Sunday, April 27, 2014

புலமைத் திறம்..

           ஒரு கிராமத்தில் ஒரு புலவர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு தனது புலமை மீது மிகவும் பெருமை.தனது புலமையை அறியும் திறம் அவ்வூரில் யாருக்கும்
இருப்பதாக அவர் எண்ணவில்லை.
       ஒருநாள் அருகில் இருக்கும் ஒரு கிராமத்திற்குச் சென்று விட்டு தன்
ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.வரப்பின் மீது கவனமாக நடந்து கொண்டிருந்தவர் திடீரென்று ஆ.,! என்று கத்தினார்.
         அவர் பின்னால் வந்து கொண்டிருந்த அவரது நண்பர் வேகமாக அருகில் வந்தார். "புலவரே! என்ன ஆயிற்று?" என வினவினார்.
      புலவருக்குத் தன புலமையைக் காட்டவேண்டுமெனத் தோன்றியது போலும்.உடனே அவர்,"முக்காலில் செல்கையிலே நான்முகத்தான் பின்னவன் தன் நற்கரும்புக்  காட்டுக்குள் ஐந்து தலைப் பாம்பு தீண்டியது."
என்று சொல்லிச் சிரித்துக் கொண்டார்.
உடனே அந்த நண்பர் புலவரின் குறும்பைப் புரிந்து கொண்டார்.பிறரை ஒன்றும்  தெரியாதவர் என்று மட்டம் தட்டுவதையே பெருமையாக எண்ணி வந்தவருக்குப் பாடம் புகட்ட எண்ணினார்.
உடனே நண்பர்,"ஓஹோ., அப்படியா, பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலேடுத்துத் தேய்."என்று சொல்லிவிட்டு நடந்தார்.
புலவரும் அவர் சொன்னபடியே செய்து விட்டு நடந்தார்.
அதன்பின் அவர் யாரையும் அவமதிப்பதையும் விட்டு விட்டார்.தன்னைப்போல் சிறந்த புலமை இருந்தும் அதை வெளிக்காட்டாது இருக்கும் தன நண்பரின் சான்றாண்மையைப் புரிந்து கொண்டார்.
இனி அவர்கள் பேசிக்கொண்டதன் பொருளைப் பார்ப்போம்.புலவர், சொன்னது"கையில் கோலுடன் செல்லும்போது அவ்வூரில் பிரம்மன் என்பவரின் தம்பியின் கரும்புக்காட்டுக்குள் நெருஞ்சி முள் குத்தியது"
இதற்கு அவர் நண்பர் சொன்னது."பத்துரதன் என்பவன் தசரதன்.அவன் புத்திரன் ராமன்.அவன் மித்திரன் சுக்ரீவன்.அவன் சத்துரு வாலி.அவன் பத்தினி தாரை.அவள் காலை எடுத்தால் தரை.எனவே தரையில் தேய் "
தன்னைவிடத் திறமையாகப் பேசும் திறம் படைத்தவரான நண்பரின் புலமையைப் புரிந்து கொண்ட புலவரின் கர்வம் நீங்கியது.















Wednesday, March 19, 2014

53.கண்ணன் சொன்ன பாடம்.
               பரந்தாமனும் பக்தவத்சலனுமான கண்ணன் உண்மை அன்புக்குக் கட்டுப்பட்டவன் என்பது உண்மைதான். அதேசமயம் தன அன்புக்கு உகந்தவராயினும் அகந்தையோ கர்வமோ கொண்டுவிட்டால் அவனைத் திருத்தித் தன்வயமாக்கிக் கொள்ளும் பேரன்பனும் அவன்தான்.ஒரு சிறு நிகழ்ச்சியின் மூலம் இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்ளலாம்.
              கோபிகையர்  கூட்டமாக  ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தின் நடுவே ராதையும் கண்ணனை எண்ணிக் கொண்டே ஆடிக் கொண்டிருந்தாள்.அப்போது திடீரென்று அவர்களின் நடுவே கண்ணனும் வந்து ஆடிப்பாடத் தொடங்கினான்.மனமகிழ்ந்த கோபிகையர் ஒவ்வொருவரும் கண்ணன் தன்மீதுதான் அதிக அன்பு வைத்துள்ளான் என எண்ணிக் களித்தபடி ஆடிக்கொண்டிருந்தனர்.
                அப்போது திடீரென கண்ணன் ராதையின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓடினான்.கோபியரும் கண்ணா, கண்ணா, என அழைத்தவாறே பின்னால் ஓடினர்.கண்ணனின் கையைப் பற்றியிருந்த ராதை ஓடிக்கொண்டே "கண்ணா, உனக்கு எல்லாரைவிட என்மீதுதானே அன்பு அதிகம்?"எனக் கேட்டாள்.அந்த மாயக் கண்ணனும்,"இதிலென்ன சந்தேகம் ராதா,நீதான் என் அன்புக்குப் பாத்திரமானவள்."என்றான் கள்ளச் சிரிப்போடு.
                உடனே ராதை கண்ணா "என்னைத் தூக்கிக் கொண்டு போவாயா?கால் வலிக்கிறது."என்றவளை "அதற்கென்ன, மிக்க மகிழ்ச்சியோடு தூக்கிச் செல்கிறேன்."என்றவன் ராதையைத் தூக்கிக் கொண்டு நடந்தான்.சிறிது தூரம் சென்றனர்.வழியில் பெரிய புன்னை மரமொன்று பூக்கள் சொரிந்தபடி  நின்றிருந்தது.அதைப்பார்த்த ராதை,"கண்ணா, இந்த மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு ஆடவேண்டும்போல் இருக்கிறது."என்றாள்
               உடனே கண்ணனும் "அதற்கென்ன, ஆடேன்"என்றபடி அவளைத் தன தோளில்  சுமந்தான். தன இரு கால்களையும் கண்ணனின் தோள்மீது வைத்துக் கொண்டு  மரக்கிளையைப் பற்றினாள்  ராதை.
கண்ணனும்,"ராதை பத்திரம் நன்றாகக் கிளையைப் பற்றிக்கொள்"என்று சொன்னவன் அவளை மரத்தின் மீது ஊசலாடவிட்டுவிட்டு மறைந்தான்.இப்போது ராதை மரத்தின் உச்சியில் தொங்கிக் கொண்டு தவித்தபடி இருந்தாள்
             அதேசமயம் இவர்களைத் தொடர்ந்து ஓடிவந்த கோபிகையர், கண்ணனும் ராதையும் ஓடிய பாத தடங்களைப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து அவர்களும் நடந்தனர்.சிறிது தூரம் சென்றதும் ஒருவர் ஓடிய தடம்  மட்டுமே தெரிந்தது. தொடர்ந்து அந்த தடத்தைப் பார்த்துக் கொண்டே கண்ணா,கண்ணா, எனக்  கூவியவாறே ஓடினர்.சிறிது தொலைவு வந்தவுடன் அந்தத் தடமும் மறைந்து விட்டது.
            இப்போது கோபிகையர் திகைத்து நின்று விட்டனர். கண்ணா, என அவர்களின் வாய் கூவியவாறு இருந்தது. அப்போது மரத்தின் மேலிருந்து "ஏ ,கோபியரே, என்னைக் கீழே இறக்குங்கள் நான் மரத்தில் தொங்குகிறேன்"என்ற குரல் கேட்டு அண்ணாந்து பார்த்தனர். அங்கே ராதை மரத்தின் பெரிய கிளையைப் பிடித்துத் தொங்குவது தெரிந்தது.கீழே இறங்கிய ராதை என்னைக் கண்ணன் பாதியில் விட்டு விட்டுப் போய்  விட்டான். என்றாள் கண்ணீர் மல்க.
           ஒரு கோபி கூறினாள்,"அடி பைத்தியமே கண்ணனின் பிடி இருக்க அதை விட்டு போயும் போயும் மரக்கிளைக்கு ஆசைப்பட்டாயே. அவன் கையல்லவோ கிடைக்கவோண்ணாத கை. உனக்கு கண்ணன் உன் கையைப்  பிடித்து ஓடியதும் கர்வம் வந்து விட்டது. அந்தப் பரந்தாமனை எண்ணிய நெஞ்சம் அத்தகைய எண்ணங்களை எண்ண லாமா?அதனால்தான் கண்ணன் உன்னை விட்டு விட்டான்.
        இனியும் அத்தகைய கர்வம் கொள்ளாது அவனை எண்ணிக் காதல் கொண்டு கசிந்து உருகி ஆட்கொள்ள வருமாறு வேண்டிக் கொள்" என்றவுடன் தன தவறை உணர்ந்தாள்  ராதை.

         இறைவனை அடையும் வழியை ராதை மட்டுமா அறிந்து கொண்டாள்?எந்த அகந்தையோ கர்வமோ இல்லாதமனதிலே இறைவன் விரும்பி வந்து அமர்வான் என்ற உண்மையை நாமும்  புரிந்து கொண்டோமல்லவா?













Thursday, March 13, 2014

52.navaneedha naattiyam.

           52  நவநீத நாட்டியம்.
                             கண்ணன் ஆடிய நாட்டியம் நவநீத நாட்டியம் எனப் பெயர் பெற்றது.இவனது நாட்டியத்தைக் காண ஆசைப்பட்ட யசோதை அவனை ஆடச் சொன்னதுதான் நவநீத நாட்டியம் எனப்பட்டது.
           யசோதை வழக்கம்போல தயிர் கடைந்து கொண்டிருந்தாள். கண்ணன்
அப்போது அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டு வெண்ணை திரள்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது யசோதை "கண்ணா, பானைக்குள் பூதம் இருக்கு. அது வெளியே வந்து உன்னை விழுங்கி விடும்." என்று பயமுறுத்தி தூரப் போகச் சொன்னாள்.
                    அவள் சொன்னதுபோலவே கண்ணனும் பயப்படுபவனைப்போல கண்களை உருட்டி வாயைப்பொத்தி "ஆமாம்மா, அந்த பூதம் உன்னை விழுங்கிவிட்டால் நான் யாரை அம்மா என்று அழைப்பேன். நீயும் தூர வந்து விடு என்று அபிநயித்தான்.அதைப்பார்த்த யசோதை சிரித்தபடியே
"கண்ணா, நான் தயிர் கடையும் வரை நீ நாட்டியம் ஆடினால் உனக்கு யானைத் தலையளவு வெண்ணை தருவேன்."என்றாள்.
                "அப்படியா, சரி."என்றவனிடம்யசோதை "நான் மத்திலிருக்கும் கயிற்றை வலது பக்கம்  இழுக்கும் பொது வலது கால் தூக்கியும்  இடது பக்கம் இழுக்கும் பொது இடது கால் தூக்கியும் நாட்டியம் ஆடவேண்டும் "என்றாள்.
             அவள் தருவதாகச் சொன்ன யானைத் தலையளவு  வெண்ணைக்காக
கால்மாற்றி மாற்றி ஆடினான் கண்ணன். யசோதையும் மத்தை வேகவேகமாக இழுத்து கண்ணனை வேகமாக நாட்டியம் ஆடவைத்தாள்.
 
            யசோதையின் வேலையும் முடிந்தது. கண்ணனின் நாட்டியமும் முடிந்தது. ஆடிக்களைத்தவனாக வெண்ணை தின்னும் ஆசையுடன் தாயின் முன்னே வந்து நின்றான் கண்ணன்.யசோதையும் தன கையில் யானைத்தளையளவு திரண்ட வெண்ணையை எடுத்துப் பானைக்குள் போட்டு  மூடிவிட்டாள். சிறிய கடுக்காயளவு வெண்ணையை எடுத்து அதையும் இரு பங்காக்கி ஒரு பங்கை கண்ணனின் கையில் வைத்தாள்
             அந்தவெண்ணையைக் கையில் வாங்கிய கண்ணன் தாயைப் பார்த்துச் சிரித்தான்.அந்தவெண்ணையை வாயில் போட்டுக் கொண்டு அடுத்த கையை நீட்டினான். அவனது சிரிப்பின் அழகில் மயங்கிய யசோதை இன்னொரு உருண்டை வெண்ணையைக் கையில் வைத்தாள்  உடனே அடுத்த கையை நீட்டிச் சிரித்தான் திருடன். யசோதை மீண்டும் ஒரு உருண்டை வெண்ணையை அவன் கையில் வைத்தாள்
               அவள் முதலில் தருவதாகச் சொன்ன யானைத் தலையளவு வெண்ணையை வாங்கியபின் புன்னகைத்தவாறே ஓடிவிட்டான் அந்தக் கள்ளன்.தன்னை மறந்து கண்ணனின் புன்னகையில் மயங்கி அமர்ந்திருந்தாள்
யசோதை.
        வெண்ணைக்காகக் கண்ணன் ஆடிய நாட்டியமே நவநீத நாட்டியம் எனப் படும். நவநீதம் என்றால் வெண்ணை என்று பொருள். கண்ணனின் லீலை எண்ணி எண்ணி மகிழத் தக்கது.




Tuesday, February 25, 2014

51. கண்ணனிடம் ஏமாந்த யசோதை.

  கோகுலத்தில்கண்ணனால்பெரும்தொல்லை கோபியருக்கு.
கண்ணனில்லாவிடிலோ தொல்லை. அதைவிடப் பெரும் தொல்லை. தனிமைத் தொல்லை.
        கண்ணனால் தொல்லைகளையும் துன்பத்தையும் அனுபவிக்கவேண்டும் அதை யசோதையிடம் சொல்லி மகிழவேண்டும் இதுதான் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தவர்களல்லவா கோபியர். 
 வசுதேவர் வருவதைக் கூடக் கவனிக்காமல் கோபத்துடன் தயிர் கடைந்து கொண்டிருந்தாள் யசோதை. வசுதேவரும் அவளைப் பார்த்து "ஏன் யசோதா, வழக்கம்போல உன் மகனைப் பற்றி யாரேனும் புகார் கொடுத்தார்களா?"என்றார் மெதுவாக.
      "வேறென்ன, இந்தக் கண்ணனுக்கு எவ்வளவு சொன்னாலும் தெரியவில்லையே. ஊர்வம்பையெல்லாம் விலைக்கு வாங்கி வருகிறான்." 
"அப்படி என்ன செய்தானாம் கண்ணன்?"  
"ஒருத்தி புதுப் பாவாடையில் மண் அள்ளிப் போட்டான் என்கிறாள்.ஒருத்தி பின்னலைப் பிடித்து இழுக்கிறான் என்கிறாள். வேரொருத்தியோ  வாயில் கட்டெறும்பைப் பிடித்துப் போட்டுவிட்டான் என்கிறாள். கடைசியில் பழத்தைப் பறித்துக் கடித்து எச்சில் படுத்திக் கொடுத்தான் என்கிறாள் "
"இதோ பார். அந்த கோபியர் என்ன சொன்னார்களோ எனக்குத் தெரியாது.வேண்டுமானால் நீ  கண்ணன்   பின்னால் சென்று பார்."
"சரி உங்கள் சொற்படி நான் அவன் பின்னே சென்று பார்க்கிறேன் என்று வேகமாக வெளியே வந்த யசோதை தெருவில் தான் வருவது தெரியாமல் மறைந்து நின்று கண்ணனைப் பார்த்தாள்.
   தெரு முனையில் ஒருத்தி பின்னலை அசைத்துக் காட்டி நின்றாள். கண்ணன் தன்னைப் பாராமல் போகிறானே என்ற ஏக்கம் அவள் முகத்தில் தெரிந்தது.சற்று தொலைவில் இன்னொருத்தி பாவடையை பிடித்துக் கொண்டு அழகுடன் நின்றால். அவளையும் கண்ணன் கவனியாதவன் போல் தலை குனிந்து நடந்தான்.
அதேபோல் சற்றுத் தொலைவில் கையில் பழத்தை வைத்துக் கொண்டு ஒருத்தி கண்ணனை வா வா என அழைப்பதைப் போல நின்றாள் இவர்களையெல்லாம் அலட்சியப் படுத்திவிட்டு ஒன்றுமறியாதவன் போல வீட்டுக்குள் நுழைந்தான் கண்ணன்.
           தன மகன் எவ்வளவு நல்லவனாக இருக்கிறான் இவனைப் பற்றி கோள் சொல்லும் கோபியரைக் கடிந்தவாறே  வீட்டுக்குள் நுழைந்த யசோதை தன மகனுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டாள்.
    கண்ணனும் கள்ளச் சிரிப்புடன் கோபியரோடு தாயும் ஏமாந்து போனதை எண்ணிப் புன்னகைத்துக் கொண்டான்.
       கண்ணனின் கள்ளத்தனம் நம்மையும் புன்னகைக்க வைக்கிறது இல்லையா.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Sunday, February 16, 2014

raadhaiyin kaadhal.

ராதையின் காதல்
           நந்தகோபரின் மனையில் வளர்ந்து வந்த கண்ணன் செய்த லீலைகள் கேட்டுக்கேட்டு மகிழத் தக்கவை.அதிலும்  கோபியரின் அன்புடன் கூடிய பக்தி நம்மை மெய்  சிலிர்க்க வைக்கக் கூடியது. எல்லா    கோபிகையரிலும்  ராதை கொண்ட அன்பு அதீதமானது. கண்ணனும் அப்படியே அவளிடம் அதிக அன்பு வைத்திருந்தான்.இருவரும் எப்போதும் இணைபிரியாமல் வனத்திலும் சோலைகளிலும் யமுனைக் கரையிலும் ஆடலும் பாடலுமாக இருந்ததைக் கண்டு கோகுலத்து மக்கள் யசோதையிடம் வந்து புகார் கூறினர்.
         அத்துடன் ராதையின் தாயிடமும் ராதையைப் பற்றிக் குறை கூறவே அவளும் ராதையைக் கண்டிக்கத் தொடங்கினாள்.அதனால் இப்போது கண்ணனும் ராதையும் சந்திக்க இயலாமல் தவித்தனர்.கண்ணனிடம் யசோதை அவன் வெளியில் எங்கும் போகாமல் வேலைகளைக் கொடுத்து அவனை அருகிலேயே வைத்திருந்தாள்.இருவரும் எப்போது சந்தர்ப்பம் வரும் வெளியே போய் சந்திக்கலாம் எனக் காத்திருந்தனர்.
         கண்ணனுக்கு அவன் அன்புக்கினியவளைக் காண இயலாத ஏக்கம். ராதைக்கு அதைவிட அதிக ஏக்கம்.எப்படியாவது கண்ணனை சந்திக்க வழி தேடினாள்.
        அன்று ராதையின் இல்லத்திற்கு மாடு கறக்க யாரும் வரவில்லை.மாடுகள் தவித்தபடி குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. அந்தக் குரலைக் கேட்டு யசோதையும் பாவம் மாடுகள் தவிக்கின்றன. என்று              இரக்கப்பட்டாள்.இதையே காரணமாக வைத்துக் கொண்டு "நான்வேண்டுமானால் அவர்கள் வீட்டு மாடுகளைக் கறந்துவிட்டு வரட்டுமா?"என்றான் சாதுவாக.வேறு எங்கோ கவனமாக இருந்த யசோதை "சரி போய்விட்டு சீக்கிரமாக வந்துவிடு".என்று கூறி அனுப்பினாள்.
        உடனே கண்ணன் ராதையின் இல்லம் நோக்கி காற்றாய்ப் பறந்தான்.கண்ணனின் வருகையை அறிந்த ராதையும் அம்மாவிடம் "அம்மா, நான் தயிர் கடைந்து வெண்ணை எடுக்கிறேன்" என்றவுடன் அவள் தாயும் "அப்படியே செய்" என்று கூறவே ராதையும் தயிர் கடையும் மத்து பானை சகிதமாக உள்ளே சென்றாள்.
       கீழே கண்ணன் அமர்ந்து மாடு கறக்கும் காட்சி நன்கு கண்ணுக்குத் தெரியும் வண்ணம் மாடியின் சன்னல் ஓரத்தில் பானையை வைத்துக் கொண்டு வேக வேகமாகத் தயிர் கடைந்தாள்  ராதை.அதே சமயம் மாடியில் இருக்கும் ராதையைப் பார்த்துப் புன்னகைத்தவாறே கண்ணன் மாடு கறந்தபடி அமர்ந்திருந்தான். பலநாட்கள் பார்க்க இயலாதிருந்ததால் தன்  காதலையெல்லாம் கண்களின் வழியே அவனை நோக்கி ஓடவிட்டாள்  ராதை.
           இரண்டு பேரும் வெகு நேரம் இவ்வாறு அமர்ந்திருக்க ராதையின் தாய்
கறந்த பாலை எடுத்துச் செல்ல வந்து திகைத்து நின்றாள்.
"ஏய் கண்ணா,என்ன வேலை செய்கிறாய் நீ?"என்று அதட்டியதும் விழித்தவன் அப்போதுதான் இதுவரை தான் கறந்தது காளைகளை வைத்து எனப் புரிந்து கொண்டு அசட்டுச் சிரிப்புடன் அங்கிருந்து ஓடினான்.சலித்துக் கொண்டவளாய் ராதையின் தாய்

 "ஏய் ராதா, வெண்ணை திரண்டிருக்கும் எடுத்து வை" என்றவாறே பாத்திரத்துடன் வந்தாள் அப்போதுதான் ராதை தயிரே ஊற்றாமல் வெறும் பானையைக் கடைந்து கொண்டிருந்தாள்  எனக் கண்டாள் .
"என்னடீ இது?"தாய் திகைத்து நிற்பதைக் கண்டு சிரித்தவாறே கண்ணனின் பின்னே ஓடிவிட்டாள்  ராதை

இந்த அழகிய காட்சியை நாராயணீயம் என்ற காவியத்தில் கண்டு படித்து மகிழலாம். ராதையின் பக்திக்குக் கட்டுண்ட கண்ணன் அவளிடம் கட்டுப்பட்டு நின்ற நிலை அவள் சிறந்த பக்திக்கு ஒரு எடுத்துக் காட்டு அல்லவா?








Saturday, February 15, 2014

மறக்க இயலாதவை.

என் கணவர் அடிக்கடி சொல்லும் சொற்கள் இவை.ஏணி , தோணி, வாத்தியார், நார்த்தங்காய் இவற்றை நாம் என்றும் மறக்க இயலாது.ஏனெனில் இவை நான்கும் நம்மை உயர்த்துவன. எப்படியெனச் சொல்கிறேன்.
        முதலில் ஏணி. இது இருந்த இடத்திலேயே இருக்கும் ஆனால் ஏறுபவரை உயரத்தில் கொண்டு விடும்.
         இரண்டாவது,தோணி.அதாவது படகு.இதுவும் நீரில் மிதக்கும் ஏறுபவரைக் கரை சேர்க்கும்.தான் கரையேறாது.
          மூன்றாவது வாத்தியார்.வகுப்பில்  பயிலும் மாணவனை உயர்த்துவார். ஆனால் அவர் அதே வகுப்பில் இருப்பார்.
          கடைசியாக நார்த்தங்காய் ஊறுகாய்.எவ்வளவு தயிர்சாதம் இலையில் வைத்தாலும் ஒரு துண்டு நார்த்தங்காய் ஊறுகாய் வைத்தால் அந்த ஊறுகாய் அப்படியே இருக்க தயிர்சாதம் முழுவதும் வயிற்றுக்குள் போய்விடும்.
         இந்த நான்கு விஷயமும் நம்மால் மறக்க இயலாது என்று அவர் சொன்னது உண்மைதான் எனத் தோன்றுகிறது நீங்களும் ஒப்புக்கொள் வீர்களல்லவா?

Friday, December 13, 2013

பண்பை வளர்க்கும் பண்டிகைகள்


நம் பண்டிகள்கள் எல்லாமே அன்பையும் ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிறந்தவைதான் என்றாலும் அவற்றின் உள்  நோக்கமே வேறு. குடும்ப ஒற்றுமை, பாசம் மரியாதை ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அக்கறை  இவற்றை வளர்ப்பதே முக்கியமாகக் கருதப் படுகிறது.
                         எங்கள் இல்லத்தில் நடக்கும் தீபாவளி ப்பண்டிகையை 
இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.எங்கள் குடும்பம் மிகப் பெரியது.
எங்கள் பெற்றோருக்கு நாங்கள் எட்டுக் குழந்தைகள்.இப்போது அனைவரும் ஐம்பது வயதைத் தாண்டியவர்களாக உள்ளோம்.எல்லோரும் பேரக்குழந்தைகள் எடுத்து அவர்களுக்கும் திருமனமாகியுள்ளது.
                      ஒவ்வொரு தீபாவளியன்றும் அதிகாலை கங்கா  ஸ்னானத்தை 
முடித்து புத்தாடை புனைந்து அனைவரும் எங்கள் குடும்பத்தின் பெரியவர் வீட்டில் கூடுவோம்.ஒவ்வொருவருக்கும் அவர்கள் வீட்டில் காலைச் சிற்றுண்டி இனிப்புடன் பரிமாறப்படும். எல்லோரும் ஆங்காங்கே அமர்ந்து பேசி மகிழ்வோம். இனிப்புகளையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்வோம். ஒரு குடும்பம் வர சற்று தாமதமானாலும் அனைவரும் கூடும் வரை காத்திருப்போம்.யாரேனும் வெளிநாடு சென்றிருந்தால் ஒழிய மற்றையோர் அனைவரும் சேர்ந்திருப்பர்.எங்களின் எட்டு குடும்ப அங்கத்தினர்களும் குறைந்தது ஐம்பது பேர் ஒன்றாய்க் கூடியிருப்போம்.
                       அனைவரும் வந்து சேர்ந்தபின் வீட்டின் பெரியவர் தன மனைவியுடன் வந்து நிற்பார்.அவரை முறைப்படி அவருக்கு அடுத்தவர் அவருக்கு அடுத்தவர் என வயது வாரியாக காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவர்.பெரியவர் வணங்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பணம் கொடுப்பார்.மூன்று வயது கொள்ளுப்பேரக் குழந்தை வணங்கி கைநீட்டி பணம் பெற்று மகிழ்வதை நாங்கள் கைதட்டி வரவேற்போம்.நாற்பத்தி எட்டுப் பேரும் வணங்கி ஆசிபெற்றபின் அவருக்கு அடுத்தமூத்தவர் வந்து நிற்பார் அவருக்கு இளையவர்கள காலில் விழுந்து ஆசி பெறுவர். இந்த வரிசையில் கடைசிப் பேரக் குழந்தை தன்னை விடஇளையவருக்கு ஆசிவழங்கி கையில் பணம் கொடுக்கும் போது அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரிப்போம்.ஏனெனில் ஆசிவழங்கும் ஒவ்வொரு மூத்தவரும் பணம் கொடுப்பார்கள்.அவரவர் வருமானத்திற்கு ஏற்ப பத்து ஐந்து என அனைவருக்கும் அளிப்பார்.
                          சிறுவர்களுக்கு இது மிகுந்த உற்சாகத்தைக் கொடுப்பதுடன் கொடுக்கும் குணம் ஆசிகூறுவது  அன்பு செலுத்துவது ஆகிய  நல்ல பண்புகள் அவர்களுக்கு வளர்வது உறுதியன்றோ. அதன்பின் அனைத்து சிறுவர்களும் பட்டாசு கொளுத்தி மகிழ்வர்.அதன்பின் தேநீர் அருந்தியபின் அவரவர் இல்லம் திரும்புவோம்.
                   இந்தமாதிரி தீபாவளி நாளில் நாங்கள் கூடுவது சுமார் ஐம்பது வருடங்களாக நடந்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டு பண்டிகை முடிந்தபின்னும் அடுத்த தீபாவளியை எதிர்பார்த்திருப்போம்.இது எங்கள் அனைவருக்கும் ஒரு ஊக்க டானிக் போல உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com