Sunday, January 22, 2012

நல்ல சொற்கள்.

நல்ல சொற்கள்.
நல்ல சொற்களைச்  சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அதற்கு நமது காதுகளில் நல்ல சொற்கள் விழுந்து கொண்டே இருக்க வேண்டும்.
என் தாயார் சிறு வயதில் எனக்குச் சொன்ன கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு கிளி வியாபாரி கிளி விற்றுக் கொண்டு சென்றான்.அவ்வூரில் இருந்த கசாப்புக் கடை வைத்திருக்கும் குப்பன் ஒரு கிளியை வாங்கினான். அதை தன் கடையின் முன் கட்டித் தொங்க விட்டான்.அந்தக் கிளியும் வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டிருந்தது.சிலநாட்கள் கழித்து கிளி வியாபாரி இன்னொரு கிளியை ஒரு ஆசிரமம் வைத்து நடத்தும் ஒரு முனிவரிடம் விற்றான்.அந்த ஆசிரமவாசியும் அந்தக் கிளியை ஆசிரமத்தின் முன் பகுதியில் தொங்கவிட்டார். அந்தக் கிளியும் வருவோரையும் போவோரையும் பார்த்துக் கொண்டிருந்தது.
சில நாட்கள் கழித்து கிளி வியாபாரி தான் விற்ற கிளிகளைப் பற்றி அறிந்து கொள்ள நினைத்தான்.
முதலில் கசாப்புக் கடைக்குச் சென்றான். அங்கே இருந்த கிளியிடம் சென்று" எப்படி இருக்கிறாய் கிளியே?"என்று அன்புடன் கேட்டான்.
அதற்கு அந்தக் கிளி "டேய் இவன் காலை ஓடி. கழுத்தை வெட்டு என்று மிகவும் கடுமையாகப் பேசியது.
அதே சமயம் கடை முதலாளியும் தன் வேலையாட்களிடம் எப்படி வெட்டுவது என்று சொல்லிக் கொண்டிருந்தான். அதைக் கேட்ட கிளி வியாபாரி வருத்தத்துடன் வெளியேறினான்.
பின்னர் நேராக முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றான். உள்ளே நுழைந்தவுடன் "வாருங்கள். நலமா? அமருங்கள். ஏதேனும் பழங்கள் உண்ணுங்கள்" என்ற அன்பான சொற்களைக் கேட்டு மகிழ்ந்தான் வியாபாரி..
அப்போது உள்ளே நுழைந்த முனிவர்,அன்பாக உபசரித்து பழங்கள் உண்ணக் கொடுத்தார்.இப்போது வியாபாரி புரிந்து கொண்டான்.கசாப்புக் கடையில் பேசும் சொற்களை அங்கிருக்கும் கிளி  கற்றுக் கொண்டது. முனிவரின் அன்புச் சொற்களை இங்கிருக்கும் கிளி கற்றுக் கொண்டது.அதனால் எங்கே நல்லன பேசப்படுகிறதோ அங்கே நாம் இருந்தால் நமக்கும் அதே சொற்கள் தான் பேச வரும் எனவே நல்லதையே நாடவேண்டும் என்று சொன்னார்கள்.
அவரது அனுபவமிக்க சொற்கள் நமது வாழ்க்கைக்கே ஒரு நல்ல பாடமல்லவா?



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Saturday, January 14, 2012

vaazhththu.

அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, December 30, 2011

வாழ்த்து..

மணி மணியாய் சிந்தனை என்ற எனது வலைச் சரத்தைப் படிப்பவர்க்கும் விமரிசனம் செய்பவர்களுக்கும் மற்றுமுள்ள நண்பர்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புச் சகோதரி ருக்மணி சேஷசாயி..

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, December 16, 2011

13 - ஓர் இனிய நினைவு

சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னால் அப்போதுதான் நான் ஆசிரியப் பணியில் சேர்ந்திருந்தேன்.முதலில் மூன்று வகுப்புவரைதான் நான் கவனித்துவந்தேன்.அதன்பின் ஒவ்வொரு ஆண்டாக உயர்வு கிடைத்து ஐந்தாம் வகுப்புக்கு ஆசிரியராக உயர்ந்தேன்.அப்போதெல்லாம் வாரம் ஒரு முறை மாணவர் இலக்கியக் கூட்டம் என்று ஒவ்வொரு வார இறுதியிலும் நடைபெறும். அதை அந்தந்த வகுப்பாசிரியர் நடத்தவேண்டும்.   

கூட்டத்துக்குத் தலைவர் பேச்சாளர் கலைநிகழ்ச்சி என்றுஏற்பாடு செய்யவேண்டும். நிகழ்ச்சி  தயாரிக்கவேண்டும். மாணவர்களின் துணையுடன் அந்த வாரக் கூட்டத்தை வெற்றிகரமாக முடித்தபின் அதைப் பற்றிய அறிக்கையைத் தலைமை ஆசிரியை அவர்களுக்கு அனுப்பி அவரின் கையொப்பம் பெறவேண்டும்.இந்த நடைமுறை எட்டாம் வகுப்பு வரை இருந்தது.

அந்த வாரம் என் வகுப்பு மாணவர்கள் தயாரித்த நிகழ்ச்சியைப் பார்த்து அதன் படி கூட்டத்துக்கு மாணவர் அனைவரையும் அமரவைத்தேன். கூட்டம் தொடங்கியபோது பார்த்தால் தலைமை தாங்கவேண்டிய மாணவனைக் காணோம். 
 
அவனைப் பற்றி விசாரித்தபோது மதியம் அவன் பள்ளிக்கு வரவில்லை என்று தெரிந்தது.கடைசி நேரத்தில் அந்த மாணவன் தலைமை தாங்க அஞ்சி பள்ளிக்கே வராமல் நின்று விட்ட செய்தி தெரிந்தது. என்ன செய்வது கடைசிநேரத்தில் கூட்டத்தை நடத்தி ஆகவேண்டுமே. எனவே வகுப்பு ஆசிரியையான நானே தலைமை தாங்கினேன்.

. அந்தக் கூட்டம் பாரதியார் தினமாகக் கொண்டாடப் பட இருந்ததால் மாணவர்கள் பாரதியார் பாடல்கள் அவரைப் பற்றிய பேச்சுக்கள் என்று அழகாக நிகழ்த்தினர்.கடைசியாக  தலைவர்  சிறப்புரை ஆற்றவேண்டிய நேரம்.நான் எழுந்து நின்றேன்.மாணவர்கள் ஆவலோடு பார்த்தபடி இருக்க நான் "காணி நிலம்  வேண்டும்" என்று பாரதியாரின் பாடலை  எடுத்து பேசத் தொடங்கினேன்.

ராகமாகப் பாடலைப் பாடியவுடன் சற்றே சலசலத்த மாணவர்கள் கூட அமைதியானார்கள்.அதன்பின் நான் பேசத் தொடங்கினேன்.
"பாரதியின் ரசனை உள்ளம் எத்தகையது என்று பாருங்கள்.ஒரு காணி நிலம் வேண்டும்.அதில் ஒரு மாளிகை வேண்டும். அருகே கேணி இருக்கவேண்டும்.அருகே தென்னைமரங்களின் எண்ணிக்கை பத்து பனிரெண்டு இருக்கவேண்டும்.கேணி அருகில் நாம் அமர்ந்திருக்க, முத்துப்போல நிலாவொளி வீசவேண்டும். குயிலோசை நமது காதுகளில் இனிமையாக விழவேண்டும்.நமது மனத்தைக் குளிர்விக்கும் இளம் தென்றல் வீசி உள்ளத்தைக் கவரவேண்டும்.
அத்துடன் இந்த இனிமையான சூழலில் நல்ல கவிதையை நான் இசைக்கவேண்டும். அந்தப் பாடலைக் கேட்டு ரசிக்க ஒரு பத்தினிப் பெண் துணையாக வீற்றிருக்க வேண்டும்.
அந்தப் பாட்டுத் திறத்தால் இந்த உலகையே நான் காக்குமாறு அருள் செய் தேவி என்று கூறும் பாரதியின் கனவு எத்தகையது."என்று சொன்னவள் "இந்த அழகிய சூழலில் நீங்கள் இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள்.உங்கள் உள்ளம் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை அடைகிறது.என்று சொன்ன போது அமைதியாக இருந்த அந்த அறையின் மூலையில் இருந்து ஒரு சின்னக் குரல் "ஆஹா,, த்சு" என்ற அனுபவித்த உணர்வுடன் கூடிய குரல் எழுந்தது.அதுவரை எந்தப் பெண்ணைப் பாடத்தில் மக்கு. புரிந்து கொள்வதில் மந்தம் என நான் நினைத்திருந்தேனோ அந்த மாணவியின் வாயிலிருந்து இந்த அனுபவித்த குரல் எழும்பியவுடன் நான் அசந்து போனேன். அவள் எத்தகைய ரசிகை எனப் புரிந்து கொண்டேன்.

அன்று முதல் கவிதையை ரசிக்கும் உணர்வு வேறு படிப்பறிவு வேறு எனப் புரிந்து கொண்டேன். அந்தப் பெண்ணை மரியாதையுடன் பார்க்குமாறு  கவிதை உள்ளம் எனக்குக் கட்டளையிட்டது. இன்றும் இந்த நினைவு எனக்குள் ஒரு நீங்கா இனிய நினைவாக நிறைந்துள்ளது.



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, November 25, 2011

12--தேவை ஒரு திறமை.

தேவை ஒரு திறமை.
நாம்  எல்லோருமே  நம்  வாழ்க்கையில்  வெற்றி  பெறவே  விழைகிறோம்.விரும்பத்தக்க பண்புதான் என்றாலும் அதற்க்கும் சிலமுயற்சிகளை  நாம் செய்யத்தான் வேண்டியிருக்கிறது அல்லவா? வெற்றிக்கு மூல காரணம் என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். முதலில் புன்னகை. இந்தப் புன்னகை எத்தகைய மாற்றங்களை எதிர்ப்படுபவரிடம் காட்டுகிறது தெரியுமா?
நம்மை வேண்டியவராகக் காட்டும், நம்மை அறிந்தவராகக் காட்டும், ஏன் சில சமயங்களில் நம்மை உறவினறாகக் கூடக் காட்டும் அளவுக்கு இந்தப் புன்னகைக்கு பலம் உண்டு.அதனால்தான் புன்னகையே கோடிப் பொன் பெறும் என்றும் பொன்னகை எதற்கு புன்னகை போதுமே என்றும் கூறினர் நம் முன்னோர். பத்திரிகையாளர் திரு லேனா அவர்கள் தனது ஒரு பக்கக் கட்டுரையில் "உலகம் உங்களை விரும்ப வேண்டுமெனில் ஒருவரைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் புன்னகையை உதிர்க்கத் தவறாதீர்கள்." என்று குறிப்பிடுகிறார்.முன் பின் தெரியாதவராக இருந்தாலும் அவரைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தால் என்றேனும் சந்திக்க நேர்ந்தால் அவரே உங்களை அறிந்தவர் போலப் பேசவும் தேவையான உதவிகளை உங்களுக்குச் செய்யவும் தயங்க மாட்டார்.இந்த வெற்றியின் ரகசியத்தை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்பர்?இனியேனும் புன்னகையை வெற்றிப் போருக்குரிய சிறந்த ஆயுதமாகக் கொள்வோம், வாழ்வில் வெற்றி பெறுவோம்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Sunday, November 20, 2011

11-சொல்லாற்றல்.

      சொல்லாற்றல் என்பது பெரும் வரப்ரசாதம்.ஒருவருக்கு சொல்லாற்றல் இருந்தால் அவர் எந்த இடத்திலும் எந்த சொற்போரிலும் வெற்றி பெறலாம்.
நம் நாட்டில் பிறந்த பெரும் ஞானியர் பலரும் இந்த சொல்லினால் பல தத்துவங்களை நமக்கு அளித்துள்ளார்கள்.அப்படிப்பட்ட ஞானியருள் ஒருவர் கனகதாசர் என்ற கிருஷ்ண பக்தர்.இவரைப் பற்றி 'பாட்டி சொல்லும் கதைகள்' என்ற என் தளத்தில் எழுதியுள்ளேன்.
இந்த கனகதாசர் வியாசராயர் என்ற குருவிடம் சீடராக இருந்தார்.இவருடன் புரந்தரதாசர் போன்ற சில கிருஷ்ண பக்தர்களும் வியாசராயரிடம்  சீடராக இருந்தனர்.குரு கனதாசரின் ஞானத்தை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பினார்.தாழ்ந்த இனத்தில் பிறந்தவர் என்ற எண்ணம் தனது மற்ற சீடர்களிடம் இருப்பதை உணர்ந்த வியாசராயர் அவர்களின் எண்ணத்தை மாற்றி கனகதாசர் ஒரு மகான் என்பதை உலகுக்கு உணர்த்த எண்ணினார்
          ஒருநாள் வித்வான்களின் சபை கூடியிருந்தது. குருவான வியாசராயர் உபதேசம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அவர் திடீரென ஒரு கேள்வி எழுப்பினார்."சீடர்களே, நான் கேட்கும் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்."என்றார். சீடர்கள் மெளனமாக இருந்தனர்.
"இந்த இடத்தில் இருப்பவர்களில் சுவர்க்கத்திற்குச் செல்பவர் யார் எனத் தெரியுமா?" அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.ஒவ்வொருவரையும்  குரு  கேட்டுக்  கொண்டே  வந்தார .
கனகனின் முறை வந்தபோது கனகதாசர் புன்னகையுடன் எழுந்து நின்றார்."சுவாமி, நான் போனால்... போவேன்." என்றபோது சபையே திடுக்கிட்டது.
புன்னகை புரிந்த வியாசராயர் "இந்த சபையில் இருப்பவரில் நீமட்டும்தான் சுவர்க்கம் செல்வாயா?"என்ற போதும், கனகதாசர் மீண்டும் அதே பதிலைக் கூறினார்.
சீடர்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியாமல் அவர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.கீழ் ஜாதியில் பிறந்த ஒருவன் சுவர்க்கம் செல்வானாம் என்ன துணிச்சல்?என்று தமக்குள் முணுமுணுத்தனர்.
அப்போது குருவானவர், "கனகா,நீ இவ்வாறு கூறுவதன் பொருளை அனைவரும் புரிந்து கொள்ளும்படி சொல்."என்றார்.
கனகதாசர் பணிவுடன் "குருதேவா, யார் ஒருவர் நான் என்ற அகந்தையை விட்டு விட்டு வாழ்கிறார்களோ அவரே சுவர்க்கம் செல்வார் எனக் கூறினேனே அல்லாது இந்தக் கனகன் போவேன் எனச் சொல்லவில்லை குருதேவா.என் உள்ளத்திலும் நான் எனும் அகந்தை விலகிவிட்டால் நானும் போவேன் என்று கூறினேன் சுவாமி." என்று கூறி வணங்கி நின்றான்.
அப்போது வியாசராயர் தமது சீடர்களைப் பார்த்து "இப்போது தெரிந்து கொண்டீர்களா கனகனின் பெருமையை.சிறந்த ஞானம் உள்ளவன் கனகன்.அந்த கிருஷ்ணனுக்கு தாசன். 
இவனது குல பேதம் பார்க்காமல் இனியேனும் இவனது ஞானத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.பக்திக்கும் ஞானத்திற்கும் குலம் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்."
என்று உரைத்து கனகனை அழைத்து தனது முக்கிய சீடர்களுள் ஒருவராக அமர்த்திக் கொண்டார்.
இப்படி ஒரு சொல்லிலே பொருள் கூறி அதன் மூலம் தனது ஞானத்தை உணர்த்திய கனகதாசரின் சொல்லாற்றல் நாமும் கற்றுக் கொள்ள வேண்டிய ஆற்றல் அல்லவா?



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Thursday, September 22, 2011

10- குழந்தைத் தனம்.

என் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு அவன் அப்பா ஒரு சின்ன சைக்கிள் வாங்கித் தந்தார்.அந்த சைக்கிளில் அவன் ஏறிக்கொண்டு என் நான்கு வயது மகளைச் சுற்றிச் சுற்றி வந்து விளையாட்டுக் காட்டுவான். ஆனால் அவளைத் தன் சைக்கிளைத் தொட விடமாட்டான்.
ஒவ்வொரு முறையும் விளையாடச் சென்று விட்டு அழுது கொண்டே வீட்டுக்குள் வருவாள என்மகள்.அன்றிலிருந்து தனக்கும் அதேபோல் சைக்கிள் வேண்டும் என்று கேட்கத் தொடங்கினாள். நாங்கள் இருவரும் அலுவல் முடிந்து வீட்டுக்குள் நுழையும் போதே அப்பா, சைக்கிள் எங்கே? என்று அழ ஆரம்பிப்பாள்.எங்களின் நிதி வசதி அப்போது உடனே சைக்கிள் வாங்கித் தரும் நிலையில் இல்லாததால் அவளைச் சமாதானம் செய்தும் வேறு விளையாட்டுக் காட்டியும் ஏமாற்றி வந்தோம்.
ஒருநாள் என் மாணவர்கள் பரீட்சைக்காகக் கட்டவேண்டிய பணத்தையெல்லாம் சரிபார்த்துக் கொண்டிருந்தேன்.
எல்லா மாணவர்களும் கொடுத்தார்களா, அத்தனை பேரின் பணமும் வந்துவிட்டதா,என சரி பார்த்துக் கொண்டிருந்தேன் மறுநாள் அப்பணத்தைக் கட்டவேண்டும்.என் மகளும் என் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது மளிகைக் கடைக்காரர் அவசரமாகப் பணம் வேண்டும் எனக் கேட்டு வந்து நின்றார்.
அவரிடம் இன்னும் நான்கு நாட்கள் கழித்துத்தான் சம்பளம் வரும் அன்று மாலையே கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் மகள் குறுக்கிட்டு" இல்லே அங்கிள், அம்மா பொய்சொல்றாங்க. நிறைய ரூபா வச்சிருக்காங்க. எனக்குக் கூட சைக்கிள் வாங்கித் தரமாட்டேங்கிறாங்க,"என்று விம்மும் குரலில் கூறினாள். 
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. கடைக்காரர் என்ன நினைத்துக் கொள்வார் என்னைப் பற்றி என நினைத்துப் பதைத்துப் போனேன்.
அவரிடம் பரீட்சைக்கான மாணவர்களின் பணம் என்ற உண்மையைச் சொல்ல  அவரும் அதைப் புரிந்து கொண்டு,
"அதாம்மா,குழந்தைகளை வச்சிக்கிட்டு எந்தமாதிரியான காரியங்களைஎல்லாம் செய்யக் கூடாதுன்னு இப்பப் புரியுதுங்களா" என்று  எனக்கு அறிவுரை கூறிச் சென்றார்.அதன் பின்னரே நான் அப்பாடா என மூச்சு விட்டேன்.
குழந்தைகளுக்கு எந்த சமயம் எதைச் சொல்லக் கூடாது என்பதோ உண்மையைப் புரிந்து கொள்ளும் நிலையோ இல்லை.அதனால் அவர்கள் குழந்தைத் தனமாக எதையாவது பேசி நம்மை சிக்கலில் மாட்டி விடுவார்கள்.
அந்தக் குழந்தைத் தனத்தை எதிர்பார்த்து நாமும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன்.


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com