ஒருமுறை நாரதர் தான்தான் ஸ்ரீமந்நாராயணனிடம் உண்மையான பக்தி கொண்டவன் என்ற கர்வம் கொண்டிருந்தார்.அதனால் நாராயணனிடம் சென்று நான்தான் அதிக பக்தி கொண்டவன் என்று கூறவே அவரும் சிரித்தவாறே,"
"நாரதா, பூலோகத்தில் உள்ள சிறு கிராமம் இருக்கிறதே அங்கு பார்". என ஒரு விவசாயியின் குடிசையைக் காட்டினார்.
"ஒரு நாள் முழுவதும் அவனைப்பார். அதன்பிறகு வந்து சொல்" நாரதரும் பூலோகம் வந்து அந்த விவசாயியைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.இரவு வந்தது.விவசாயி தன் கடமைகளை முடித்துவிட்டு திண்ணையில் வந்து படுக்கும் பாயில் அமர்ந்தான்.ஒரு நிமிடம் கண்களை மூடி நாராயண ஸ்மரணை செய்தான்."பகவானே நாராயணா இன்று நல்லபடியாய் வைத்திருந்ததற்கு நன்றியப்பா. நாளை எழுவது உன்கையில்.
எழுந்தால் இன்றுபோல் இருக்க அருள் செய்."
அவன் வேண்டிக் கொண்டு படுத்து உறங்கிப்போனான்.நாரதரும் வைகுண்டம் நோக்கிப் போனார்."நாராயணா அவன் ஒரேயொரு முறைதான் ஒருநாளில் உன்னை ஜெபித்தான்.ஆனால் நானோ நாள் முழுவதும் மட்டுமல்லாது எப்போதும் உன்னையே ஜெபிக்கிறேன்.என்னைவிட அந்த விவசாயி உயர்ந்தவனா சுவாமி?"
என்று கேட்ட நாரதரிடம் நாராயணன் ஒரு கிண்ணத்தில் வழிய வழிய எண்ணையைக் கொடுத்தார். "நாரதா, இந்த எண்ணை ஒரு சொட்டுக் கூட கீழே விழாமல் இந்த பூலோகத்தைச் சுற்றிவா."என்று சொல்லிஎண்ணெய் நிரம்பிய ஒரு கிண்ணத்தைக் கொடுத்தார்.
மிகவும் அலட்சியத்துடன் அதை வாங்கி கொண்ட நாரதர் இது என்ன பிரமாதம் என்று சொல்லி கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினார் பூலோகம் சுற்ற.
மிகவும் கவனத்துடன் அவர் சுற்றிவரும் வழியில் இந்திரன் வந்து நாரதா என அழைக்க அதைக் கவனிக்காமல் கையால் நகரு என்று சைகை காட்டி மேலே சென்றார். சற்று தூரம் கடந்தபின் பிரும்மதேவர் மகனே என்று அழைக்க சற்று நகரும் என்றபடியே மேலே சென்றார்.
இன்னும் சற்று நேரம் கடந்தபின் நாராயணர் எதிரில் வர அவரையும் கவனிக்காது எண்ணை க் கிண்ணத்தையே பார்த்தபடி சென்று பூலோகம் சுற்றி முடித்தார்.ஒரு சொட்டுக் கூட சிந்தாமல் எண்ணையைக் கொண்டுவந்துவிட்ட பெருமையில் நாராயணரைப் பார்த்துச் சிரித்தபடியே,
"நாராயணா, இதோ எண்ணெய் சிந்தாமல் கொண்டுவந்து விட்டேன்.இப்போது சொல்லுங்கள்."
என்றார்.
அப்போது நாராயணர் சிரித்தபடியே, "நாரதா, பூலோகம் சுற்றும்போது என்னை எத்தனை முறை நினைத்தாய்? உன் எதிரே யார் யார் வந்தார்கள் என்பதாவது தெரிந்ததா உனக்கு?"என்றவரைத் திகைப்புடன் பார்த்தார் நாரதர்.
"உன் முன்னே இந்திரனும் பிரும்மதேவரும் வந்தனர்.ஏன் , நானே ஒருமுறை உன்னை அழைத்து எதிரே வந்தேன்.ஒரு சிறு காரியத்தைச் செய்யும் உன்னால் என்னை நினைக்கக்கூட முடியவில்லை.ஆனால் பெரிய குடும்பத்தைக் கட்டிக்காக்கும் அந்த விவசாயியின் துன்பம் எத்தகையது தெரியுமா?அத்தனை சுமையையும் தாங்கும் அவன் என்னை மனதார ஒருமுறை நினைக்கிறான் என்றால்..."என்றவர்முன் தலைகுனிந்து அமைதியாக நின்றார் நாரதர்.
அப்போது அவரைப் புன்னகையுடன் பார்த்த நாராயணர் "பூலோகவாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள் அத்தனையும் சகித்து என்னையும் மறக்காமல் ஒருமுறை மனதார நினைக்கும் அந்த விவசாயியின் பக்தியைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் நாரதா?"என்றார்.
"ஒப்புக்கொள்கிறேன்.என்னைவிட உன்னிடம் பக்தி செலுத்தும் மனிதர்கள் பூவுலகில் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன் .என் கர்வம் அழிந்தது. நாராயணா, என்னை மன்னித்தருளுங்கள்." என்று வேண்டிக்கொண்டவரை ஆசிவழங்கி அருள்புரிந்தார் நாராயணர்.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
கருத்துள்ள பகிர்வு.....
ReplyDelete