Sunday, February 16, 2014

raadhaiyin kaadhal.

ராதையின் காதல்
           நந்தகோபரின் மனையில் வளர்ந்து வந்த கண்ணன் செய்த லீலைகள் கேட்டுக்கேட்டு மகிழத் தக்கவை.அதிலும்  கோபியரின் அன்புடன் கூடிய பக்தி நம்மை மெய்  சிலிர்க்க வைக்கக் கூடியது. எல்லா    கோபிகையரிலும்  ராதை கொண்ட அன்பு அதீதமானது. கண்ணனும் அப்படியே அவளிடம் அதிக அன்பு வைத்திருந்தான்.இருவரும் எப்போதும் இணைபிரியாமல் வனத்திலும் சோலைகளிலும் யமுனைக் கரையிலும் ஆடலும் பாடலுமாக இருந்ததைக் கண்டு கோகுலத்து மக்கள் யசோதையிடம் வந்து புகார் கூறினர்.
         அத்துடன் ராதையின் தாயிடமும் ராதையைப் பற்றிக் குறை கூறவே அவளும் ராதையைக் கண்டிக்கத் தொடங்கினாள்.அதனால் இப்போது கண்ணனும் ராதையும் சந்திக்க இயலாமல் தவித்தனர்.கண்ணனிடம் யசோதை அவன் வெளியில் எங்கும் போகாமல் வேலைகளைக் கொடுத்து அவனை அருகிலேயே வைத்திருந்தாள்.இருவரும் எப்போது சந்தர்ப்பம் வரும் வெளியே போய் சந்திக்கலாம் எனக் காத்திருந்தனர்.
         கண்ணனுக்கு அவன் அன்புக்கினியவளைக் காண இயலாத ஏக்கம். ராதைக்கு அதைவிட அதிக ஏக்கம்.எப்படியாவது கண்ணனை சந்திக்க வழி தேடினாள்.
        அன்று ராதையின் இல்லத்திற்கு மாடு கறக்க யாரும் வரவில்லை.மாடுகள் தவித்தபடி குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. அந்தக் குரலைக் கேட்டு யசோதையும் பாவம் மாடுகள் தவிக்கின்றன. என்று              இரக்கப்பட்டாள்.இதையே காரணமாக வைத்துக் கொண்டு "நான்வேண்டுமானால் அவர்கள் வீட்டு மாடுகளைக் கறந்துவிட்டு வரட்டுமா?"என்றான் சாதுவாக.வேறு எங்கோ கவனமாக இருந்த யசோதை "சரி போய்விட்டு சீக்கிரமாக வந்துவிடு".என்று கூறி அனுப்பினாள்.
        உடனே கண்ணன் ராதையின் இல்லம் நோக்கி காற்றாய்ப் பறந்தான்.கண்ணனின் வருகையை அறிந்த ராதையும் அம்மாவிடம் "அம்மா, நான் தயிர் கடைந்து வெண்ணை எடுக்கிறேன்" என்றவுடன் அவள் தாயும் "அப்படியே செய்" என்று கூறவே ராதையும் தயிர் கடையும் மத்து பானை சகிதமாக உள்ளே சென்றாள்.
       கீழே கண்ணன் அமர்ந்து மாடு கறக்கும் காட்சி நன்கு கண்ணுக்குத் தெரியும் வண்ணம் மாடியின் சன்னல் ஓரத்தில் பானையை வைத்துக் கொண்டு வேக வேகமாகத் தயிர் கடைந்தாள்  ராதை.அதே சமயம் மாடியில் இருக்கும் ராதையைப் பார்த்துப் புன்னகைத்தவாறே கண்ணன் மாடு கறந்தபடி அமர்ந்திருந்தான். பலநாட்கள் பார்க்க இயலாதிருந்ததால் தன்  காதலையெல்லாம் கண்களின் வழியே அவனை நோக்கி ஓடவிட்டாள்  ராதை.
           இரண்டு பேரும் வெகு நேரம் இவ்வாறு அமர்ந்திருக்க ராதையின் தாய்
கறந்த பாலை எடுத்துச் செல்ல வந்து திகைத்து நின்றாள்.
"ஏய் கண்ணா,என்ன வேலை செய்கிறாய் நீ?"என்று அதட்டியதும் விழித்தவன் அப்போதுதான் இதுவரை தான் கறந்தது காளைகளை வைத்து எனப் புரிந்து கொண்டு அசட்டுச் சிரிப்புடன் அங்கிருந்து ஓடினான்.சலித்துக் கொண்டவளாய் ராதையின் தாய்

 "ஏய் ராதா, வெண்ணை திரண்டிருக்கும் எடுத்து வை" என்றவாறே பாத்திரத்துடன் வந்தாள் அப்போதுதான் ராதை தயிரே ஊற்றாமல் வெறும் பானையைக் கடைந்து கொண்டிருந்தாள்  எனக் கண்டாள் .
"என்னடீ இது?"தாய் திகைத்து நிற்பதைக் கண்டு சிரித்தவாறே கண்ணனின் பின்னே ஓடிவிட்டாள்  ராதை

இந்த அழகிய காட்சியை நாராயணீயம் என்ற காவியத்தில் கண்டு படித்து மகிழலாம். ராதையின் பக்திக்குக் கட்டுண்ட கண்ணன் அவளிடம் கட்டுப்பட்டு நின்ற நிலை அவள் சிறந்த பக்திக்கு ஒரு எடுத்துக் காட்டு அல்லவா?








4 comments:

  1. கண்கள் பேசிக்கொண்டிருக்கும் போது செய்யும் வேலை... சிறந்த பக்திக்கு எடுத்துக்காட்டு - ரசிக்க வைத்தது அம்மா...

    ReplyDelete
  2. //இந்த அழகிய காட்சியை நாராயணீயம் என்ற காவியத்தில் கண்டு படித்து மகிழலாம். //

    மிகவும் ரம்யமான காட்சியே !

    //ராதையின் பக்திக்குக் கட்டுண்ட கண்ணன் அவளிடம் கட்டுப்பட்டு நின்ற நிலை அவள் சிறந்த பக்திக்கு ஒரு எடுத்துக் காட்டு அல்லவா?//

    நிச்சயமாக ! தூய பக்தியால் மட்டுமே பகவானை அடைய முடியும் என்பதற்கு ராதை / ருக்மணி / ஆண்டாள் / மீரா / குசேலர் / பிரகலாதன் போன்றவர்களே சாட்சி.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  3. அருமை. ருக்மிணி..கண்ணன் ராதையின் இந்தக் கோணம் நான் அறியாதது.மிக அழகு.காதலிருவர் கருத்தொருமித்து என்பதற்கு நல்ல நிகழ்வு.மிக மிக நன்றி.

    ReplyDelete
  4. அருமை......

    காட்சியைக் கண்முன்னே கொண்டு வந்தது..... ரசித்தேன்.

    ReplyDelete