Friday, October 31, 2014

நினைவில் நிற்கும் நிலாச்சோறு

பௌர்ணமியன்று அந்த நிலவைப் பார்த்தேன்.என் நினைவு எங்கோ சென்றது.இரவு எட்டுமணி.இந்த நேரம்தான் சிறுவர்கள் இரவு உணவைத் தேடும் நேரம். சுமார் எழுபது ஆண்டுகளுக்குமுன் எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது என் பாட்டி எங்களுக்கு சோறிட்டதை நினைவு கூர்ந்தேன்.பெரிய கிணற்றடி. சுற்றி மண் தரை யோ காரையிட்ட தரையோ பளிச்சென்று சுத்தமாக இருக்கும்.
நாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தைச் சுற்றிலும் தென்னை மா எலுமிச்சை மரங்களும் அருகில் மல்லி ரோஜா சாமந்தி பாரிஜாதம் போன்ற மலர்ச் செடிகளும் நிறைந்திருக்கும் ரம்யமான தோட்டம். 
 அங்கு நடுவே அமர்ந்து கொண்டு ஒரு பெரிய பாத்திரத்தில் குழம்போ ரசமோ ஊற்றிப் பிசைந்து கொண்டு வந்து 'பசங்களா, வாங்க எல்லாரும். கதைவேணுமானா சீக்கிரமா வரணும் "என்று ஒரு அதட்டல் போடுவார்.
விளையாடிக்கொண்டிருந்த பத்துப் பேரும் ஓடிவந்து பாட்டியின் அருகே உட்காரப் போட்டி போடுவோம்.
ஒரு வழியாக எங்கள் சண்டையைத் தீர்த்துவிட்டுக் கதை சொல்லும் போதே ஒவ்வொரு உருண்டையாய் பாத்திரத்திலிருந்து கைகளில் விழும்.

இடையிடையே முழுங்கு, இருடா அவசரப்படாதே, ஏண்டி பறக்கறே, ம்..னு சொல்லு என்ற வசனங்களுடன் கதை நடக்கும். அந்தப் பாத்திரம் காலியாகும் வரை கதையும் தொடர்ந்துகொண்டிருக்கும்.அடுத்தவீட்டு அம்மாள் தன குழந்தை சாப்பிட அடம்பிடிப்பதாகச் சொல்லி எங்களுடன் சாப்பிட அமர்த்திவிடுவார்.நாங்களும் ஒரு விருந்தாளியை வரவேற்பது போல அந்தக் குழந்தையை நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அருகே அமர்த்திக் கொள்வோம்.அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி  சிரிப்பு பொங்கும் அந்தக் குழந்தையும் அழுகையை மறந்து சிரிப்பதோடு எங்கள் பாட்டியின் கையிலிருந்து கவளம் கவளமாக சாதத்தை வாங்கி தானே உண்டு விட்டுப் பெருமையோடு எங்களைப் பார்த்துச் சிரிக்கும்.

இந்த நினைவு காரணமாக எனக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறந்தபின்னர் நான் பெற்ற நிலாச்சோறு மகிழ்ச்சியை என் பிள்ளைகளும் பெறவேண்டுமென  விரும்பினேன். எனவே சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் அவர்களுக்கு நிலாச்சோறு தான். என் பிள்ளைகளின் நண்பர்கள் தோழிகள் வீட்டுக்கு வந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களையும் நிலாச்சாப்பாட்டுக்கு அமர்த்திவிடுவேன்.இருபத்தைந்து ஆண்டுகள் கழித்துப் பார்த்தபோது அந்தப்பையன்களில் ஒருவன்  என்னிடம் நிலாச்சாப்பாட்டை நினைவு வைத்துக் கொண்டு கேட்டபோது நான் நெகிழ்ந்துபோனேன். நம் பிள்ளைகளின் உணர்வு இன்னும் மங்காமல் இன்னும் நம் பாரம்பரியத்தில் அமிழ்ந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.இளைஞர்கள் இப்போது நிலாச்சாப்பாடு போட்டாலும் கைநீட்டத்  தயார்தான்.போடுவதற்குத் தாய்மார்கள் தயாரா?

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

2 comments:

 1. இப்போது தான் தங்கள் வலைப்பூவை அறிந்து கொண்டேன் அம்மா!.. தொடர்ந்து படித்து வருகிறேன். ஒவ்வொரு இடுகையும் சிறப்பு!..

  ReplyDelete
 2. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (26/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete