Friday, June 10, 2011

சிறுவன் காட்டிய சிந்தனை..

எனது இருபதாவது வயதில் பட்டம் பெறவேண்டும் என்று முயன்றேன். அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்த நான் தனியாக பி.யு.சி. எழுதினேன்.


தேர்வில் வெற்றியும் பெற்றேன். பின்னர் பி.ஏ. தேர்வுக்குப் படித்தேன். பள்ளியில் பணி புரியும் நான் பள்ளி வேலை வீட்டு வேலை எல்லாம் செய்து கொண்டு மாலை நேரக் கல்லூரிக்கும் போய்ப் படித்தேன். அந்த முறை தேர்வில் வெற்றி பெறாததால் அதோடு என் படிப்பையும் பட்டம் பெறவேண்டும் என்ற என் ஆசையையும் கட்டித் தூர வைத்து விட்டேன்.
இந்த நிலையில் ஒரு திருமணத்திற்காக கிராமத்திற்குப் போக நேர்ந்தது.நாங்கள் ரயிலில் பயணம் செய்தோம்.மாலை நேரம். ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றது. 


அப்போது ஒரு சிறுவன் அவனுக்கு சுமார் ஒன்பது அல்லது பத்து வயதிருக்கும்.கையில் சில புத்தகங்களை வைத்துக் கொண்டு எங்கள் பெட்டியில் ஏறினான்.ஒவ்வொருவரிடமும் சென்று புத்தகம் வாங்கிக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டான்.சிலர் வாங்கிக் கொண்டனர்.நான் கால் நீட்டி அமர்ந்திருந்தேன்.என்னைத் தாண்டி அவன் செல்லும்போது அவன் காலை என் கால் தடுக்கி விட்டது. 

கீழே விழுந்தவன் புத்தகங்களை சரியாக அடுக்கிக் கொண்டு என்னைப் பார்த்து சாரிம்மா. என்று பணிவுடன் கேட்டுக் கொண்டான். காலை நீட்டி அமர்ந்தது என் தவறு. நான் தான் அந்தச் சிறுவனுக்கு சாரி சொல்லவேண்டும் ஆனால் அந்தச் சிறுவன் என் தவறைத் தன்மேல் போட்டுக் கொண்டு சாரி சொன்ன அவன் பண்பு என்னை சிந்திக்க வைத்தது.

அவனை அழைத்து அன்புடன் அடி பட்டதாப்பா என்றேன். அவனோ புன்னகையுடன் ஒரு புத்தகம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று வியாபாரத்தில் குறியாக இருந்தான்.அவனிடம் பேச்சுக் கொடுத்தவாறே இரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொண்டேன். 

" தம்பி பள்ளிக்கூடத்திலிருந்து நேராக புத்தகம் விற்க வந்து விட்டாயா? சீருடையைக் கூடக் கழற்ற வில்லையே? அப்படி என்ன அவசரம் உனக்கு?"
அவன் சொன்ன பதில்தான் என்னை மேலும்சிந்திக்க வைத்தது..

"பள்ளி விட்டவுடன் கடைக்குச் சென்று புத்தகங்களை வாங்கிக் கொண்டால்தான் ரயில் வரும் நேரத்தில் ஸ்டேஷனுக்கு வந்து புத்தகம் விற்க முடியும்.


ஒரு நாளைக்கு ஐந்து ரூபாயாவது சம்பாதித்தால்தான் அம்மா படிக்க அனுப்புவார்கள். கடைசி ரயிலில் வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு போய் வீட்டுப்பாடம் முடிப்பேன். இரண்டு புத்தகம் வாங்கிக் கொண்டதற்கு நன்றி அம்மா" என்று சொல்லிவிட்டு மெதுவாக நகரத் தொடங்கிய ரயிலிலிருந்து இறங்கி வெளியே நின்று கொண்டான்.

"இந்தச் சிறுவன் எத்தனை எதிர்ப்புக்கிடையேயும் கஷ்டத்துக் கிடையேயும் கற்பதற்காக இவ்வளவு முயற்சி எடுக்கும்போது நான் ஒரு முறை தோல்வி அடைந்ததற்காகப் படிப்பை நிறுத்தியது எவ்வளவு முட்டாள்தனம்." என்று நினைத்துக் கொண்டேன்.
வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக புத்தகங்களை எடுத்து அடுக்கி வைத்தேன். எந்தத் துன்பம் எந்த இடையூறு வந்தாலும் படிப்பை இடையில் விடுவதில்லை என்று முடிவு செய்தேன். 

பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற அவ்வையின் சொல்லை நினைத்துக் கொண்டேன். கல்வி கற்கும்போது தோல்வி வந்து விட்டால் துவண்டுவிடக்கூடாது .அதிக முயற்சிஎடுத்து வெற்றி காண வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

2 comments:

  1. சிறுவனிடமிருந்தது சிறந்த சிந்தனை... எத்தனை வயதானால் என்ன, படிக்க வேண்டும் என்ற உணர்வு இருப்பது எவ்வளவு நல்லது... உங்கள் அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுங்கள் அம்மா... எங்களைப் போன்றவர்களுக்கு அது உதவும் என்பதில் சந்தேகமில்லை...

    ReplyDelete
  2. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete