Monday, June 27, 2011

4 . பொன்னுலகாகும் பூவுலகம்.

மனித உயிர் - அது மகத்துவம் வாய்ந்தது.மனிதராய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும். குறையில்லா  மனிதராய்ப் பிறக்க 
மாபெரும் தவம் செய்திருக்கவேண்டும். அதைத்தான் அவ்வையாரும்' அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.அதனினும் அரிது கூன் குருடு பேடு நீங்கிப் பிறத்தல் அதனினும் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அதனினும் அரிது தானமும் தவமும் செய்தல் என்று குறிப்பிட்டார்.
இத்தகைய உயர்ந்த மனிதப் பிறவி பெற்றிருந்தாலும் நிறைவான வாழ்க்கை வாழ்வது என்பது நாம் பெற்ற பெரும் பேறு என்றுதான் கொள்ள வேண்டும்.இப்படி உலகில் எல்லா நலன்களும் பெற்று வாழ்ந்தவரை வாழ்ந்தார் என இயம்பிவிட  இயலாது. உலகில் வாழ்வாங்கு வாழ்ந்தாரையே உண்மையில் வாழ்ந்தவராக உலகச் சான்றோர் குறிப்பிடுவர். அப்படி வாழ்பவர் மிகச் சிலரே.

"உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் 
 தமியர் உண்டலும் இலரே."எனப் புறநானூறு புகல்வதப் போல வாழ்ந்தவர்களும் பிறர்க்கென வாழ்ந்து தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தவர்களுமே உலகில் வாழ்ந்தவர்களாவர் எனப் புலவர் குறிப்பிடுவர். என்றும் வாழ்பவர்களும் இவர்களே.

பாரத சமுதாயம் வாழ்கவே என்று பாடிய பாரதியும் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என முழக்கமிடுகிறார்.
வள்ளுவரும்"
                       "இறந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக 
                         இவ்வுல கியற்றி யான்."  எனக் கூறுகிறார்.
இவ்வரிகள் நமக்கு எதனை உணர்த்துகின்றன? உலகில் பசித்துன்பம் இல்லாதிருக்க வேண்டும் என்பதையும் இருப்பவன் இல்லாதவனுக்களித்து அவன் பசியைப் போக்கவேண்டும் என்ற கருத்தையும் தெளிவாக்குகிறதன்றோ?

"எல்லோரும் வாழவேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும்.நல்லோர்கள் எண்ணம் இது. இதுவே நல்லற வாழ்வு  " என்ற கவிஞனின் கூற்று நனவாக வழி வகுத்தலே ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை." என்றான் வள்ளுவன்.
பகுத்துண்ணும் பண்பும் எல்லா உயிர்களையும் காக்கின்ற கருணையும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலவுமானால் அந்த நாடு விண்ணவர் நாட்டுக்கு இணையாக விளங்கு 
மென்பது சொல்லித் தெரியவேண்டுவதில்லை.

நம் பாரத நாடு பழம்பெரும் நாடு. ஞானத்திலே பரமோனத்திலே அன்னதானத்திலே உயர் மானத்திலே உயர்ந்த நாடு நமது பாரதம் . இங்கே பஞ்சமும் நோயும் பசியும் தீமையும் களையப்பட வேண்டுமெனில் நமது உள்ளங்களில் எல்லாம் எல்லோரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் சுடர் விட்டுப் பிரகாசிக்க வேண்டும்.

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று கூறிய வள்ளல் பெருமான் பயிர் வாடிய போது தன் உயிர் வாடியதாகக் கசிந்து உருகினார்.பயிர் நீரின்றி வாடுவதாக இருந்தாலும் அந்த வாட்டம் தன் உயிரையே வாட்டுவதாக எண்ணி வேதனைப் பட்டவர் அப்பெருமான்.

"தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென வாழுநர் உண்மையானே உண்டால் அம்மா இவ்வுலகம்." என்றான் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற மன்னன்.
தமக்கென வாழாது பிறருக்காக வாழுகின்றவர் இருப்பதினாலேயே இவ்வுலகம் இன்னும் நிலை பெற்றுள்ளது என்கிறான். எனவே பிறர்க்கென  வாழும் உயர்ந்த பண்பு இவ்வுலகம் வாழ வழி வகுக்கின்றது.'வாழு வாழவிடு' என்ற தத்துவத்தின்படி வாழப் பழக வேண்டும் என்ற உண்மையை உணரவேண்டும்.

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்." என்றார் சங்கக் கவி கணியன் பூங்குன்றனார். உலகம் முழுமையும் ஒன்று.சாதி, இனம், மதம், என்ற வேறுபாடுகள் அற்றது.என்ற கருத்தை 
அனைவரும் நம் உறவினர் என்ற ஒரு சொல்லிலே அடக்கிக் கூறினார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.

மேல்நாட்டிலே இந்துமதக் கருத்துக்களைக் கூறச் சென்ற நம் நாட்டுத் தங்கம் விவேகானந்தரும் சகோதரர்களே, சகோதரிகளே! என அழைத்ததன்மூலம் இந்தஉண்மையையே  உறுதியாக்கிச் சென்றுள்ளார்.

உயர்ந்த மலையும் ஓங்கிய வானும் வீசும் தென்றலும், பரந்த கடலும் எப்படி ஒருவனுக்கே உரிமையுடையன அல்லவோ அதே போல் வாழும் உரிமையும் ஒருவனுக்கே சொந்தமல்ல. அனைவருக்கும் இந்த  உரிமை உண்டு என உணரவேண்டும்.

நாமும் வாழ்ந்து பிறரும்  வாழ வழி வகுப்பதே சீரான பாதை சிறந்த பாதை. இந்த உண்மையை உலகத்தார் அனைவரும் பற்றினால் இப்பூவுலகம் பொன்னுலகாய் மாறிவிடாதா?ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Wednesday, June 22, 2011

விட்டுக் கொடுப்பதே விவேகம்

நாங்கள் அப்போது பெங்களூரில் தங்கியிருந்தோம்.பக்கத்துப் போர்ஷனில் ஒருகுடும்பம்  குடியிருந்தது. அந்த குடும்பத் தலைவி மிகவும் நட்புடனும் மரியாதையுடனும் பழகி வந்தாள்.நல்ல பண்புள்ள பெண்ணாகத் தெரிந்தாள். நானும் மிகவும் அன்புடன் பழகி வந்தேன். அந்தப் பெண் அடிக்கடி என்னுடன் என்வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருப்பாள்..
சில நாட்கள் சென்றன. இப்போதெல்லாம் அந்தப் பெண் என்னைப் பார்க்கவே வருவதில்லையே என்று சிந்தித்தேன்.
.வீட்டு வேலைக்காரி மூலமாக விஷயம் தெரிந்தது.

அவர்களுக்கு  இரண்டு பெண்கள் இருந்தனர். மூத்தவளுக்குத் திருமணமாகி விட்டது. இரண்டாவது பெண்ணின் திருமணத்தில் தான் பிரச்சினை.தன் அண்ணன் மகனுக்குத் தன் இரண்டாவது மகளைத் தரவேண்டும் என்பது தாயின் ஆசை. தன் தங்கையின் மகனுக்குத்தான் தரவேண்டும் என்பது தந்தையின் ஆசை.இரண்டு பேரின் பிடிவாதத்தாலும் வீட்டில் பேச்சு வார்த்தையில் கசப்பு தெரிந்தது. பெற்றோரின் இந்தப் போராட்டத்தால் திருமணம் ஆகவேண்டிய  பெண்ணும் எப்போதும் சோகமாக இருந்தாள்.

வீட்டின் அமைதியும் மகிழ்ச்சியும் காணாமல் போய் விட்டது.  ஒருவருக்கொருவர் பேசுவதையே நிறுத்தி விட்டனர் என்றே சொல்லலாம். இந்த சமயத்தில் ஒரு நாள் அந்த அம்மாள் என்னைத் தேடி வ்ந்தார்.
" நான் என் உறவினர் வீட்டு விசேஷத்துக்குப் போகிறேன். மாலையில்தான் வருவேன் என் கணவர் வந்து கேட்டால்   சொல்லுங்கள்" என்றவளை உட்காரவைத்தேன்.

அவளது மகிழ்ச்சியற்ற முகம் என் மனதை வாட்டியது. இந்த நிலைக்கு யார் காரணம்? அவளேதான். என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது.
"கொஞ்சநேரம் உட்கார். உன்னிடம் பேசவேண்டும். " என்றேன். அமர்ந்தாள். 
"உன் மனதில் என்ன குறை இருக்கிறது? என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்" என்றபோது  அவள் கண்கள் கலங்கிவிட்டன.
சற்று நேரம் தயங்கியவள் தன் கணவனின் பிடிவாதத்தைப் பற்றிக் கூறி மூக்கைச் சிந்தினாள்.
நான் புன்னகைத்தேன்."அடி பயித்தியமே, உன் மூத்த மகளை உன் தாய் வீட்டு உறவுக்குக் கொடுத்திருக்கும் போது இரண்டாவது பெண்ணை கணவர் வீட்டு  உறவுக்குக் கொடுப்பதுதான் முறை. குடும்பத்தில் உறவுகளின் மகிழ்ச்சி ரொம்ப முக்கியம். நீ விட்டுக் கொடுப்பதால் உன் குடும்பம் மொத்தமும் மகிழ்ச்சியாய் இருக்கும் என்றால் விட்டுக் கொடுப்பதில் தடை என்ன? எப்போதும் விட்டுக் கொடுப்பதை விட பெரிய வெற்றி வேறு இல்லை.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள். கணவன் மனைவிக்குள் வெற்றியா தோல்வியா எனப் பார்க்காதே விட்டுக் கொடுப்பவரே வெற்றியாளர் என்பதை மறவாதே. உன் குடும்ப மகிழ்ச்சியை உன் பிடிவாதத்தால் இழந்து விடாதே. என்றேன்.அவளுக்கு மனதில் தெளிவு பிறந்துவிட்டது என்பது அவள் முகத்திலிருந்து தெரிந்தது. 

மறுநாள் அவள் வீடு மீண்டும் கலகலப்பானதை அறிந்தேன். அந்தக் குடும்பத்தை விட நான் மிகவும் மகிழ்ந்தேன்.
பிடிவாதம் பிடித்து வெற்றி அடைவதை விட விட்டுக் கொடுத்து தோல்வியடைவதே வாழ்க்கையில்  உண்மையான வெற்றி என்பதை நானும் புரிந்து கொண்டேன்.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, June 10, 2011

சிறுவன் காட்டிய சிந்தனை..

எனது இருபதாவது வயதில் பட்டம் பெறவேண்டும் என்று முயன்றேன். அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்த நான் தனியாக பி.யு.சி. எழுதினேன்.


தேர்வில் வெற்றியும் பெற்றேன். பின்னர் பி.ஏ. தேர்வுக்குப் படித்தேன். பள்ளியில் பணி புரியும் நான் பள்ளி வேலை வீட்டு வேலை எல்லாம் செய்து கொண்டு மாலை நேரக் கல்லூரிக்கும் போய்ப் படித்தேன். அந்த முறை தேர்வில் வெற்றி பெறாததால் அதோடு என் படிப்பையும் பட்டம் பெறவேண்டும் என்ற என் ஆசையையும் கட்டித் தூர வைத்து விட்டேன்.
இந்த நிலையில் ஒரு திருமணத்திற்காக கிராமத்திற்குப் போக நேர்ந்தது.நாங்கள் ரயிலில் பயணம் செய்தோம்.மாலை நேரம். ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றது. 


அப்போது ஒரு சிறுவன் அவனுக்கு சுமார் ஒன்பது அல்லது பத்து வயதிருக்கும்.கையில் சில புத்தகங்களை வைத்துக் கொண்டு எங்கள் பெட்டியில் ஏறினான்.ஒவ்வொருவரிடமும் சென்று புத்தகம் வாங்கிக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டான்.சிலர் வாங்கிக் கொண்டனர்.நான் கால் நீட்டி அமர்ந்திருந்தேன்.என்னைத் தாண்டி அவன் செல்லும்போது அவன் காலை என் கால் தடுக்கி விட்டது. 

கீழே விழுந்தவன் புத்தகங்களை சரியாக அடுக்கிக் கொண்டு என்னைப் பார்த்து சாரிம்மா. என்று பணிவுடன் கேட்டுக் கொண்டான். காலை நீட்டி அமர்ந்தது என் தவறு. நான் தான் அந்தச் சிறுவனுக்கு சாரி சொல்லவேண்டும் ஆனால் அந்தச் சிறுவன் என் தவறைத் தன்மேல் போட்டுக் கொண்டு சாரி சொன்ன அவன் பண்பு என்னை சிந்திக்க வைத்தது.

அவனை அழைத்து அன்புடன் அடி பட்டதாப்பா என்றேன். அவனோ புன்னகையுடன் ஒரு புத்தகம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று வியாபாரத்தில் குறியாக இருந்தான்.அவனிடம் பேச்சுக் கொடுத்தவாறே இரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொண்டேன். 

" தம்பி பள்ளிக்கூடத்திலிருந்து நேராக புத்தகம் விற்க வந்து விட்டாயா? சீருடையைக் கூடக் கழற்ற வில்லையே? அப்படி என்ன அவசரம் உனக்கு?"
அவன் சொன்ன பதில்தான் என்னை மேலும்சிந்திக்க வைத்தது..

"பள்ளி விட்டவுடன் கடைக்குச் சென்று புத்தகங்களை வாங்கிக் கொண்டால்தான் ரயில் வரும் நேரத்தில் ஸ்டேஷனுக்கு வந்து புத்தகம் விற்க முடியும்.


ஒரு நாளைக்கு ஐந்து ரூபாயாவது சம்பாதித்தால்தான் அம்மா படிக்க அனுப்புவார்கள். கடைசி ரயிலில் வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு போய் வீட்டுப்பாடம் முடிப்பேன். இரண்டு புத்தகம் வாங்கிக் கொண்டதற்கு நன்றி அம்மா" என்று சொல்லிவிட்டு மெதுவாக நகரத் தொடங்கிய ரயிலிலிருந்து இறங்கி வெளியே நின்று கொண்டான்.

"இந்தச் சிறுவன் எத்தனை எதிர்ப்புக்கிடையேயும் கஷ்டத்துக் கிடையேயும் கற்பதற்காக இவ்வளவு முயற்சி எடுக்கும்போது நான் ஒரு முறை தோல்வி அடைந்ததற்காகப் படிப்பை நிறுத்தியது எவ்வளவு முட்டாள்தனம்." என்று நினைத்துக் கொண்டேன்.
வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக புத்தகங்களை எடுத்து அடுக்கி வைத்தேன். எந்தத் துன்பம் எந்த இடையூறு வந்தாலும் படிப்பை இடையில் விடுவதில்லை என்று முடிவு செய்தேன். 

பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற அவ்வையின் சொல்லை நினைத்துக் கொண்டேன். கல்வி கற்கும்போது தோல்வி வந்து விட்டால் துவண்டுவிடக்கூடாது .அதிக முயற்சிஎடுத்து வெற்றி காண வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, June 3, 2011

எனது முதல் அனுபவம்


பலமாதங்களாக ஷிர்டி என்னும் புண்ணிய பூமிக்குச் சென்று பகவான் ஸ்ரீ சாயி பாபாவை தரிசிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே இருந்தேன். அதற்கான நேரமும் வந்தது. நானும் என் கணவரும் ஷிர்டியை அடைந்தோம்.


அங்கே ஒரு அறையை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு இரவு தங்கினோம். இரவு ஒன்பது மணிக்கு இரவு ஹாரதியைப் பார்க்க கோவிலுக்குச் சென்று பாபாவை நன்கு தரிசித்தோம்.அனைவரும் ஹாரதியை தரிசிக்கும் பொருட்டு ஆங்காங்கே ஒளிப்படக் காட்சி தெரியுமாறு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. கூட்ட நெரிசல் இல்லாமல் வெளியில்நின்றவாறே பாபாவின் ஹாரதியைத் தரிசிக்க முடிந்தது.

திருப்தியாக தரிசனம் முடித்துக் கொண்டு அறைக்குத் திரும்பினோம். பாபாவின் கருணை பொழியும் முகமும் கண்களும் மனதில் பதிந்து போனது. மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது..மறுநாள் நாங்கள் சென்னைக்குத் திரும்பவேண்டும்.

பொழுது விடிந்ததும் நாங்கள் புறப்பட ஆயத்தமானோம். புறப்படுமுன் கோவிலுக்குச் சென்று தரிசனம் முடித்துக் கொண்டோம்.காலை உணவு குறைந்த விலையில் கோவில் வளாகத்திலேயே    வாங்கிச் சாப்பிட்டோம்.பின்னர் அறைக்குத் திரும்பி எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு அறையை காலி செய்துவிட்டு தெருவில் நடந்தோம்.அப்போது தரிசன நேரமாக இருந்ததால் தெருவில் நல்ல கூட்டம். முண்டியடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டியிருந்தது.அப்போது என்முன்னே ஒரு வயோதிகர் தன் இளைத்த கரங்களை நீட்டினார்.

சுற்றிலும் மக்கள் கூட்டம். என் கணவரோ  முன்னால் சென்று விட்டார் அவர் எங்கிருக்கிறார் எனப் பார்த்துக் கொண்டே கூட்டத்தைத தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்த என்னால் அந்தக் கிழவருக்கு எதையும் தானம் தரஇயலவில்லை. இருந்தாலும் ஏதோ உணர்வு உந்தவே என் கைப் பையைத் துழாவினேன். சோதனையாக சில்லறை எதுவும் தட்டுப் படவில்லை. நான் நடந்து கொண்டே இருந்தேன். அவரும் என்னைத் தொடர்ந்தார்.எனக்குக் காசு எதுவும் தட்டுப் படாததால் பேசாமல் விரைவாக நடக்கத் தொடங்கினேன். 


தொடர்ந்து நடந்து வந்த கிழவர் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். சற்றுத் தொலைவு சென்று நான் திரும்பிப் பார்த்தேன்.அப்பா!அந்தக் கண்கள்!அவற்றை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் எங்கே? ஆ!நினைவு வந்தது பகவான் பாபாவின் முகத்தில் அந்தக் கண்களின் தீட்சண்யத்தைப் பார்த்திருக்கிறேன்.

என் உடல் சிலீரென்று சிலிர்த்தது. பகவான் என்னை சோதித்தாரா? நான் நின்று அவருக்கு ஏதேனும் தானம் செய்திருக்கவேண்டும். கூட்டத்தைக் காரணமாக்கி நிற்காமல் சென்றது பெரும் தவறு எனப் புரிந்தது. தன் முன்னே நீண்ட கரத்தில் தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடனே கொடுத்திருக்க வேண்டும்.சற்றே அலட்சியம் காட்டியது பெரும் மன உளைச்சலைக் கொடுத்து விட்டதே என எண்ணி எண்ணி இன்று வரை மனம் சஞ்சலப் பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்குப் பின்னர் இரண்டு முறை அதே இடத்திற்குப்போய்  அந்தப் பெரியவருக்கு தானம் செய்ய எண்ணியும் நடக்கவில்லை அவரையும் பார்க்க முடியவில்லை.

அன்று முதல் தரவேண்டும் தருமம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் எதையேனும் கொடுத்து விடவேண்டும் என்றஎண்ணம் என் உள்ளத்தில் தோன்றியது.
இன்றும் ஷிர்டி என்ற பெயரைக் கேட்டாலே அந்த முதியவரின் ஏக்கம் நிறைந்த விழிகள்தான் என் கண் முன் தோன்றுகிறது. எனவே இந்த அனுபவத்தின் மூலமாக கொடுப்பதை உடனே கொடுத்துவிட வேண்டும் என்ற பெரிய உண்மையை  புரிந்துகொண்டேன்   

எனது குறிக்கோள்

அன்பு நெஞ்சங்களே உங்கள் அன்புச் சகோதரி ருக்மணி சேஷசாயி உங்களுடன் மனம் விட்டுப் பேச வந்துள்ளேன் பாட்டி சொல்லும் கதைகள் மூலமாக இளம் தளிர்களுடன் பேசிவந்த நான் இப்போது என்மனதில் நிறைந்துள்ள எண்ணங்களை சிந்தனைகளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்

எனவே இந்த இரண்டாவது தளத்தை உருவாக்கியுள்ளேன்.இந்த தளத்தின் மூலமாக நான் ரசித்த என்னை பாதித்த என்னைத் திருத்திய காட்சிகள் நிகழ்ச்சிகள் புத்தகங்கள் என அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.எனது இந்த அனுபவங்கள் உங்களையும் பண்படுத்தும் என நம்புகிறேன்.தொடர்ந்து படித்து உங்களின் எண்ணங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

ருக்மணி சேஷசாயி.