Friday, October 31, 2014

நினைவில் நிற்கும் நிலாச்சோறு

பௌர்ணமியன்று அந்த நிலவைப் பார்த்தேன்.என் நினைவு எங்கோ சென்றது.இரவு எட்டுமணி.இந்த நேரம்தான் சிறுவர்கள் இரவு உணவைத் தேடும் நேரம். சுமார் எழுபது ஆண்டுகளுக்குமுன் எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது என் பாட்டி எங்களுக்கு சோறிட்டதை நினைவு கூர்ந்தேன்.பெரிய கிணற்றடி. சுற்றி மண் தரை யோ காரையிட்ட தரையோ பளிச்சென்று சுத்தமாக இருக்கும்.
நாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தைச் சுற்றிலும் தென்னை மா எலுமிச்சை மரங்களும் அருகில் மல்லி ரோஜா சாமந்தி பாரிஜாதம் போன்ற மலர்ச் செடிகளும் நிறைந்திருக்கும் ரம்யமான தோட்டம். 
 அங்கு நடுவே அமர்ந்து கொண்டு ஒரு பெரிய பாத்திரத்தில் குழம்போ ரசமோ ஊற்றிப் பிசைந்து கொண்டு வந்து 'பசங்களா, வாங்க எல்லாரும். கதைவேணுமானா சீக்கிரமா வரணும் "என்று ஒரு அதட்டல் போடுவார்.
விளையாடிக்கொண்டிருந்த பத்துப் பேரும் ஓடிவந்து பாட்டியின் அருகே உட்காரப் போட்டி போடுவோம்.
ஒரு வழியாக எங்கள் சண்டையைத் தீர்த்துவிட்டுக் கதை சொல்லும் போதே ஒவ்வொரு உருண்டையாய் பாத்திரத்திலிருந்து கைகளில் விழும்.

இடையிடையே முழுங்கு, இருடா அவசரப்படாதே, ஏண்டி பறக்கறே, ம்..னு சொல்லு என்ற வசனங்களுடன் கதை நடக்கும். அந்தப் பாத்திரம் காலியாகும் வரை கதையும் தொடர்ந்துகொண்டிருக்கும்.அடுத்தவீட்டு அம்மாள் தன குழந்தை சாப்பிட அடம்பிடிப்பதாகச் சொல்லி எங்களுடன் சாப்பிட அமர்த்திவிடுவார்.நாங்களும் ஒரு விருந்தாளியை வரவேற்பது போல அந்தக் குழந்தையை நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அருகே அமர்த்திக் கொள்வோம்.அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி  சிரிப்பு பொங்கும் அந்தக் குழந்தையும் அழுகையை மறந்து சிரிப்பதோடு எங்கள் பாட்டியின் கையிலிருந்து கவளம் கவளமாக சாதத்தை வாங்கி தானே உண்டு விட்டுப் பெருமையோடு எங்களைப் பார்த்துச் சிரிக்கும்.

இந்த நினைவு காரணமாக எனக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறந்தபின்னர் நான் பெற்ற நிலாச்சோறு மகிழ்ச்சியை என் பிள்ளைகளும் பெறவேண்டுமென  விரும்பினேன். எனவே சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் அவர்களுக்கு நிலாச்சோறு தான். என் பிள்ளைகளின் நண்பர்கள் தோழிகள் வீட்டுக்கு வந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களையும் நிலாச்சாப்பாட்டுக்கு அமர்த்திவிடுவேன்.இருபத்தைந்து ஆண்டுகள் கழித்துப் பார்த்தபோது அந்தப்பையன்களில் ஒருவன்  என்னிடம் நிலாச்சாப்பாட்டை நினைவு வைத்துக் கொண்டு கேட்டபோது நான் நெகிழ்ந்துபோனேன். நம் பிள்ளைகளின் உணர்வு இன்னும் மங்காமல் இன்னும் நம் பாரம்பரியத்தில் அமிழ்ந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.இளைஞர்கள் இப்போது நிலாச்சாப்பாடு போட்டாலும் கைநீட்டத்  தயார்தான்.போடுவதற்குத் தாய்மார்கள் தயாரா?

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, October 27, 2014

chillaraich chettiaar.

.                         . சில்லரைச் செட்டியார்.


      ஒரு ஊரில் சில்லறைச் செட்டியார் என்று ஒருவர் இருந்தார்.அவர் அந்தஊரில் ஒரு சாப்பாட்டுக் கடை நடத்தி வந்தார்.அவருக்கு இயற்பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. சில்லறைச் செட்டியார் என்ற பெயரே நிலைத்துவிட்டது.அந்தப் பெயர் வந்த காரணம்தான் இந்தக் கதை.
        ஒருநாள் நல்ல வெய்யில் நேரம். செட்டியார் கடையில் மிகவும் சுறுசுறுப்பாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.நிறையப்பேர் சாப்பிட வந்திருந்தனர்.சமையலறையில் சமையல் சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்தது.அடுப்பில் சமைக்கும் பதார்த்தத்தின் வாசனை வெளியே வரை கமகமத்தது.
       ஒரு வழிப்போக்கன் சாப்பாட்டுக்கடையின் திண்ணையில் வந்து அமர்ந்தான்.சாப்பாட்டு நேரமானதால் தான் கொண்டுவந்திருந்த பழைய சோற்று . மூட்டையைத் திறந்து அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டான்.
         சாப்பிட்ட களைப்பில் திண்ணையில் சாய்ந்தான்.அப்போது சில்லறைச் செட்டியார் வெளியே வந்தார். படுத்திருக்கும் வழிப்போக்கனைப் பார்த்தார்.
"ஏனப்பா, உள்ளே போய்  சாப்பிடுவதுதானே. நல்ல சாப்பாடு. விலையும் குறைவு."
"உண்மைதானுங்க. நல்ல வாசமுங்க. .வயத்துல பசியைக் கெளப்பிடுச்சிங்க..
உங்க புண்ணியத்துல அந்த  வாசத்தைப்  பிடிச்சிகிட்டே பழையதைத் தின்னுட்டேனுங்க"என்றபடியே புறப்பட எழுந்தான்.
செட்டியார் விடுவாரா?

எங்கேப்பா புறப்பட்டுட்டே?வாசம் பிடிச்சியில்லே எனக்கு ஒரு சாப்பாட்டுக்கான மூணு அணாவை எண்ணி வச்சுட்டுப் போ."

"அய்யா, நான்தான் சாப்பிடவே இல்லீங்களே?"

"ஏதாவது பேசினேன்னா திண்ணையிலே உக்காந்ததுக்கும் வாடகை கேப்பேன்."

வழிப்போக்கனிடமோ  இருப்பதே வழிச் செலவுக்கு அவன் வைத்திருக்கும்  .மூன்றணாதான். என்ன செய்வான் பாவம். ஆனால் செட்டியாரோ விடுவதாயில்லை.அவனை இழுத்துக் கொண்டு அவ்வூர் நியாயாதிபதியிடம் சென்றார்.தன வழக்கை எடுத்துக் கூறி அவன் பிடித்த வாசனைக்கு ஒரு சாப்பாட்டுக்குண்டான மூன்றணா தரவேண்டும் என்று முறையிட்டார். நியாயாதிபதி வழக்கை மீண்டும் மீண்டும் கேட்டார்.

வழிப்போக்கன் அழுதுகொண்டே நின்றான்.

தீர்ப்புக் கூறினார்."நீ அவர் .கடை  வாயிலில் அமர்ந்து வாசனை பிடித்தபடி சாப்பிட்டதற்குப் பணம் தரவேண்டியதுதான். ஆனால் சாப்பாட்டின் வாசனை பிடித்ததுபோல சில்லறையை உன் கையில் வைத்து கலகலவென்று சத்தப் படுத்து. அதன் ஒலிதான் அவனுக்கு விலை.நீ பிடித்த வாசனைக்கு அவன் கேட்கும் காசின் ஒலிதான் கூலி.என்று கூறி வழக்கை முடித்தார்.
          இப்படி அநியாயமாக சம்பாதிக்க நினைத்ததனால் மூன்றணா சில்லறைக்காக நியாயசபைக்குச் சென்றதால் ஜனங்கள் இவரை சில்லறைச் செட்டியார் என்று அழைக்கிறார்கள்.எப்படி தீர்ப்பு.















Sunday, October 12, 2014

ராமனின் கோபம்

                                 ராமலக்ஷ்மணர்கள் வனவாசம் செல்லத் தயாராகி விட்டார்கள். சீதையும் பின்தொடர்கிறாள்.சீதை செல்லமாக ஆசையுடன் வளர்க்கும் கிளி அரண்மனை வாயிலில் இருந்த கூண்டுக்குள் இருந்தது.  நடக்கும் விபரீத நிகழ்ச்சிகளைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.வனவாசத்திற்கு ஸ்ரீராமனுடன் புறப்படும் சீதாதேவி தான் வளர்த்துவரும் கிளியின் அருகில் வந்ததும் நின்றாள்.'கிளியை மிகுந்த அன்புடன் பார்த்தாள் . மிகுந்த வாத்சல்யத்துடன் கூறினாள்.                                                                                                                                                                                                                                             "என் உயிரையே உன்மேல் வைத்திருக்கிறேன்.நான் சீக்கிரமே திரும்பி வருவேன். அதுவரை ஜாக்கிரதையாக இரு." என்று கூறி விடை பெற்றாள்.                           சீதை கிளியிடம் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்ட ராமனுக்குக் கோபம் வந்துவிட்டது.அவன் சீதையைப் பார்த்து சற்றே மனத் தாங்கலுடன் கூறினான்.
 "சீதே, சற்றுநேரம் முன்னர்தான் என் ப்ராணனே  நீங்கள்தான். தாங்கள் இல்லாமல் நான் ஒரு கணமும் உயிர் வாழமாட்டேன் என்று வாதாடினாய்..  மறு 
நிமிடமே கேவலம் ஒரு கிளியிடம் உன் பிராணன் இருப்பதாகக் கூறுகிறாய்.இதன் பொருள் எனக்கு விளங்கவில்லை." சற்றே சினத்துடன் கேட்ட மணாளனின் முகத்தைப் பார்த்த சீதை அச்சத்துடன் வாயடைத்து நின்று விட்டாள். 
அதைப் பார்த்த வசிஷ்டர் புன்னகையுடன் குறுக்கிட்டார்.
"ராமா, உன் அவதார ரகசியத்தை நினைத்துப் பார்.சீதை அந்த மகாலக்ஷ்மியின் அம்சம். அவள் கிளியிடம் பேசும்போது ஒருகால் வாயிலின் வெளியேயும் மற்றொரு கால் வாயிலுக்கு உள்ளேயும் வைத்துக் கொண்டு பேசினாள் .இதன் பொருள் என்னவென சிந்தித்தாயா.கிளியைக் காரணமாக வைத்து லக்ஷ்மி அம்சமான சீதை திரும்பி வரும்வரை அயோத்திக்கு லக்ஷ்மி கடாட்சம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினால்தான் அந்தக் கிளியிடம் தன உயிர் இருப்பதாகக் கூறினாள்."       என்று கூறி ராமனை சமாதானப் படுத்தினார்.
உண்மையை உணர்ந்துகொண்ட ராமனும் சீதையின் அன்புக்கும் அறிவுக்கும் அகமகிழ்ந்து அவள் கரம் பற்றி வனத்தை நோக்கி நடந்தான். இளவலும் .பின்தொடர்ந்தான்..  

Monday, August 18, 2014

கண்ணனின் லீலை என்ற தலைப்பில் மணம் என்பதற்குப் பதில் மனம் என்றும் எண்ணெய் என்பதற்குப் பதில் என்னை என்றும் பதிவாகியுள்ளது. தயவு செய்து திருத்திப் படிக்கவும்.
அன்புடன் பாட்டி.

57.கண்ணனின் லீலை.

கோகுலாஷ்டமி கொண்டாடிய மகிழ்ச்சியில் அனைவரும் இருப்பீர்கள். உங்கள் வீட்டுக் குழந்தைகளும் உங்களுடன் பட்சணம் செய்ய உங்களுக்கு உதவியிருப்பார்களே.அதுதான் வீட்டில் நெய் மனமும் என்னை வாசனையும் இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறதே.
                   சரி. பூஜையும் முடித்து முறுக்கு சீடை  ஸ்வீட் பழம் பாயசம் என்று நிவேதனப் பொருட்களை எல்லாம் ஒரு பிடி பிடித்திருப்பீர்கள்.ருசியாகவே இருந்திருக்கும். ஏனென்றால் அம்மாக்களும் பாட்டிகளும் அந்தக் கண்ணனுக்காக மட்டுமல்லாமல்  தங்கள் வீட்டுக் கண்ணனையும் நினைத்துக் கொண்டு செய்கிறார்கள் அல்லவா. ருசியாகத்தானே இருக்கும்.
         அந்த ருசியோடு இன்றைய கதாநாயகனைப் பற்றிய ஒரு செய்தியையும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். கண்ணனின் லீலைஎன்னும் அந்தருசியில்  மூழ்கி மகிழுங்கள்.
      கண்ணனின் தாயாரான யசோதை கண்ணனிடம் எங்கும் போகக் கூடாது என்று சொல்லி தயிர் கடையும் இடத்தில் உட்காரவைத்துவிட்டுப் போய் விட்டாள்.கண்ணனும் சாதுவாக அமர்ந்திருந்தான்.ஆனால் அவனால்  முடியுமோ.வாசலில் நண்பர்களின் சப்தம் கேட்டவுடன் வெளியே ஓடிவந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
         யார் வீட்டில் கோபி வேலையாக இருக்கிறள் என்று பார்த்து அந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.
வழக்கம்போல வெண்ணைப் பானை உரியில் இருந்ததைப் பார்த்தான் கண்ணன்.அவனுக்குத்தான் தெரியுமே எப்படி அதை எடுப்பது என்று.உரியில் கை வைக்கும் முன்பாகவே அதில் ஒரு மணி கட்டியிருப்பதைப் பார்த்துவிட்டான் கண்ணன்.
         அந்த வீட்டு கோபி கண்ணன் வந்து உரியைத் தொட்டால் சப்திக்குமாறு ஒரு மணியைக் கட்டியிருந்தாள் .அதைப் பார்த்துவிட்டு மெதுவாக அந்த மணியிடம் சொன்னான். "ஏ மணியே, நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும் வரை மணி அடிக்காதே." மணி சம்மதித்து அமைதியாக இருந்தது.
         இப்போது முதல் பானை இறங்கிற்று. அடுத்து இரண்டாம் பானையும் இறங்கிற்று.இனி உரியில் இருப்பது ஒரே பானை தான். நண்பர்கள் வெண்ணை தின்பதைப் பார்த்து மகிழ்ந்தவாறே உரியின் மேலிருந்த பானைக்குள் தன கையை வைத்து ஒரு உருண்டை வெண்ணையை எடுத்து வாயருகே கொண்டு சென்றான் கண்ணன்.
        அதுவரை அமைதியாக இருந்த மணி கணகண
வென்று அடித்து ஒலி எழுப்பியது. வேகமாகக் கீழே குதித்த கண்ணன் "ஏ மணியே, ஏன்  அடித்தாய்?நான்தான் அடிக்காதே என்றேனே. இவ்வளவு நேரம் சும்மா இருந்துவிட்டு இப்போது ஏன்  அடிக்கிறாய்?"
        "கண்ணா, பரந்தாமா, யுக யுகமாய் உனக்கு நிவேதனம் செய்யும்போது நான் ஒலி எழுப்புவதுதானே வழக்கம் இன்று நீ வெண்ணை உண்ணும் போது எப்படி நான் ஒலி
எழுப்பாமல் இருப்பேன்?" கண்ணன் அமைதியானான்.
           அதற்குள் கோபி வந்துவிடவே எல்லோரும் வெளியே ஓடினார்கள். ஆனால் அடுத்தவீட்டு கோபி தண்ணீர் எடுக்க யமுனைக்குச் செல்வதைப் பார்த்து அவள் வீட்டுக்குள் நுழைந்தனர்.அங்கும் உரியில் மணி கட்டியிருப்பதைப் பார்த்தான் கண்ணன்.
         அவனுக்கா தெரியாது.தன ஒரு கையால் மணியின் நாக்கை ஒலிக்காமல் பிடித்துக் கொண்டு மறுகையால் வெண்ணையைத் தின்று விட்டு ஓடினான்.
இவர்கள் கூட்டமாக ஓடுவதைப் பார்த்த கோபியர் தங்களுக்குப் பயந்து ஓடும் கண்ணனின் அழகில் மயங்கி நின்றார்கள்  கோகுலாஷ்டமியன்று உரியடிப்பது, ஓடிப்பிடிப்பது, ஒளிந்து விளையாடுவது போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்கிறோம்.என்ன,
வீட்டுப் பலகாரதோடு கண்ணனின் விளையாட்டும் ருசியாக இருந்ததா?




















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, July 28, 2014

இராமானுஜன் --சினிமா விமரிசனம்.


நான் சமீபத்தில் பார்த்து ரசித்த படம் "ராமானுஜன்" கப்பலோட்டிய தமிழன், பாரதியார்,போன்ற படங்களின் வரிசையில் இந்தப் படம் நம் மனதைக் கவரும் வகையில் எடுக்கப் பட்டுள்ளது.
                                                       படத்தின் வரலாறு சுவாரசியமாகப் படமாக்கப் பட்டுள்ளதால் தொய்வில்லாமல்  சலிப்பின்றி நகர்கிறது. பாடல் காட்சிகளுக்கு இடமில்லாவிட்டாலும் கோவிலில் தாயும் மகனும் பாடும் பாடல் மனதைக் கவர்கிறது.இசையும் மிகவும் மென்மையாக இதமாக இருக்கிறது.நடித்தவர்களும் சரியாக நடித்தார்கள். ராமானுஜனாக  சரியான நடிகர்தான் நடித்துள்ளார்.
                                                       19-ம் நூற்றாண்டில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து பல எதிர்ப்புகளுக்கிடையே தன திறமையைக் காட்டி உலகுக்குத் தன்னை அடையாளம் காட்டியவர் ராமானுஜன். அந்த மேதையைப் புரிந்துகொண்டு அவருக்குத் தக்க உதவிகளைச் செய்தவர்கள் லண்டனில் இருந்த கணிதப் பேரறிஞர்கள்.

           அவரின் வரலாற்றை  மிகச் சுவையோடு கொண்டு சென்றிருக்கின்றனர்
இடையிடையே காதல் காட்சிகளும் இது ஒரு திரைப் படம் என்பதை நினைவூட்டவே ரசிக்கத் தக்க முறையில் அமைக்கப் பட்டுள்ளது பாராட்டுக்குரியது.அவர் பட்டங்களும் பதவிகளும் பெற்றதைப் பார்க்கும்போது நாமே பட்டம் பெற்றுவிட்டதைப் போல ஒரு மனத் திருப்தி ஏற்பட்டது.அந்த அளவுக்கு ராமானுஜன் துன்பப் பட்டிருக்கிறார் என்பதை அறிந்ததாலேயே.அவர் அடைந்த மகிழ்ச்சியை நாமும் அடைகிறோம்.
                                   ஆனால் அவர் நோய்வாய்ப் பட்டு துன்புறுகையில் எல்லா மாமியார்களையும் போலவே ராமானுஜனின் அம்மாவும் மகனிடம் மருமகளை நெருங்க விடாமல் செய்வது அந்தக் கால மாமியாரை நினைவூட்டுகிறது. ஆனாலும் அதன் காரணத்தை அவர் கூறும்போது அந்த முகத்தில் தெரியும் வேதனையை , உள்ளக்குமுறலை முகத்தில் காட்டி அவரும் ஒரு தாய் என்பதைத் தன                                         நடிப்பின்மூலம சிறப்பாக  வெளிக்காட்டுகிறார் சுகாசினி.
                                       கடைசிக் கட்டத்தில் படத்தில் அமைத்துள்ள காட்சிகள் என்னை அமைதிப் பெருமூச்சு விட வைத்தது.ஆம்.எல்லாப் படங்களிலும் வருவது போல இறந்தவரைப் படுக்கவைத்து மாலையிட்டு மூக்கில் பஞ்சடைத்து அனைவரும் சுற்றி நின்று ஓலமிட்டு அழ என்று பார்க்கவே விரும்பாத காட்சிகளைக் காட்டாமல் வார்த்தையிலேயே விளங்க வைத்திருப்பது சிறப்பு  டைரக்டருக்கு ஒரு ஷொட்டு வைக்கலாம்.
                                      கடைசியில் கடல் கடந்தவர் பரிகாரம் செய்யவில்லை என்று அவருக்கு சம்ஸ்காரம் செய்ய மறுத்து அனைவரும் சென்று விட வீடே அமைதியாக இருக்கிறது.இந்தக் காட்சி  யாருக்கும் கண்ணில் நீரை வரவழைக்கும்.   ஒரு சிறந்த மேதைக்குக் கிடைத்த மரியாதை இத்தகையதா என மனம் கலங்கியது. ஆனாலும் பாரதி, விவேகானந்தர் போன்ற மாமேதைகளைப் போலவே ராமானுஜனும் இளம் வயதில் புகழுடம்பை எய்திவிட்டார்.   இவரது பெயரால்  ராமானுஜன் விருது    அளிக்கப் படுவது ஒன்றே இவருக்கு நாம் அளிக்கும் அஞ்சலி.
இத்தகைய சிறந்த படத்தைத் தயாரித்தமைக்காக அதன் தயாரிப்பாளரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மாணவர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய படம்.ஒரு மேதை எவ்வளவு துயருக்கு நடுவே எதிர்நீச்சல் போட்டு வெற்றிவாகை சூடுகிறார் என்பது பிள்ளைகளுக்கு ஒரு படிப்பினையாகும்.       












                                                 .

Saturday, June 21, 2014

வீரனுக்கு மரியாதை.

பாரதப் போர் முடிந்தபின் தருமன் கண்ணனிடம் கேட்டான்."கண்ணா, இவ்வளவு பாவங்களைப் புரிந்து இந்தப பாரதப் போரில் வெற்றிபெற்று  நாட்டுக்கு மன்னனாகியுள்ளேனே . என் பாவங்களைப் போக்கிக் கொள்ள வழி சொல்."
கண்ணனும் சொன்னான்."போர்க்களத்தில் கடும்போர் புரிந்து அம்பு பட்டு உத்தராயண புண்யகாலத்துக்காகக் காத்திருக்கிறாரே உன் தாத்தா பீஷ்மர்.அவரிடம் செல். அவர்  வார்த்தைகளைக் கேள் உன் பாவங்கள் விலக அவர் வழி சொல்வார்."என்று கூறி தருமனை பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் போர்க்களத்திற்கு அழைத்து வந்தான்.

அங்கே பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறு இறைவனைத் துதித்துக் கொண்டிருந்தார்.அங்கே சென்ற தருமன் தன பாவங்கள் தொலைய வழி கேட்டான். "அவனிடம் நீ செய்தவை பாவங்கள் என்றா எண்ணுகிறாய். இறைவனை உடன் வைத்துக் கொண்டிருக்கும் உனக்கு சந்தேகம் வரலாமா?அல்லது கண்ணன் உன் அருகிலிருப்பதால் அவன் இறைவன் என்ற எண்ணம் உனக்குத் தோன்றவில்லையா?என்று சொல்லி கண்ணனின் பெருமைகளைக் கூற ஆரம்பித்தார்.அதுவே விஷ்ணு சஹஸ்ரநாமம் என்றாயிற்று.இந்த நாமத்தைச் சொன்னால் சகல பாவங்களும் தீரும் என்று அவர் வாக்கிலேயே கேட்டான் தருமன். அத்துடன் பீஷ்மர் கூறிய இந்த சஹஸ்ரநாமத்தைக் கண்ணன் பீஷ்மரின் அருகே அமர்ந்து கேட்டான்.

ஒரு சுலோகம் "சங்க ப்ருந் நந்தகி  சக்ரி சார்ங்க தன்வா கதாதரஹா "என்று பீஷ்மர் கூறியவுடன் கண்ணன் தன கைகளில் சங்கு, நந்தகி என்ற வாள், சக்கரம், சார்ங்கம் என்றவில், கதை என்ற ,பஞ்சாயுதங்களை ஏந்தி பீஷ்மருக்கு ஒரு போர்வீரனைப்போல் தரிசனம் கொடுத்தார்.
அந்த விஸ்வரூப தரிசனத்தைப் பார்த்தவாறே அந்த வீரன் தன உயிரை விட்டான்.இது ஒரு உண்மையான க்ஷத்ரிய வீரனுக்கு அவனது இறுதிக்காலம் முடியும்போது அளிக்கும் இராணுவ மரியாதை என்பதை நாம் புரிந்து கொள்ளவே இந்தக் காட்சியைக் காட்டி பீஷ்மருக்கு அருள் புரிந்தான் கண்ணன்.போரில் உயிர்நீத்த வீரனுக்கு மரியாதை செய்வதைக் கண்ணன் அன்றே நடத்திக் காட்டியுள்ளான்.


--





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com