Wednesday, December 28, 2016

மனம் நிறைந்தது.

கடந்தவாரம்  பாரதியாரின் நினைவு இல்லம் சென்றிருந்தோம்.அங்கு தாங்கும் இடத்திலும் இளைஞர்கள் பெரும் உதவியாக இருந்தனர்.இரண்டு நாட்கள் அருகே இருக்கின்ற பாஞ்சாலங்குறிச்சி,கயத்தாறு, அத்துடன் குற்றாலக் குளியல் என்று சுற்றி பார்த்தோம்.எட்டயபுரத்தில் கவியரங்கம் பேச்சரங்கம் என்று நல்ல முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இரவு ரயிலில் ஏறுவதற்கு காத்திருக்கும் பொது என் பிராயா ணப்பையை ஒரு இளைஞர் சுமந்து வந்து என் இருக்கையில் வைத்துச் சென்றார்.அதேபோல் இறங்கும் இடம் மாம்பலம் வந்தவுடன் முன்பின் தெரியாத ஒருவர் வந்து  பையைத் தூக்கிக்கொண்டு வந்து  நான் கீழே இறங்க உதவிசெய்தார். 
      இறங்கும்போது தூறல் போட்டுக் கொண்டிருந்தது. என்னுடன் இறங்கிய ஒரு தம்பதிகளில் அந்த இளைஞன் என் சுமையையும் தான் எடுத்துக் கொண்டு வந்ததுமல்லாமல் நான் நனையாமல் எனக்கு குடைபிடித்தான்.பதிவரை வந்தவன் நான் வரவழைத்திருந்த டாக்சி திரிவர் அடையாளம் கேட்டுக் கொண்டு அருகே வந்து என் பையை வாங்கி கொண்டு படியேறினார்.என்னை மெதுவாக வரும்படி கூறிவிட்டு சூட்கேஸை காரில் வைத்துவிட்டு டிக்கியிலிருந்து குடையை எடுத்துக் கொண்டு வந்து நான் நனையாமல் கார்வரை அழைத்துச் சென்று உள்ளே அமரவைத்தான். அப்புறம்தான் மெதுவாக எப்படிப் போகவேண்டும் அம்மா என்று கேட்டான் அந்த டாக்சி டிரைவர்.
         அன்று எனக்கு ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களும் கருணைமனமும் கடமை உணர்வும் இருப்பவர்களாகத் தோன்றினார்கள்.இதேபோல் எல்லாஇடங்களிலும் எல்லாரிடமும் எல்லா இளைஞர்களும் இருக்கவேண்டும் இறைவா என வேண்டிக் கொண்டே வீட்டில் வந்து இறங்கினேன்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.

Monday, December 19, 2016

படித்த கதை: அச்சம் தவிர்

ஒரு நாள் அரசர் அக்பர் சபையில்  அமர்ந்திருந்தார்.அப்போது ஒரு மனிதன் அங்குவந்தான் . குண்டோதரனைப் போல் இருந்த அவனைப் பார்த்து சபையோர் அனைவரும் .சிரித்து விட்டனர்.அதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த அந்த குண்டன் சபையோரைப் பார்த்துவிட்டு 
மன்னனிடம் கூறினான். " மஹாராஜா என் உடம்பை இளைக்கச் செய்ய உங்களால் முடியுமா? அப்படி முடிந்தால் என் காலம் முழுவதும் உங்களுக்கு அடிமையாக  இருப்பேன். இல்லையேல் உங்கள் நாட்டில் அரசனுக்குரிய பதவியை எனக்கு நீங்கள் தரவேண்டும்" என்றான்.

அக்பர் திகைத்தார்.இவனை ஒரு மாதத்திற்குள் எப்படி இளைக்கச் செய்வது ? மெதுவாகத் திரும்பி அருகே அமர்ந்திருந்த பீர்பாலைப் பார்த்தார்.அவரும் மெதுவாகத் தலையசைத்து சம்மதிக்கச் சொல்லி சைகை காண்பித்தார்.அக்பரும் பொறுப்பை பீர்பாலிடம் ஒப்படைத்துவிட்ட நிம்மதியில்   குண்டனிடம் 
"சரி உன்விருப்பப்படியே ஆகட்டும்"என்றார்.
"ஒரு விண்ணப்பம். எனக்கு வயிறார சாப்பாடும் போடவேண்டும் பட்டினி போட்டுக்  கொல்லக் கூடாது."
.ஒரு மாதம்  சென்றது. அன்று குண்டோதரனை சபைக்கு அழைத்து வரப்  போகிறார் பீர்பால் என்பதை அறிந்து மக்கள் ஆர்வத்துடன் கூடிஇருந்தனர் 
குண்டனை, தவறு அவன் இப்போது இளைத்து பாதி உடம்பாகியிருந்தான்.
அக்பர் ஆச்சரியத்துடன் குண்டனைப் பார்த்தார்.
"உனக்கு உணவு தரவில்லையா?அல்லது மருந்து ஏதேனும் பீர்பால் கொடுத்தாரா ?"
பதில் சொல்லாது தலை குனிந்து தோல்வியடைந்த முகத்தோடு நின்றான் குண்டன்.
"பீர்பால் இது எப்படி நடந்தது?"
"ஒன்றுமில்லை மஹாராஜா.தினமும் இரவு இவர் உணவு உண்டபின் இவர் படுக்கையை சிங்கத்தின் கூண்டுக்கு அருகே போட்டிருந்தேன்.இவரிடம், "சிங்கக் கூண்டின்  தாழ்ப்பாள் சரியில்லை கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று சொல்லி வைத்தேன்.அதுதான் இப்படி வேலை செய்திருக்கிறது.
உணவை விட நிம்மதியான தூக்கம் வேண்டும் அத்துடன் மனதில் பயஉணர்வு இவரது உணவை உடம்பில் ஒட்டாமல் செய்து விட்டது.அதுதான் இளைத்துவிட்டார்."
இதைக் கேட்ட மக்கள் பீர்பாலிடமிருந்து நல்ல பாடத்தை நாமும் கற்றோம் என்று மகிழ்ச்சியுடன் கூறிச் சென்றனர்.நாமும் அச்சமில்லாமல் வாழப் பழக வேண்டும் அதையே பாரதியாரும் அச்சம் தவிர என்று சொல்லியிருக்கிறாரன்றோ?


Rukmani Seshasayee

Sunday, December 4, 2016

கேட்ட கதை ; ஆசையும் பேராசையும்.

ஒரு அறிஞரிடம் ஒருவர் ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வேறுபாடு?என்று கேட்டார்.ஆசை என்றால் என்ன? பேராசை என்றால் என்ன?என்று கேட்டார்.
அதற்கு அந்த ஞானி ஒரு கதை கூறினார். 
ஒரு பணக்காரர் ஒரு நாய் வளர்த்து வந்தார்.அதை தங்கள் வீட்டுக் காம்பவுண்டுக்குள்ளேயே சுற்றிவரும்படி வாயிற் கதவை அடைத்தே வைத்திருந்தார்.ஆனாலும் அந்த நாய் கதவில்  தெரிந்த இடுக்கின் வழியே வெளியே உலவும் தெரு நாயுடன் பேசிக் கொள்ளும்.
அப்படிப் பேசும் பொது ஒரு நாள் தெருநாய் சொல்லிற்று,"தினமும் இவர்கள் போடும் ரொட்டித்துண்டையே தின்கிறாயே சலிக்கவில்லையா.என்னைப் பார் தினமும் எத்தனை குப்பைத் தொட்டிகளில் விதவிதமான உணவைச் சாப்பிடுகிறேன்.உனக்கு அப்படி விதவிதமாகச் சாப்பிடும் ஆசை இல்லையா?"என்றது.
அதற்கு அந்தப் பணக்கார நாய்"எனக்கும் உன்னைப் போலவே   விதவிதமான உணவு சாப்பிட ஆசைதான்.அதில் ஒரு சிக்கல் இருக்கிறது."என்றது.
"அப்படி என்ன பெரிய சிக்கல் உனக்கு?"
இந்த வீட்டு எஜமான் தன  பெண்ணுக்கு கல்யாணம் செய்யப் பையன்களின் புகைப்படத்தைக் காட்டினார்.அவர் பெண்ணோ யாரையும் பிடிக்கவில்லையென்று சொல்லி  அடுத்த தெரு நாராயணனைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடிக்கிறாள்.

"அதனால் உனக்கென்ன?"

"அவள் அப்பாவோ மாட்டேன் என்கிறார்.இவளோ பிடிவாதமாக இருக்கிறாள் இன்று எஜமான் மகளிடம்  கோபமாக "இந்த நாய்க்கு உன்னைக் கட்டிவைத்தாலும் வைப்பேன் ஆனால் அந்த 
 நாராயணனுக்கு கட்டித் தரமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.  
அதுதான் காத்திருக்கிறேன்பெணமிகவும்அழகாயிருப்பாள்."என்றது 

இப்போது புரிந்ததா?அந்தப் பெண் நாராயணனைக் கல்யாணம் செய்ய நினைத்தது ஆசை ஆனால் நாய் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்யநினைத்தது பேராசை."என்று முடித்தார்.

ஆசைப்படலாம் ஆனால் பேராசைப் படுவது தவறு என்று நமக்கெல்லாம் அறிவுறுத்தியுள்ளார்  அந்த ஞானி. 

  
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Sunday, October 16, 2016

உயர்ந்த உள்ளம்

    .ஒரு சிற்றூர் அந்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் விவசாயம் செய்து பிழைப்பவர்கள். வானம் பார்த்த பூமியாதலால் எப்போது  மழை வரும் என்று வானம் பார்த்துக்  காத்திருந்து பின் உழுவதற்குச்   செல்வார்கள்.ஒருமுறை அந்த ஊருக்கு ஒரு .முனிவர் வந்தார். அனைவரும் வானம்  பார்த்து அமர்ந்து இருந்ததால் யாரும்  அவரைக் கவனிக்க வில்லை.அதனால் கோபம் கொண்ட முனிவர் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு  இவ்வூரில் மழை பெய்யாது என்று சாபம் கொடுத்துச் சென்று விட்டார்.
இதை  அறிந்த பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணர்  முனிவர் கொடுத்த சாபத்திற்கு தான் அடிபணியவேண்டும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு மழை பொழியாதிருக்க எண்ணினார்.ஸ்ரீ கிருஷ்ணர் கையிலிருக்கும் பாஞ்சசன்னியம் என்னும் சங்கு முழங்கினால்தான் உலகில் மழை பொழியும். ஆனால் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு  மழை பொழியாது என்னும்போது இதை ஏன் கையில் வைத்திருக்க வேண்டும் என எண்ணிய கிருஷ்ணர் சங்கினைக் கீழே  வைத்து விட்டு   ஓய்வெடுக்கத் தொடங்கினார்.                       

அனைத்து மக்களும் உழவுக்குச் செல்லாமல் வாளாது இருக்கும்போது ஒரே ஒரு இளைஞன் மட்டும்  வழக்கம்போலத் தன்  தோளில் கலப்பையைச் சுமந்து கொண்டு  வயலை நோக்கிச் சென்றான் .அவனைப் பார்த்து ஊர்மக்கள்
 "ஏனப்பா, அதுதான் மழையே .இல்லையே.நீ எதை நம்பி உழுவதற்குச் செல்கிறாய்?வேறு தொழில் பார்த்துப் பிழைப்பைப் பார்."என்றனர்.
அதற்கு அந்தஇளைஞன் "பெரியவர்களே, ஐம்பது வருடம் உழாமல் இருந்துவிட்டால் எனக்கு உழவே மறந்து விடும்.என் மகனுக்கும் உழவென்பதே தெரியாது.அதனால் தினமும் உழுது என் தொழிலை மறக்காமல் இருக்கிறேன் "என்றான் 
வைகுண்டத்தில்  ஓய்வாகப் படுத்திருந்த ஸ்ரீகிருஷ்ணர் எழுந்து அமர்ந்தார். ஒருவேளை ஐம்பது ஆண்டுகள் என்   சங்கம் முழங்காமல்                             இருந்தால் நானும் இதைப் பயன்படுத்த மறந்து விடுவேனோ என எண்ணியவர், தன சங்கைக் கையில் எடுத்து ஊதிப்பார்த்தார். பாஞ்சசன்னிய முழக்கம் கேட்டவுடன் மேகங்கள் திரண்டு சோவென மழை பொழியவே மக்கள் அனைவரும் கலப்பையைக் கையில் ஏந்தி வயலை நோக்கி நடந்தனர் உழுவதற்காக.
நம் தொழிலை மறக்காமல் இருந்தால் , கடமையில் தவறாது இருந்தால் இறைவனே நினைத்தாலும் நம்மைத் தோற்கடிக்க முடியாது.எனவே கடமையைச்  செய்வோம் களிப்புடன்  வாழ்வோம்.

  
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Tuesday, July 19, 2016

உண்மையான பக்தி.

ஒருமுறை நாரதர் தான்தான் ஸ்ரீமந்நாராயணனிடம் உண்மையான பக்தி கொண்டவன் என்ற கர்வம் கொண்டிருந்தார்.அதனால் நாராயணனிடம் சென்று நான்தான் அதிக பக்தி கொண்டவன் என்று  கூறவே அவரும் சிரித்தவாறே,"
"நாரதா, பூலோகத்தில் உள்ள சிறு கிராமம் இருக்கிறதே அங்கு பார்". என ஒரு விவசாயியின் குடிசையைக் காட்டினார். 
"ஒரு நாள் முழுவதும் அவனைப்பார். அதன்பிறகு வந்து சொல்"
                  நாரதரும் பூலோகம் வந்து அந்த விவசாயியைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.இரவு வந்தது.விவசாயி தன்  கடமைகளை முடித்துவிட்டு  திண்ணையில் வந்து படுக்கும் பாயில் அமர்ந்தான்.ஒரு நிமிடம் கண்களை மூடி நாராயண ஸ்மரணை செய்தான்."பகவானே நாராயணா இன்று நல்லபடியாய் வைத்திருந்ததற்கு நன்றியப்பா. நாளை எழுவது உன்கையில்.
எழுந்தால்  இன்றுபோல் இருக்க அருள் செய்." 
அவன் வேண்டிக் கொண்டு படுத்து உறங்கிப்போனான்.நாரதரும் வைகுண்டம் நோக்கிப் போனார்."நாராயணா அவன் ஒரேயொரு முறைதான் ஒருநாளில் உன்னை ஜெபித்தான்.ஆனால் நானோ  நாள் முழுவதும் மட்டுமல்லாது எப்போதும் உன்னையே ஜெபிக்கிறேன்.என்னைவிட அந்த விவசாயி உயர்ந்தவனா சுவாமி?"
என்று கேட்ட நாரதரிடம் நாராயணன் ஒரு கிண்ணத்தில் வழிய வழிய எண்ணையைக் கொடுத்தார். "நாரதா, இந்த எண்ணை  ஒரு சொட்டுக் கூட கீழே விழாமல் இந்த பூலோகத்தைச் சுற்றிவா."என்று சொல்லிஎண்ணெய் நிரம்பிய  ஒரு கிண்ணத்தைக் கொடுத்தார்.
மிகவும் அலட்சியத்துடன் அதை வாங்கி கொண்ட நாரதர் இது என்ன பிரமாதம் என்று சொல்லி கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினார் பூலோகம் சுற்ற.
மிகவும் கவனத்துடன் அவர் சுற்றிவரும் வழியில் இந்திரன் வந்து நாரதா என அழைக்க அதைக் கவனிக்காமல் கையால் நகரு என்று சைகை காட்டி மேலே சென்றார். சற்று தூரம் கடந்தபின் பிரும்மதேவர் மகனே என்று அழைக்க சற்று நகரும் என்றபடியே மேலே சென்றார்.
இன்னும் சற்று நேரம் கடந்தபின் நாராயணர் எதிரில் வர அவரையும் கவனிக்காது எண்ணை க் கிண்ணத்தையே பார்த்தபடி சென்று பூலோகம் சுற்றி முடித்தார்.ஒரு சொட்டுக் கூட சிந்தாமல் எண்ணையைக் கொண்டுவந்துவிட்ட பெருமையில் நாராயணரைப் பார்த்துச் சிரித்தபடியே, 
"நாராயணா, இதோ எண்ணெய் சிந்தாமல் கொண்டுவந்து விட்டேன்.இப்போது சொல்லுங்கள்."
என்றார்.
அப்போது நாராயணர் சிரித்தபடியே, "நாரதா, பூலோகம் சுற்றும்போது என்னை எத்தனை முறை நினைத்தாய்? உன் எதிரே யார் யார் வந்தார்கள் என்பதாவது தெரிந்ததா உனக்கு?"என்றவரைத் திகைப்புடன் பார்த்தார் நாரதர்.
"உன் முன்னே இந்திரனும் பிரும்மதேவரும் வந்தனர்.ஏன் , நானே ஒருமுறை உன்னை அழைத்து எதிரே வந்தேன்.ஒரு சிறு காரியத்தைச் செய்யும் உன்னால் என்னை நினைக்கக்கூட முடியவில்லை.ஆனால் பெரிய குடும்பத்தைக் கட்டிக்காக்கும் அந்த விவசாயியின் துன்பம் எத்தகையது தெரியுமா?அத்தனை சுமையையும் தாங்கும் அவன் என்னை மனதார ஒருமுறை நினைக்கிறான் என்றால்..."என்றவர்முன் தலைகுனிந்து அமைதியாக நின்றார் நாரதர்.
 அப்போது அவரைப் புன்னகையுடன் பார்த்த நாராயணர் "பூலோகவாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள் அத்தனையும் சகித்து என்னையும் மறக்காமல் ஒருமுறை மனதார நினைக்கும் அந்த விவசாயியின் பக்தியைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் நாரதா?"என்றார்.
"ஒப்புக்கொள்கிறேன்.என்னைவிட உன்னிடம் பக்தி செலுத்தும் மனிதர்கள் பூவுலகில் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன் .என் கர்வம் அழிந்தது. நாராயணா, என்னை மன்னித்தருளுங்கள்." என்று வேண்டிக்கொண்டவரை ஆசிவழங்கி அருள்புரிந்தார் நாராயணர்.  
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Saturday, July 9, 2016

இறைவனை உணர்ந்தவன்.

ஒரு கிராமம். அங்கு இருக்கும் கோவிலுக்கு கீதையின் பொருளை உணர்த்த ஒரு உபன்யாசகர் வந்தார்.இரவு ஆறுமணி முதல் எட்டு மணிவரை ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் பொருள் சொல்லி வந்தார்.நான்கு நாட்கள் கதை சொல்வதாக முடிவு செய்திருந்தார்.
முதல்நாள்.கிராமத்து மக்கள் கூடி அமர்ந்தனர். அங்கு தலையில் முண்டாசும் கையில் தடியுமாக ஒரு வயதான விவசாயியும் வந்து கதை கேட்க அமர்ந்தான்.
இரண்டாம் நாள் பாதிப் பேர்தான் வந்திருந்தனர்.அந்த விவசாயியும் வழக்கம்போல வந்து அவனது இடத்தில் அமர்ந்தான்.கடைசி வரை இருந்து விட்டுச் சென்றான்.
கடைசி நாளன்று வெகு சிலரே வந்திருந்தனர். அனைவரும் சென்றபின் கண்ணில் நீர் தளும்ப அமர்ந்திருந்த விவசாயியிடம் உபன்யாசகர் கேட்டார்.
"ஏனப்பா, நான் சொல்லும் உபன்யாசத்தைப் பலர் புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. ஆனால் நீ மட்டும் கண்ணால் நீர் விட்டு ரசித்தாயே என்ன புரிந்து கொண்டாய்?"
கண்களைத் துடைத்துக் கொண்ட அந்த விவசாயி சொன்னான்.
"அய்யா, நீங்க சொன்னது எனக்கு ஒண்ணும்  புரியல.ஆனா தினமும் நீங்க கதை சொல்லி முடிக்கும் வரை அந்த க்ருஷ்ண பரமாத்மா கையில் கடிவாளத்தைப் புடிச்சுக்கிட்டு தலையைத் திருப்பிக்கிட்டே பேசிக்கிட்டு  இருக்கிறாரே.பாவம் கழுத்தை அவருக்கு எவ்வளவு வலிக்கும்னு நினைச்சுக்கிட்டேன்.அழுகையா வருது சாமி"
உபன்யாசகர் திடுக்கிட்டார்.நாமெல்லாம் சந்தேகத்தோடு இறைவனைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்க இந்த ஒன்றும் அறியாத விவசாயி எத்தனை ஆத்மார்த்தமாக இறைவனோடு ஒன்றியிருக்கிறான் கீதோபதேசப் படத்தில் இருக்கும் கிருஷ்ணனை உண்மையான க்ருஷ்ணனாகவே எண்ணி அவனுக்காக வருந்தும் இவனன்றோ உண்மையான பக்தன். 
கீதையின் உண்மைப் பொருளை இவனன்றோ அறிந்தவன்" என்று எண்ணியவர் தனக்கு அத்தகைய மனம் இல்லையே. இனி உண்மையான பக்தியுடன் இறைவனைப் பற்றிச் சொல்லவேண்டும் என முடிவு செய்து கொண்டார்.
 
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Tuesday, April 5, 2016

puriyaadha pudhir

    புரியாத புதிர்.

குழந்தைகளின் அழுகை என்று நினைக்கும் போதே தெனாலிராமனின் கதைதான் நினைவுக்கு வரும்.தானே குழந்தையாக மாறி ராயரை அந்தக் குழந்தையை சமாதானம் செய்யச் சொன்ன கதை அனைவரும் அறிந்ததே.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் என் மகன் பத்துமாதக் குழந்தையாக இருந்தான்.ஒருநாள் இரவு சுமார் எட்டு மணி இருக்கும் நங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.திடீரென படுத்திருந்த குழந்தை அழ ஆரம்பித்தான்.நான் வேகமாக எழுந்து பால் கொடுத்தேன். ஆனாலும் குடிக்காமல் அழுதுகொண்டே இருந்தான்.என்ன செய்வது எனத் தெரியாமல் குழந்தையைத் தோளில் போட்டுத் தூங்க வைக்க முயன்றேன்.
ஆனாலும் அழுகை அதிகரித்து குழந்தையின் உடம்பு வியர்வையில் நனைந்து விட்டது.மணி பதினொன்றைத் தாண்டிவிடவே மூன்று மணி நேரமாக அழுவதால் ஏதோ பெரிய பாதிப்பு எனத் தோன்றவே குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவரின் வீட்டுக்குச் சென்றோம் பாதி இரவு டாக்டரின்
வீட்டுக் கதவைத் தட்டி அவரிடம் அழும் குழந்தையைக் காட்டினோம். எனக்கு பயத்திலும் அவ்வளவு நேரம் அழும் குழந்தையைசமாதானப் படுத்தியதால் வந்த களைப்பினாலும் அழுகையே வந்து விட்டது.
 1. அந்தமருத்துவர் குழந்தையை கீழே படுக்கவைத்து பரிசோதித்தார்.பின் ''குழந்தைக்குப் பசியாக இருக்குமோ என்னவோ பால் கொடுத்தீர்களா?''என்றபோது நான் அநேகமாக அழவே தொடங்கிவிட்டேன்.இன்னும் நன்றாக குழந்தையை ஆராய்ந்த பின் குழந்''தைக்கு எந்தத் தொந்தரவும் இருப்பதாகத் தெரியவில்லையே.தொட்டிலில் கிடத்தி ஆட்டிப் பாருங்கள்''என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார். நாங்கள் மீண்டும் வீடு வந்து சேர்ந்தோம் நான் குலதெய்வத்துக்கு வேண்டிக்கொண்டு ரூபாயை மஞ்சள் துணியில் முடிந்து வைத்தேன்.அழும் குழந்தையை என் மடியில் போட்டுத் தட்டிக் கொண்டே அமர்ந்தேன்.அவன் பிட்டப் பகுதியில் சிறு சிறு வேர்க்குரு போல் தோன்றியதைப் பார்த்து திடுக்கிட்டேன். அந்த பாதிராத்திரியில் யாரிடம் சென்று மருந்து கேட்பது. ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு வீட்டில் இருந்த வெள்ளைப் பூண்டு ஒன்றை எடுத்து நசுக்கி அந்த பகுதியில் வைத்துத் தேய்த்தேன்.அடுத்த வினாடி மகுடிக்குக் கட்டுப் பட்ட நாகம்போல் அமைதியாக இருந்ததோடு ஒரே நிமிஷத்தில் தூங்கியும் போனான். அப்போதுதான் தெரிந்தது ஏதோ பூச்சி அவன் பின் பகுதியில் கடித்துள்ளது என்ற செய்தி  
 •          வாய் பேசத் தெரியாத குழந்தைக்கு இப்படி ஏதேனும் கஷ்டம் வந்தால் அது அவர்களை விட நமக்குத்தான் துன்பம் அதிகம் மனஉளைச்சல் என்பது எத்துனை பெரிய கஷ்டம்?
  1. இதைப் படிப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்றுதான் இதை இங்கு தெரிவித்துள்ளேன்.


   ருக்மணி சேஷசாயி 
   Rukmani Seshasayee
   ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

   Monday, February 22, 2016

   மழலையின் மொழி.


   பச்சிளம் குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்வது மிகவும் கடினம்.பேசத் தெரியாத குழந்தைகள் தங்கள் உணர்வுகளை அழுகை மூலம் மட்டுமே நமக்கு அறிவிப்பார்கள். சில தாய்மார்கள் குழந்தை என் அழுகிறது என்பது புரியாமல் பிடிவாதம் என்று சொல்லி (அதுவும் பெருமையோடு வேறு சொல்லிக்கொள்வார்கள்)
   அந்தக் குழந்தையைக் கடிந்து கொள்வதும் அடிப்பதும் பார்க்கவே பரிதாபமாகவும் மனதுக்குக் கஷ்டமாகவும் இருக்கும்.

   இது போன்ற நிகழ்ச்சிக்கு ஒரு உதாரணத்தைச் சொல்லவே இந்த முன்னுரை. என் பேத்தி பிறந்து நான்கு மாதங்களே ஆகியிருந்தன. மாலை சுமார் ஏழுமணிக்கு சற்றே சிணுங்க ஆரம்பித்தவள் நேரம் செல்லச் செல்ல பெரிதாக அழ ஆரம்பித்தாள் பால் குடுத்தாலும் விளையாட்டுக் காட்டியும் அழுகை நிற்கவில்லை. செய்வதறியாமல் இரவு சுமார் ஒன்பது மணிக்கு மருத்துவர் இல்லம் சென்று காட்டினேன். அவரும் பார்த்துவிட்டு ஒரு பிரச்சினையும் இல்லையே தூக்கமோ என்னமோ. தூங்கப் பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

   வீட்டுக்கு வந்த நான் குழந்தையை கீழே கிடத்தி அழுததனால் வியர்வையில் நனைந்திருந்த அவளது கவுனைக் கழற்றி மின்விசிறியைப் போட்டவுடன் களுக்கென்று நகைத்தாள் அனைவரும் கொல்லென்று சிரித்தோம்.
   அடக் கடவுளே காற்றுப் புகாத சில்க்கினால் ஆன சட்டைதான் அவள் அழுகைக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டோம்.

   எனவே குழந்தை அழுதால்  எறும்பு கடித்துள்ளதா,ஏதேனும் உபாதையா,பசியா அல்லது தூக்கமா எனப் புரிந்து கொண்டு அதைத் தீர்ப்பதே பெற்றோரின் கடமை.

   குழந்தையின் மொழியைப் புரிந்து கொள்ளுங்கள்.
   --
   ருக்மணி சேஷசாயி 
   Rukmani Seshasayee
   ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

   மழலையின் மொழி.


   பச்சிளம் குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்வது மிகவும் கடினம்.பேசத் தெரியாத குழந்தைகள் தங்கள் உணர்வுகளை அழுகை மூலம் மட்டுமே நமக்கு அறிவிப்பார்கள். சில தாய்மார்கள் குழந்தை என் அழுகிறது என்பது புரியாமல் பிடிவாதம் என்று சொல்லி (அதுவும் பெருமையோடு வேறு சொல்லிக்கொள்வார்கள்)
   அந்தக் குழந்தையைக் கடிந்து கொள்வதும் அடிப்பதும் பார்க்கவே பரிதாபமாகவும் மனதுக்குக் கஷ்டமாகவும் இருக்கும்.

   இது போன்ற நிகழ்ச்சிக்கு ஒரு உதாரணத்தைச் சொல்லவே இந்த முன்னுரை. என் பேத்தி பிறந்து நான்கு மாதங்களே ஆகியிருந்தன. மாலை சுமார் ஏழுமணிக்கு சற்றே சிணுங்க ஆரம்பித்தவள் நேரம் செல்லச் செல்ல பெரிதாக அழ ஆரம்பித்தாள் பால் குடுத்தாலும் விளையாட்டுக் காட்டியும் அழுகை நிற்கவில்லை. செய்வதறியாமல் இரவு சுமார் ஒன்பது மணிக்கு மருத்துவர் இல்லம் சென்று காட்டினேன். அவரும் பார்த்துவிட்டு ஒரு பிரச்சினையும் இல்லையே தூக்கமோ என்னமோ. தொங்கப் பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

   வீட்டுக்கு வந்த நான் குழந்தையை கீழே கிடத்தி அழுதோதனால் வியர்வையில் நனைந்திருந்த அவளது கவுனைக் கழற்றி மின்விசிறியைப் போட்டவுடன் களுக்கென்று நகைத்தாள் அனைவரும் கொல்லென்று சிரித்தோம். அடக் கடவுளே காற்றுப்புகாத  சில்க்கினாலான சட்டைதான் அவள் அழுகைக்குக் காரணம் எனப் புரிந்து கொண்டோம். எனவே குழந்தை அழுதால் எறும்புகடித்துள்ளதா, உடலில் ஏதேனும் உபாதையா பசியா தூக்கமா எனப் புரிந்து கொண்டு அதைத் தீர்ப்பதே பெற்றோர்களின் கடமை. குழந்தையின் மொழியைப் புரிந்து கொள்ளுங்கள்.
   --
   ருக்மணி சேஷசாயி 
   Rukmani Seshasayee
   ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com