Friday, December 16, 2011

13 - ஓர் இனிய நினைவு

சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னால் அப்போதுதான் நான் ஆசிரியப் பணியில் சேர்ந்திருந்தேன்.முதலில் மூன்று வகுப்புவரைதான் நான் கவனித்துவந்தேன்.அதன்பின் ஒவ்வொரு ஆண்டாக உயர்வு கிடைத்து ஐந்தாம் வகுப்புக்கு ஆசிரியராக உயர்ந்தேன்.அப்போதெல்லாம் வாரம் ஒரு முறை மாணவர் இலக்கியக் கூட்டம் என்று ஒவ்வொரு வார இறுதியிலும் நடைபெறும். அதை அந்தந்த வகுப்பாசிரியர் நடத்தவேண்டும்.   

கூட்டத்துக்குத் தலைவர் பேச்சாளர் கலைநிகழ்ச்சி என்றுஏற்பாடு செய்யவேண்டும். நிகழ்ச்சி  தயாரிக்கவேண்டும். மாணவர்களின் துணையுடன் அந்த வாரக் கூட்டத்தை வெற்றிகரமாக முடித்தபின் அதைப் பற்றிய அறிக்கையைத் தலைமை ஆசிரியை அவர்களுக்கு அனுப்பி அவரின் கையொப்பம் பெறவேண்டும்.இந்த நடைமுறை எட்டாம் வகுப்பு வரை இருந்தது.

அந்த வாரம் என் வகுப்பு மாணவர்கள் தயாரித்த நிகழ்ச்சியைப் பார்த்து அதன் படி கூட்டத்துக்கு மாணவர் அனைவரையும் அமரவைத்தேன். கூட்டம் தொடங்கியபோது பார்த்தால் தலைமை தாங்கவேண்டிய மாணவனைக் காணோம். 
 
அவனைப் பற்றி விசாரித்தபோது மதியம் அவன் பள்ளிக்கு வரவில்லை என்று தெரிந்தது.கடைசி நேரத்தில் அந்த மாணவன் தலைமை தாங்க அஞ்சி பள்ளிக்கே வராமல் நின்று விட்ட செய்தி தெரிந்தது. என்ன செய்வது கடைசிநேரத்தில் கூட்டத்தை நடத்தி ஆகவேண்டுமே. எனவே வகுப்பு ஆசிரியையான நானே தலைமை தாங்கினேன்.

. அந்தக் கூட்டம் பாரதியார் தினமாகக் கொண்டாடப் பட இருந்ததால் மாணவர்கள் பாரதியார் பாடல்கள் அவரைப் பற்றிய பேச்சுக்கள் என்று அழகாக நிகழ்த்தினர்.கடைசியாக  தலைவர்  சிறப்புரை ஆற்றவேண்டிய நேரம்.நான் எழுந்து நின்றேன்.மாணவர்கள் ஆவலோடு பார்த்தபடி இருக்க நான் "காணி நிலம்  வேண்டும்" என்று பாரதியாரின் பாடலை  எடுத்து பேசத் தொடங்கினேன்.

ராகமாகப் பாடலைப் பாடியவுடன் சற்றே சலசலத்த மாணவர்கள் கூட அமைதியானார்கள்.அதன்பின் நான் பேசத் தொடங்கினேன்.
"பாரதியின் ரசனை உள்ளம் எத்தகையது என்று பாருங்கள்.ஒரு காணி நிலம் வேண்டும்.அதில் ஒரு மாளிகை வேண்டும். அருகே கேணி இருக்கவேண்டும்.அருகே தென்னைமரங்களின் எண்ணிக்கை பத்து பனிரெண்டு இருக்கவேண்டும்.கேணி அருகில் நாம் அமர்ந்திருக்க, முத்துப்போல நிலாவொளி வீசவேண்டும். குயிலோசை நமது காதுகளில் இனிமையாக விழவேண்டும்.நமது மனத்தைக் குளிர்விக்கும் இளம் தென்றல் வீசி உள்ளத்தைக் கவரவேண்டும்.
அத்துடன் இந்த இனிமையான சூழலில் நல்ல கவிதையை நான் இசைக்கவேண்டும். அந்தப் பாடலைக் கேட்டு ரசிக்க ஒரு பத்தினிப் பெண் துணையாக வீற்றிருக்க வேண்டும்.
அந்தப் பாட்டுத் திறத்தால் இந்த உலகையே நான் காக்குமாறு அருள் செய் தேவி என்று கூறும் பாரதியின் கனவு எத்தகையது."என்று சொன்னவள் "இந்த அழகிய சூழலில் நீங்கள் இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள்.உங்கள் உள்ளம் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை அடைகிறது.என்று சொன்ன போது அமைதியாக இருந்த அந்த அறையின் மூலையில் இருந்து ஒரு சின்னக் குரல் "ஆஹா,, த்சு" என்ற அனுபவித்த உணர்வுடன் கூடிய குரல் எழுந்தது.அதுவரை எந்தப் பெண்ணைப் பாடத்தில் மக்கு. புரிந்து கொள்வதில் மந்தம் என நான் நினைத்திருந்தேனோ அந்த மாணவியின் வாயிலிருந்து இந்த அனுபவித்த குரல் எழும்பியவுடன் நான் அசந்து போனேன். அவள் எத்தகைய ரசிகை எனப் புரிந்து கொண்டேன்.

அன்று முதல் கவிதையை ரசிக்கும் உணர்வு வேறு படிப்பறிவு வேறு எனப் புரிந்து கொண்டேன். அந்தப் பெண்ணை மரியாதையுடன் பார்க்குமாறு  கவிதை உள்ளம் எனக்குக் கட்டளையிட்டது. இன்றும் இந்த நினைவு எனக்குள் ஒரு நீங்கா இனிய நினைவாக நிறைந்துள்ளது.



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, November 25, 2011

12--தேவை ஒரு திறமை.

தேவை ஒரு திறமை.
நாம்  எல்லோருமே  நம்  வாழ்க்கையில்  வெற்றி  பெறவே  விழைகிறோம்.விரும்பத்தக்க பண்புதான் என்றாலும் அதற்க்கும் சிலமுயற்சிகளை  நாம் செய்யத்தான் வேண்டியிருக்கிறது அல்லவா? வெற்றிக்கு மூல காரணம் என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். முதலில் புன்னகை. இந்தப் புன்னகை எத்தகைய மாற்றங்களை எதிர்ப்படுபவரிடம் காட்டுகிறது தெரியுமா?
நம்மை வேண்டியவராகக் காட்டும், நம்மை அறிந்தவராகக் காட்டும், ஏன் சில சமயங்களில் நம்மை உறவினறாகக் கூடக் காட்டும் அளவுக்கு இந்தப் புன்னகைக்கு பலம் உண்டு.அதனால்தான் புன்னகையே கோடிப் பொன் பெறும் என்றும் பொன்னகை எதற்கு புன்னகை போதுமே என்றும் கூறினர் நம் முன்னோர். பத்திரிகையாளர் திரு லேனா அவர்கள் தனது ஒரு பக்கக் கட்டுரையில் "உலகம் உங்களை விரும்ப வேண்டுமெனில் ஒருவரைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் புன்னகையை உதிர்க்கத் தவறாதீர்கள்." என்று குறிப்பிடுகிறார்.முன் பின் தெரியாதவராக இருந்தாலும் அவரைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தால் என்றேனும் சந்திக்க நேர்ந்தால் அவரே உங்களை அறிந்தவர் போலப் பேசவும் தேவையான உதவிகளை உங்களுக்குச் செய்யவும் தயங்க மாட்டார்.இந்த வெற்றியின் ரகசியத்தை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்பர்?இனியேனும் புன்னகையை வெற்றிப் போருக்குரிய சிறந்த ஆயுதமாகக் கொள்வோம், வாழ்வில் வெற்றி பெறுவோம்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Sunday, November 20, 2011

11-சொல்லாற்றல்.

      சொல்லாற்றல் என்பது பெரும் வரப்ரசாதம்.ஒருவருக்கு சொல்லாற்றல் இருந்தால் அவர் எந்த இடத்திலும் எந்த சொற்போரிலும் வெற்றி பெறலாம்.
நம் நாட்டில் பிறந்த பெரும் ஞானியர் பலரும் இந்த சொல்லினால் பல தத்துவங்களை நமக்கு அளித்துள்ளார்கள்.அப்படிப்பட்ட ஞானியருள் ஒருவர் கனகதாசர் என்ற கிருஷ்ண பக்தர்.இவரைப் பற்றி 'பாட்டி சொல்லும் கதைகள்' என்ற என் தளத்தில் எழுதியுள்ளேன்.
இந்த கனகதாசர் வியாசராயர் என்ற குருவிடம் சீடராக இருந்தார்.இவருடன் புரந்தரதாசர் போன்ற சில கிருஷ்ண பக்தர்களும் வியாசராயரிடம்  சீடராக இருந்தனர்.குரு கனதாசரின் ஞானத்தை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பினார்.தாழ்ந்த இனத்தில் பிறந்தவர் என்ற எண்ணம் தனது மற்ற சீடர்களிடம் இருப்பதை உணர்ந்த வியாசராயர் அவர்களின் எண்ணத்தை மாற்றி கனகதாசர் ஒரு மகான் என்பதை உலகுக்கு உணர்த்த எண்ணினார்
          ஒருநாள் வித்வான்களின் சபை கூடியிருந்தது. குருவான வியாசராயர் உபதேசம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அவர் திடீரென ஒரு கேள்வி எழுப்பினார்."சீடர்களே, நான் கேட்கும் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்."என்றார். சீடர்கள் மெளனமாக இருந்தனர்.
"இந்த இடத்தில் இருப்பவர்களில் சுவர்க்கத்திற்குச் செல்பவர் யார் எனத் தெரியுமா?" அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.ஒவ்வொருவரையும்  குரு  கேட்டுக்  கொண்டே  வந்தார .
கனகனின் முறை வந்தபோது கனகதாசர் புன்னகையுடன் எழுந்து நின்றார்."சுவாமி, நான் போனால்... போவேன்." என்றபோது சபையே திடுக்கிட்டது.
புன்னகை புரிந்த வியாசராயர் "இந்த சபையில் இருப்பவரில் நீமட்டும்தான் சுவர்க்கம் செல்வாயா?"என்ற போதும், கனகதாசர் மீண்டும் அதே பதிலைக் கூறினார்.
சீடர்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியாமல் அவர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.கீழ் ஜாதியில் பிறந்த ஒருவன் சுவர்க்கம் செல்வானாம் என்ன துணிச்சல்?என்று தமக்குள் முணுமுணுத்தனர்.
அப்போது குருவானவர், "கனகா,நீ இவ்வாறு கூறுவதன் பொருளை அனைவரும் புரிந்து கொள்ளும்படி சொல்."என்றார்.
கனகதாசர் பணிவுடன் "குருதேவா, யார் ஒருவர் நான் என்ற அகந்தையை விட்டு விட்டு வாழ்கிறார்களோ அவரே சுவர்க்கம் செல்வார் எனக் கூறினேனே அல்லாது இந்தக் கனகன் போவேன் எனச் சொல்லவில்லை குருதேவா.என் உள்ளத்திலும் நான் எனும் அகந்தை விலகிவிட்டால் நானும் போவேன் என்று கூறினேன் சுவாமி." என்று கூறி வணங்கி நின்றான்.
அப்போது வியாசராயர் தமது சீடர்களைப் பார்த்து "இப்போது தெரிந்து கொண்டீர்களா கனகனின் பெருமையை.சிறந்த ஞானம் உள்ளவன் கனகன்.அந்த கிருஷ்ணனுக்கு தாசன். 
இவனது குல பேதம் பார்க்காமல் இனியேனும் இவனது ஞானத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.பக்திக்கும் ஞானத்திற்கும் குலம் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்."
என்று உரைத்து கனகனை அழைத்து தனது முக்கிய சீடர்களுள் ஒருவராக அமர்த்திக் கொண்டார்.
இப்படி ஒரு சொல்லிலே பொருள் கூறி அதன் மூலம் தனது ஞானத்தை உணர்த்திய கனகதாசரின் சொல்லாற்றல் நாமும் கற்றுக் கொள்ள வேண்டிய ஆற்றல் அல்லவா?



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Thursday, September 22, 2011

10- குழந்தைத் தனம்.

என் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு அவன் அப்பா ஒரு சின்ன சைக்கிள் வாங்கித் தந்தார்.அந்த சைக்கிளில் அவன் ஏறிக்கொண்டு என் நான்கு வயது மகளைச் சுற்றிச் சுற்றி வந்து விளையாட்டுக் காட்டுவான். ஆனால் அவளைத் தன் சைக்கிளைத் தொட விடமாட்டான்.
ஒவ்வொரு முறையும் விளையாடச் சென்று விட்டு அழுது கொண்டே வீட்டுக்குள் வருவாள என்மகள்.அன்றிலிருந்து தனக்கும் அதேபோல் சைக்கிள் வேண்டும் என்று கேட்கத் தொடங்கினாள். நாங்கள் இருவரும் அலுவல் முடிந்து வீட்டுக்குள் நுழையும் போதே அப்பா, சைக்கிள் எங்கே? என்று அழ ஆரம்பிப்பாள்.எங்களின் நிதி வசதி அப்போது உடனே சைக்கிள் வாங்கித் தரும் நிலையில் இல்லாததால் அவளைச் சமாதானம் செய்தும் வேறு விளையாட்டுக் காட்டியும் ஏமாற்றி வந்தோம்.
ஒருநாள் என் மாணவர்கள் பரீட்சைக்காகக் கட்டவேண்டிய பணத்தையெல்லாம் சரிபார்த்துக் கொண்டிருந்தேன்.
எல்லா மாணவர்களும் கொடுத்தார்களா, அத்தனை பேரின் பணமும் வந்துவிட்டதா,என சரி பார்த்துக் கொண்டிருந்தேன் மறுநாள் அப்பணத்தைக் கட்டவேண்டும்.என் மகளும் என் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது மளிகைக் கடைக்காரர் அவசரமாகப் பணம் வேண்டும் எனக் கேட்டு வந்து நின்றார்.
அவரிடம் இன்னும் நான்கு நாட்கள் கழித்துத்தான் சம்பளம் வரும் அன்று மாலையே கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் மகள் குறுக்கிட்டு" இல்லே அங்கிள், அம்மா பொய்சொல்றாங்க. நிறைய ரூபா வச்சிருக்காங்க. எனக்குக் கூட சைக்கிள் வாங்கித் தரமாட்டேங்கிறாங்க,"என்று விம்மும் குரலில் கூறினாள். 
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. கடைக்காரர் என்ன நினைத்துக் கொள்வார் என்னைப் பற்றி என நினைத்துப் பதைத்துப் போனேன்.
அவரிடம் பரீட்சைக்கான மாணவர்களின் பணம் என்ற உண்மையைச் சொல்ல  அவரும் அதைப் புரிந்து கொண்டு,
"அதாம்மா,குழந்தைகளை வச்சிக்கிட்டு எந்தமாதிரியான காரியங்களைஎல்லாம் செய்யக் கூடாதுன்னு இப்பப் புரியுதுங்களா" என்று  எனக்கு அறிவுரை கூறிச் சென்றார்.அதன் பின்னரே நான் அப்பாடா என மூச்சு விட்டேன்.
குழந்தைகளுக்கு எந்த சமயம் எதைச் சொல்லக் கூடாது என்பதோ உண்மையைப் புரிந்து கொள்ளும் நிலையோ இல்லை.அதனால் அவர்கள் குழந்தைத் தனமாக எதையாவது பேசி நம்மை சிக்கலில் மாட்டி விடுவார்கள்.
அந்தக் குழந்தைத் தனத்தை எதிர்பார்த்து நாமும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன்.


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Thursday, September 15, 2011

9-அப்பாவின் அன்பு

அப்பாவின் அன்பு.
அப்பா என்றாலே பிள்ளைகளுக்குச் சற்று பயம்தான்.அப்பா எவ்வளவு அன்பு காட்டினாலும் சில சமயங்களில் அவர் காட்டும் கடுமையும் கோபமும் நமது மனதில் பயத்தை உண்டாக்கி விடுகிறது.அதனால் அப்பா என்றாலே சற்று பயம்தான் எல்லோருக்கும்.
என் அப்பாவும் அப்படித்தான்.அவர் எப்போது கோபத்தைக் காட்டுவார் எப்போது சிரிப்பார் என்றே தெரியாது.அதனால் அவர் ரொம்ப கோபக்காரர் என்றே நாங்கள் முடிவு செய்து சற்று ஒதுங்கியே இருப்போம்.
தேர்வு முடிந்து விடுமுறையும் தொடங்கியது. பள்ளி ஆசிரியராக இருந்த எங்கள் சித்தப்பா வந்திருந்தார் அவர் எப்போதும் நகைச்சுவையாகப் பேசுவார். அதனால் சிறுவர்களான நாங்கள் அவரது பேச்சை ரசிப்போம். அவர் இருக்கும் இடத்திலேயே நாங்களும் இருப்போம். அப்படித்தான் ஒருநாள் இரவு.சாப்பாடு முடிந்து சித்தப்பா அப்பாவுடன் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தார்.சித்தப்பா ஒரு நாற்காலியிலும் அப்பா சாய்வு நாற்காலியிலும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.நாங்களும் சித்தப்பாவின் பேச்சை ரசிப்பதற்காக போய் அமர்ந்தோம்.
அந்த இடம் சற்று சிறியதாக இருந்ததால் அவரவருக்குக் கிடைத்த இடத்தில் அமர்ந்தோம். நானுமப்பாவின் தலைப் பக்கம் திண்ணையில் இருந்த சிறிய இடத்தில் ஒண்டியபடி அமர்ந்து கொண்டேன்.
அப்பது அம்மா என்னிடம் பால் குவளையைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.நானும் அதைக் கையில் வாங்கிக் கொண்டேன்.அந்த சமயம் பார்த்து சித்தப்பா ஏதோ ஜோக்கடித்தார்.அனைவரும் குபீரென்று சிரிக்க நான் வாய் நிறைய ஊற்றிக்கொண்ட பாலை புர்ரென நீர்வீழ்ச்சிபோல வெளியேற்றினேன்.அந்த நீர்வீழ்ச்சி சரியாக என் முன்னால் தலைவைத்து சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த என் அப்பாவின் வழுக்கைத் தலயில் விழுந்து உடலெங்கும் வழிந்தது.நான் உமிழ்ந்து முடிக்கும் வரை அப்படியே அமர்ந்திருந்த அப்பா மெதுவாகத் திரும்பி என்னைப் பார்த்தார்.
எங்கள் அனைவருக்கும் அதுவும் எனக்கு எப்படி இருந்திருக்கும்? ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக அப்பா புன்னகையுடன் பார்த்து, "முடிந்ததாம்மா? இன்னுமிருக்கா?"என்று கேட்டுச் சிரித்ததும் எங்கள் அனைவருக்கும் ஆச்சரியத்திலும்  மிக்க ஆனந்தமேற்பட்டது.
அப்பாவின் அன்பு எத்தகையது, அவர் கண்டிப்பெல்லாம் அன்பின் அடிப்படையில்தான் என்பதை அறிந்தபோது அவரது அன்பை எண்ணிக் கண்களில் நீர் நிறைந்தது.இப்போதும் தான்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Monday, August 29, 2011

8. இவர்கள் மனிதர்கள்

இவர்கள் மனிதர்கள்.
ஒரு  ஞாயிற்றுக்கிழமையன்று அம்பத்தூரிலிருக்கும் என் உறவினரைப் பார்த்து வரலாம் எனப் புறப்பட்டோம்.நாங்கள் செல்லும் வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். அத்துடன் இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.அதனால் கொஞ்சம் பழங்களும் பிஸ்கட் பாக்கெட்டுகளும் வாங்கிக் கொண்டு போனோம்.
வீட்டுக்குள் நுழைந்தவுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.நாங்களும் கொண்டுவந்த பழங்களைப் பெரியவரிடமும் பிஸ்கட்டுகளைக் குழந்தைகளிடமும் கொடுத்தோம்.
அந்தப் பெரியவரின் நலம் விசாரித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தோம்.அந்த வீட்டு இல்லத்தரசி எங்களை சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும் என்று வற்புறுத்தவே சம்மதித்துவிட்டு மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது வாயிலில் "சாமீ..".என்ற குரல் கேட்டது. சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த பெரியவர் "யாரது வள்ளியா? வா..வா..நல்லாருக்கியா?" என்று வரவேற்றார்.
சுமார் எழுபத்தைந்து வயதுகொண்ட முதிய பெண் உள்ளே வந்து மூலையில் அமர்ந்தாள்.உழைத்து ஓடான ஒல்லியான உடல்.கண்கள் ஒளியிழந்து காணப்பட்டன.
அவளிடம் அவள் குடும்பத்தைப் பற்றியும் பிள்ளைகள் கவனிப்பதைப் பற்றியும் அக்கறையுடன் விசாரித்தார்.
அந்தப் பெண்ணும் தன் உடன் பிறந்தவரிடம் கூறுவது போல்  தன்னைப் பற்றிய விவரங்களைஎல்லாம் ஒன்று விடாமல் கூறினாள்.அவளுக்குக் காப்பி கொடுக்குமாறு கூறியவர் நாங்கள் கொண்டுபோய்க் கொடுத்த பழங்களிலிருந்து சில பழங்களை அவளுக்குக் கொடுத்தார். மிக்க சங்கோஜப் பட்டவளாய் "இதெல்லாம் எனக்கெதுக்கு சாமீ.நீங்க சாப்புடுங்க."
என்று மறுத்தபோதும் வற்புறுத்தி அவளை சாப்பிடச் சொன்னார்.
சற்று நேரத்தில் அவரது மருமகள் அவரிடம் கொஞ்சம் பணம் கொண்டு வந்து கொடுத்தாள்.அதை எண்ணிப் பார்த்த அவர்,"ஏம்மா, ஒரு அம்பது ரூபாய் கூடக் கொண்டு வா."
என்று கூறியவர் அந்தப் பணத்தை அந்த முதியவளிடம் கொடுத்தார்."வள்ளி, இந்த மாசத்திலிருந்து அம்பது ரூபாய் கூடக் கொடுத்திருக்கேன்.இனிமேல் இருநூறு ரூபாய் உனக்கு பென்ஷன்." என்றவர் சிரித்தபடியே அவளுக்கு விடை கொடுத்தார்.காலில் விழாத குறையாக அவரை வணங்கி விடை பெற்றாள் அந்த முதியவள்.
இப்போது என்னைப் பார்த்துச் சிரித்தவர் "இந்தக் கிழவி சிறுவயதிலிருந்து எங்கள் வீட்டில் வீட்டுவேலை செய்து வந்தவள். இப்போது முடியவில்லை. அதனால் அவளை நிறுத்திவிட்டேன்.ஆனால் நாமெல்லாம் பென்ஷன் வாங்கும் போது இருபது வருடமாக வேலை பார்த்த வேலைக் காரிக்கும் நாம் பென்ஷன் கொடுப்பதுதானே முறை."
என்று சொல்லிச் சிரித்தார்.
நான் திகைத்தேன். மனிதநேயம் என்பது இதுதானோ. தன்னைப்போல் பிறரை நினைப்பதை விட சிறந்த மனித நேயம் வேறு உண்டோ. 
என் மனதுக்குள்ளும் ஒரு புரட்சி தோன்றியது. வள்ளலாரும் வள்ளுவனாரும் மற்ற மகான்களும் இதைத்தானே கூறினார்கள்!
மறுநாள் என் வீட்டு வேலைக்காரியை ஒரு சகோதரியைப் போலப் பார்த்தேன்.



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Sunday, August 7, 2011

அப்பாவின் பரிசு

அப்பாவின் பரிசு.

பள்ளிப் பருவத்தில் பல பரிசுகளைப் பெற்றிருந்தாலும் அவை நினைவில் இல்லை.ஆனால் யாரை மிகக் கண்டிப்பானவர் என்று நினைத்து அருகில் நெருங்கவே அச்சப்பட்டுக் கொண்டிருந்தேனோ அவர் எதிர்பாரா விதமாக எதிபாரா சமயத்தில் பரிசளித்தார் என்றால் அதை மறக்க முடியுமா? ஆம். என் தந்தையார்தான் எனக்கு எதிர்பாரா பரிசளித்தவர். எப்பேர்ப்பட்ட பரிசு அது!.
அந்தக் காலத்தில் பத்திரிகைகளும் வார மாதப் புத்தகங்களும் அதிகமாக இல்லை. கல்கி விகடன் குமுதம் போன்ற ஒரு சில பத்திரிகைகளே உண்டு.அவற்றுள் கல்கண்டு என்ற சிறுவர் பத்திரிகையும் வந்து கொண்டிருந்தது.அப்போது அது சிறுவர் பத்திரிகையாக இருந்தது.
தமிழ்வாணனின் தொடர்கதையைப் படிக்க நாங்கள் ஆவலாகக் காத்துக் கொண்டிருப்போம்.மர்ம மனிதன் ,பயங்கர நகரம் போன்ற துப்பறியும் நாவல்கள் எங்கள் வாழ்வின் அங்கமாக இருந்த காலம்.
அப்போதுதான் கல்கண்டு பத்திரிகையின் தீபாவளி மலர் பற்றிய விளம்பரம் வந்தது.சாதாரண பத்திரிகைமீதே நாங்கள் அளவு கடந்த ஆவல் கொண்டிருக்கும்போது மலர் வெளிவருகிறது என்றால் கேட்கவேண்டுமா? தீபாவளியை நாங்கள் எதிர்பார்த்ததை விட கல்கண்டு பத்திரிகையின் தீபாவளி மலரைத்தான் அதிகமாக ஆவலுடன் எதிர்பார்த்தோம்.நண்பர்களுள் யார் வாங்கப் போகிறார்களோ என எதிர்பார்ப்பு வேறு.கதைப் புத்தகம் படிக்கும் நேரத்தில் பாடத்தைப் படித்தால் மதிப்பெண் அதிகம் வாங்கலாமே என்ற தந்தையாரின் கண்டிப்பினால் கிடைக்கும் கல்கண்டு பத்திரிகையை மறைத்து மறைத்து வைத்துப்  படிப்போம்.
தீபாவளிமலர் விலை ஒரு ரூபாய்.எங்களுக்கு அது அதிகம்தான்.பத்திரிக்கையின் விலை இரண்டணா.அதை வாங்குவதே மிகுந்த சிரமம்.
ஒரு ரூபாய்க்கு எங்கே போவது. அம்மாவிடம் சொல்லிப் புலம்புவதைத் தவிர வேறு வழி தெரிய வில்லை.பத்திரிக்கை படிப்பதையே தவறென்று சொல்லும் அப்பாவா மலர் வாங்கித்தருவார்?அவரே எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் வேறு.அவரே ஆங்கிலப் பாடம் எடுக்கும் ஆசிரியரும் கூட.வீட்டில் இருக்கும்போது கூட ஏதேனும் பாடம் பற்றிக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பார்.நாட்கள் நகர்ந்து தீபாவளி நாளும் வந்தது.
அதிகாலை கங்கா ஸ்நானம் முடித்து அப்பா எல்லோருக்கும் புதுத் துணி கொடுத்து ஆசி கூறுவார்.அந்த நிகழ்ச்சியின் போது வீட்டு அங்கத்தினர் அனைவரும் நடுக்கூடத்தில் ஆஜரானோம். அப்பா அனைவருக்கும் புதுத் துணியைக் கையில் கொடுத்தார்.எப்போதும் போல நானும் கையை நீட்டி வாங்கிக் கொண்டேன். உனக்கு ஸ்பெஷல் பரிசுடீ பிரித்துப் பார்  என்றார் அம்மா. அப்பா புன்னகைத்தார்.நான் என்புதுத்துணியைப் பிரித்துப் பார்த்தேன்.
ஆடையின் நடுவே புத்தம்புதிய கல்கண்டு தீபாவளி மலர் சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். என்னால் மகிழ்ச்சியையும் திகைப்பையும் அடக்கமுடியவில்லை.அப்பா!.....என்று மகிழ்ச்சியில் கூவிவிட்டேன்.அந்த நிமிடம் என் மனநிலை எப்படி இருந்தது என்பதைக கூறவே இயலாது.அந்த நிகழ்ச்சியை இன்று நினைத்தாலும் மனம் தந்தையாரின்  அன்பை எண்ணி பெருமிதம் கொள்கிறது.
எதிர்பாராமல் கிடைத்த அப்பாவின்  அந்தப் பரிசுக்கு இணையாக என்னால் வேறு எந்தப் பரிசையும் எண்ண முடியவில்லை.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com