பச்சிளம் குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்வது மிகவும் கடினம்.பேசத் தெரியாத குழந்தைகள் தங்கள் உணர்வுகளை அழுகை மூலம் மட்டுமே நமக்கு அறிவிப்பார்கள். சில தாய்மார்கள் குழந்தை என் அழுகிறது என்பது புரியாமல் பிடிவாதம் என்று சொல்லி (அதுவும் பெருமையோடு வேறு சொல்லிக்கொள்வார்கள்)
அந்தக் குழந்தையைக் கடிந்து கொள்வதும் அடிப்பதும் பார்க்கவே பரிதாபமாகவும் மனதுக்குக் கஷ்டமாகவும் இருக்கும்.
இது போன்ற நிகழ்ச்சிக்கு ஒரு உதாரணத்தைச் சொல்லவே இந்த முன்னுரை. என் பேத்தி பிறந்து நான்கு மாதங்களே ஆகியிருந்தன. மாலை சுமார் ஏழுமணிக்கு சற்றே சிணுங்க ஆரம்பித்தவள் நேரம் செல்லச் செல்ல பெரிதாக அழ ஆரம்பித்தாள் பால் குடுத்தாலும் விளையாட்டுக் காட்டியும் அழுகை நிற்கவில்லை. செய்வதறியாமல் இரவு சுமார் ஒன்பது மணிக்கு மருத்துவர் இல்லம் சென்று காட்டினேன். அவரும் பார்த்துவிட்டு ஒரு பிரச்சினையும் இல்லையே தூக்கமோ என்னமோ. தூங்கப் பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
வீட்டுக்கு வந்த நான் குழந்தையை கீழே கிடத்தி அழுததனால் வியர்வையில் நனைந்திருந்த அவளது கவுனைக் கழற்றி மின்விசிறியைப் போட்டவுடன் களுக்கென்று நகைத்தாள் அனைவரும் கொல்லென்று சிரித்தோம்.
அடக் கடவுளே காற்றுப் புகாத சில்க்கினால் ஆன சட்டைதான் அவள் அழுகைக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டோம்.
எனவே குழந்தை அழுதால் எறும்பு கடித்துள்ளதா,ஏதேனும் உபாதையா,பசியா அல்லது தூக்கமா எனப் புரிந்து கொண்டு அதைத் தீர்ப்பதே பெற்றோரின் கடமை.
குழந்தையின் மொழியைப் புரிந்து கொள்ளுங்கள்.
--
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
No comments:
Post a Comment