் நூல்களைக் காட்டிப் பேசத் தொடங்கினான். அவர் வெகுநேரம் பார்த்துவிட்டு ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை அவனிடம் அள்ளிக் கொடுத்தார்.சிறுவன் பாவம் கையில் கனத்துடன் நூல்களை அடுக்கமுடியாமல் அள்ளிக் கொண்டு அவர் கேட்ட மீதிச் சில்லறையையும் கொடுக்க முடியாமல் தவித்தான்.
அதே சமயம் சில்லறையை வாங்கிக் கொண்ட பெரியவர் ஒரு நாணயத்தைத் தவறவிட்டார். அந்த நிலையிலும் அந்தச் சிறுவன் கஷ்டப்பட்டு கீழே விழுந்த நாணயத்தைப் பொறு க்கி எடுத்தவன் ' மன்னிச்சுக்குங்க ஐயா கை தவறிடுச்சு" என்றவாறே கொடுத்தான்.என்னைத்தாண்டிச் சென்றவன் என் கால் தடுக்கவே கீழே விழுந்து எல்லாப் புத்தகங்களையும் தவறவிட்டான்.உடனே "சாரி ம்மா .உங்க காலை மிதிச்சுட்டேனா. ரொம்ப சாரிம்மா."என்று மீண்டும் மீண்டும் சாரி கேட்டான்.எனக்கு மனம் உறுத்தியது காலை நீட்டிக் கொண்டது என் தவறு. ஆனால் அந்த தவறைத் தன மீது போட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்கும் சிறுவன் சிறுவனாகத் தோன்றவில்லை என் கண்களுக்கு.எனக்குப் புத்தி புகட்டவந்த அந்த முருகப் பெருமானாகவே தோன்றியது எனக்கு.
வண்டி மெதுவாக நகரத் தொடங்கியவுடன் நான் வேகமாக ஜன்னலோரம் நின்றுகொண்டு அந்த முதியவர் கண்களில் பட்டவுடன் ஐந்து ரூபாய் நாணயத்தை இந்தாப்பா என்று கூவி அதை அவன் எடுத்துக் கொண்டு கை கூப்பியதைப் பார்த்தபின் ஏதோ பிராயச்சித்தம் செய்து விட்டதைப் போல அமைதியானேன்.
எப்படியெல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்று நினைத்துக் கொண்டேன்.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
அருமை... மனிதத்தை கற்பதே சிறப்பு அம்மா...
ReplyDeleteமனிதம் கற்போம்..... நல்ல செய்தி சொல்லும் பகிர்வு.
ReplyDeleteஒவ்வொருவரிடமும் கற்றுக் கொள்கிறோம்.