Tuesday, June 27, 2017

 
                                         
-----எதிர்பாரா மருந்து.;   ஒருநாள்   எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு
அப்பாடா என்று தலையை தலையணையில்  வைத்தேன்.திடீரென்று  என் மகன்   வீர் வீரென்று அழ ஆரம்பித்தான்.பதறிய  அவனைத் தூக்கி சமாதானம் செயது பால்  கொடுத்தேன் ஆனால் பாலைத் துப்பிவிட்டு அழ ஆரம்பித்தான்.
தோளில்  போட்டுத் தட்டியும் வேடிக்கை காட்டியும் பயனில்லை.வீட்டில் அனைவரும் எழுந்துவிட்டனர்.இரவு பன்னிரெண்டைத் தாண்டி விட்டது.என்ன செய்வது என்று தெரியாமல் டாக்டர் வீட்டுக்கு ஓடினோம். அவரும் குழந்தையைப் பார்த்துவிட்டு உடலில் எந்த குறையும் தெரியவில்லை.பால் கொடுத்துத் தூங்க வையுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
மணி ஒன்றைத் தாண்டிவிட்டது.அக்கம்பக்கம் அனைவரும் எழுந்து ஆளாளுக்கு ஆலோசனை சொல்லத தொடங்கினர்.எனக்கு அழுகையே வந்து விட்டது.என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்.குழந்தையின் உடல் வேர்த்து நனைந்து விட்டது.என்னால் நிற்க முடியாமல் உடல் தளர்ந்து விட்டேன்  அப்படியே உட்கார்ந்து குழந்தையை மடியில் கிடத்தினேன் குப்புறப் படுக்க வைத்துத் தட்டினேன்.அப்போது என் மாமியார் அருகே வந்து குழந்தையின் பின் புறத்தைத் தட்டிக் கொடுத்தார்.என்ன மாயமோ குழந்தையின் அழுகை சற்றுக் குறையவே மாமியார் குழந்தையின் அடிமுதுகில் விளக்கு வைத்துப் பார்த்தார் ஏதோ பூச்சிக் கடி பொரிப்பொரியாய்த் தென்பட்டது.
என் மாமியார் உடனே ஒரு வெள்ளைப் பூண்டை எடுத்து கையால் நசுக்கி பூச்சிக்கடித்த இடத்தில் தேய்த்து விட்டார்.அடுத்த நிமிஷமே குழந்தை அயர்ந்து தூங்க ஆரம்பித்தான்.அப்போதுதான் இரவு படுக்கப் போகுமுன் என் மாமியார் அடுத்தநாள் சமையலுக்காக பூண்டு உரித்த கையைத் தான் குழந்தையின் பின்புறத்தில்  தடவிக் கொடுத்திருக்கிறார்.அந்த மருந்து பட்டு அரிப்பு குறைந்திருக்கிறது.
எப்படியோ இரண்டுமணிக்கேனும் தூங்க முடிந்ததே என்று நானும் படுக்கையில் சாய்ந்தேன்.

2 comments:

  1. நல்லதொரு கை வைத்தியமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete