பெங்களூரிலிருக்கும் என் மகன் சொந்த வீட்டுக்கு குடிபோகும்போது வீட்டுப் பொருட்களையெல்லாம் கட்டி வண்டியில் வைத்து அனுப்பிவிட்டுக் கடைசியில் கையில் கொண்டு போவதற்காக விலையுயர்ந்த வெள்ளிப் பொருட்களையெல்லாம் பெரிய பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்திருந்தான்.
பெங்களூரில் வீட்டைக் காலி செய்வதாயிருந்தால் வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடித்துக் கொடுத்துவிட்டுத்தான் காலி செய்யவேண்டும் என்பது அங்கு எழுதப் படாத சட்டம்.
என் மருமகளும் வீட்டிலிருக்கும் குப்பைகளையெல்லாம் ஒரு பையில் போட்டு அதன் பக்கத்திலேயே வைத்திருந்தாள் கிட்டத்தட்ட நான்கைந்து பைகள் சேர்ந்து விடவே அத்தனையையும்
கொண்டு போய் வாசலில் வைத்துவிட்டு வந்து விட்டான் என் மகன்.
அவற்றோடு வெள்ளிப் பாத்திரங்கள் கிட்டத்தட்ட இரண்டு கிலோ பையோடு வாசலில் காத்துக் கிடந்தது குப்பையோடு குப்பையாய்.
காலை 9 மணிக்கு வைத்த குப்பையை எடுக்க தினமும் பத்து அல்லது பதினோரு மணிக்கெல்லாம் வண்டியில் வீட்டு வாசலில் இருக்கும் குப்பையையெல்லாம் அள்ளிக் கொண்டு போவார்கள் நகர சுத்திகரிப்பாளர்கள்.அவர்கள் வருமுன்பாகவே குப்பையைக் காலி செய்யவேண்டுமென்னும் அவசரத்தில் எல்லாக் குப்பைப் பைகளையும் வாசலில் வைத்தாயிற்று.
ஒரு மணிக்குமேல் சுண்ணாம்படிப்பவருக்கு வீட்டு சாவியைக் கொடுத்துவிட்டு புறப்படும்போதுதான் வெள்ளிப் பாத்திரங்கள் வைத்த பையை இருவரும் தேடினார்கள்.அவசரத்தில் எந்தப் பையில் வைத்தோம் என்பதே இருவருக்கும் மறந்து விட்டது.
இரண்டுமணிநேரம்தேடியும்கடைக்கவில்லை.இருவருக்கும் அழாத குறைதான்.சரி வீட்டையே காலி செய்தபின் எங்கிருந்து கிடைக்கும் பலரும் வந்து போன இடம்.யார்கையில் கிடைத்ததோ என்று சமாதானம் செய்து கொண்டு ஒருவழியாக ஐந்து மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டனர்.
வெளியே வந்து வண்டியை இயக்கும்போதுதான்
குப்பைப் பைகள் அங்கேயே யிருப்பதை மருமகள் பார்த்தாள்
என்ன இன்றைக்கு என்று குப்பை வண்டி வரவில்லையே.வீட்டு வாசலில் இத்தனை குப்பை கிடக்கிறது. வீட்டுக் கார அம்மாள் பார்த்தால் கத்துவாள். சீக்கிரம் புறப்பட்டுப் போய்விடலாம் என்றபடியே அமர்ந்தாள்.ஆனால் என்ன தோன்றியதோ உடனே இருங்கள் என்று சொன்னபடியே வண்டியிலிருந்து குதித்து அந்தக் குப்பைப் பைகளைத் திறந்து திறந்து பார்த்தவள் ஒரு பையைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தாள்.
மகிழ்ச்சியில் அவளுக்குப் பேச்சே வரவில்லை. பெருமூச்சு வாங்க இதோ நம்ம பொருள் பத்திரமா இருக்குங்க என்றபடியே பையைக் காட்டினாள்.உள்ளே வெள்ளிப் பாத்திரங்கள் அவர்களைப் பார்த்துச் சிரித்தபடி ஜம்மென்று பைக்குள் அமர்ந்திருந்தன.என்மகனும் பாடுபட்ட பொருள் நம்மை விட்டுப் போக பகவான் விட்டுவிடுவாரா.நாலைந்து மணி நேரம் நாம் கஷ்டப் படணும்னு விதி இருக்கு.இனிமேலாவது அவசரமும் அலட்சியமும் இல்லாமே ஒரு காரியம் செய்யணும்னு தெரிஞ்சுப்போம்.என்றபடியே வீட்டுக்குப் புறப்பட்டனர்.
எந்தக் காரியத்திலும் அவசரம் அலட்சியம் கூடாது என்பது ஒரு பெரிய படிப்பினைதானே எல்லாருக்கும்.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
//மகிழ்ச்சியில் அவளுக்குப் பேச்சே வரவில்லை.//
ReplyDeleteஇதனைப்படித்த எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது. என் ஆத்துக்காரியையும் அழைத்து ஒருமுறை நானே இதனைப் படித்துக்காட்டினேன்.
எப்படியோ, பல மணி நேர கவலைகளுக்குப்பின், இழந்த பொருட்கள் மீண்டும் கிடைத்துள்ளவரை சந்தோஷமே.
இந்த நிகழ்வு நம் எல்லோருக்குமே ஒரு பாடமாக அமைந்துள்ளது.
பகிர்வுக்கு நன்றிகள்.
அருமை... உண்மை அம்மா...
ReplyDelete