Tuesday, February 19, 2013

அப்பா சொன்ன கதை.

என் இள  வயதில் மிகவும் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தேன். ஒருநாள் தேர்வு சமயத்தில் படிக்காமல் பண்டிகைநாள் கோலம் போட்டுக் கொண்டிருந்தேன்.ஆசிரியரான என் அப்பா அப்போது உள்ளே வந்தார். ஒரு வினாவைக்  கேட்டு அந்தப் பாடம் படித்தாயா?என்றார். நான் இன்னும் -படிக்கவில்லை என்றபோது, "இன்னும் சற்று நேரத்தில் தேர்வு எழுதவேண்டும் என்ற பயமோ பதட்டமோ இன்றி கோலம் போடுகிறாயே எப்படி மதிப்பெண் வரும்" என்று நிதானமாகத்தான் கேட்டார். ஆனாலும் எனக்குக் கண்ணில் நீர் வந்து விட்டது.அதைக் கவனித்த என் தந்தையார் "போ ஒருமுறை படித்ததையாவது திருப்பிப் பார்" என்றார். கோலத்தை அவசரமாக முடித்துவிட்டு உள்ளே சென்றேன்.
      அன்று இரவு சாப்பிடும்போது, என்னை அன்போடு பார்த்த அப்பா, "நீங்கள் படிக்க நான் வசதி செய்து தருகிறேன் அதனால் உங்களுக்கு படிப்பின் அருமை தெரியவில்லை.ஆனால் நான் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு சாதாரண வேலையில் இருந்து கொண்டே மேல் படிப்புப் படித்தேன்.பணம் கட்ட நான் என்ன பாடு பட்டேன் தெரியுமா?" என்று சொன்ன போது நான் கையில் எடுத்த சோற்றுக் கவளத்தை வாயில் போடாமல் பொம்மை போல் அமர்ந்து கேட்டேன்.
       "என் நாற்பதாவது வயதில் தான் நான் பி.ஏ. பரீட்சைக்குப்  படித்தேன்.தேர்வுக்குக் கட்ட பணம் இல்லாமல் அலைந்து திரிந்து அந்தப் பணத்தைச் சேர்த்தேன்.அப்படியும் போகவர பேருந்து கட்டணமும் தேர்வுக்கான கட்டணமும்தான் சேர்க்க முடிந்தது.
தேர்வுக்குப் பணம் கட்டக் கடைசி நாளானதால் விடுப்பு எடுத்துக் கொண்டு மதுரைக்குச் சென்று பணம் கட்டிவிடலாம் என்று மன தைரியத்தோடு சென்றேன்.எங்கள் பள்ளி தனியார் பள்ளியானதால் சரியான காரணத்தைச் சொல்லியும் அரைநாள் விடுப்புதான் கொடுத்தனர்.இப்போதே ஒருமணியாகி விட்டதே என்று வேகவேகமாக பேருந்தைப் பிடித்து மதுரைக்குப் பயணமானேன்.பாதிவழி போனதும் என் கடிகாரத்தைப் பார்த்தேன்.பணம் கட்ட என்னும் ஒருமணி நேரமே இருந்தது.அந்தக காலத்தில் பரீட்சைக்குப் பணம் கட்டுவது என்பதே  சிரமமான காரியமாக இருக்கும். மனம் பதை பதைப்புடன் அமர்ந்திருந்தேன்.
        திடீரென்று ஒரு பெரும் ஓசை கேட்டது.எல்லா பயணிகளும் என்ன என்ன என்று கீழே இறங்கினர்.நானோ பெரும் அவசரத்தில் இருந்தேன் இன்னும் பத்து நிமிடங்களில் சென்று சேர்ந்து விடலாம் பணமும் கட்டி விடலாம் என எண்ணியிருக்கும் இந்த சமயம் வண்டி நின்று விட்டதே என கண்களில் நீர் நிறைய ஏறக்குறைய அழுது விட்டேன்.நடத்துனரோ இனி இன்னொரு வண்டி வந்தால் அதில் ஏற்றிவிடுகிறேன் நில்லுங்கள் எனக் கூறியதும் என் ஆசை அடியோடு நொறுங்கி விட்டது.அந்தக் காலத்தில் அபராதத்துடன் பணம் கட்டும் பழக்கம் எல்லாம் கிடையாது.
       மதுரை சென்றடைய இன்னும் இரண்டு மைல் இருந்தது ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர்கள்.என்னால் நிற்கவோ காத்திருக்கவோ இயலவில்லை.எனவே ஓடத் தொடங்கினேன்.வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு ஓடுவதை பலரும் பார்த்தாலும் நான் அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.ஒருவழியாக ஐந்து மணிக்குள் கலெக்டர் ஆபீஸ் முன் சென்று பெருமூச்சுடன் நின்றேன்.பணம் கட்டும் இடம் சென்று நின்று பூர்த்தி செய்த விண்ணப்பத் தாளைக் கொடுத்துவிட்டு பணத்தை எண்ணினேன். "ஐயோ, ஒரு ரூபாய் குறைகிறதே. பேருந்துக்கான பணத்தைச் சேர்த்தாலும் போதவில்லையே."என்று தவித்தேன்.நேரம் ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.கட்டணம் வசூலிப்பவரோ "என்ன சார், நேரமாச்சு.அஞ்சு மணிக்குள்ளே குளோஸ் பண்ணணும். சீக்கிரம்."என்றார்.முகம் சிவக்க, உடல் வியர்வையில் நனைய, கண்கள் குளமாக ஏறக்குறைய பித்துப் பிடித்தவன் போல் நின்ற என் பரிதாப நிலையை நினைத்து நானே வெட்கப் பட்டேன்."சார் பணம் ஒரு அரை  ரூபாய் குறைகிறது.என்ன செய்யறதுன்னு தெரியல்லே.
ரெண்டு மைல் ஓடிவந்தப்போ கீழே விழுந்துடுச்சுன்னு நினைக்கிறேன்."என்றேன் கண்களின் நீரைத் துடைத்தபடியே. அப்போது ஒரு முதியவர் என் தோளைத் தட்டி ஒரு ரூபாயை நீட்டினார்.
ஐயா என்று பேச ஆரம்பித்த என்னை முதலில் பணம் கட்டு என்று ஜாடை செய்தார்.பணம் கட்டியவுடன் கவுண்டர் மூடப்பட்டது.
என் மன உளைச்சலும் மூடிக்கொண்டது.பணம் கொடுத்து உதவிய அந்த பெரிய மனிதருக்கு நன்றி சொல்லி மீதிப் பணத்தைக் கொடுக்க நினைத்துத் தேடினால் அவரைக் காணோம். உதவிசய்த கையோடு அவர் சொல்லாமலேயே சென்று விட்டார். நான் அவர் நின்ற இடத்தைத் தொட்டு வணங்கினேன்.அதன்பின் மேலே படித்துப் பட்டம் வாங்கி இன்று ஒரு உயர் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கிறேன்.என் வாழ்நாளில் இந்த சம்பவத்தை மறக்கமாட்டேன்.அதனால் படிப்பதை சாதாரணமாக எண்ணிவிடாதே.என்றார்.அந்த அப்பாவின் மீது எனக்கிருந்த அன்பு வளர்ந்ததோடு மரியாதையும் கூடிவிட்டது.இந்த விடாமுயற்சியை நானும் பின்பற்ற முடிவு செய்தேன்.அவரது அனுபவம் எனக்கு மட்டுமல்ல இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பாடமாக அமையும் என எண்ணுகிறேன்.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com