Monday, August 18, 2014

கண்ணனின் லீலை என்ற தலைப்பில் மணம் என்பதற்குப் பதில் மனம் என்றும் எண்ணெய் என்பதற்குப் பதில் என்னை என்றும் பதிவாகியுள்ளது. தயவு செய்து திருத்திப் படிக்கவும்.
அன்புடன் பாட்டி.

57.கண்ணனின் லீலை.

கோகுலாஷ்டமி கொண்டாடிய மகிழ்ச்சியில் அனைவரும் இருப்பீர்கள். உங்கள் வீட்டுக் குழந்தைகளும் உங்களுடன் பட்சணம் செய்ய உங்களுக்கு உதவியிருப்பார்களே.அதுதான் வீட்டில் நெய் மனமும் என்னை வாசனையும் இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறதே.
                   சரி. பூஜையும் முடித்து முறுக்கு சீடை  ஸ்வீட் பழம் பாயசம் என்று நிவேதனப் பொருட்களை எல்லாம் ஒரு பிடி பிடித்திருப்பீர்கள்.ருசியாகவே இருந்திருக்கும். ஏனென்றால் அம்மாக்களும் பாட்டிகளும் அந்தக் கண்ணனுக்காக மட்டுமல்லாமல்  தங்கள் வீட்டுக் கண்ணனையும் நினைத்துக் கொண்டு செய்கிறார்கள் அல்லவா. ருசியாகத்தானே இருக்கும்.
         அந்த ருசியோடு இன்றைய கதாநாயகனைப் பற்றிய ஒரு செய்தியையும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். கண்ணனின் லீலைஎன்னும் அந்தருசியில்  மூழ்கி மகிழுங்கள்.
      கண்ணனின் தாயாரான யசோதை கண்ணனிடம் எங்கும் போகக் கூடாது என்று சொல்லி தயிர் கடையும் இடத்தில் உட்காரவைத்துவிட்டுப் போய் விட்டாள்.கண்ணனும் சாதுவாக அமர்ந்திருந்தான்.ஆனால் அவனால்  முடியுமோ.வாசலில் நண்பர்களின் சப்தம் கேட்டவுடன் வெளியே ஓடிவந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
         யார் வீட்டில் கோபி வேலையாக இருக்கிறள் என்று பார்த்து அந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.
வழக்கம்போல வெண்ணைப் பானை உரியில் இருந்ததைப் பார்த்தான் கண்ணன்.அவனுக்குத்தான் தெரியுமே எப்படி அதை எடுப்பது என்று.உரியில் கை வைக்கும் முன்பாகவே அதில் ஒரு மணி கட்டியிருப்பதைப் பார்த்துவிட்டான் கண்ணன்.
         அந்த வீட்டு கோபி கண்ணன் வந்து உரியைத் தொட்டால் சப்திக்குமாறு ஒரு மணியைக் கட்டியிருந்தாள் .அதைப் பார்த்துவிட்டு மெதுவாக அந்த மணியிடம் சொன்னான். "ஏ மணியே, நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும் வரை மணி அடிக்காதே." மணி சம்மதித்து அமைதியாக இருந்தது.
         இப்போது முதல் பானை இறங்கிற்று. அடுத்து இரண்டாம் பானையும் இறங்கிற்று.இனி உரியில் இருப்பது ஒரே பானை தான். நண்பர்கள் வெண்ணை தின்பதைப் பார்த்து மகிழ்ந்தவாறே உரியின் மேலிருந்த பானைக்குள் தன கையை வைத்து ஒரு உருண்டை வெண்ணையை எடுத்து வாயருகே கொண்டு சென்றான் கண்ணன்.
        அதுவரை அமைதியாக இருந்த மணி கணகண
வென்று அடித்து ஒலி எழுப்பியது. வேகமாகக் கீழே குதித்த கண்ணன் "ஏ மணியே, ஏன்  அடித்தாய்?நான்தான் அடிக்காதே என்றேனே. இவ்வளவு நேரம் சும்மா இருந்துவிட்டு இப்போது ஏன்  அடிக்கிறாய்?"
        "கண்ணா, பரந்தாமா, யுக யுகமாய் உனக்கு நிவேதனம் செய்யும்போது நான் ஒலி எழுப்புவதுதானே வழக்கம் இன்று நீ வெண்ணை உண்ணும் போது எப்படி நான் ஒலி
எழுப்பாமல் இருப்பேன்?" கண்ணன் அமைதியானான்.
           அதற்குள் கோபி வந்துவிடவே எல்லோரும் வெளியே ஓடினார்கள். ஆனால் அடுத்தவீட்டு கோபி தண்ணீர் எடுக்க யமுனைக்குச் செல்வதைப் பார்த்து அவள் வீட்டுக்குள் நுழைந்தனர்.அங்கும் உரியில் மணி கட்டியிருப்பதைப் பார்த்தான் கண்ணன்.
         அவனுக்கா தெரியாது.தன ஒரு கையால் மணியின் நாக்கை ஒலிக்காமல் பிடித்துக் கொண்டு மறுகையால் வெண்ணையைத் தின்று விட்டு ஓடினான்.
இவர்கள் கூட்டமாக ஓடுவதைப் பார்த்த கோபியர் தங்களுக்குப் பயந்து ஓடும் கண்ணனின் அழகில் மயங்கி நின்றார்கள்  கோகுலாஷ்டமியன்று உரியடிப்பது, ஓடிப்பிடிப்பது, ஒளிந்து விளையாடுவது போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்கிறோம்.என்ன,
வீட்டுப் பலகாரதோடு கண்ணனின் விளையாட்டும் ருசியாக இருந்ததா?




















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, July 28, 2014

இராமானுஜன் --சினிமா விமரிசனம்.


நான் சமீபத்தில் பார்த்து ரசித்த படம் "ராமானுஜன்" கப்பலோட்டிய தமிழன், பாரதியார்,போன்ற படங்களின் வரிசையில் இந்தப் படம் நம் மனதைக் கவரும் வகையில் எடுக்கப் பட்டுள்ளது.
                                                       படத்தின் வரலாறு சுவாரசியமாகப் படமாக்கப் பட்டுள்ளதால் தொய்வில்லாமல்  சலிப்பின்றி நகர்கிறது. பாடல் காட்சிகளுக்கு இடமில்லாவிட்டாலும் கோவிலில் தாயும் மகனும் பாடும் பாடல் மனதைக் கவர்கிறது.இசையும் மிகவும் மென்மையாக இதமாக இருக்கிறது.நடித்தவர்களும் சரியாக நடித்தார்கள். ராமானுஜனாக  சரியான நடிகர்தான் நடித்துள்ளார்.
                                                       19-ம் நூற்றாண்டில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து பல எதிர்ப்புகளுக்கிடையே தன திறமையைக் காட்டி உலகுக்குத் தன்னை அடையாளம் காட்டியவர் ராமானுஜன். அந்த மேதையைப் புரிந்துகொண்டு அவருக்குத் தக்க உதவிகளைச் செய்தவர்கள் லண்டனில் இருந்த கணிதப் பேரறிஞர்கள்.

           அவரின் வரலாற்றை  மிகச் சுவையோடு கொண்டு சென்றிருக்கின்றனர்
இடையிடையே காதல் காட்சிகளும் இது ஒரு திரைப் படம் என்பதை நினைவூட்டவே ரசிக்கத் தக்க முறையில் அமைக்கப் பட்டுள்ளது பாராட்டுக்குரியது.அவர் பட்டங்களும் பதவிகளும் பெற்றதைப் பார்க்கும்போது நாமே பட்டம் பெற்றுவிட்டதைப் போல ஒரு மனத் திருப்தி ஏற்பட்டது.அந்த அளவுக்கு ராமானுஜன் துன்பப் பட்டிருக்கிறார் என்பதை அறிந்ததாலேயே.அவர் அடைந்த மகிழ்ச்சியை நாமும் அடைகிறோம்.
                                   ஆனால் அவர் நோய்வாய்ப் பட்டு துன்புறுகையில் எல்லா மாமியார்களையும் போலவே ராமானுஜனின் அம்மாவும் மகனிடம் மருமகளை நெருங்க விடாமல் செய்வது அந்தக் கால மாமியாரை நினைவூட்டுகிறது. ஆனாலும் அதன் காரணத்தை அவர் கூறும்போது அந்த முகத்தில் தெரியும் வேதனையை , உள்ளக்குமுறலை முகத்தில் காட்டி அவரும் ஒரு தாய் என்பதைத் தன                                         நடிப்பின்மூலம சிறப்பாக  வெளிக்காட்டுகிறார் சுகாசினி.
                                       கடைசிக் கட்டத்தில் படத்தில் அமைத்துள்ள காட்சிகள் என்னை அமைதிப் பெருமூச்சு விட வைத்தது.ஆம்.எல்லாப் படங்களிலும் வருவது போல இறந்தவரைப் படுக்கவைத்து மாலையிட்டு மூக்கில் பஞ்சடைத்து அனைவரும் சுற்றி நின்று ஓலமிட்டு அழ என்று பார்க்கவே விரும்பாத காட்சிகளைக் காட்டாமல் வார்த்தையிலேயே விளங்க வைத்திருப்பது சிறப்பு  டைரக்டருக்கு ஒரு ஷொட்டு வைக்கலாம்.
                                      கடைசியில் கடல் கடந்தவர் பரிகாரம் செய்யவில்லை என்று அவருக்கு சம்ஸ்காரம் செய்ய மறுத்து அனைவரும் சென்று விட வீடே அமைதியாக இருக்கிறது.இந்தக் காட்சி  யாருக்கும் கண்ணில் நீரை வரவழைக்கும்.   ஒரு சிறந்த மேதைக்குக் கிடைத்த மரியாதை இத்தகையதா என மனம் கலங்கியது. ஆனாலும் பாரதி, விவேகானந்தர் போன்ற மாமேதைகளைப் போலவே ராமானுஜனும் இளம் வயதில் புகழுடம்பை எய்திவிட்டார்.   இவரது பெயரால்  ராமானுஜன் விருது    அளிக்கப் படுவது ஒன்றே இவருக்கு நாம் அளிக்கும் அஞ்சலி.
இத்தகைய சிறந்த படத்தைத் தயாரித்தமைக்காக அதன் தயாரிப்பாளரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மாணவர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய படம்.ஒரு மேதை எவ்வளவு துயருக்கு நடுவே எதிர்நீச்சல் போட்டு வெற்றிவாகை சூடுகிறார் என்பது பிள்ளைகளுக்கு ஒரு படிப்பினையாகும்.       












                                                 .

Saturday, June 21, 2014

வீரனுக்கு மரியாதை.

பாரதப் போர் முடிந்தபின் தருமன் கண்ணனிடம் கேட்டான்."கண்ணா, இவ்வளவு பாவங்களைப் புரிந்து இந்தப பாரதப் போரில் வெற்றிபெற்று  நாட்டுக்கு மன்னனாகியுள்ளேனே . என் பாவங்களைப் போக்கிக் கொள்ள வழி சொல்."
கண்ணனும் சொன்னான்."போர்க்களத்தில் கடும்போர் புரிந்து அம்பு பட்டு உத்தராயண புண்யகாலத்துக்காகக் காத்திருக்கிறாரே உன் தாத்தா பீஷ்மர்.அவரிடம் செல். அவர்  வார்த்தைகளைக் கேள் உன் பாவங்கள் விலக அவர் வழி சொல்வார்."என்று கூறி தருமனை பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் போர்க்களத்திற்கு அழைத்து வந்தான்.

அங்கே பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறு இறைவனைத் துதித்துக் கொண்டிருந்தார்.அங்கே சென்ற தருமன் தன பாவங்கள் தொலைய வழி கேட்டான். "அவனிடம் நீ செய்தவை பாவங்கள் என்றா எண்ணுகிறாய். இறைவனை உடன் வைத்துக் கொண்டிருக்கும் உனக்கு சந்தேகம் வரலாமா?அல்லது கண்ணன் உன் அருகிலிருப்பதால் அவன் இறைவன் என்ற எண்ணம் உனக்குத் தோன்றவில்லையா?என்று சொல்லி கண்ணனின் பெருமைகளைக் கூற ஆரம்பித்தார்.அதுவே விஷ்ணு சஹஸ்ரநாமம் என்றாயிற்று.இந்த நாமத்தைச் சொன்னால் சகல பாவங்களும் தீரும் என்று அவர் வாக்கிலேயே கேட்டான் தருமன். அத்துடன் பீஷ்மர் கூறிய இந்த சஹஸ்ரநாமத்தைக் கண்ணன் பீஷ்மரின் அருகே அமர்ந்து கேட்டான்.

ஒரு சுலோகம் "சங்க ப்ருந் நந்தகி  சக்ரி சார்ங்க தன்வா கதாதரஹா "என்று பீஷ்மர் கூறியவுடன் கண்ணன் தன கைகளில் சங்கு, நந்தகி என்ற வாள், சக்கரம், சார்ங்கம் என்றவில், கதை என்ற ,பஞ்சாயுதங்களை ஏந்தி பீஷ்மருக்கு ஒரு போர்வீரனைப்போல் தரிசனம் கொடுத்தார்.
அந்த விஸ்வரூப தரிசனத்தைப் பார்த்தவாறே அந்த வீரன் தன உயிரை விட்டான்.இது ஒரு உண்மையான க்ஷத்ரிய வீரனுக்கு அவனது இறுதிக்காலம் முடியும்போது அளிக்கும் இராணுவ மரியாதை என்பதை நாம் புரிந்து கொள்ளவே இந்தக் காட்சியைக் காட்டி பீஷ்மருக்கு அருள் புரிந்தான் கண்ணன்.போரில் உயிர்நீத்த வீரனுக்கு மரியாதை செய்வதைக் கண்ணன் அன்றே நடத்திக் காட்டியுள்ளான்.


--





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Sunday, April 27, 2014

புலமைத் திறம்..

           ஒரு கிராமத்தில் ஒரு புலவர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு தனது புலமை மீது மிகவும் பெருமை.தனது புலமையை அறியும் திறம் அவ்வூரில் யாருக்கும்
இருப்பதாக அவர் எண்ணவில்லை.
       ஒருநாள் அருகில் இருக்கும் ஒரு கிராமத்திற்குச் சென்று விட்டு தன்
ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.வரப்பின் மீது கவனமாக நடந்து கொண்டிருந்தவர் திடீரென்று ஆ.,! என்று கத்தினார்.
         அவர் பின்னால் வந்து கொண்டிருந்த அவரது நண்பர் வேகமாக அருகில் வந்தார். "புலவரே! என்ன ஆயிற்று?" என வினவினார்.
      புலவருக்குத் தன புலமையைக் காட்டவேண்டுமெனத் தோன்றியது போலும்.உடனே அவர்,"முக்காலில் செல்கையிலே நான்முகத்தான் பின்னவன் தன் நற்கரும்புக்  காட்டுக்குள் ஐந்து தலைப் பாம்பு தீண்டியது."
என்று சொல்லிச் சிரித்துக் கொண்டார்.
உடனே அந்த நண்பர் புலவரின் குறும்பைப் புரிந்து கொண்டார்.பிறரை ஒன்றும்  தெரியாதவர் என்று மட்டம் தட்டுவதையே பெருமையாக எண்ணி வந்தவருக்குப் பாடம் புகட்ட எண்ணினார்.
உடனே நண்பர்,"ஓஹோ., அப்படியா, பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலேடுத்துத் தேய்."என்று சொல்லிவிட்டு நடந்தார்.
புலவரும் அவர் சொன்னபடியே செய்து விட்டு நடந்தார்.
அதன்பின் அவர் யாரையும் அவமதிப்பதையும் விட்டு விட்டார்.தன்னைப்போல் சிறந்த புலமை இருந்தும் அதை வெளிக்காட்டாது இருக்கும் தன நண்பரின் சான்றாண்மையைப் புரிந்து கொண்டார்.
இனி அவர்கள் பேசிக்கொண்டதன் பொருளைப் பார்ப்போம்.புலவர், சொன்னது"கையில் கோலுடன் செல்லும்போது அவ்வூரில் பிரம்மன் என்பவரின் தம்பியின் கரும்புக்காட்டுக்குள் நெருஞ்சி முள் குத்தியது"
இதற்கு அவர் நண்பர் சொன்னது."பத்துரதன் என்பவன் தசரதன்.அவன் புத்திரன் ராமன்.அவன் மித்திரன் சுக்ரீவன்.அவன் சத்துரு வாலி.அவன் பத்தினி தாரை.அவள் காலை எடுத்தால் தரை.எனவே தரையில் தேய் "
தன்னைவிடத் திறமையாகப் பேசும் திறம் படைத்தவரான நண்பரின் புலமையைப் புரிந்து கொண்ட புலவரின் கர்வம் நீங்கியது.















Wednesday, March 19, 2014

53.கண்ணன் சொன்ன பாடம்.
               பரந்தாமனும் பக்தவத்சலனுமான கண்ணன் உண்மை அன்புக்குக் கட்டுப்பட்டவன் என்பது உண்மைதான். அதேசமயம் தன அன்புக்கு உகந்தவராயினும் அகந்தையோ கர்வமோ கொண்டுவிட்டால் அவனைத் திருத்தித் தன்வயமாக்கிக் கொள்ளும் பேரன்பனும் அவன்தான்.ஒரு சிறு நிகழ்ச்சியின் மூலம் இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்ளலாம்.
              கோபிகையர்  கூட்டமாக  ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தின் நடுவே ராதையும் கண்ணனை எண்ணிக் கொண்டே ஆடிக் கொண்டிருந்தாள்.அப்போது திடீரென்று அவர்களின் நடுவே கண்ணனும் வந்து ஆடிப்பாடத் தொடங்கினான்.மனமகிழ்ந்த கோபிகையர் ஒவ்வொருவரும் கண்ணன் தன்மீதுதான் அதிக அன்பு வைத்துள்ளான் என எண்ணிக் களித்தபடி ஆடிக்கொண்டிருந்தனர்.
                அப்போது திடீரென கண்ணன் ராதையின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓடினான்.கோபியரும் கண்ணா, கண்ணா, என அழைத்தவாறே பின்னால் ஓடினர்.கண்ணனின் கையைப் பற்றியிருந்த ராதை ஓடிக்கொண்டே "கண்ணா, உனக்கு எல்லாரைவிட என்மீதுதானே அன்பு அதிகம்?"எனக் கேட்டாள்.அந்த மாயக் கண்ணனும்,"இதிலென்ன சந்தேகம் ராதா,நீதான் என் அன்புக்குப் பாத்திரமானவள்."என்றான் கள்ளச் சிரிப்போடு.
                உடனே ராதை கண்ணா "என்னைத் தூக்கிக் கொண்டு போவாயா?கால் வலிக்கிறது."என்றவளை "அதற்கென்ன, மிக்க மகிழ்ச்சியோடு தூக்கிச் செல்கிறேன்."என்றவன் ராதையைத் தூக்கிக் கொண்டு நடந்தான்.சிறிது தூரம் சென்றனர்.வழியில் பெரிய புன்னை மரமொன்று பூக்கள் சொரிந்தபடி  நின்றிருந்தது.அதைப்பார்த்த ராதை,"கண்ணா, இந்த மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு ஆடவேண்டும்போல் இருக்கிறது."என்றாள்
               உடனே கண்ணனும் "அதற்கென்ன, ஆடேன்"என்றபடி அவளைத் தன தோளில்  சுமந்தான். தன இரு கால்களையும் கண்ணனின் தோள்மீது வைத்துக் கொண்டு  மரக்கிளையைப் பற்றினாள்  ராதை.
கண்ணனும்,"ராதை பத்திரம் நன்றாகக் கிளையைப் பற்றிக்கொள்"என்று சொன்னவன் அவளை மரத்தின் மீது ஊசலாடவிட்டுவிட்டு மறைந்தான்.இப்போது ராதை மரத்தின் உச்சியில் தொங்கிக் கொண்டு தவித்தபடி இருந்தாள்
             அதேசமயம் இவர்களைத் தொடர்ந்து ஓடிவந்த கோபிகையர், கண்ணனும் ராதையும் ஓடிய பாத தடங்களைப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து அவர்களும் நடந்தனர்.சிறிது தூரம் சென்றதும் ஒருவர் ஓடிய தடம்  மட்டுமே தெரிந்தது. தொடர்ந்து அந்த தடத்தைப் பார்த்துக் கொண்டே கண்ணா,கண்ணா, எனக்  கூவியவாறே ஓடினர்.சிறிது தொலைவு வந்தவுடன் அந்தத் தடமும் மறைந்து விட்டது.
            இப்போது கோபிகையர் திகைத்து நின்று விட்டனர். கண்ணா, என அவர்களின் வாய் கூவியவாறு இருந்தது. அப்போது மரத்தின் மேலிருந்து "ஏ ,கோபியரே, என்னைக் கீழே இறக்குங்கள் நான் மரத்தில் தொங்குகிறேன்"என்ற குரல் கேட்டு அண்ணாந்து பார்த்தனர். அங்கே ராதை மரத்தின் பெரிய கிளையைப் பிடித்துத் தொங்குவது தெரிந்தது.கீழே இறங்கிய ராதை என்னைக் கண்ணன் பாதியில் விட்டு விட்டுப் போய்  விட்டான். என்றாள் கண்ணீர் மல்க.
           ஒரு கோபி கூறினாள்,"அடி பைத்தியமே கண்ணனின் பிடி இருக்க அதை விட்டு போயும் போயும் மரக்கிளைக்கு ஆசைப்பட்டாயே. அவன் கையல்லவோ கிடைக்கவோண்ணாத கை. உனக்கு கண்ணன் உன் கையைப்  பிடித்து ஓடியதும் கர்வம் வந்து விட்டது. அந்தப் பரந்தாமனை எண்ணிய நெஞ்சம் அத்தகைய எண்ணங்களை எண்ண லாமா?அதனால்தான் கண்ணன் உன்னை விட்டு விட்டான்.
        இனியும் அத்தகைய கர்வம் கொள்ளாது அவனை எண்ணிக் காதல் கொண்டு கசிந்து உருகி ஆட்கொள்ள வருமாறு வேண்டிக் கொள்" என்றவுடன் தன தவறை உணர்ந்தாள்  ராதை.

         இறைவனை அடையும் வழியை ராதை மட்டுமா அறிந்து கொண்டாள்?எந்த அகந்தையோ கர்வமோ இல்லாதமனதிலே இறைவன் விரும்பி வந்து அமர்வான் என்ற உண்மையை நாமும்  புரிந்து கொண்டோமல்லவா?













Thursday, March 13, 2014

52.navaneedha naattiyam.

           52  நவநீத நாட்டியம்.
                             கண்ணன் ஆடிய நாட்டியம் நவநீத நாட்டியம் எனப் பெயர் பெற்றது.இவனது நாட்டியத்தைக் காண ஆசைப்பட்ட யசோதை அவனை ஆடச் சொன்னதுதான் நவநீத நாட்டியம் எனப்பட்டது.
           யசோதை வழக்கம்போல தயிர் கடைந்து கொண்டிருந்தாள். கண்ணன்
அப்போது அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டு வெண்ணை திரள்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது யசோதை "கண்ணா, பானைக்குள் பூதம் இருக்கு. அது வெளியே வந்து உன்னை விழுங்கி விடும்." என்று பயமுறுத்தி தூரப் போகச் சொன்னாள்.
                    அவள் சொன்னதுபோலவே கண்ணனும் பயப்படுபவனைப்போல கண்களை உருட்டி வாயைப்பொத்தி "ஆமாம்மா, அந்த பூதம் உன்னை விழுங்கிவிட்டால் நான் யாரை அம்மா என்று அழைப்பேன். நீயும் தூர வந்து விடு என்று அபிநயித்தான்.அதைப்பார்த்த யசோதை சிரித்தபடியே
"கண்ணா, நான் தயிர் கடையும் வரை நீ நாட்டியம் ஆடினால் உனக்கு யானைத் தலையளவு வெண்ணை தருவேன்."என்றாள்.
                "அப்படியா, சரி."என்றவனிடம்யசோதை "நான் மத்திலிருக்கும் கயிற்றை வலது பக்கம்  இழுக்கும் பொது வலது கால் தூக்கியும்  இடது பக்கம் இழுக்கும் பொது இடது கால் தூக்கியும் நாட்டியம் ஆடவேண்டும் "என்றாள்.
             அவள் தருவதாகச் சொன்ன யானைத் தலையளவு  வெண்ணைக்காக
கால்மாற்றி மாற்றி ஆடினான் கண்ணன். யசோதையும் மத்தை வேகவேகமாக இழுத்து கண்ணனை வேகமாக நாட்டியம் ஆடவைத்தாள்.
 
            யசோதையின் வேலையும் முடிந்தது. கண்ணனின் நாட்டியமும் முடிந்தது. ஆடிக்களைத்தவனாக வெண்ணை தின்னும் ஆசையுடன் தாயின் முன்னே வந்து நின்றான் கண்ணன்.யசோதையும் தன கையில் யானைத்தளையளவு திரண்ட வெண்ணையை எடுத்துப் பானைக்குள் போட்டு  மூடிவிட்டாள். சிறிய கடுக்காயளவு வெண்ணையை எடுத்து அதையும் இரு பங்காக்கி ஒரு பங்கை கண்ணனின் கையில் வைத்தாள்
             அந்தவெண்ணையைக் கையில் வாங்கிய கண்ணன் தாயைப் பார்த்துச் சிரித்தான்.அந்தவெண்ணையை வாயில் போட்டுக் கொண்டு அடுத்த கையை நீட்டினான். அவனது சிரிப்பின் அழகில் மயங்கிய யசோதை இன்னொரு உருண்டை வெண்ணையைக் கையில் வைத்தாள்  உடனே அடுத்த கையை நீட்டிச் சிரித்தான் திருடன். யசோதை மீண்டும் ஒரு உருண்டை வெண்ணையை அவன் கையில் வைத்தாள்
               அவள் முதலில் தருவதாகச் சொன்ன யானைத் தலையளவு வெண்ணையை வாங்கியபின் புன்னகைத்தவாறே ஓடிவிட்டான் அந்தக் கள்ளன்.தன்னை மறந்து கண்ணனின் புன்னகையில் மயங்கி அமர்ந்திருந்தாள்
யசோதை.
        வெண்ணைக்காகக் கண்ணன் ஆடிய நாட்டியமே நவநீத நாட்டியம் எனப் படும். நவநீதம் என்றால் வெண்ணை என்று பொருள். கண்ணனின் லீலை எண்ணி எண்ணி மகிழத் தக்கது.