Wednesday, October 30, 2013

நீங்களே நீதிபதிகள்.



--


         ஸ்ரீரங்கம் ரங்கனாதர் கோவிலில் உள்ள தாயாரைத் தரிசித்து விட்டு கோதண்டராமரைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு முதிய பெண்மணி எண்பது வயதிருக்கும்  பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார்.அவரைத் தாண்டி சென்ற பின் என்  பின்னால் பெரியதாகப் பேச்சுக் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன்.ஆச்சரியப் பட்டுப் போனேன். அந்த பெண்மணி செல்போனைக் கையில் வைத்துப்  பேசிக் கொண்டிருந்தார்.
         அடுத்தநாள் காலையில் காவிரியாற்றில் குளிப்பதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். வழியில் நெடுக இருந்த குடிசைவீடுகளில் இருந்து தொலைக் காட்சிகளின் ஒலி  கேட்டுக் கொண்டிருந்தது.ஒரு வீட்டின் வாயிலில் இருந்து இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
"இவ்வளவு தூரம் வரணுமா?ஒரு போன் அடிக்கலாமில்லே?"
"உன் நம்பர் தெரியல்லே.என் போன்ல வரிசையா இருவது நெம்பர் இருக்கு."
"எப்படி வந்தே? சைக்கில்லையா?"
"டூ வீலர்லதான்"
இந்த உரையாடலும் ஒரு குடிசை வீட்டின் முன்னாலிருந்துதான் வந்தது.
இந்த நாட்டை ஏழை நாடு என்றோ வளரும் நாடு என்றோ சொல்ல முடியுமா, என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.
              மறுநாள் அதிகாலை துலா ஸ்நானம் செய்வதற்காக காவிரிக்குச் சென்றேன்.அங்கே ஒலிபெருக்கியில் "கம்பியைத் தாண்டிச் செல்லாதீர்கள்.
காவிரியில் புதைகுழிகள் உள்ளன.கம்பிக்கு உள்ளேயே குளியுங்கள்"என்று அறிவிப்புச் செய்து கொண்டிருந்தனர்.  உள்ளே கால் வைக்கவே கூசும் அளவுக்கு குப்பையும் துணிகளும் நிறைந்திருந்தது.ஒருபக்கம் துணி துவைப்பவர்கள் பல் துலக்குபவர்கள் என உள்ளூர் மனிதர்கள் நிறைந்திருந்தனர்.
                தைரியமாகக் கம்பியைத் தாண்டி நடுஆற்றில் சென்று பலரும் குளித்தனர். நாங்களும் அங்கே சென்று குளித்துக் கரையேறினோம். படித்துறையைத் தாண்டி வர இயலாதபடி சிறுநீர் நாற்றம் குடலைப் புரட்டியது.பூலோக வைகுண்டம் என்று புகழப் படும் ஸ்ரீரங்கத்தின் புனிதத் தன்மை  இந்த நிலையால் பங்கப் பட்டிருப்பதை எண்ணி மனதுக்குள் புழுங்கினேன். ஆற்றின் கரையைச் சுத்தப் படுத்த அங்கங்கே ஆட்கள் இருந்து சுத்தம் செய்தால் ஆற்றின் பரிசுத்தமும் புண்ணிய க்ஷேத்திரத்தின் புனிதமும் காப்பாற்றப் படுமே என்று எண்ணினேன்.இப்போது இந்த நிலையைப் பார்த்தால் நம் நாடு முன்னேறியுள்ளது என்று சொல்லமுடியுமா?இரண்டு காட்சிகளையும் பார்த்து நாட்டின் நிலையைக் கூறுங்கள். நீங்களே நீதிபதிகள்.









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Tuesday, October 22, 2013

பழக்கப் படுத்திக் கொள்ளவேணும்.

பழக்கப் படுத்திக் கொள்ளவேணும்.

நாம் சாதாரணமாகவே  தினமும் தவிக்கும் காரியம் ஒன்று உண்டு.தேடுவது. ஒரு பொருளை ஒரு இடத்தில் வைத்துவிட்டு வீடு முழுவதும் தேடும் நிகழ்ச்சி எல்லோர் வீடுகளிலும் நடக்கும் காரியம்.இப்படித் தேடுவதால் எத்தனை நேரம் விரயம். சில சமயங்களில் முக்கிய நிகழ்ச்சிகளுக்குப் போக முடியாமல் போவதும் உண்டு.
ஒரு பொருளை அததற்குண்டான இடத்தில் வைப்பதும் வைத்த இடத்தை நினைவில் வைத்துக் கொள்வதும் மிக மிக அவசியமான ஒன்று.
அப்படியிருந்தால் நமக்கு நேரம் மிச்சம் வேலை மிச்சமாகும். அதனால் உண்டாகும் அவசரமும் பதட்டமும் இருக்காது. இதை நினைவில் வைத்துக் கொண்டு நாமும் சரி பள்ளி கல்லூரிக்குப் போகும் பிள்ளைகளும் சரி நன்கு பழக்கப் படுத்திக்  கொள்ளவேண்டும்.
எல்லா வீடுகளிலும் காலை நேரம் பாருங்கள் எவ்வளவு கலாட்டா நடக்கிறது.
பென்சிலைக் காணோம், என் சாக்ஸ் எங்கே, என் ஹோம்வொர்க் நோட்டைக் காணோம் இங்கேதான் வைத்தேன் என்னும் குரல்கள் இப்போதும் என் காதுகளில் ஒலிக்கிறது. இதில் சில பள்ளி செல்ல விருப்பமில்லாதவர்கள் வேண்டுமென்றே நோட்டை ஒளித்துவிட்டு நோட்புக் இல்லை அதனால் இன்று பள்ளிக்குப் போகமாட்டேன் என்று அடம் பிடிப்பதும் உண்டு.
இவர்கள் மட்டுமல்ல ஆபீஸ் போகும் பெரியவர்களும் இந்த கலாட்டா செய்வது உண்டு.இதற்கெல்லாம் காரணம் முக்கியமான பொருள்களை உரிய இடத்தில் வைக்காததும்  வைத்த இடத்தை மறந்து போவதும்தான் 
இப்படிப்பட்ட நிலைமை ஏற்படாதிருக்க சிறு வயதிலேயே பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும் குழந்தைகளையும் பழக்கப் படுத்த வேண்டும்.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Friday, October 4, 2013

கற்றுக் கொடுங்கள்.

ஒருமுறை அருகே இருந்த ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன்.எங்கள் அருகே இருந்த ஒரு பெண் தன மூன்று வயது கூட நிரம்பாத மகளுக்கு தன கைபேசி எண்ணைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.என் உடன் வந்திருந்த தோழி அதைப் பார்த்துக்  கிண்டலாகச் சிரித்தாள்.
     நான் அவளிடம் என் சிரிக்கிறாய்? என்று கேட்டேன்.அதற்கு அவள்,"
"இந்த சின்ன வயதிலேயே பத்து எண்களை இந்தக் குழந்தையால் 
எப்படி நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.இந்தப் பெண் தன மகளை இப்போவே பெரிய அறிவாளியாகக முயற்சிப்பது பைத்தியக்காரத்தனமாகப் படவில்லையா?"என்று சிரித்தாள்.
அப்போது நான் சிரித்தேன்.இந்தக் காலத்துப் பெண்களுக்கு  எத்தனை கெட்டிக்காரத்தனம்? இதை இவள் புரிந்து கொள்ளவில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.
     சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை அவளுக்குக் கூறினேன் அதையே இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
"அப்போது என் மகனுக்கு ஐந்து வயது. அப்போதுதான் சற்றுத தொலைவில் உள்ள  பெரிய பள்ளியில் சேர்த்திருந்தோம் தினமும் பள்ளி வண்டியிலேயே சென்று வந்தான்.கொஞ்ச நாட்கள் வரை எந்த பிரச்னையும் இல்லை. நிம்மதியாக இருந்தேன்.ஒருமுறை நான் விடுமுறையில் இருந்தேன். அன்று மாலையில் மகனுக்குப் பிடித்த பூரி கிழங்கு செய்து வைத்துக் காத்திருந்தேன்.
பள்ளிவிடும் நேரம் கடந்து ஒரு மணி நேரம் ஆனபின்னரும் குழந்தை வரவில்லையே என்று ஆட்டோ பிடித்துப் பள்ளிக்குச் சென்று பார்த்தபோது,  
பள்ளி காலியாக இருந்தது.எல்லோரும் போய்விட்டார்கள் யாரும் இல்லையென்று காவல்காரர் சொல்லிவிட்டார்.எனக்கு என்ன செய்வது என்று புரியவேயில்லை.வேண்டாத தெய்வமில்லை.அடுத்து ஒருமணி ஓடிவிட்டது.நான்கு மணிக்கு வரவேண்டிய பையன் ஆறு மணியாகியும் வரவில்லையே என்று தவித்தபடியே இருந்தேன். அப்போதெல்லாம் இப்போது இருப்பது போல் தொலைபேசி வசதி பரவலாக இல்லை.அதனால் என் கணவர் வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
வாசலிலேயே காத்திருந்தேன். அப்போது அடுத்தவீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது என்று அழைத்தனர். ஓடினேன். என்ன செய்தியோ என்று என் உள்ளம் தவித்தது."ஹலோ,யார் பேசுவது?"
"அம்மா, உங்க பையன் எங்க கூட இருக்காம்மா."
உடனே ஒரு நிம்மதி என் மனதில் பரவியது.மகன் நலமாக இருக்கிறான்."ரொம்ப நன்றிங்கய்யா. எந்த இடத்திலே இருக்கான்? நான் வந்து அழைத்து வரேன் "
"சரிங்கம்மா. கவலைப் படாதீங்க. பயல் ஜாலியா எங்களோட அரட்டை அடிச்சுகிட்டு இருக்காம்மா.கேக் பிஸ்கட் குடுத்து உக்கார வச்சிருக்கோம்.அடையாறு பஸ் டிப்போவுக்கு வாங்க"என்று கூறி முடித்தார் அந்த நடத்துனர்.அதே சமயம் என்கணவரும் உள்ளே வந்தார்.அவரிடம் செய்தியைச் சொன்னவுடன் அப்படியே அடையாறு நோக்கிப் புறப்பட்டார்.
                      சுமார் அரைமணி நேரம் கழித்து மகனுடன் அவர்  வந்ததைப் பார்த்தவுடன்தான் என் தவிப்பு அடங்கியது.அவன் "அம்மா, எங்கள் பள்ளி வேன் ரிப்பேர்.அதனால எங்களை பஸ்ல எத்திவிட்டுட்டாங்க.அந்த பஸ் நம்ம ஸ்டாப்புக்கு வரவேயில்லை.அதனால நான் இறங்கவேயில்லை.எல்லா பஸ்ஸும் நிக்கிற இடத்துக்குப் போயிட்டேன். அந்த அங்கிள் டீ கேக் வாங்கிக் குடுத்தாரு.அப்புறமாதான் அடுத்தவீட்டு போன் நம்பர் குடுத்து உங்களுக்கு போன் பண்ணச் சொன்னேன்.
  "போன் நம்பர் உனக்கு எப்படித் தெரியும்?"
 "நானே பார்த்து வச்சிகிட்டேன்."
நல்லவேளையாக தொலைபேசி எண் தெரிந்திருந்தது.இல்லையேல் போலீசில்தான் ஒப்படைத்திருப்பார்கள்.போன் எண்ணைப் போலவே வீட்டு விலாசத்தையும் கற்றுக் கொடுத்திருந்தால் இத்தனை கஷ்டம் இருந்திருக்காது.
இந்த அனுபவம் இல்லாமலேயே இந்தக் காலத்துப் பெண் எவ்வளவு கவனமாகக் கற்றுக் கொடுக்கிறாள். இதை நாம் பாராட்டவேண்டும்."என்றவுடன் அந்தப பெண்ணை இப்போது மரியாதையுடன் பார்த்தாள்  என் தோழி.
இந்த என் அனுபவத்தை அறிந்த பிறகேனும் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் முன் பெயர் விலாசம் தொலைபேசி எண் இவற்றைக் கற்றுக் கொடுங்கள்.








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Saturday, June 8, 2013

சித்திரமும் கைப்பழக்கம்.


ஒரு முறை என் தோழி ரஞ்சனி நாராயணன்  பேஷன் ஜுவெல்லரி பற்றி எழுதியிருந்தார். நானும் அந்த நகைகள் செய்யக் கற்றுக் கொண்டு செய்து வருகிறேன். சில மாதிரிகளை இங்கு காட்டியுள்ளேன்.
அவர் சொன்ன யோசனைப்படி லிஸ்ட் எழுதி எடுத்துச் சென்றதால் பொருள் வாங்கும் பொது மிகவும் சுலபமாக இருந்தது. கடைக்காரர் சொல்லும்பொருளின்  பெயரைக் குறிப்பிட்டுக் கேட்க  முடிந்தது. நல்ல யோசனை கூறிய திருமதி ரஞ்சனிக்கு என் நன்றி.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, June 3, 2013

அலட்சியம் வேண்டாம்


 
யார் சொல்லையும் அலட்சியப் படுத்துவது நமக்கே துன்பத்தைத்தரும். ஆகையால் எந்த ஒரு சொல்லையும் செயலையும் அலட்சியப் படுத்தக் கூடாது. ஒருமுறை உறவினர்களுடன ஹம்பிஎன்றஇடத்தைச்சுற்றிப்பார்க்கசென்றிருந்தோம்.ஒருவாரமாகவே நவப்ருந்தாவனம் மந்த்ராலயம் போன்ற பல இடங்களைத் தரிசித்துவிட்டு ஹம்பி வந்து சேர்ந்தோம்.காலை பத்துமணிக்கு கோயில்,மண்டபங்கள், அரண்மனை முதலியன பார்த்துக் கொண்டே வந்தோம்.
விஜயநகரப்பேரரசின் தலைநகராக சிறப்பொடு விளங்கிய அந்த நகரின்
 வரலாற்றுப் பெருமை அறிந்திருந்த நாங்கள் அதன் இன்றைய சிதிலமடைந்த நிலையைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்தோம்.மனம் முழுதும் அந்த அழகிய தலைநகரின் அவலநிலையைப பார்த்த துயரம் நிறைந்திருந்தது. என் கணவர் மட்டும் சுற்றுப் புறத்தைப் பார்த்துக் கொண்டே வந்தார். அவர் எப்போதும் முன்னெச்சரிக்கையோடு இருப்பவர்.
அவர் எங்கள் கூட்டத்தைப் பார்த்து "எல்லோரும் கைப்பையை மறைத்து  வைத்துக் கொள்ளுங்கள் இங்கு குரங்குகள் அதிகமாக உள்ளன. பையைப் பறித்து விடும்."என்றார்.
நாங்கள் அனைவரும் எங்கள் கைப்பைகளை முடிந்தவரை மறைத்துக் கொண்டும் கவனமாகப் பிடித்துக் கொண்டும் வந்தோம்.எங்கள் குழுவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் மட்டும் சற்று அலட்சியமாக கையிலேயே வைத்துக் கொண்டபடி "குரங்குதானே,கையிலிருந்தெல்லாம்  பையைப் பிடுங்காது".என்று சொல்லி அலட்சியமாக நடந்தார்.
சற்று நேரத்தில் நாங்கள் அங்கிருந்த  யந்த்ரோதாரக ஆஞ்சநேயரின்கோவிலுக்குச்சென்றோம்.படிகளில் ஏறும்போது "என் பை பை...சூ.. சூ..பிடி பிடி" என்று ஒரே கூக்குரலும் கூச்சலும் கேட்டது.என் கணவர் சொன்னது போலவே அந்த ஆசிரியரின் கையிலிருந்த பையைப்  பறித்துக் கொண்டு ஓடியது ஒரு குரங்கு.
கூட்டம் கூடியது. ஆளுக்கு ஒரு பக்கமாக குரங்கைத் துரத்த பலரும் அந்தப் பையைக் காப்பாற்றப் போராடினர். பழம் கொடுத்தாலும் பயமுறுத்தினாலும் எதற்கும் அசையவில்லை அந்தக் குரங்கு. அந்தப் பையின் ஜிப்பைத் திறப்பதிலேயே கவனமாக இருந்தது அது.  யாரும் நெருங்க முடியாத உயரமான பாறைமேல் அமர்ந்துகொண்டிருந்தது.அந்த குரங்கைச் சுற்றிலும் அருவி நீர் கொட்டிக் கொண்டிருந்தது. பாறைக்குப்பாறை  தாவிச் சென்று கொண்டிருந்த குரங்கைத் தொடர்ந்து பலரும் ஓடிக்கொண்டிருந்தனர்.
பாவம், அந்த ஆசிரியரின் முகத்தில் இப்போது கவலை தாண்டவமாடியது.குரங்கு ஜிப்பைத் திறக்காமல் இருக்கவேண்டுமே என்று தவிப்பது தெரிந்தது.
ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை.குரங்கு தன பல்லால் கடித்து பையைத் திறந்தது.
உள்ளே இருந்த புத்தம்புது பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து காற்றில் பறக்கவிட்டது. காற்றின் வேகத்தால் ரூபாய் நோட்டுக்கள் காற்றில் பறந்து நீரில் விழுந்து மிதந்தன. அதைப்பார்க்க நதியில் குழந்தைகள் விடும் காகிதக் கப்பல் போல காட்சியளித்தது.சில பாறைகளிலும் ஒட்டிக் கொண்டு நின்றிருந்தன.
கண்களில் நீர்மல்க அந்த ஆசிரியர் ஆஞ்சநேயரை வேண்டிக் கொண்டார்."ஆஞ்சநேயா, வரும் ஸ்ரீராமநவமியன்று தயிர்சாதம் தானம் செய்கிறேன்.பானகமும் நீர்மோரும் விநியோகம் செய்கிறேன்."
உன்னைக்குறைவாக மதிப்பிட்டது தவறு என்று உணர்ந்துவிட்டேன்" என்று வேண்டினார்.
திடீரென்று கூட்டம் ஆஹாஹா என்று ஆரவாரமிட்டது.
காரணம் அந்தக் குரங்குதாவிச்சென்று  ஒரு பெரிய பாறையின் நடுவில் அமர்ந்து கொண்டு கைநிறைய நூறுரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றை வைத்துக் கொண்டு அதை முகர்ந்து பார்த்துவிட்டு வீசியது.பார்த்துக் கொண்டிருந்த கொண்டிருந்த எங்களுக்கே உடல் வியர்த்தது என்றால் அந்த ஆசிரியருக்கு எப்படி இருந்திருக்கும்.
பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த நூறு ரூபாய்க் கட்டு பாறை மீதிருந்து சரிந்து சரிந்து ஓரிடத்தில் வந்து ஒரு நோட்டு ஈரமான பாறையில் ஒட்டிக் கொள்ள அதனோடு இணைக்கப் பட்டிருந்த மற்ற நோட்டுக்கள் தொங்கிக்கொண்டு நின்றன.
நீரில் விழாமல் தொங்கும் அந்த ரூபாயை எப்படி எடுப்பது?பலரும் ஏற முயற்சித்தனர்.முடியவில்லை அனைவருக்குமே அப்போது இறைவனை வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை.
திடீரென்று ஒரு சிறுவன் ஒரு பதினாறு வயதிருக்கும்.தலையில் முண்டாசு. கையில் ஒரு கொம்பு.கருமையான நிறமும் களையான முகமுமாய்த் தோன்றினான். விறு விறுவென்று குரங்கு ஏறுவதைப் போலவே மலையின்மீது ஏறினான்.அந்தப்பாறையில் இருந்த ரூபாய்க் கட்டையும் ஆங்காங்கே விழுந்திருந்த நோட்டுக்களையும் பொறுக்கிக் கொண்டு வந்து கண்களில் நீருடன் நின்றிருந்த ஆசிரியரிடம் கொடுத்தான்.
நன்றி சொன்னவர் அவனுக்கு நூருரூபாய்த் தாளை எடுத்துக் கொடுத்தார். பெற்றுக் கொண்ட சிறுவன் அடுத்த நொடியில் காணவில்லை.ரூபாயை எண்ணிப் பார்த்தவர் "நல்லவேளை எட்டாயிரத்தில் எழுநூறு ரூபாய்தான் நீரில் போயிருக்கிறது மீதி அப்படியே கிடைத்துவிட்டது"என்றபடியே கண்களைத் துடைத்துக் கொண்டார்.
ஒரு சிறு அலட்சியம் எவ்வளவு போராட்டமாகிவிட்டது! யார் சொன்ன சொல்லையும் அலட்சியப் படுத்தக் கூடாது என்ற இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் ஒரு பாடமாகத்தான் இருக்கும் அல்லவா?

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com

Friday, May 10, 2013

சிறு துரும்பு.



--
இளம் வயதிலேயே கதை எழுதி அதை என் அப்பா அம்மாவிடம் படித்துக் காட்டுவேன் .. அதன் பின்தான் பத்திரிகைக்கோ வானொலிக்கோ  அனுப்புவது வழக்கம். அன்றும் அப்படித்தான் ஒரு  சிறுகதை எழுதி அதை படித்துக் காட்டிக் கொண்டிருந்தேன்.
கதையின் நடுவே ஒரு வரி வந்தது."அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் டக் டக்கென நடந்து உள்ளே வந்து கொண்டிருந்தார்." இந்த வரிகளை நான் படிக்கும்போது உண்மையாகவே போலீஸ்காரர் உள்ளே வந்தார்.
என் தந்தையார் அவரிடம் என்ன விஷயம் என்று கேட்க, இன்ஸ்பெக்டர் கேட்டார்.
"உங்கள் வீட்டில் இரண்டு மாதங்களுக்கு முன் ஏதேனும் பொருள் திருட்டுப் போனதா?" என்று.
நானும் என் தாயாரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.எங்கள் வீட்டில் நடந்த அந்த நிகழ்ச்சியை நாங்கள் தந்தையாரிடம் சொல்லவில்லை.அதனால் அவர் "எங்கள் வீட்டில் திருடு ஒன்றும் நடக்கவில்லை."என்று சொன்னபோது நான் குறுக்கிட்டு "இல்லை சார், இரண்டு புதுப் புடவைகள் திருட்டுப்போய் விட்டன."என்றேன்.
"அதானே பார்த்தேன் திருடியவனே உங்கள் வீட்டில் திருடியதாகச் சொன்னானே "
"ஆமாம் ஐயா, ஏதோ ஏழை.அவன் பெண்டாட்டி கட்டிக்கொள்ளட்டும்னுதான் நாங்களும் சும்மா இருந்துட்டோம் "
"அப்படியெல்லாம் திருட இடம் கொடுக்கக் கூடாது.நாளைக்கு ஆதாரத்தோட ஸ்டேஷனுக்கு வந்து புடவையை வாங்கிக் கொள்ளுங்க." என்றார்.
நாங்களும் சரியெனத் தலையை ஆட்ட அவரும் சென்றுவிட்டார்.
என் தந்தையார், "என்ன ஆதாரம் இருக்கிறது?புடவை வாங்கிய ரசீது  இன்னுமா இருக்கும்?
என்ன தலைவலி இது. புடவையை வாங்காவிட்டாலும் தவறாச்சே இப்போ ஆதாரத்துக்கு எங்கே போவது?"என்று சிந்தனை வயப்பட்டார்.
அப்போதுதான் நான் எழுதியிருக்கும் தினசரிக் குறிப்பு நினைவுக்கு வநதது.சிறிய பழைய நோட்டுப் புத்தகத்தில் ஒவ்வொருநாளும் தேதி போட்டு நிகழ்வுகளை எழுதியிருந்தேன்.இரண்டு மாதங்களுக்குமுன் தேதியைப் புரட்டிப் பார்த்தபோதுதான் அந்தப் புடவை வெளியில் காயப் போட்டிருந்தது காணாமல் போனதை எழுதியிருந்தேன்.மறுநாள் என் தந்தையார் அந்தக் குறிப்பை எடுத்துக் கொண்டு  சென்று புடவைகளை வாங்கிவந்தார். அத்துடன் இன்ஸ்பெக்டர் டயரி எழுதிய என்னைப் பாராட்டியதாகவும் சொன்னார்.
சாதாரண டைரிக்குறிப்பு ஒற்று சாட்சியாக நின்ற வேடிக்கையை எண்ணிச் சிரித்தேன் நான். என் அம்மாவோ இதுதான் சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பது.என்றார். 
உண்மைதானே!






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Thursday, April 4, 2013

இப்படியும் சிலர்.


                            எங்கள் இல்லத்திற்கு தூரத்து உறவு என்று சொல்லிக் கொண்டு ஒரு பெண்மணி வந்திருந்தார். அவருக்கு அறுபத்தைந்து வயதிருக்கும். நல்ல சிவந்த நிறத்துடன் ஒல்லியான தேகத்துடன் இருந்தார்.தன மகனும் மருமகளும் மிகவும்பாராமுகமாக இருப்பதாகவும் உறவுக்காரர்கள் யாருக்கேனும் உதவி செய்து கொண்டு இருந்து விடுவதாகவும் சொல்லவே என் மகளும் சம்பந்தியும் அவளைத் தங்கள் வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டனர். சுமார் ஒரு வாரம் வரை எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள்  அந்த அம்மாள்.

                        அடுத்தவாரம் ஒரு நாள் என்மகள் உடல் நலமில்லைஎன்று டாக்டரைப் பார்க்கப் போய்விட்டாள்  நானும் ஊரில் இல்லை. வீட்டில் யாரும் இல்லை என்று தெரிந்து கொண்டு அலமாரியிலிருந்த நகைப் பையிலிருந்து சிறு சிறு தோடு மூக்குத்தி தங்கக் காசுகள் என சட்டெனத் தெரியாதசிறுசிறு  பொருளாக சுமார் நான்கு சவரனுக்கு மேல் எடுத்து தன மடியில் முடிந்து கொண்டு விட்டாள்  என்மகள் வீடு வந்தவுடன் தன மகனிடமிருந்து விபத்து ஏற்பட்டு விட்டதாகப் போன்  வந்துள்ளது ஒரு வாரம் கழித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்  விட்டாள் 

                       இரண்டு மூன்று நாட்கள் கழித்து என் மகள் தங்கள் ஒரு சவரன் காசைக் கடையில் கொடுத்து நகையாகச் செய்யவேண்டும் எனத் தேடும்போது தான் பொருட்கள் காணாமல் போயிருப்பது தெரிந்தது.எங்கேயோ வைத்து விட்டேன் என்று பல இடங்களிலும் தேடினாள் அதற்குள் ஒரு வாரம் ஓடிவிட்டது.அந்த அம்மாள் வேலைக்கு வருவதாகச் சொன்னாளே இன்னும் வரவில்லையே என்றவுடன் சந்தேகம் அவள்மேல்  தோன்றியது.

                     ஊரிலிருந்து திரும்பி வந்த நான் என் மகளின் வீட்டில் வைத்துவிட்டுச் சென்ற என் நகைகளைப் பார்த்தபோது என் திருமணத்தில் போட்ட மூக்குத்தி வரலக்ஷ்மி அம்மனுக்குப் போடும் நகைகள் காசுகள் என ஒன்றரைப் பவுனுக்குக் காணாமல் போயிருந்தன.
                     அவளைத் தேடிப்பிடித்து பயமுறுத்திக் கேட்டபோது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அழுதாள். அந்த நகைகளை மார்வாடி கடையில் விற்றதையும் கூறி அழைத்துச் சென்றாள் எனக்கோ நான் அம்மனுக்கு ஐம்பது வருடங்களாகப் போட்டு வந்த அந்த மூக்குத்திகள் கிடைக்க வேண்டுமே என்ற பரிதவிப்பு.ஆனால் மார்வாடியோ அம்மா நாங்கள் பழைய பொருட்களை ஒரு நாள் வைத்திருப்போம் மறுநாள் உருக்கிவிடுவோம். என்று உதிர்த்த கற்களைக் காட்டினார். எனக்கோ கண்களிலிருந்து ரத்தக் கண்ணீர் வடிந்தது.அந்தப் பெண் பத்தாயிரம் ரூபாயை எனக்கும் , என்மகளுக்கு ஒரு சவரன் சங்கிலியும் கொடுத்து சரி செய்துவிட்டாள் . ஆனால் இன்று ஒரு மூக்குத்தியின் விலை பத்தாயிரத்தைத் தொடுகிறது. பொக்கிஷமாக நான் ஐம்பது ஆண்டுகளாக பத்திரமாகப் பாது காத்துவந்த அம்மனின் மூக்குத்திகள் என்னை விட்டுப் போகக் காரணமான அந்தப் பெண்மணியின் செயலை மன்னிக்கவும் மறக்கவும் முயற்சிக்கிறேன்.









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com