Sunday, May 27, 2012

edhilum gavanam thevai.

எதிலும் கவனம் தேவை .
  சுமார் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் மகள் எழுதியிருந்த கடிதத்திலிருந்து முக்கியமாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
சென்னையிலிருந்து புறப்பட்ட நான் இரண்டு குழந்தைகளுடன் நியூயார்க் நகரை வந்து அடைந்தேன்.விமானம் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தது.விமான நிலையத்திற்கு என் கணவர் தன் நண்பருடன் வந்திருந்தார்.எங்கள் பெட்டிகளை  தன் நண்பரின் உதவியுடன் எடுத்துக் கொண்டு வ்ந்தார். நாங்கள் அனைவரும் விமான நிலையத்தை விட்டு வெளியே கார் நிற்கும் இடத்திற்கு வந்தோம்.என் கணவரின் கையில் அவரது சிறிய ஆபீஸ் சூட்கேஸ் இருந்தது.அதில்தான் அவர் தனது விசா பாஸ்போர்ட் பெர்மிட் முதலியவற்றை வைத்திருந்தார். 
எங்கள் பெட்டிகளை காரின் பின்பக்கம் வைப்பதற்காக கதவைத் திறந்தவர் தன் கையிலுள்ள சூட்கேஸைக் கீழே வைத்துவிட்டு என் பெட்டியைத் தூக்கினார்.அப்போது பார்த்துக் கொண்டே இருந்தானோ என்னவோ ஒரு கருப்பு அமெரிக்கத் திருடன் அந்த சூட்கேசைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.உடனிருந்த நண்பர் அதைக் கவனித்துவிட்டார்.ஏய்,திருடன், திருடன்.... என்று கத்திக் கொண்டே அவன் பின்னே வேகமாக ஓடினார்.சற்றுத் தொலைவு ஓடியதும் தன்னைப் பின்தொடர்வது போலிஸ் என நினைத்தானோ என்னவோ தூக்கிவந்த பெட்டியை எறிந்துவிட்டு ஓடிவிட்டான்.அதைப் பொறுக்கிக் கொண்டு வந்த நண்பர் மூச்சு வாங்க வந்து நின்றார்.என் கணவர் அந்த நண்பரிடம் நன்றி கூறியதுடன் என் எதிர்காலமே காப்பாற்றப் பட்டது.இந்தப் பெட்டியில்தான் என் அத்தனை முக்கிய காகிதங்களும் உள்ளன.இவை இல்லையென்றால் நான் மிகவும் கஷ்டப்பட்டிருப்பேன்.என்றார்.அத்துடன் அந்த நண்பர் நல்ல வேளையப்பா இன்று நான் நீலக்கலர் ஷர்ட் போட்டுவந்தேன். அதனால் திருடன் என்னை போலீஸ் என நினைத்து பெட்டியைக் கீழே போட்டுவிட்டான் போலும் என்றார். ஒருவேளை அவன் என்னை சுட்டிருந்தால் ...நினைக்கவே பயமாக இருக்கிறது என்றபோது நாங்கள் நடந்த நிகழ்ச்சியை நல்லபடியாக அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தினோம்.இனி எந்தப் பொருளையும் கவனமாகக் கையாள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டோம்.
இந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன் உண்மையிலேயே நானும் கடவுளுக்கு நானும் நன்றி செலுத்தினேன்.இதைப் படிப்பவர்களும் கையிலிருக்கும் பொருளை கீழே வைக்கும் போது கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Tuesday, May 22, 2012

19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.

ஒரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும்  அந்தப் பெண் என்னிடம்  வருவாள். நானும் தகக ஆலோசனை சொல்வேன் சமயத்தில் உதவியும் செய்வதுண்டு.ஆறு மாதங்கள் கழித்து ஒரு பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கிச் சென்றார். அந்த இரண்டு நாட்களும் அந்தப் பெண் என்னைப் பார்க்க வரவில்லை..
மூன்றாவது நாள் அவள் என்னைப் பார்க்க வந்தாள்.வந்தவள் சற்றே சிந்தனையுடன் காட்சியளித்தாள்.
காரணம் கேட்டேன். வந்தவர் அவள் மாமனார்.தன் மகளுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது என்ற செய்தியோடு பணத்துக்கும் முடிந்தவரை ஏற்பாடு செய் எனக் கூறியிருக்கிறார்.அதுதான் இவள் கவலை.பணத்துக்கு எங்கே போவது?
நானும் சமாதானமாக ஏதோ கல்யாணம் என்றால் உதவி செய்யத்தானே வேண்டும்?முடிந்தவரை முயற்சித்துப் பார்.என்றேன்.அன்று வீடு திரும்பியவள் மூன்று நாட்கள் வரை வரவில்லை.
அதன்பின் ஒரு நாள் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் என்னைத் தேடி வந்தாள்.அழுதிருக்கிறாள் எனப் புரிந்துகொண்ட நான் அவள் குடிக்க காப்பி கலந்து கொடுத்து அவளை சமாதானப் படுத்தினேன்.
அவள் கணவன் அவளின் நகைகளைத் தன் தங்கையின் கல்யாண சீராகக்  கொடுக்கும்படி வற்புறுத்துகிறானாம். அதனால் மூன்று நாட்களாக வீட்டில் கணவன் மனைவிக்கிடையே பிணக்கு.கணவன் சாப்பிடுவதில்லை பேசுவதில்லை என அழத் தொடங்கினாள்.
.அவளிடம் ஒரு பெண்ணுக்கு அதிலும் ஒரு வீட்டின் மூத்த மருமகளாகி வந்தவளின் பொறுப்பையும் கடமையையும் எடுத்து விளக்கினேன்.
அவளோ,"தங்கையின் கல்யாணத்திற்கு இவர் கடன் வாங்கிக் கொடுக்கட்டும். என்னைக் கேட்கவேண்டுமா?"என்றாள்.
நான் சிரித்தேன் அடிபயித்தியமே, நீ கொடுத்தால் என்ன உன் கணவர் கொடுத்தால் என்ன?
உன் கணவர் கொடுப்பதைவிட நீ கொடுப்பது உனக்கு ரெட்டை லாபம்."என்றேன்.
புரியாமல் விழித்து எப்படி என்பது போல் என்னைப் பார்த்தாள்.
உன் கணவர் கொடுத்தால் ஒரு மகன் செய்யவேண்டிய கடமை என்று சாதாரணமாகப் போகும்.ஆனால் நீ கொடுத்தால் நாத்தனாருக்காக மாமனார் சுமையைக் குறைக்க மருமகள் கொடுத்தாள் என்ற பெருமை உன் காலத்துக்கும் இருக்கும்.உன் பெருந்தன்மையைப் பார்த்து உன் கணவனே உனக்கு விரைவில் நகை நீ கேளாமலேயே செய்து போடுவார்.
உன்னிடம் இருக்கும் பதினைந்து பவுனில் ஐந்து பவுனைக் கொடுத்துப் பார். உன் மாமியார் வீட்டில் உனக்கு எத்தனை மதிப்புக் கூடுகிறது பார் உதவி செய்வது யாருக்கு உன்வீட்டாருக்குத்தானே என்றபோது அவள் முகத்தில் தெளிவு பிறந்தது.அன்று மாலையிலேயே கணவருடன் மகிழ்ச்சியாக கடற்கரைக்குப்  புறப்பட்டாள்
ஒரு மாதம் கழித்து ஊருக்குச் சென்று வந்தவள் நேராக என்னிடம் வந்தாள். முகம் கொள்ளாத மகிழ்ச்சியாகத் தெரிந்தாள்.
அவளைப் புன்னகையுடன் வரவேற்றேன்.
"அம்மா, நீங்க சொன்னது நூத்துக்கு நூறு பலிச்சிடுச்சு.நான் நகையைக் கழட்டி சந்தோஷமா என் மாமனார் கிட்டே கொடுத்தப்போ அவர் முகத்திலே தெரிஞ்ச மகிழ்ச்சியும் நிம்மதியும்  அதைச் சொல்லவே வார்த்தைகள் இல்லேம்மா.அப்புறம் எனக்கு என் மாமியார் வீட்டிலே என்ன ஒரு மதிப்பு மரியாதை. கல்யாணப் பெண் என் நாத்தனார் எனக்குச்  செய்த உபசரிப்பும் காட்டின மரியாதையும் எவ்வளவுங்கறீங்க. இந்தப் பெருமையெல்லாம் உங்க ஆலோசனையைக் கேட்டு நடந்ததாலேதான் கெடைச்சுது.
வாழ்க்கையிலே உதவின்னு வந்தா செய்யத் தயங்காதே அந்த உதவி உன்னை ரொம்ப உயர்த்தும் என்றேன். சுமார் முப்பது வருடங்கள் கழித்து அவளை ஒருமுறை உறவினர் வீடு சென்று திரும்பும் போது பார்த்தேன்.உடம்பு கொள்ளாத நகையும் பட்டுப் புடவையுமாக காட்சியளித்தாள்.
என்னைப் பார்த்தவுடன் ஓடிவந்து கட்டிக் கொண்டாள்.சொந்த வீடு கட்டியிருப்பதாகவும் மகன் இஞ்சினீயர் ஆக பணிபுரிவதாகவும் மகளுக்குத் திருமணமாகி துபாயில் இருப்பதாகவும் சொன்னபோது நான் மகிழ்ந்தேன்.
தன நாத்தனார் அமேரிக்கா சென்றுவிட்டதாகவும் வாரம் தவறாமல் போன் பேசுவதாகவும் தன கணவன் தன மீது மதிப்பும் அன்பும் நம்பிக்கையும் வைத்திருப்பதாகவும் சொன்னவள் எல்லாவற்றுக்கும் மூல காரணம் 'அன்று மாமனாருக்கு நான் செய்த உதவிதான்.  உங்களுக்கு நான் ரொம்ப கடமைப் பட்டிருக்கிறேன்.' என்றாள்
"காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின்  மாணப் பெரிது" என்று வள்ளுவர் வாக்கு பொய்க்குமா என நான் நினைத்துக் கொண்டு அவளிடமிருந்து விடை பெற்றேன்.

 
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Thursday, May 3, 2012

.18.பிறர் பசியாற்றினால்

  

என் இளம் வயதில்    கதையை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு அரசன் 
தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்டு 
அரசனைக் கைது  செய்து சிறையில் அடைத்திருந்தான்.அந்த நாட்டு மக்கள் 
அனைவரும் பண்பும் அன்பும் கொண்டவர்கள்   என்பதே காரணம்.
இதைத் தெரிந்து கொள்ள பகைநாட்டு மன்னனின் சேவகர் இருவரை அழைத்து 
அவர்கள் முன்னே அறுசுவை உணவினை வைத்து உண்ணச் சொன்னான்.
உண்ணும்போது உண்பவர்முழங்கை  மடங்கக் கூடாது.என்று கட்டளையிட்டான்.
இருவரும் சற்று சிந்தித்தனர்அவர்களில் ஒருவன் தன கையில் உணவை எடுத்து 
கையை மடக்காமல் எதிரே இருந்த நண்பனின் வாயில் ஊட்டினான். அதைப் பார்த்த மற்ற சேவகனும் அதேபோல செய்தான். இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொண்டதால் இருவரின் வயிறும் நிறைந்தது.
இதைப் பார்த்த மன்னனுக்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே இந்த மன்னனுடைய மக்கள் மிக நல்ல மனம் படைத்தவர்கள்
தான் என முடிவு செய்து அந்த மன்னனை சிறையிலிருந்து விடுவித்து  தன 
நண்பனாக்கிக் கொண்டான்.
எனவே பிறருக்கு உணவளித்தால் நமக்கு எப்படியேனும் உணவு கிடைக்கும்
 என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இதைத்தான் ஊரார் பிள்ளையை ஊட்டி 
வளர்த்தால் தம்பிள்ளை தானே வளரும் என்பார்கள் என்று விளக்கமும் அளித்தார்
கள்.இதை நாமும் ஒப்புக்கொள்ளதத்தானே வேண்டும்.