Friday, April 19, 2019

paati sonna kadhai

    பாட்டி சொன்ன கதை 

                                            16.பால்காரனும் குரங்கும்.
         ஒரு கிராமத்தில் ஒருபால்காரன் வாழ்ந்துவந்தான்.அந்தகிராமத்திலுள்ள 
மக்களுக்கு தினமும் பால் விற்று வந்தான்.வேறு யாரும் பசுக்கள் வளர்க்காததால் அவனிடமே பால் தேவைப்படுவோர் வாங்கிவந்தனர். சில நாட்களில் அந்தப் பால் வியாபாரிக்கு நிறைய பணம் சம்பாதித்து பெரிய பணக்காரனாகி விட வேண்டும் என்று ஆசை தோன்றியது.
         அவன் யோசிக்க ஆரம்பித்தான்.அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
ஐந்து பேருக்கு கொடுக்கவேண்டிய பாலை நீர் ஊற்றிப்  பெருக்கினான்.
அதை இன்னும் ஐந்து பேருக்கு விற்றான்.மக்கள் யாரேனும் 
"என்னப்பா, பால் நீராக உள்ளதே?"என்றால் "பசு இன்று நீர் அதிகம் குடித்து விட்டது என்றோ சரியாகப் புல்  மேயவில்லை" என்றோ சாக்குப் போக்கு சொல்வான்.
        நாட்கள் செல்லச் செல்ல ஆசை பேராசையாக மாறியது.தாராளமாக நீர் ஊற்றி வியாபாரம் செய்யத் தொடங்கினான்.சேர்த்த பணத்தை ஒரு பட்டுப் பையில் போட்டு பத்திரப்படுத்தி வைத்தான்.
      ஒருநாள் அவன் நண்பன் வந்திருந்தான்.அவனிடம் பேசியபோது அருமையான பசுக்கள் விலைக்கு வந்திருப்பதாகவும் உடனே பணம் கொடுத்தால் வீட்டுக்கு ஒட்டி வந்து விடலாம் என்றும் கூறினான்.
பால்வியாபாரிக்கு ஆசை தோன்றியது. உடனே நண்பனை அழைத்துக் கொண்டு பணப்பையையை எடுத்துக் கொண்டு அடுத்த ஊரை நோக்கிப் புறப்பட்டான்.
        போகும் வழியில் மிகவும் சிறப்புவாய்ந்த அனுமார்  கோயில் ஒன்று இருந்தது.அங்கு  சுவாமி தரிசனம் செய்துவிட்டுப் போகலாம் என எண்ணினர் இருவரும்.கோயில் குளத்தில் கால் கழுவிக் கொண்டு  கோயிலில் சாமியைப் பார்க்கலாம் என எண்ணி நடந்தனர்.இரண்டு நாட்களுக்கு முன்னால்  பலத்த மழை பெயதிருந்ததால் வழியெங்கும் நீராக இருந்தது. குளத்திலும் நீர் நிரம்பி வழிந்தது.
        பால்காரன் பணப்பையை கையில் இடுக்கிக் கொண்டு நீரில் காலை வைத்து அலம்பிக் கொண்டான் ஒரு கை  நீரை அள்ளித்  தலையில் போட்டுக் கொண்டான்.அப்போது யாரோ அவன் கையிலிருந்த பையைப் பிடுங்கிக்  கொண்டு ஓடவே ஐயோ என் பணம் என் பை  என்று கூச்சலிட்டான்.
அனைவரும் பார்க்க கையில் பையுடன் ஓடியது ஒரு குரங்கு.
       "சூ..,சூ.., என்று துரத்தியவாறே பின்னால் ஓடினான் பால்காரனும் அவன் நண்பனும்.ஆனால் குரங்கோ சாவகாசமாக ஒரு பெரிய மரத்தின் உயர்ந்த கிளையில் அமர்ந்து கொண்டது.அந்தக் கிளை நீண்டு வளர்ந்து நடுக் குளம் வரை பரவியிருந்தது.ஒன்றும் செய்ய முடியாமல் கைகளை பிசைந்து கொண்டனர் இருவரும்.
அந்தக் குரங்கோ பைக்குள் கையை வீட்டுக் காசுகளை அள்ளிக் குளத்தில் போட்டது.சற்று நேரத்தில் கீழே இறங்கிய குரங்கு மீ திக் காசுகளோடு பையைக் கீழே போட்டு விட்டு ஓடியது.
வேகமாகப் பையைத் திறந்து எண்ணிப் பார்த்தவன் தான் செய்த செயலையும் எண்ணிப் பார்த்தான்.பால்காசு மட்டும் பையில் இருந்தது நீர் விட்டு விற்ற பணம் நீரோடு போய்விட்டது.இறைவன் எனக்கு நல்ல புத்தி கொடுத்து விட்டார்.இனி நேர்மையாக மக்களுக்குப் பயன்படும் விதமாக வாழவேண்டும் என முடிவு செயது.கொண்டான்.
கோயிலுக்குள் சென்று இறைவன் முன் தான் செய்த தவறுகளை மன்னிக்கும்படியும் இனி இதுபோன்ற தவறு செய்வதில்லை எனவும் பிரார்த்தனை செய்து கொண்டான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------










2 comments:

  1. நல்ல கதம்மா...

    பேராசை என்றைக்கும் பலன் தருவதில்லை.

    ReplyDelete