Sunday, October 16, 2016

உயர்ந்த உள்ளம்

    .ஒரு சிற்றூர் அந்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் விவசாயம் செய்து பிழைப்பவர்கள். வானம் பார்த்த பூமியாதலால் எப்போது  மழை வரும் என்று வானம் பார்த்துக்  காத்திருந்து பின் உழுவதற்குச்   செல்வார்கள்.ஒருமுறை அந்த ஊருக்கு ஒரு .முனிவர் வந்தார். அனைவரும் வானம்  பார்த்து அமர்ந்து இருந்ததால் யாரும்  அவரைக் கவனிக்க வில்லை.அதனால் கோபம் கொண்ட முனிவர் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு  இவ்வூரில் மழை பெய்யாது என்று சாபம் கொடுத்துச் சென்று விட்டார்.
இதை  அறிந்த பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணர்  முனிவர் கொடுத்த சாபத்திற்கு தான் அடிபணியவேண்டும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு மழை பொழியாதிருக்க எண்ணினார்.ஸ்ரீ கிருஷ்ணர் கையிலிருக்கும் பாஞ்சசன்னியம் என்னும் சங்கு முழங்கினால்தான் உலகில் மழை பொழியும். ஆனால் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு  மழை பொழியாது என்னும்போது இதை ஏன் கையில் வைத்திருக்க வேண்டும் என எண்ணிய கிருஷ்ணர் சங்கினைக் கீழே  வைத்து விட்டு   ஓய்வெடுக்கத் தொடங்கினார்.                       

அனைத்து மக்களும் உழவுக்குச் செல்லாமல் வாளாது இருக்கும்போது ஒரே ஒரு இளைஞன் மட்டும்  வழக்கம்போலத் தன்  தோளில் கலப்பையைச் சுமந்து கொண்டு  வயலை நோக்கிச் சென்றான் .அவனைப் பார்த்து ஊர்மக்கள்
 "ஏனப்பா, அதுதான் மழையே .இல்லையே.நீ எதை நம்பி உழுவதற்குச் செல்கிறாய்?வேறு தொழில் பார்த்துப் பிழைப்பைப் பார்."என்றனர்.
அதற்கு அந்தஇளைஞன் "பெரியவர்களே, ஐம்பது வருடம் உழாமல் இருந்துவிட்டால் எனக்கு உழவே மறந்து விடும்.என் மகனுக்கும் உழவென்பதே தெரியாது.அதனால் தினமும் உழுது என் தொழிலை மறக்காமல் இருக்கிறேன் "என்றான் 
வைகுண்டத்தில்  ஓய்வாகப் படுத்திருந்த ஸ்ரீகிருஷ்ணர் எழுந்து அமர்ந்தார். ஒருவேளை ஐம்பது ஆண்டுகள் என்   சங்கம் முழங்காமல்                             இருந்தால் நானும் இதைப் பயன்படுத்த மறந்து விடுவேனோ என எண்ணியவர், தன சங்கைக் கையில் எடுத்து ஊதிப்பார்த்தார். பாஞ்சசன்னிய முழக்கம் கேட்டவுடன் மேகங்கள் திரண்டு சோவென மழை பொழியவே மக்கள் அனைவரும் கலப்பையைக் கையில் ஏந்தி வயலை நோக்கி நடந்தனர் உழுவதற்காக.
நம் தொழிலை மறக்காமல் இருந்தால் , கடமையில் தவறாது இருந்தால் இறைவனே நினைத்தாலும் நம்மைத் தோற்கடிக்க முடியாது.எனவே கடமையைச்  செய்வோம் களிப்புடன்  வாழ்வோம்.













































































  
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

2 comments:

  1. நல்ல கருத்துள்ள நீதிக்கதை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. கருத்துள்ள பகிர்வு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete