Wednesday, June 22, 2011

விட்டுக் கொடுப்பதே விவேகம்

நாங்கள் அப்போது பெங்களூரில் தங்கியிருந்தோம்.பக்கத்துப் போர்ஷனில் ஒருகுடும்பம்  குடியிருந்தது. அந்த குடும்பத் தலைவி மிகவும் நட்புடனும் மரியாதையுடனும் பழகி வந்தாள்.நல்ல பண்புள்ள பெண்ணாகத் தெரிந்தாள். நானும் மிகவும் அன்புடன் பழகி வந்தேன். அந்தப் பெண் அடிக்கடி என்னுடன் என்வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருப்பாள்..
சில நாட்கள் சென்றன. இப்போதெல்லாம் அந்தப் பெண் என்னைப் பார்க்கவே வருவதில்லையே என்று சிந்தித்தேன்.
.வீட்டு வேலைக்காரி மூலமாக விஷயம் தெரிந்தது.

அவர்களுக்கு  இரண்டு பெண்கள் இருந்தனர். மூத்தவளுக்குத் திருமணமாகி விட்டது. இரண்டாவது பெண்ணின் திருமணத்தில் தான் பிரச்சினை.தன் அண்ணன் மகனுக்குத் தன் இரண்டாவது மகளைத் தரவேண்டும் என்பது தாயின் ஆசை. தன் தங்கையின் மகனுக்குத்தான் தரவேண்டும் என்பது தந்தையின் ஆசை.இரண்டு பேரின் பிடிவாதத்தாலும் வீட்டில் பேச்சு வார்த்தையில் கசப்பு தெரிந்தது. பெற்றோரின் இந்தப் போராட்டத்தால் திருமணம் ஆகவேண்டிய  பெண்ணும் எப்போதும் சோகமாக இருந்தாள்.

வீட்டின் அமைதியும் மகிழ்ச்சியும் காணாமல் போய் விட்டது.  ஒருவருக்கொருவர் பேசுவதையே நிறுத்தி விட்டனர் என்றே சொல்லலாம். இந்த சமயத்தில் ஒரு நாள் அந்த அம்மாள் என்னைத் தேடி வ்ந்தார்.
" நான் என் உறவினர் வீட்டு விசேஷத்துக்குப் போகிறேன். மாலையில்தான் வருவேன் என் கணவர் வந்து கேட்டால்   சொல்லுங்கள்" என்றவளை உட்காரவைத்தேன்.

அவளது மகிழ்ச்சியற்ற முகம் என் மனதை வாட்டியது. இந்த நிலைக்கு யார் காரணம்? அவளேதான். என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது.
"கொஞ்சநேரம் உட்கார். உன்னிடம் பேசவேண்டும். " என்றேன். அமர்ந்தாள். 
"உன் மனதில் என்ன குறை இருக்கிறது? என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்" என்றபோது  அவள் கண்கள் கலங்கிவிட்டன.
சற்று நேரம் தயங்கியவள் தன் கணவனின் பிடிவாதத்தைப் பற்றிக் கூறி மூக்கைச் சிந்தினாள்.
நான் புன்னகைத்தேன்."அடி பயித்தியமே, உன் மூத்த மகளை உன் தாய் வீட்டு உறவுக்குக் கொடுத்திருக்கும் போது இரண்டாவது பெண்ணை கணவர் வீட்டு  உறவுக்குக் கொடுப்பதுதான் முறை. குடும்பத்தில் உறவுகளின் மகிழ்ச்சி ரொம்ப முக்கியம். நீ விட்டுக் கொடுப்பதால் உன் குடும்பம் மொத்தமும் மகிழ்ச்சியாய் இருக்கும் என்றால் விட்டுக் கொடுப்பதில் தடை என்ன? எப்போதும் விட்டுக் கொடுப்பதை விட பெரிய வெற்றி வேறு இல்லை.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள். கணவன் மனைவிக்குள் வெற்றியா தோல்வியா எனப் பார்க்காதே விட்டுக் கொடுப்பவரே வெற்றியாளர் என்பதை மறவாதே. உன் குடும்ப மகிழ்ச்சியை உன் பிடிவாதத்தால் இழந்து விடாதே. என்றேன்.அவளுக்கு மனதில் தெளிவு பிறந்துவிட்டது என்பது அவள் முகத்திலிருந்து தெரிந்தது. 

மறுநாள் அவள் வீடு மீண்டும் கலகலப்பானதை அறிந்தேன். அந்தக் குடும்பத்தை விட நான் மிகவும் மகிழ்ந்தேன்.
பிடிவாதம் பிடித்து வெற்றி அடைவதை விட விட்டுக் கொடுத்து தோல்வியடைவதே வாழ்க்கையில்  உண்மையான வெற்றி என்பதை நானும் புரிந்து கொண்டேன்.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

2 comments:

  1. //பிடிவாதம் பிடித்து வெற்றி அடைவதை விட விட்டுக் கொடுத்து தோல்வியடைவதே வாழ்க்கையில் உண்மையான வெற்றி//

    எத்தனை உண்மையான வார்த்தைகள்... கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து வாழ்வது ஆனந்ததைத் தரும் என்பதில் சந்தேகமில்லை....

    பகிர்வுக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  2. Word Verification எடுத்து விட்டீர்களே... நல்லது... சந்தோஷம்...

    ReplyDelete