Friday, October 31, 2014

நினைவில் நிற்கும் நிலாச்சோறு

பௌர்ணமியன்று அந்த நிலவைப் பார்த்தேன்.என் நினைவு எங்கோ சென்றது.இரவு எட்டுமணி.இந்த நேரம்தான் சிறுவர்கள் இரவு உணவைத் தேடும் நேரம். சுமார் எழுபது ஆண்டுகளுக்குமுன் எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது என் பாட்டி எங்களுக்கு சோறிட்டதை நினைவு கூர்ந்தேன்.பெரிய கிணற்றடி. சுற்றி மண் தரை யோ காரையிட்ட தரையோ பளிச்சென்று சுத்தமாக இருக்கும்.
நாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தைச் சுற்றிலும் தென்னை மா எலுமிச்சை மரங்களும் அருகில் மல்லி ரோஜா சாமந்தி பாரிஜாதம் போன்ற மலர்ச் செடிகளும் நிறைந்திருக்கும் ரம்யமான தோட்டம். 
 அங்கு நடுவே அமர்ந்து கொண்டு ஒரு பெரிய பாத்திரத்தில் குழம்போ ரசமோ ஊற்றிப் பிசைந்து கொண்டு வந்து 'பசங்களா, வாங்க எல்லாரும். கதைவேணுமானா சீக்கிரமா வரணும் "என்று ஒரு அதட்டல் போடுவார்.
விளையாடிக்கொண்டிருந்த பத்துப் பேரும் ஓடிவந்து பாட்டியின் அருகே உட்காரப் போட்டி போடுவோம்.
ஒரு வழியாக எங்கள் சண்டையைத் தீர்த்துவிட்டுக் கதை சொல்லும் போதே ஒவ்வொரு உருண்டையாய் பாத்திரத்திலிருந்து கைகளில் விழும்.

இடையிடையே முழுங்கு, இருடா அவசரப்படாதே, ஏண்டி பறக்கறே, ம்..னு சொல்லு என்ற வசனங்களுடன் கதை நடக்கும். அந்தப் பாத்திரம் காலியாகும் வரை கதையும் தொடர்ந்துகொண்டிருக்கும்.அடுத்தவீட்டு அம்மாள் தன குழந்தை சாப்பிட அடம்பிடிப்பதாகச் சொல்லி எங்களுடன் சாப்பிட அமர்த்திவிடுவார்.நாங்களும் ஒரு விருந்தாளியை வரவேற்பது போல அந்தக் குழந்தையை நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அருகே அமர்த்திக் கொள்வோம்.அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி  சிரிப்பு பொங்கும் அந்தக் குழந்தையும் அழுகையை மறந்து சிரிப்பதோடு எங்கள் பாட்டியின் கையிலிருந்து கவளம் கவளமாக சாதத்தை வாங்கி தானே உண்டு விட்டுப் பெருமையோடு எங்களைப் பார்த்துச் சிரிக்கும்.

இந்த நினைவு காரணமாக எனக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறந்தபின்னர் நான் பெற்ற நிலாச்சோறு மகிழ்ச்சியை என் பிள்ளைகளும் பெறவேண்டுமென  விரும்பினேன். எனவே சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் அவர்களுக்கு நிலாச்சோறு தான். என் பிள்ளைகளின் நண்பர்கள் தோழிகள் வீட்டுக்கு வந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களையும் நிலாச்சாப்பாட்டுக்கு அமர்த்திவிடுவேன்.இருபத்தைந்து ஆண்டுகள் கழித்துப் பார்த்தபோது அந்தப்பையன்களில் ஒருவன்  என்னிடம் நிலாச்சாப்பாட்டை நினைவு வைத்துக் கொண்டு கேட்டபோது நான் நெகிழ்ந்துபோனேன். நம் பிள்ளைகளின் உணர்வு இன்னும் மங்காமல் இன்னும் நம் பாரம்பரியத்தில் அமிழ்ந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.இளைஞர்கள் இப்போது நிலாச்சாப்பாடு போட்டாலும் கைநீட்டத்  தயார்தான்.போடுவதற்குத் தாய்மார்கள் தயாரா?

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, October 27, 2014

chillaraich chettiaar.

.                         . சில்லரைச் செட்டியார்.


      ஒரு ஊரில் சில்லறைச் செட்டியார் என்று ஒருவர் இருந்தார்.அவர் அந்தஊரில் ஒரு சாப்பாட்டுக் கடை நடத்தி வந்தார்.அவருக்கு இயற்பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. சில்லறைச் செட்டியார் என்ற பெயரே நிலைத்துவிட்டது.அந்தப் பெயர் வந்த காரணம்தான் இந்தக் கதை.
        ஒருநாள் நல்ல வெய்யில் நேரம். செட்டியார் கடையில் மிகவும் சுறுசுறுப்பாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.நிறையப்பேர் சாப்பிட வந்திருந்தனர்.சமையலறையில் சமையல் சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்தது.அடுப்பில் சமைக்கும் பதார்த்தத்தின் வாசனை வெளியே வரை கமகமத்தது.
       ஒரு வழிப்போக்கன் சாப்பாட்டுக்கடையின் திண்ணையில் வந்து அமர்ந்தான்.சாப்பாட்டு நேரமானதால் தான் கொண்டுவந்திருந்த பழைய சோற்று . மூட்டையைத் திறந்து அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டான்.
         சாப்பிட்ட களைப்பில் திண்ணையில் சாய்ந்தான்.அப்போது சில்லறைச் செட்டியார் வெளியே வந்தார். படுத்திருக்கும் வழிப்போக்கனைப் பார்த்தார்.
"ஏனப்பா, உள்ளே போய்  சாப்பிடுவதுதானே. நல்ல சாப்பாடு. விலையும் குறைவு."
"உண்மைதானுங்க. நல்ல வாசமுங்க. .வயத்துல பசியைக் கெளப்பிடுச்சிங்க..
உங்க புண்ணியத்துல அந்த  வாசத்தைப்  பிடிச்சிகிட்டே பழையதைத் தின்னுட்டேனுங்க"என்றபடியே புறப்பட எழுந்தான்.
செட்டியார் விடுவாரா?

எங்கேப்பா புறப்பட்டுட்டே?வாசம் பிடிச்சியில்லே எனக்கு ஒரு சாப்பாட்டுக்கான மூணு அணாவை எண்ணி வச்சுட்டுப் போ."

"அய்யா, நான்தான் சாப்பிடவே இல்லீங்களே?"

"ஏதாவது பேசினேன்னா திண்ணையிலே உக்காந்ததுக்கும் வாடகை கேப்பேன்."

வழிப்போக்கனிடமோ  இருப்பதே வழிச் செலவுக்கு அவன் வைத்திருக்கும்  .மூன்றணாதான். என்ன செய்வான் பாவம். ஆனால் செட்டியாரோ விடுவதாயில்லை.அவனை இழுத்துக் கொண்டு அவ்வூர் நியாயாதிபதியிடம் சென்றார்.தன வழக்கை எடுத்துக் கூறி அவன் பிடித்த வாசனைக்கு ஒரு சாப்பாட்டுக்குண்டான மூன்றணா தரவேண்டும் என்று முறையிட்டார். நியாயாதிபதி வழக்கை மீண்டும் மீண்டும் கேட்டார்.

வழிப்போக்கன் அழுதுகொண்டே நின்றான்.

தீர்ப்புக் கூறினார்."நீ அவர் .கடை  வாயிலில் அமர்ந்து வாசனை பிடித்தபடி சாப்பிட்டதற்குப் பணம் தரவேண்டியதுதான். ஆனால் சாப்பாட்டின் வாசனை பிடித்ததுபோல சில்லறையை உன் கையில் வைத்து கலகலவென்று சத்தப் படுத்து. அதன் ஒலிதான் அவனுக்கு விலை.நீ பிடித்த வாசனைக்கு அவன் கேட்கும் காசின் ஒலிதான் கூலி.என்று கூறி வழக்கை முடித்தார்.
          இப்படி அநியாயமாக சம்பாதிக்க நினைத்ததனால் மூன்றணா சில்லறைக்காக நியாயசபைக்குச் சென்றதால் ஜனங்கள் இவரை சில்லறைச் செட்டியார் என்று அழைக்கிறார்கள்.எப்படி தீர்ப்பு.Sunday, October 12, 2014

ராமனின் கோபம்

                                 ராமலக்ஷ்மணர்கள் வனவாசம் செல்லத் தயாராகி விட்டார்கள். சீதையும் பின்தொடர்கிறாள்.சீதை செல்லமாக ஆசையுடன் வளர்க்கும் கிளி அரண்மனை வாயிலில் இருந்த கூண்டுக்குள் இருந்தது.  நடக்கும் விபரீத நிகழ்ச்சிகளைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.வனவாசத்திற்கு ஸ்ரீராமனுடன் புறப்படும் சீதாதேவி தான் வளர்த்துவரும் கிளியின் அருகில் வந்ததும் நின்றாள்.'கிளியை மிகுந்த அன்புடன் பார்த்தாள் . மிகுந்த வாத்சல்யத்துடன் கூறினாள்.                                                                                                                                                                                                                                             "என் உயிரையே உன்மேல் வைத்திருக்கிறேன்.நான் சீக்கிரமே திரும்பி வருவேன். அதுவரை ஜாக்கிரதையாக இரு." என்று கூறி விடை பெற்றாள்.                           சீதை கிளியிடம் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்ட ராமனுக்குக் கோபம் வந்துவிட்டது.அவன் சீதையைப் பார்த்து சற்றே மனத் தாங்கலுடன் கூறினான்.
 "சீதே, சற்றுநேரம் முன்னர்தான் என் ப்ராணனே  நீங்கள்தான். தாங்கள் இல்லாமல் நான் ஒரு கணமும் உயிர் வாழமாட்டேன் என்று வாதாடினாய்..  மறு 
நிமிடமே கேவலம் ஒரு கிளியிடம் உன் பிராணன் இருப்பதாகக் கூறுகிறாய்.இதன் பொருள் எனக்கு விளங்கவில்லை." சற்றே சினத்துடன் கேட்ட மணாளனின் முகத்தைப் பார்த்த சீதை அச்சத்துடன் வாயடைத்து நின்று விட்டாள். 
அதைப் பார்த்த வசிஷ்டர் புன்னகையுடன் குறுக்கிட்டார்.
"ராமா, உன் அவதார ரகசியத்தை நினைத்துப் பார்.சீதை அந்த மகாலக்ஷ்மியின் அம்சம். அவள் கிளியிடம் பேசும்போது ஒருகால் வாயிலின் வெளியேயும் மற்றொரு கால் வாயிலுக்கு உள்ளேயும் வைத்துக் கொண்டு பேசினாள் .இதன் பொருள் என்னவென சிந்தித்தாயா.கிளியைக் காரணமாக வைத்து லக்ஷ்மி அம்சமான சீதை திரும்பி வரும்வரை அயோத்திக்கு லக்ஷ்மி கடாட்சம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினால்தான் அந்தக் கிளியிடம் தன உயிர் இருப்பதாகக் கூறினாள்."       என்று கூறி ராமனை சமாதானப் படுத்தினார்.
உண்மையை உணர்ந்துகொண்ட ராமனும் சீதையின் அன்புக்கும் அறிவுக்கும் அகமகிழ்ந்து அவள் கரம் பற்றி வனத்தை நோக்கி நடந்தான். இளவலும் .பின்தொடர்ந்தான்..