யார் சொல்லையும் அலட்சியப் படுத்துவது நமக்கே துன்பத்தைத்தரும். ஆகையால் எந்த ஒரு சொல்லையும் செயலையும் அலட்சியப் படுத்தக் கூடாது. ஒருமுறை உறவினர்களுடன ஹம்பிஎன்றஇடத்தைச்சுற்றிப்பார்க்கசென்றிருந்தோம்.ஒருவாரமாகவே நவப்ருந்தாவனம் மந்த்ராலயம் போன்ற பல இடங்களைத் தரிசித்துவிட்டு ஹம்பி வந்து சேர்ந்தோம்.காலை பத்துமணிக்கு கோயில்,மண்டபங்கள், அரண்மனை முதலியன பார்த்துக் கொண்டே வந்தோம்.
விஜயநகரப்பேரரசின் தலைநகராக சிறப்பொடு விளங்கிய அந்த நகரின்
வரலாற்றுப் பெருமை அறிந்திருந்த நாங்கள் அதன் இன்றைய சிதிலமடைந்த நிலையைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்தோம்.மனம் முழுதும் அந்த அழகிய தலைநகரின் அவலநிலையைப பார்த்த துயரம் நிறைந்திருந்தது. என் கணவர் மட்டும் சுற்றுப் புறத்தைப் பார்த்துக் கொண்டே வந்தார். அவர் எப்போதும் முன்னெச்சரிக்கையோடு இருப்பவர்.
அவர் எங்கள் கூட்டத்தைப் பார்த்து "எல்லோரும் கைப்பையை மறைத்து வைத்துக் கொள்ளுங்கள் இங்கு குரங்குகள் அதிகமாக உள்ளன. பையைப் பறித்து விடும்."என்றார்.
நாங்கள் அனைவரும் எங்கள் கைப்பைகளை முடிந்தவரை மறைத்துக் கொண்டும் கவனமாகப் பிடித்துக் கொண்டும் வந்தோம்.எங்கள் குழுவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் மட்டும் சற்று அலட்சியமாக கையிலேயே வைத்துக் கொண்டபடி "குரங்குதானே,கையிலிருந்தெல்லாம் பையைப் பிடுங்காது".என்று சொல்லி அலட்சியமாக நடந்தார்.
சற்று நேரத்தில் நாங்கள் அங்கிருந்த யந்த்ரோதாரக ஆஞ்சநேயரின்கோவிலுக்குச்சென்றோம்.படிகளில் ஏறும்போது "என் பை பை...சூ.. சூ..பிடி பிடி" என்று ஒரே கூக்குரலும் கூச்சலும் கேட்டது.என் கணவர் சொன்னது போலவே அந்த ஆசிரியரின் கையிலிருந்த பையைப் பறித்துக் கொண்டு ஓடியது ஒரு குரங்கு.
கூட்டம் கூடியது. ஆளுக்கு ஒரு பக்கமாக குரங்கைத் துரத்த பலரும் அந்தப் பையைக் காப்பாற்றப் போராடினர். பழம் கொடுத்தாலும் பயமுறுத்தினாலும் எதற்கும் அசையவில்லை அந்தக் குரங்கு. அந்தப் பையின் ஜிப்பைத் திறப்பதிலேயே கவனமாக இருந்தது அது. யாரும் நெருங்க முடியாத உயரமான பாறைமேல் அமர்ந்துகொண்டிருந்தது.அந்த குரங்கைச் சுற்றிலும் அருவி நீர் கொட்டிக் கொண்டிருந்தது. பாறைக்குப்பாறை தாவிச் சென்று கொண்டிருந்த குரங்கைத் தொடர்ந்து பலரும் ஓடிக்கொண்டிருந்தனர்.
பாவம், அந்த ஆசிரியரின் முகத்தில் இப்போது கவலை தாண்டவமாடியது.குரங்கு ஜிப்பைத் திறக்காமல் இருக்கவேண்டுமே என்று தவிப்பது தெரிந்தது.
ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை.குரங்கு தன பல்லால் கடித்து பையைத் திறந்தது.
உள்ளே இருந்த புத்தம்புது பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து காற்றில் பறக்கவிட்டது. காற்றின் வேகத்தால் ரூபாய் நோட்டுக்கள் காற்றில் பறந்து நீரில் விழுந்து மிதந்தன. அதைப்பார்க்க நதியில் குழந்தைகள் விடும் காகிதக் கப்பல் போல காட்சியளித்தது.சில பாறைகளிலும் ஒட்டிக் கொண்டு நின்றிருந்தன.
கண்களில் நீர்மல்க அந்த ஆசிரியர் ஆஞ்சநேயரை வேண்டிக் கொண்டார்."ஆஞ்சநேயா, வரும் ஸ்ரீராமநவமியன்று தயிர்சாதம் தானம் செய்கிறேன்.பானகமும் நீர்மோரும் விநியோகம் செய்கிறேன்."
உன்னைக்குறைவாக மதிப்பிட்டது தவறு என்று உணர்ந்துவிட்டேன்" என்று வேண்டினார்.
திடீரென்று கூட்டம் ஆஹாஹா என்று ஆரவாரமிட்டது.
காரணம் அந்தக் குரங்குதாவிச்சென்று ஒரு பெரிய பாறையின் நடுவில் அமர்ந்து கொண்டு கைநிறைய நூறுரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றை வைத்துக் கொண்டு அதை முகர்ந்து பார்த்துவிட்டு வீசியது.பார்த்துக் கொண்டிருந்த கொண்டிருந்த எங்களுக்கே உடல் வியர்த்தது என்றால் அந்த ஆசிரியருக்கு எப்படி இருந்திருக்கும்.
பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த நூறு ரூபாய்க் கட்டு பாறை மீதிருந்து சரிந்து சரிந்து ஓரிடத்தில் வந்து ஒரு நோட்டு ஈரமான பாறையில் ஒட்டிக் கொள்ள அதனோடு இணைக்கப் பட்டிருந்த மற்ற நோட்டுக்கள் தொங்கிக்கொண்டு நின்றன.
நீரில் விழாமல் தொங்கும் அந்த ரூபாயை எப்படி எடுப்பது?பலரும் ஏற முயற்சித்தனர்.முடியவில்லை அனைவருக்குமே அப்போது இறைவனை வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை.
திடீரென்று ஒரு சிறுவன் ஒரு பதினாறு வயதிருக்கும்.தலையில் முண்டாசு. கையில் ஒரு கொம்பு.கருமையான நிறமும் களையான முகமுமாய்த் தோன்றினான். விறு விறுவென்று குரங்கு ஏறுவதைப் போலவே மலையின்மீது ஏறினான்.அந்தப்பாறையில் இருந்த ரூபாய்க் கட்டையும் ஆங்காங்கே விழுந்திருந்த நோட்டுக்களையும் பொறுக்கிக் கொண்டு வந்து கண்களில் நீருடன் நின்றிருந்த ஆசிரியரிடம் கொடுத்தான்.
நன்றி சொன்னவர் அவனுக்கு நூருரூபாய்த் தாளை எடுத்துக் கொடுத்தார். பெற்றுக் கொண்ட சிறுவன் அடுத்த நொடியில் காணவில்லை.ரூபாயை எண்ணிப் பார்த்தவர் "நல்லவேளை எட்டாயிரத்தில் எழுநூறு ரூபாய்தான் நீரில் போயிருக்கிறது மீதி அப்படியே கிடைத்துவிட்டது"என்றபடியே கண்களைத் துடைத்துக் கொண்டார்.
ஒரு சிறு அலட்சியம் எவ்வளவு போராட்டமாகிவிட்டது! யார் சொன்ன சொல்லையும் அலட்சியப் படுத்தக் கூடாது என்ற இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் ஒரு பாடமாகத்தான் இருக்கும் அல்லவா?
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
உண்மை தான் அம்மா... சிறு அலட்சியம் பல தொல்லைகளும் தரும்... சம்பவம் - ஒரு பாடம்...
ReplyDeleteஎச்சொல் யார் யார் வாய்க் கேட்பினும் அச்சொல் மெய்ப்பொருள் காண்பதறிவு.
ReplyDeleteமிகவும் சுவாரஸ்யமான பதிவு. ரஸித்துப்படித்தேன்.
ReplyDeleteஇதேபோன்ற குரங்குச் சேஷ்டைகள் சோளிங்கரில் மிகவும் அதிகம். நேரில் பார்த்து நாங்களே அனுபவித்துள்ளோம்.
>>>>>
//உள்ளே இருந்த புத்தம்புது பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து காற்றில் பறக்கவிட்டது. காற்றின் வேகத்தால் ரூபாய் நோட்டுக்கள் காற்றில் பறந்து நீரில் விழுந்து மிதந்தன. அதைப்பார்க்க நதியில் குழந்தைகள் விடும் காகிதக் கப்பல் போல காட்சியளித்தது.சில பாறைகளிலும் ஒட்டிக் கொண்டு நின்றிருந்தன.//
ReplyDeleteஅருமையான காட்சி வர்ணனைகள். ;)))))
>>>>>
//அந்தக் குரங்குதாவிச்சென்று ஒரு பெரிய பாறையின் நடுவில் அமர்ந்து கொண்டு கைநிறைய நூறுரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றை வைத்துக் கொண்டு அதை முகர்ந்து பார்த்துவிட்டு வீசியது.//
ReplyDeleteகுரங்கு கூட சீந்தாத பணத்தை சம்பாதிக்கவும்,. சேர்க்கவும் மனிதன் படாதபாடு படுகிறான். ;)
>>>>>>
//திடீரென்று ஒரு சிறுவன் ஒரு பதினாறு வயதிருக்கும்.தலையில் முண்டாசு. கையில் ஒரு கொம்பு.கருமையான நிறமும் களையான முகமுமாய்த் தோன்றினான். விறு விறுவென்று குரங்கு ஏறுவதைப் போலவே மலையின்மீது ஏறினான்.அந்தப்பாறையில் இருந்த ரூபாய்க் கட்டையும் ஆங்காங்கே விழுந்திருந்த நோட்டுக்களையும் பொறுக்கிக் கொண்டு வந்து கண்களில் நீருடன் நின்றிருந்த ஆசிரியரிடம் கொடுத்தான்.//
ReplyDeleteகாலத்தினால் செய்த உதவியல்லவா! ;)
அந்த ஹனுமனே சிறுவன் ரூபத்தில் வந்து இதுபோல உதவிசெய்ததாக என்னால் உணர முடிகிறது. ஏதோ ஓரளவு பணமாவது திரும்பக்கிடைத்ததில் மகிழ்ச்சியே.
நல்லதொரு படைப்புக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ஓரளவு பணம் திருப்பிக் கிடைத்ததே அவருக்கு.....
ReplyDeleteநல்ல பாடம் தான் அவருக்கு - எங்களுக்கும் தான்....