Saturday, September 22, 2012

31 நண்பன் சொன்ன கதை.

இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது ஒருவன் மற்றவனிடம்,"டேய் சேகர், அவசரப்பட்டு வார்த்தையை விடாதே. பேசுவதற்கு முன் கொஞ்சம் யோசித்துவிட்டுப் பிறகு பேசு."என்றான்.சேகரோ சற்று அலட்சியமாகத் தலையை அசைத்து அதனால் என்ன ஆகிவிடும்" என்றான்.ஒன்றும் ஆகாது குதிரை வாங்கியவன் நிலைதான் ஏற்படும் "என்றான்.
அதற்கு சேகர், "அதென்னடா புதுக்கதை விடுகிறாய்?" என்றான்  
புதுக்கதையில்லை. ஒரு அநுபவக்கதை கேளு.ஒரு ஊரிலே மகாமுரடன்  ஒருவன் இருந்தான். அவன் ஒருநாள் தெருவில் உயர்ந்த குதிரை மேல் அமர்ந்தபடி  சென்று கொண்டிருந்தான்.அவனிடம் ஒரு குதிரையை இழுத்துக் கொண்டு ஒரு வியாபாரி  வந்தான். "ஐயா, இந்தக் குதிரை பத்து வராகன் வாங்கிக் கொள்கிறீர்களா?" என்று கேட்டான்.
முரடனுக்குப் பேராசை. ஆயிரம் வராகன் விலை பெரும் குதிரையை வெறும் பத்து வராகனுக்குத் தருவதாகச் சொல்கிறானே என்று  சற்றும் யோசிக்கவில்லை அந்த முரடன். அவன்தான் முரடனாயிற்றே. யோசிப்பானா?அதனால் பத்து வராகன் கொடுத்து குதிரையை வாங்கிக் கொண்டு தன் குதிரையை அவனிடம் சற்று பிடித்துக் கொள் எனக் கூறிவிட்டுத் தான் புதிதாக வாங்கிய குதிரை மேல் ஏறிப் புறப்பட்டான் சவாரி செய்து பார்க்க.
அப்போது அந்தக் குதிரை வியாபாரி,"ஐயா, என் குதிரைக்குக் கடிவாளம வேண்டாம் வார்த்தை ஒன்று போதும்.அப்பாடா என்று சொன்னால் ஓடும்.கடவுளே என்றால் நின்று விடும்."என்றான்.
அதைகேட்ட முரடன் குதிரைமீது ஏறி அமர்ந்து அப்பாடா என்றான்.குதிரை பிய்த்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.சற்று நேரம் மகிழ்ச்சியாக உலாவந்தான்.நேரமாக ஆக குதிரை நிற்கக் காணோம். அதை நிறுத்த மிகவும் முயன்றான் முரடன்.ஆனால் அந்தக் குதிரையோ காடு மேடு நோக்கி ஓடியது.ஏய் நில்லு நில்லு,என்று என்னென்னவோ சொற்களைச் சொல்லிப் பார்த்தான். குதிரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.குதிரைக்காரன் சொன்ன வார்த்தையை முரடன் மறந்து விட்டான்.
குதிரை ஒரு உயரமான மலையை நோக்கி ஓடியது உச்சிக்கே சென்று விட்டது.முரடன் அச்சத்தில் நாம் சாகப்போகிறோம் என்று முடிவு செய்தான். கடைசியாக கடவுளே என்று கடவுளை அழைத்தான். குதிரை சட்டென்று நின்றது.அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட முரடன் அப்பாடா என்றான்.
இப்போது என்ன நடந்திருக்கும்?யோசிக்காமல் பேசி விட்டாலோ அவசரப்பட்டு வார்த்தையை விட்டாலோ அந்த முரடனுக்கு ஏற்ப்பட்ட கதிதான் ஏற்படும்.என்றான் நண்பன்.
சேகரும் இப்போது உண்மைதான் என தன் நண்பனின் அறிவுரையை ஏற்றுக் கொண்டான்.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com


Sunday, September 16, 2012

30-ஆசிரியர் சொன்ன கதை.

 ஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால் பல நண்பர்கள் அவரைப் பார்க்க வருவார்கள்..
ஒரு முறை புலவர் நோய்வாய்ப்பட்டார்.படுக்கையில் இருந்த அவரைப் பார்க்க தினமும் நண்பர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
புலவரின் மகளுக்கு வந்தவர்களை உபசரித்துச் சலித்துவிட்டது.சற்று அலட்சியமாகவே நடந்து கொண்டாள்.
ஒருநாள் அடுத்த கிராமத்திலிருந்து ஒரு புலவர் தன் நண்பனைப் பார்க்க வ்ந்தார்.சிறிது நேரம் இருவரும் அன்புடன் பேசிக்கொண்டிருந்தனர்.படுத்திருக்கும்புலவர் நண்பனை உபசரிக்க எண்ணியவர்  தன் மகளை அழைத்தார்.
"அம்மா, இவருக்குப் பருகப் பால் கொண்டு வா" என்று கூறினார்,
அவள்தான் அலட்சியமாக இருப்பவளாயிற்றே.அவளும் பாலை ஒரு குவளையில் கொணர்ந்து கொடுத்தாள்.
அந்தக் காலத்தில் பாலை ஆடைநீக்குவதற்காக துணி வைத்திருப்பார்கள்.அந்தத் துணியை ஒவ்வொருமுறை வடிகட்டிய பின் துவைத்து உலர்த்தியிருப்பார்கள்.ஆனால் அந்தப் பெண் துணியை அப்படியே வைத்திருந்து உபயோகப் படுத்தினாள்.
அதனால் பாலைக் குடித்த புலவர் சற்றே முகம் சுளித்தார்."ஏன் புலவரே, பால் என்ன கசக்கிறதா?" என்றாள் அந்தப்பெண்.
உடனே புலவர் புன்னகை மாறாமல்"இல்லையம்மா, பாலும் கசக்கவில்லை. துணியும்  கசக்கவில்லை."என்றார்.
தான் செய்த தவறை சிலேடையாகச் சொன்ன புலவர் முன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு மனம் 
 திருந்தினாள் புலவரின் மகள்.
பெரியோரை அலட்சியப் படுத்தினாலும் அவர்கள் அதை நாகரீகமாக வெளிப்படுத்துவார்கள் அவர்களே உயர்ந்தோர்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, September 10, 2012

29.எங்கோ படித்த கதை

.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் தந்தையும் மகனும்.ரயில் பெட்டியில்கூட்டம் அதிகம் இல்லை.அவர்களுக்கு முன்னே  நாகரீகமாக உடையணிந்தவர்கள் இரண்டு பேர் அமர்ந்திருந்தனர்.
வண்டியில் அமர்ந்திருந்த கிராமத்தானின் மகனுக்கு சுமார் இருபது வயதிருக்கும்.நல்ல ஆரோக்யமாகவும் அழகாகவும் இருந்தான்.இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் நட்புடன் சிரித்தான்.அவர்கள் கையிலிருந்த அழகிய சூட்கேசைத் தடவிப் பார்த்தான்.
வண்டி புறப்பட்டவுடன் மகிழ்ச்சியுடன் இங்கும் அங்கும் மாறி மாறி அமர்ந்தான்.
தன் தந்தையிடம் மகிழ்ச்சியுடன் "அப்பா, கீழே மரமெல்லாம் எதிர்ப்பக்கம் ஓடுது" என்றும்,
"அப்பா, அப்பா, டேஷன்லே வண்டி நிக்குதுப்பா.அப்பா எவ்வளோ பூ அங்கே அந்த மரத்துல இருக்குதுப்பா."என்றும் அவன் சிறு குழந்தைபோல் மகிழ்ச்சிப்பெருக்கில் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தான்.
அவன் தந்தையும் அவனுடைய மகிழ்ச்சியில் பங்கேடுத்தவராய் அவனுடன் சேர்ந்து கொண்டார்,
இவர்கள் இருவரின் பேச்சையும் நடத்தையையும் பார்த்து அந்த நாகரீக மனிதர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டனர்."பாவம் இவ்வளவு நன்றாக இருக்கும் பையனுக்கு மூளை வளர்ச்சி இல்லையே.இந்தப பையனை மருத்துவரிடம் காட்டி சரி செய்யாமல் அவனுடன் சேர்ந்து அவன் தந்தையும் அவனுக்குச் சரியாய் நடந்து கொள்கிறாரே."என்று கடுப்போடு பேசிக் கொண்டனர்.
சட்டென்று அந்தப் பையன் "அப்பா, டேஷன்லே அந்த மாமா கையில் ரெண்டு கலர் கோடி வச்சிருக்காரே, அது ஏம்பா?"என்று கேட்க, அந்தப் பெரியவரும் பொறுமையாக,"பச்சைக்கொடி காட்டினால் வண்டி புறப்படும். சிவப்புக் கோடி காட்டினால் வண்டி நின்று விடும்."என்று விளக்கினார்.
இவரது பேச்சைக் கேட்ட பட்டணத்தாருக்குப் பொறுக்கவில்லை.உடனே அவர்,"ஏம்பா, இப்படி இருக்கிற பையனை டாக்டர் கிட்ட  காட்டாமே இருக்கியே."என்று கூறியவர்,"பாவம் படிப்பறிவு இருந்தாத்தானே இதெல்லாம் தெரிய."என்றவாறே பெருமூச்சு விட்டுக் கொண்டார்.
அந்தப் பையனின் தந்தை புன்னகை புரிந்தார்."ஐயா, நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க. என் மவனுக்கு மூளை நல்லா இருக்குதுங்கோ.விவரம் தெரிஞ்ச நாளிலேயிருந்து அவனுக்குப் பார்வையில்லீங்க.போன மாசம்தான் கண் ஆப்பரேஷன் முடிஞ்சுதுங்க.யாரோ உங்களைப் போல ஒரு புண்ணியவான் கண்தானம் செஞ்சதாலே இவனுக்குப் பார்வை வந்திட்டுதுங்க.அதனாலே எல்லாத்தையும் புதுசாப் பார்க்கற சந்தோஷத்தாலே அவன் பேசிட்டானுங்க.நீங்க தப்பா எடுத்துக்காதீங்க."என்றார் புன்னகையோடு.பட்டணத்தாருக்கு  எப்படி இருந்திருக்கும்.கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற மூத்தோர் சொல்  உண்மை.
என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள் அல்லவா!
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Saturday, September 1, 2012

மனம் கவர்ந்த கதை.

மனம் கவர்ந்த கதை.
-ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள்.
கிணறு வெகு தொலைவில் இருந்ததால் ஒரு நீண்ட கொம்பின் இரு முனைகளிலும் குடத்தைக் கட்டி அதைத் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு வருவாள்.சிறிது நாள் கழித்து அந்த இரண்டு குடங்களில் ஒன்று ஒட்டையாகிப் போனது.அதனால் அந்தப் பானையில் பாதி நீர்  
வரும் வழியெங்கும் சிந்திக் கொண்டே வரும். வீட்டிற்கு வந்து பார்த்தால் அந்தக் குடத்தில் பாதி நீர்தான் இருக்கும். 
ஒரு நாள் நீர் நிறைந்த பானையின் அருகில் பாதி நீர் இருந்த பானை அமர்ந்திருந்தது. அதைப் பார்த்த அந்தப் பானை "அய்யோ பாவம் உன்னால் நிறைய நீர் கொண்டு வர முடியவில்லை. என்னைப் பார். நான் அந்த எஜமானிக்கு எவ்வளவு நீர் கொண்டு வருகிறேன்"என்று கர்வமாகப் பேசி ஏளனம் செய்தது.
ஓட்டைப் பானை பதில் சொல்லாமல் குனிந்து கொண்டது.அது சில நாட்கள் வரை பொறுமையாக இருந்தது. ஓட்டையாகி விட்ட போதும்  எஜமானி ஏன் இதையே தூக்கி வருகிறாள் என்று அது திகைத்தபடி இருந்தது. ஒருநாள் மனம் பொறுக்காமல் அந்த ஓட்டைப்பானை கூறியது."அம்மா, என்னால் பானை நிறையத் தண்ணீர் கொண்டு வர முடியவில்லை.அதனால் என்னை உடைத்துவிட்டு வேறு நல்ல பானையை வாங்கிக் கொள்."
அந்தப் பெண் சிரித்தாள்."உன்னால் எனக்கு பயன் குறைவு என்றுதானே நினைக்கிறாய். இதோபார். கிணற்றிலிருந்து வீடு வரும் வரை பூக்களாக இருக்கிறதே அதைப் பார்த்தாயா.உன்னிடமிருந்து சிந்தும் தண்ணீர் விழும் இடத்தில் நான் பூக்களின் விதைகளைப் போட்டேன்.அதுதான் வழியெங்கும் பூக்களாகச் சிரித்து நம்மை மகிழ்விக்கின்றன. அதனால் உன்னால் ஏதும் பயனில்லையென்று வருந்தாதே.என்றாள் அதைக்கேட்டு அந்த ஓட்டைப் பானை நம்மாலும் ஏதோ பயன் இருக்கிறது என்று புரிந்து கொண்டு சிரித்தது நல்லபானையும் அதைப் பார்த்து நட்புடன் சிரித்தது. 
இந்தக் கதையைப் படித்தபோது பயனற்றது என்பது இறைவனின் படைப்பில் ஏதுமில்லை.அதைப் புரிந்து கொண்டு செயல் படுத்தும் பொறுப்புதான் நமக்கு வேண்டும்.என்று ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டேன்.
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com