Wednesday, March 19, 2014

53.கண்ணன் சொன்ன பாடம்.
               பரந்தாமனும் பக்தவத்சலனுமான கண்ணன் உண்மை அன்புக்குக் கட்டுப்பட்டவன் என்பது உண்மைதான். அதேசமயம் தன அன்புக்கு உகந்தவராயினும் அகந்தையோ கர்வமோ கொண்டுவிட்டால் அவனைத் திருத்தித் தன்வயமாக்கிக் கொள்ளும் பேரன்பனும் அவன்தான்.ஒரு சிறு நிகழ்ச்சியின் மூலம் இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்ளலாம்.
              கோபிகையர்  கூட்டமாக  ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தின் நடுவே ராதையும் கண்ணனை எண்ணிக் கொண்டே ஆடிக் கொண்டிருந்தாள்.அப்போது திடீரென்று அவர்களின் நடுவே கண்ணனும் வந்து ஆடிப்பாடத் தொடங்கினான்.மனமகிழ்ந்த கோபிகையர் ஒவ்வொருவரும் கண்ணன் தன்மீதுதான் அதிக அன்பு வைத்துள்ளான் என எண்ணிக் களித்தபடி ஆடிக்கொண்டிருந்தனர்.
                அப்போது திடீரென கண்ணன் ராதையின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓடினான்.கோபியரும் கண்ணா, கண்ணா, என அழைத்தவாறே பின்னால் ஓடினர்.கண்ணனின் கையைப் பற்றியிருந்த ராதை ஓடிக்கொண்டே "கண்ணா, உனக்கு எல்லாரைவிட என்மீதுதானே அன்பு அதிகம்?"எனக் கேட்டாள்.அந்த மாயக் கண்ணனும்,"இதிலென்ன சந்தேகம் ராதா,நீதான் என் அன்புக்குப் பாத்திரமானவள்."என்றான் கள்ளச் சிரிப்போடு.
                உடனே ராதை கண்ணா "என்னைத் தூக்கிக் கொண்டு போவாயா?கால் வலிக்கிறது."என்றவளை "அதற்கென்ன, மிக்க மகிழ்ச்சியோடு தூக்கிச் செல்கிறேன்."என்றவன் ராதையைத் தூக்கிக் கொண்டு நடந்தான்.சிறிது தூரம் சென்றனர்.வழியில் பெரிய புன்னை மரமொன்று பூக்கள் சொரிந்தபடி  நின்றிருந்தது.அதைப்பார்த்த ராதை,"கண்ணா, இந்த மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு ஆடவேண்டும்போல் இருக்கிறது."என்றாள்
               உடனே கண்ணனும் "அதற்கென்ன, ஆடேன்"என்றபடி அவளைத் தன தோளில்  சுமந்தான். தன இரு கால்களையும் கண்ணனின் தோள்மீது வைத்துக் கொண்டு  மரக்கிளையைப் பற்றினாள்  ராதை.
கண்ணனும்,"ராதை பத்திரம் நன்றாகக் கிளையைப் பற்றிக்கொள்"என்று சொன்னவன் அவளை மரத்தின் மீது ஊசலாடவிட்டுவிட்டு மறைந்தான்.இப்போது ராதை மரத்தின் உச்சியில் தொங்கிக் கொண்டு தவித்தபடி இருந்தாள்
             அதேசமயம் இவர்களைத் தொடர்ந்து ஓடிவந்த கோபிகையர், கண்ணனும் ராதையும் ஓடிய பாத தடங்களைப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து அவர்களும் நடந்தனர்.சிறிது தூரம் சென்றதும் ஒருவர் ஓடிய தடம்  மட்டுமே தெரிந்தது. தொடர்ந்து அந்த தடத்தைப் பார்த்துக் கொண்டே கண்ணா,கண்ணா, எனக்  கூவியவாறே ஓடினர்.சிறிது தொலைவு வந்தவுடன் அந்தத் தடமும் மறைந்து விட்டது.
            இப்போது கோபிகையர் திகைத்து நின்று விட்டனர். கண்ணா, என அவர்களின் வாய் கூவியவாறு இருந்தது. அப்போது மரத்தின் மேலிருந்து "ஏ ,கோபியரே, என்னைக் கீழே இறக்குங்கள் நான் மரத்தில் தொங்குகிறேன்"என்ற குரல் கேட்டு அண்ணாந்து பார்த்தனர். அங்கே ராதை மரத்தின் பெரிய கிளையைப் பிடித்துத் தொங்குவது தெரிந்தது.கீழே இறங்கிய ராதை என்னைக் கண்ணன் பாதியில் விட்டு விட்டுப் போய்  விட்டான். என்றாள் கண்ணீர் மல்க.
           ஒரு கோபி கூறினாள்,"அடி பைத்தியமே கண்ணனின் பிடி இருக்க அதை விட்டு போயும் போயும் மரக்கிளைக்கு ஆசைப்பட்டாயே. அவன் கையல்லவோ கிடைக்கவோண்ணாத கை. உனக்கு கண்ணன் உன் கையைப்  பிடித்து ஓடியதும் கர்வம் வந்து விட்டது. அந்தப் பரந்தாமனை எண்ணிய நெஞ்சம் அத்தகைய எண்ணங்களை எண்ண லாமா?அதனால்தான் கண்ணன் உன்னை விட்டு விட்டான்.
        இனியும் அத்தகைய கர்வம் கொள்ளாது அவனை எண்ணிக் காதல் கொண்டு கசிந்து உருகி ஆட்கொள்ள வருமாறு வேண்டிக் கொள்" என்றவுடன் தன தவறை உணர்ந்தாள்  ராதை.

         இறைவனை அடையும் வழியை ராதை மட்டுமா அறிந்து கொண்டாள்?எந்த அகந்தையோ கர்வமோ இல்லாதமனதிலே இறைவன் விரும்பி வந்து அமர்வான் என்ற உண்மையை நாமும்  புரிந்து கொண்டோமல்லவா?

Thursday, March 13, 2014

52.navaneedha naattiyam.

           52  நவநீத நாட்டியம்.
                             கண்ணன் ஆடிய நாட்டியம் நவநீத நாட்டியம் எனப் பெயர் பெற்றது.இவனது நாட்டியத்தைக் காண ஆசைப்பட்ட யசோதை அவனை ஆடச் சொன்னதுதான் நவநீத நாட்டியம் எனப்பட்டது.
           யசோதை வழக்கம்போல தயிர் கடைந்து கொண்டிருந்தாள். கண்ணன்
அப்போது அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டு வெண்ணை திரள்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது யசோதை "கண்ணா, பானைக்குள் பூதம் இருக்கு. அது வெளியே வந்து உன்னை விழுங்கி விடும்." என்று பயமுறுத்தி தூரப் போகச் சொன்னாள்.
                    அவள் சொன்னதுபோலவே கண்ணனும் பயப்படுபவனைப்போல கண்களை உருட்டி வாயைப்பொத்தி "ஆமாம்மா, அந்த பூதம் உன்னை விழுங்கிவிட்டால் நான் யாரை அம்மா என்று அழைப்பேன். நீயும் தூர வந்து விடு என்று அபிநயித்தான்.அதைப்பார்த்த யசோதை சிரித்தபடியே
"கண்ணா, நான் தயிர் கடையும் வரை நீ நாட்டியம் ஆடினால் உனக்கு யானைத் தலையளவு வெண்ணை தருவேன்."என்றாள்.
                "அப்படியா, சரி."என்றவனிடம்யசோதை "நான் மத்திலிருக்கும் கயிற்றை வலது பக்கம்  இழுக்கும் பொது வலது கால் தூக்கியும்  இடது பக்கம் இழுக்கும் பொது இடது கால் தூக்கியும் நாட்டியம் ஆடவேண்டும் "என்றாள்.
             அவள் தருவதாகச் சொன்ன யானைத் தலையளவு  வெண்ணைக்காக
கால்மாற்றி மாற்றி ஆடினான் கண்ணன். யசோதையும் மத்தை வேகவேகமாக இழுத்து கண்ணனை வேகமாக நாட்டியம் ஆடவைத்தாள்.
 
            யசோதையின் வேலையும் முடிந்தது. கண்ணனின் நாட்டியமும் முடிந்தது. ஆடிக்களைத்தவனாக வெண்ணை தின்னும் ஆசையுடன் தாயின் முன்னே வந்து நின்றான் கண்ணன்.யசோதையும் தன கையில் யானைத்தளையளவு திரண்ட வெண்ணையை எடுத்துப் பானைக்குள் போட்டு  மூடிவிட்டாள். சிறிய கடுக்காயளவு வெண்ணையை எடுத்து அதையும் இரு பங்காக்கி ஒரு பங்கை கண்ணனின் கையில் வைத்தாள்
             அந்தவெண்ணையைக் கையில் வாங்கிய கண்ணன் தாயைப் பார்த்துச் சிரித்தான்.அந்தவெண்ணையை வாயில் போட்டுக் கொண்டு அடுத்த கையை நீட்டினான். அவனது சிரிப்பின் அழகில் மயங்கிய யசோதை இன்னொரு உருண்டை வெண்ணையைக் கையில் வைத்தாள்  உடனே அடுத்த கையை நீட்டிச் சிரித்தான் திருடன். யசோதை மீண்டும் ஒரு உருண்டை வெண்ணையை அவன் கையில் வைத்தாள்
               அவள் முதலில் தருவதாகச் சொன்ன யானைத் தலையளவு வெண்ணையை வாங்கியபின் புன்னகைத்தவாறே ஓடிவிட்டான் அந்தக் கள்ளன்.தன்னை மறந்து கண்ணனின் புன்னகையில் மயங்கி அமர்ந்திருந்தாள்
யசோதை.
        வெண்ணைக்காகக் கண்ணன் ஆடிய நாட்டியமே நவநீத நாட்டியம் எனப் படும். நவநீதம் என்றால் வெண்ணை என்று பொருள். கண்ணனின் லீலை எண்ணி எண்ணி மகிழத் தக்கது.