Wednesday, December 28, 2016

மனம் நிறைந்தது.

கடந்தவாரம்  பாரதியாரின் நினைவு இல்லம் சென்றிருந்தோம்.அங்கு தாங்கும் இடத்திலும் இளைஞர்கள் பெரும் உதவியாக இருந்தனர்.இரண்டு நாட்கள் அருகே இருக்கின்ற பாஞ்சாலங்குறிச்சி,கயத்தாறு, அத்துடன் குற்றாலக் குளியல் என்று சுற்றி பார்த்தோம்.எட்டயபுரத்தில் கவியரங்கம் பேச்சரங்கம் என்று நல்ல முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இரவு ரயிலில் ஏறுவதற்கு காத்திருக்கும் பொது என் பிராயா ணப்பையை ஒரு இளைஞர் சுமந்து வந்து என் இருக்கையில் வைத்துச் சென்றார்.அதேபோல் இறங்கும் இடம் மாம்பலம் வந்தவுடன் முன்பின் தெரியாத ஒருவர் வந்து  பையைத் தூக்கிக்கொண்டு வந்து  நான் கீழே இறங்க உதவிசெய்தார். 
      இறங்கும்போது தூறல் போட்டுக் கொண்டிருந்தது. என்னுடன் இறங்கிய ஒரு தம்பதிகளில் அந்த இளைஞன் என் சுமையையும் தான் எடுத்துக் கொண்டு வந்ததுமல்லாமல் நான் நனையாமல் எனக்கு குடைபிடித்தான்.பதிவரை வந்தவன் நான் வரவழைத்திருந்த டாக்சி திரிவர் அடையாளம் கேட்டுக் கொண்டு அருகே வந்து என் பையை வாங்கி கொண்டு படியேறினார்.என்னை மெதுவாக வரும்படி கூறிவிட்டு சூட்கேஸை காரில் வைத்துவிட்டு டிக்கியிலிருந்து குடையை எடுத்துக் கொண்டு வந்து நான் நனையாமல் கார்வரை அழைத்துச் சென்று உள்ளே அமரவைத்தான். அப்புறம்தான் மெதுவாக எப்படிப் போகவேண்டும் அம்மா என்று கேட்டான் அந்த டாக்சி டிரைவர்.
         அன்று எனக்கு ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களும் கருணைமனமும் கடமை உணர்வும் இருப்பவர்களாகத் தோன்றினார்கள்.இதேபோல் எல்லாஇடங்களிலும் எல்லாரிடமும் எல்லா இளைஞர்களும் இருக்கவேண்டும் இறைவா என வேண்டிக் கொண்டே வீட்டில் வந்து இறங்கினேன்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.

Monday, December 19, 2016

படித்த கதை: அச்சம் தவிர்

ஒரு நாள் அரசர் அக்பர் சபையில்  அமர்ந்திருந்தார்.அப்போது ஒரு மனிதன் அங்குவந்தான் . குண்டோதரனைப் போல் இருந்த அவனைப் பார்த்து சபையோர் அனைவரும் .சிரித்து விட்டனர்.அதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த அந்த குண்டன் சபையோரைப் பார்த்துவிட்டு 
மன்னனிடம் கூறினான். " மஹாராஜா என் உடம்பை இளைக்கச் செய்ய உங்களால் முடியுமா? அப்படி முடிந்தால் என் காலம் முழுவதும் உங்களுக்கு அடிமையாக  இருப்பேன். இல்லையேல் உங்கள் நாட்டில் அரசனுக்குரிய பதவியை எனக்கு நீங்கள் தரவேண்டும்" என்றான்.

அக்பர் திகைத்தார்.இவனை ஒரு மாதத்திற்குள் எப்படி இளைக்கச் செய்வது ? மெதுவாகத் திரும்பி அருகே அமர்ந்திருந்த பீர்பாலைப் பார்த்தார்.அவரும் மெதுவாகத் தலையசைத்து சம்மதிக்கச் சொல்லி சைகை காண்பித்தார்.அக்பரும் பொறுப்பை பீர்பாலிடம் ஒப்படைத்துவிட்ட நிம்மதியில்   குண்டனிடம் 
"சரி உன்விருப்பப்படியே ஆகட்டும்"என்றார்.
"ஒரு விண்ணப்பம். எனக்கு வயிறார சாப்பாடும் போடவேண்டும் பட்டினி போட்டுக்  கொல்லக் கூடாது."
.ஒரு மாதம்  சென்றது. அன்று குண்டோதரனை சபைக்கு அழைத்து வரப்  போகிறார் பீர்பால் என்பதை அறிந்து மக்கள் ஆர்வத்துடன் கூடிஇருந்தனர் 
குண்டனை, தவறு அவன் இப்போது இளைத்து பாதி உடம்பாகியிருந்தான்.
அக்பர் ஆச்சரியத்துடன் குண்டனைப் பார்த்தார்.
"உனக்கு உணவு தரவில்லையா?அல்லது மருந்து ஏதேனும் பீர்பால் கொடுத்தாரா ?"
பதில் சொல்லாது தலை குனிந்து தோல்வியடைந்த முகத்தோடு நின்றான் குண்டன்.
"பீர்பால் இது எப்படி நடந்தது?"
"ஒன்றுமில்லை மஹாராஜா.தினமும் இரவு இவர் உணவு உண்டபின் இவர் படுக்கையை சிங்கத்தின் கூண்டுக்கு அருகே போட்டிருந்தேன்.இவரிடம், "சிங்கக் கூண்டின்  தாழ்ப்பாள் சரியில்லை கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று சொல்லி வைத்தேன்.அதுதான் இப்படி வேலை செய்திருக்கிறது.
உணவை விட நிம்மதியான தூக்கம் வேண்டும் அத்துடன் மனதில் பயஉணர்வு இவரது உணவை உடம்பில் ஒட்டாமல் செய்து விட்டது.அதுதான் இளைத்துவிட்டார்."
இதைக் கேட்ட மக்கள் பீர்பாலிடமிருந்து நல்ல பாடத்தை நாமும் கற்றோம் என்று மகிழ்ச்சியுடன் கூறிச் சென்றனர்.நாமும் அச்சமில்லாமல் வாழப் பழக வேண்டும் அதையே பாரதியாரும் அச்சம் தவிர என்று சொல்லியிருக்கிறாரன்றோ?


Rukmani Seshasayee

Sunday, December 4, 2016

கேட்ட கதை ; ஆசையும் பேராசையும்.

ஒரு அறிஞரிடம் ஒருவர் ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வேறுபாடு?என்று கேட்டார்.ஆசை என்றால் என்ன? பேராசை என்றால் என்ன?என்று கேட்டார்.
அதற்கு அந்த ஞானி ஒரு கதை கூறினார். 
ஒரு பணக்காரர் ஒரு நாய் வளர்த்து வந்தார்.அதை தங்கள் வீட்டுக் காம்பவுண்டுக்குள்ளேயே சுற்றிவரும்படி வாயிற் கதவை அடைத்தே வைத்திருந்தார்.ஆனாலும் அந்த நாய் கதவில்  தெரிந்த இடுக்கின் வழியே வெளியே உலவும் தெரு நாயுடன் பேசிக் கொள்ளும்.
அப்படிப் பேசும் பொது ஒரு நாள் தெருநாய் சொல்லிற்று,"தினமும் இவர்கள் போடும் ரொட்டித்துண்டையே தின்கிறாயே சலிக்கவில்லையா.என்னைப் பார் தினமும் எத்தனை குப்பைத் தொட்டிகளில் விதவிதமான உணவைச் சாப்பிடுகிறேன்.உனக்கு அப்படி விதவிதமாகச் சாப்பிடும் ஆசை இல்லையா?"என்றது.
அதற்கு அந்தப் பணக்கார நாய்"எனக்கும் உன்னைப் போலவே   விதவிதமான உணவு சாப்பிட ஆசைதான்.அதில் ஒரு சிக்கல் இருக்கிறது."என்றது.
"அப்படி என்ன பெரிய சிக்கல் உனக்கு?"
இந்த வீட்டு எஜமான் தன  பெண்ணுக்கு கல்யாணம் செய்யப் பையன்களின் புகைப்படத்தைக் காட்டினார்.அவர் பெண்ணோ யாரையும் பிடிக்கவில்லையென்று சொல்லி  அடுத்த தெரு நாராயணனைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடிக்கிறாள்.

"அதனால் உனக்கென்ன?"

"அவள் அப்பாவோ மாட்டேன் என்கிறார்.இவளோ பிடிவாதமாக இருக்கிறாள் இன்று எஜமான் மகளிடம்  கோபமாக "இந்த நாய்க்கு உன்னைக் கட்டிவைத்தாலும் வைப்பேன் ஆனால் அந்த 
 நாராயணனுக்கு கட்டித் தரமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.  
அதுதான் காத்திருக்கிறேன்பெணமிகவும்அழகாயிருப்பாள்."என்றது 

இப்போது புரிந்ததா?அந்தப் பெண் நாராயணனைக் கல்யாணம் செய்ய நினைத்தது ஆசை ஆனால் நாய் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்யநினைத்தது பேராசை."என்று முடித்தார்.

ஆசைப்படலாம் ஆனால் பேராசைப் படுவது தவறு என்று நமக்கெல்லாம் அறிவுறுத்தியுள்ளார்  அந்த ஞானி. 

  
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com