Sunday, October 4, 2015

திறமைசாலி

                 
ஒரு சிறு கிராமம்.அந்த கிராமத்தில் பெரிய ஆறு இருந்தது.செழிப்பான அந்த ஊரில் நல்ல விளைச்சல் விளைந்தது.அந்த ஊரிலிருந்து அரிசி கடத்துவதாக செய்தி வந்தது. திருடர்கள் திருடிச் செல்வதாய் செய்தி காதுகளில் விழ அந்த ஊரின் தலைவர் ஊர் எல்லையில் ஆட்களை நிறுத்திவைத்தார்.யார் அரிசியை  எடுத்துச் சென்றாலும்அவர்களை உடனே காவலரிடம் ஒப்படைத்து வந்தார்.
             ஒருநாள் மிதிவண்டியில் ஒருவன் வேகமாக ஊர் எல்லையைக் கடந்தான்.அவனது வண்டியின் பின்புறம் ஒரு சாக்குப் பை இருந்தது.
அவன் எல்லையில் வந்ததும் காவலர்கள் அவனைப் பிடித்து நிறுத்தி விசாரித்தனர்.
            அவனோ தைரியமாக தனது பையைத் திறந்து காட்டினான். அதில் நிறைய மணல்தான் இருந்தது.தன வீடு இடிந்து விட்டதாகவும் அதைசீர் படுத்த மணல் எடுத்துச் செல்வதாகவும் கூறவே    அவனைப் போக விட்டனர். இப்படியே சுமார் பத்துநாட்கள் கடந்தன.திடீரென்று அவன் வருவது நின்று விட்டது. பிறகுதான் தெரிந்தது அந்த ஊரில் இதுவரை பத்து மிதிவண்டிகள் காணவில்லை என்பது.அந்தத் திருடனின் திறமையைப் பாராட்டுவதா வேண்டாமா?
  இப்படிப்பட்டவர்கள் திருந்துவது எப்படி?" திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டைத் திருத்த முடியாது"
 என்று பட்டுக் கோட்டை சொன்னது சரிதானே!
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Wednesday, July 22, 2015

பொருளின் அருமை.

                சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் வீடுகளி ல் இவ்வளவு பொருட்கள் நிறைந்திருந்ததில்லை. மிகக் குறைவான பொருட்களிலேயே திருப்தியாக வாழ்ந்து வந்தனர். பணத்தின் அருமை தெரிந்தவர்களாக இருந்தனர் நம் பெற்றோர்.
              ஒரு பொருள்  தொலைந்து விட்டது என்றால் அதை எப்பாடு பட்டேனும் தேடி எடுக்கின்ற உள்ள உறுதியும் உடல் உழைப்பும் கொண்டவர்களாக இருந்தனர் என்றால் அது சற்றும் மிகையில்லை.ஏனெனில் என் .சிறுவயதில் எனக்கேற்பட்ட அனுபவத்தைச் 
சொல்கிறேன்.

               ஒருமுறை என் பிறந்தநாள் வந்தது.அன்று எனக்கு ஒருஜதை  தோடும் அந்தக் காலத்தில் லோலாக்கு எனச் சொல்லும் தொங்கட்டானும்  வாங்கி எனக்கு அதைப் போட்டு அழகு பார்த்தார் என் தாயார்.அவர் மனதில் ஏகத்துக்கு மகிழ்ச்சி.அந்த மகிழ்ச்சி அவர் முகத்திலேயே தெரிந்தது.

              அப்போது  எங்கள் வீட்டுக்கு அருகிலேயே புது வீடு கட்டிக் கொண்டிருந்தனர். வீடு கட்டுவதற்காக ஒரு வண்டி மணல் வந்து இறங்கியிருந்தது.அந்தத் தெருவில் இருந்த சிறுவர் சிறுமியர் நல்ல நிலவு வெளிச்சத்தில் அந்த மணல் குவியலில் குதித்து விளையாடினோம்.வெகுநேரம் கழித்து அவரவர் இல்லம் திரும்பினோம்.கைகால் அலம்பிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்த என்னை என் அம்மா பார்த்தார்.
"ஏண்டி! காதிலே எங்கே காணோம்?" சட்டென அப்போதுதான் என் காதுகளைத் தொட்டுப் பார்த்தேன்.
'ஐயோ' வலது காதில் தொங்கட்டானும் இல்லை தோடும் இல்லை. அழுகை பொங்கி வந்தது. என் அம்மா சமாதானம் செய்து சாப்பிட வைத்தார். சற்று நேரத்தில் களைப்புடன்  தூங்கிவிட்டேன்.  

                  ஆனால் என் தாயார் தூங்கவேயில்லை. என் தந்தையார் துணை நிற்க கையில் மணல் சலிக்கும் பெரிய சல்லடையை எடுத்துக்கொண்டு மணல் குவியலின் அருகே வசதியாக அமர்ந்து கொண்டார். தந்தையாருடன் பேசிக் கொண்டே மணலை சலிக்க ஆரம்பித்தார்.நான் ஒரு இடத்திலா குதித்திருப்பேன்? எதையும் நினைத்துப் பார்க்கவில்லை. ஏதோ நம்பிக்கையில் சலித்தார் சலித்தார் சலித்துக் கொண்டே இருந்தார்.
வெகு நேரம் கழித்து திருகாணி மட்டும் கிடைத்தது. மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் மீண்டும் சலித்தார். கிட்டத்தட்ட அரைவண்டி மணல் சலித்துவிட்டார். ஒரே சமயம் தோடும் லோலாக்கும் சல்லடையில் மாட்டிக் கொண்டது.வெற்றியுடன் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து படுக்கும் போது கிட்டத்தட்ட விடிந்து விட்டது.

                     இந்தக் கதையை மறுநாள் என் தந்தையார் சொல்லித் தெரிந்து கொண்டேன். அன்றே என் காதுகளில் தொங்கட்டானை மாட்டியவர் ""அடிக்கடி காதைத் தொட்டுப் பார்த்துக்கோ.பொருள் வாங்கறது பெருசில்லே வாங்கின பொருளைப் பாதுகாக்கிற துதான்பெருசு ." என்று சொன்னபோது எட்டு வயது சிறுமியாகிய நான் தலையை ஆட்டுவது தவிர வேறு என்ன செய்ய முடியும்? ஆனால் அம்மா பட்ட கஷ்டத்தை நினைத்தபோது கண்களில் நீர் திரண்டது. அதைக் கண்டு அம்மா அணை த்துக் கொண்டார். 

              அந்த நம்பிக்கை மனஉறுதி உழைப்பு நமக்கு இப்போது இருக்கிறதா என அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.


--
ருக்மணி சேஷசாயி  
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Sunday, July 5, 2015

எதிலும் கற்போம்.


                   நாம் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகள் நம் வாழ்க்கையில் எங்கும் எந்த இடத்திலும் தோன்றும்.எனக்கும்  அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.
                  ஒருமுறை நாங்கள் திருப்பதி செல்ல ரயில் நிலையம் சென்றோம். ரயில் நிலையத்தில்  நல்ல கூட்டம் நாங்கள் இருக்கையைத் தேடி வேகமாக நடந்தோம்.அப்போது  ஒரு கம்பத்தின் அருகே ஒரு வயதான பிச்சைக்காரன் கால் நீட்டி  அமர்ந்திருந்தான். நான் என் இருக்கையைத் தேடும் வேகத்தில் அவனது காலை நன்கு மிதித்து விட்டேன். அவனும் காலை மடக்கமுடியாமல்  திசை மாற்றி வைத்துக்  கொண்டான். ஒரு நிமிடம் அவனைத் திரும்பிப் பார்த்தேன். அந்தக் கண்களில் வேதனை தெரிந்தது.ஆனால் அதை அவன் கால் நீட்டி அமர்ந்த தவறு என்மீது எந்தத் தவறும் இல்லையெனஎன்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். 
                  ஒருவழியாக எங்கள் இருக்கையைத் தேடி அமர்ந்தபின் சற்றே நீண்ட மூச்சு விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.அப்போது ஒரு சிறுவன் சுமார் எட்டு வயதிருக்கும் கைநிறைய புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டு ஒவ்வொரு பயணியிடமும் நூல்களின் பெ யர் சொல்லி  "வேணுமா சார்?" என்று கேட்டுக் கொண்டிருந்தான். 
                    அவனிடம் "எனக்கு எதுவும் வேண்டாம். என்னிடமே இருக்கு" என்று சொல்லிவிட்டதால் என்னைத்தாண்டி அடுத்து அமர்ந்திருப்பவரிடம் நூல்களைக் காட்டிப் பேசத் தொடங்கினான். அவர் வெகுநேரம் பார்த்துவிட்டு ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை அவனிடம் அள்ளிக் கொடுத்தார்.சிறுவன் பாவம் கையில் கனத்துடன் நூல்களை அடுக்கமுடியாமல் அள்ளிக் கொண்டு அவர் கேட்ட மீதிச் சில்லறையையும் கொடுக்க முடியாமல் தவித்தான்.
                    அதே சமயம் சில்லறையை வாங்கிக் கொண்ட பெரியவர் ஒரு நாணயத்தைத் தவறவிட்டார். அந்த நிலையிலும் அந்தச் சிறுவன் கஷ்டப்பட்டு கீழே விழுந்த நாணயத்தைப் பொறு க்கி எடுத்தவன் ' மன்னிச்சுக்குங்க ஐயா கை தவறிடுச்சு" என்றவாறே  கொடுத்தான்.என்னைத்தாண்டிச் சென்றவன் என் கால் தடுக்கவே கீழே விழுந்து எல்லாப் புத்தகங்களையும் தவறவிட்டான்.உடனே "சாரி ம்மா .உங்க காலை மிதிச்சுட்டேனா. ரொம்ப சாரிம்மா."என்று மீண்டும் மீண்டும் சாரி கேட்டான்.எனக்கு மனம் உறுத்தியது காலை நீட்டிக் கொண்டது என் தவறு. ஆனால்  அந்த தவறைத்  தன மீது போட்டுக்  கொண்டு  மன்னிப்புக் கேட்கும் சிறுவன் சிறுவனாகத் தோன்றவில்லை என் கண்களுக்கு.எனக்குப் புத்தி புகட்டவந்த அந்த முருகப் பெருமானாகவே தோன்றியது எனக்கு.

                          வண்டி மெதுவாக நகரத் தொடங்கியவுடன் நான் வேகமாக ஜன்னலோரம் நின்றுகொண்டு அந்த முதியவர் கண்களில் பட்டவுடன் ஐந்து ரூபாய் நாணயத்தை இந்தாப்பா என்று கூவி அதை அவன் எடுத்துக் கொண்டு கை கூப்பியதைப் பார்த்தபின் ஏதோ பிராயச்சித்தம் செய்து விட்டதைப் போல அமைதியானேன்.


                      எப்படியெல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்று நினைத்துக் கொண்டேன்.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, April 13, 2015

பெயர் பிறந்த கதை

ஒரு மாலை நேரம். வீட்டிலிருக்கும் அனைவரும் நிலாவெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு அவரவர் வயதுக்கேற்ற கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென்று சின்னப் பெண் தன தாத்தாவிடம் கேட்டாள் ,"தாத்தா, இந்த பெங்களூருவுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது தாத்தா?".தாத்தா புன்னகைத்ததைப் பார்த்ததும் நாங்களும் அவர் ஏதோ ஒரு கதை சொல்லப் போகிறார் என தெரிந்துகொண்டு அவரருகே சென்று அமர்ந்தோம்.

"நானே சொல்லணுமின்னு இருந்தேன்.பாப்பா கேட்டது நல்லதாப் போச்சு.கேளு.சுமாரா ஒரு அறுநூறு வருசத்துக்கு மின்னாலே இந்த எடமெல்லாம் காடாக கெடந்துச்சாம்.
அப்போல்லாம் சின்னச் சின்ன கிராமங்கள்தான் இந்தப் பகுதியிலே இருந்துச்சாம். அப்படி இருந்த கொஞ்ச கிராமங்கள  கேம்பெகவுடான்ற ராசா ஆட்சி பண்ணாராம்.அவரு ஒரு நா சிப்பாய்ங்களோட காட்டுக்கு வேட்டைக்கு  வந்தாராம்.
ரொம்பநேரம் வேட்டையாடிட்டு களைச்சுப்போய் பார்த்தா கூட வந்த சிப்பாய்க யாரையும் காணோம்.ராசாவழிதவறி  காட்டுக்குள்ளார ரொம்ப தொலைவு வந்திட்டாரு. அவரூக்கொ நல்ல பசி ஏன்னா செய்யிறதுன்னே தெரியல.மெதுவா எதாச்சும் வழி தெரியிதான்னு பாத்துகிட்டே வரும்போது ஒரு சின்ன குடிசை தேம்புட்டுதாம். ராசாக்கு ரொம்ப சந்தோசமாப் போச்சாம். வெளியே நின்னாப்பல ஆறு வூட்டுக்குள்ள? அப்படின்னு கேட்டது உள்ளேருந்து வயசானஒரு  பாட்டிம்மா வந்தாங்க. அவங்ககிட்ட ராசா வழி தவறிடுச்சு. பசிக்கு ஏதானும் கொடுங்கன்னு கேட்டாராம்.அந்தப் பாட்டிம்மாவும் உள்ளே கூப்பிட்டு உக்காரவச்சு தன்கிட்டே இதுதான் இருக்குது. பசிக்கு சாப்புடுன்னு கொஞ்சம் வெந்த பயறுகுடுத்துச்சாம். அதைத் தின்னு தண்ணி குடிச்ச ராசாவுக்கு புது தெம்பு வந்துடிச்சாம் 
அந்தப் பாட்டிகிட்டே வழிகேட்டுக்கிட்டு தன்னோட ஊருக்கு வந்து சேர்ந்தாராம்.
மறுநாள் சிப்பாய்கள அனுப்பி அந்தக் கிழவியை தன்னோட ஊருக்கு வரவழைச்சார்.தன வீட்டுக்கு அவளை க்  கூட்டிவந்து அவள் இருந்த நிலப்பகுதியை அவளுக்கே கொடுத்து நிறையப் பொன்னும் கொடுத்ததோட வெந்த பயறு கொடுத்த காரணத்தாலே அந்தப் பகுதிக்கு பெந்த காளு  ஊரு அப்படின்னு பேர் வச்சான். அதுதான் பிற்பாடு பெங்களூருன்னு ஆயிடிச்சி.பெந்த அப்படீன்னா வெ ந்தன்னு அர்த்தம் கன்னட பாஷையில.காளுன்னா பயறு வெந்த பயறு தந்த ஊருன்னு பேர் வந்துச்சு. காலப்போக்கில அதுவே பெங்களூருன்னு ஆகிப்போச்சு. என்ன புருஞ்சுதா என்றதும் அனைவரும் நல்ல கதையோட புது விஷயமும் தெரிந்து கொண்டோம் தாத்தா.என்றபடியே அவரவர் படுக்கச் சென்றனர்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Sunday, March 8, 2015

Check out Rukmani's photos on Facebook.

facebook
Check out Rukmani's photos on Facebook.
If you sign up for Facebook, you'll be able to stay connected with friends by seeing their photos and videos, staying up to date with their latest status updates, exchanging messages and more.
Join Rukmani on Facebook
This message was sent to rukmani68sayee.manimani@blogger.com. If you don't want to receive these emails from Facebook in the future or have your email address used for friend suggestions, please unsubscribe.
Facebook, Inc., Attention: Department 415, PO Box 10005, Palo Alto, CA 94303

Wednesday, January 7, 2015

சனியின் ஆதிக்கம்.
சனியின் ஆதிக்கம் எல்லா மனிதரையும் பற்றுவது போலவே தேவர்களையும் பற்றும் என்பதை அனைவரும் அறிவர்.ஒருமுறை தேவர்கள் அனைவரும் கயிலைக்கு சிவபெருமானை தரிசிக்கச் சென்றனர்.நவக்ரஹங்களும் உடன் சென்றனர். சப்த ரிஷிகள் பூதகணங்கள், தேவர்கள், நவக்ராகங்கள், இந்திரன் முதலான அனைத்து தேவர்களும் சிவபெருமான் தரிசனம் காணச் சென்றனர்.
                                                                                                    இறைவன் உமாதேவியுடன் வீற்றிருந்த காட்சியைக் கண்டு  அனைவரும் மகிழ்ந்து வணங்கினர்.
அப்போது புன்னகையுடன் இறைவன் சனியிடம் கேட்டார்."சனியே, நீ அனைவரையும் பிடிக்கும் தொழில் புரிகிறாயே.அது எனக்குப் பொருந்துமா?"என்றார் 
அதே புன்னகையுடன் சனி"மகாதேவா, இன்னும் ஒரு நாழிகைப் பொழுதில் உங்களைப் பிடிக்கவேண்டும் என்பது எனக்கிடப் பட்டுள்ள கட்டளை. அந்த விதியை என்னால் மீற  முடியாது. தாங்களும் என் பார்வைக்குக் கட்டுப் பட்டே ஆகவேண்டும்." என்றார் பணிவோடு.
பெருமான் கோபத்தோடு புருவம் சுருக்கினார்."என்ன?"என்றவர் சிந்தனை வயப்பட்டார்.தேவர்கள் இறைவனை 
மிகப் பணிவோடு வணங்கியபடி இருப்பிடம் வந்தனர் . சிந்தனை வயப்பட்டசிவபெருமான் எப்படியாவது இன்னும் ஒரு நாழிகைப் பொழுதுக்குள் சனியின் கண்ணில் படாத இடத்தில் சென்று ஒளிந்து கொள்ளவேண்டும் என்று இடத்தைத் தேடிப்  போனார்.
யாரும் அறியமுடியாத இடமாகப் பார்த்து ஒளிந்து கொண்டார் இறைவன். அவருக்குரிய காலம் கடந்தது.வெற்றிப் பெருமிதத்துடன் தன்  இருப்பிடமான கயிலாயம் வந்து சேர்ந்தார்.
காலம் முடிந்துவிட்டதே, இறைவன் இப்போது கயிலையில் இருப்பார். அவரைத் தரிசிக்கலாம் என்று சனி தன்  மற்ற க்ரகங்களுடன்  கயிலைக்கு வந்து சேர்ந்தார்.
பெருமிதத்துடனும் கர்வத்துடனும் சனியை நோக்கிய பெருமான். "என்ன, சனியே நீ சொன்ன காலம் வரை  நான் உன் கண்ணில் படாமல் மறைந்து விட்டேனல்லவா? என்னைப் பிடிக்க முடிந்ததா உன்னால்?" என்றார் புன்னகையுடன்.
"பரமேஸ்வரா , தாங்கள் மறைந்திருந்த இடம் எது என்று இப்பொழுது சொல்லலாமே."குறுநகையுடன் கேட்டார் சனி பகவான்.
"ஒரு பாதாளக் கழிவு நீர் தொட்டியில் ஒரு சிறு புழுவாகி மறைந்து கொண்டிருந்தேன். உன்னால் என்னைக் காண இயலவில்லை அல்லவா?"
"சுவாமி, மன்னியுங்கள்.நான் பிடித்ததால்தான் தாங்கள் நாற்றமெடுக்கும் கழிவு நீர் தொட்டியில் இரண்டரை நாழியும் அமர்ந்திருந்தீர்கள்.நறுமணமும் இனிய சூழலையும் விட்டு இப்படி நீங்கள் இருந்ததற்கு என் பார்வையே காரணம்."
பரமன் திகைத்தார்.
"உண்மையே நான் தவறாக நினைத்திருந்தேன்.உன்னை ஏமாற்றியதாக எண்ணிய நான்தான் ஏமாந்திருந்தேன்.விதியை மீள இறைவனாக இருந்தாலும் முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்வர்.என்னையும்  பிடித்த நீயும் ஈஸ்வரனுக்கு இணையானவனே. சனீஸ்வரா உன் கடமையை நீ தொடர்ந்து செய்வாயாக."என்று வரமளித்து அனுப்பினார்.
                  


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com