Friday, July 15, 2011

என் முதல் புகைப்படம்

.
என் பேத்தி தன் குழந்தையை விதம் விதமாய்ப் புகைப் படம் எடுப்பதைப் பார்த்து நான் இப்போது மலைத்துப் போகிறேன்.எங்களது இளமைக் காலத்தில் 
புகைப் படம் எடுப்பது என்பது மிகவும் அபூர்வம். அத்துடன் புகைப் படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் என்ற மூட நம்பிக்கையும் இருந்தது.
மிகவும் தேவை ஏற்பட்டால் ஒழிய  படம் எடுப்பது என்பது மிகவும் ஆடம்பரமான ஒன்றாகவே கருதப்பட்ட காலம் அது.
அந்தமாதிரி நேரத்தில் இளம் வயதுடைய நான் ஒரு புகைப் படம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப் பட்டதில் தவறில்லையல்லவா?

        ஆனால் ஒரு படம் எடுக்கவேண்டுமென்றால் ஒரு ரூபாய் கொடுக்கவேண்டும்.அந்த ஒரு ரூபாய் என்பது அந்தக் காலத்தில் ஒருநாளைய செலவுப் பணம்.அந்த ஒரு ரூபாயில் நான்கு  அணாவுக்கு துவரம்பருப்பு ஒரு அணாவுக்குப் புளிஇரண்டு  அணாவுக்கு மிளகாய் தனியா அரையணாவுக்கு கடுகு உளுத்தம்பருப்பு நான்கு அணாவுக்கு எண்ணெய் மீதி காசுக்கு இரண்டு வகை காய்களை வாங்கி வந்து விடுவார் என் பாட்டி. அத்துடன் உடன் அழைத்துச் செல்பவருக்கு கொசுறாக கொஞ்சம் வெல்லமும் சுவைக்கக் கிடைக்கும். ஒரு ரூபாய்க்கு வாங்கிவந்த பொருளிலேயே எங்கள் அனைவருக்கும் இரண்டு வேளைக்குமான சாம்பார் பொரியல்முடிந்துவிடும். 

         இந்த நிலையில் புகைப் படத்திற்காக ஒரு ரூபாய் செலவழிப்பது ஆடம்பரமில்லாமல் வேறென்ன? ஆனால் என்னுடைய புகைப்படக் கனவு மட்டும் தீரவேயில்லை. எப்படியும் புகைப் படம் எடுத்து என்முகத்தை அதில் பார்க்கவேண்டும் என்று மிகவும் ஆசைப் பட்டேன். அந்த அருமையான நாளும் வந்தது.ஒரு மதிய நேரம் பள்ளி விடுமுறைநாள். வாசலில் நெல் காயப் போட்டிருந்தார்கள். அதைக் காவல் காத்தபடி ஒரு புத்தகத்தை வைத்துப்  படித்துக் கொண்டிருந்தேன்.

"போட்டோ எடுக்கறீங்களா... போட்டோ. ஒரு  நிமிடத்திலே உங்கள் அழகு முகத்தை நீங்களே பார்க்கலாம்."

ஒரு பெரிய புகைப்படக் கருவியைத் தூக்கியபடி வந்துகொண்டிருந்தார் புகைப்படம் எடுப்பவர்.அவரைச் சுற்றி ஒரு பட்டாளமாகவே சிறுவர் சிறுமியர் 
சூழ்ந்து கொண்டிருந்தனர்.என்னைப் பார்த்தவர் ஒரு நிமிடம் என் கண்களில் தெரிந்த ஆவல் மின்னலைப் பார்த்திருக்கக் கூடும்.என் முன்னால் தன் புகைப் படக்கருவியை  நிறுத்தினார். அது தன் மூன்று கால்களைப் பரப்பிக் கொண்டு நின்றது.நான் உள்ளே ஓடினேன். உடன் என் பாட்டியை அழைத்து வந்தேன்.என் பாட்டி பேரம் பேச ஆரம்பித்தார்.
"இந்தாப்பா. எட்டணாவுக்கு எடுக்கிறதா இருந்தா  எடு. இல்லே நடையைக் கட்டு."கறாராகப் பேசிய பாட்டியின் பேரத்துக்கு ஒப்புக் கொண்டவர் என்னை வந்து ஒரு நாற்காலியின் மேல் அமரச் சொன்னார்.என் பாட்டி "கொஞ்சம் இருப்பா," என்றவர் உள்ளே சென்று ஆறு மாதமே ஆகியிருந்த 
என் தம்பியைத் தூக்கிவந்து என்மடியில் அமரவைத்தார்.
"வயசுப்  பொண்ணைத் தனியாப் படம் எடுக்கக் கூடாது. தம்பியை மடியிலே வச்சுப் படம் எடுத்துக்கோ." தம்பியை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தேன்.
என்னைச் சுற்றி ஒரு கூட்டமே சூழ்ந்திருக்க நான் அதன் நடுவே ஒரு நாயகியாகவே ஆகியிருந்தேன்.
புகைப்படம் எடுப்பவரோ விரைவாக எடுப்பதாகக் காணோம்.என்னைப் பார்த்த அந்தத் தெருவாசிகளில் சில பேருக்கும் என்னைப் போலவே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஆசை வந்து விட்டது."என் பையனையும் படம் எடப்பா. அதன் பிறகு எங்களையும் எடு."என்று வரிசை வரவே புகைப் படக்காரருக்கு குஷி.நல்ல வசூலாகும் என்று மகிழ்ச்சியுடன் என்னைப் படம் எடுத்து சற்று நேரத்தில் ஒரு தபால் கார்டு அளவுக்கு புகைப்படம் ஒன்று தந்தார்."பாப்பா, படத்திலே ஈரம் இன்னும் காயலே. கை படாமே பாத்துக்கோ" என்றபடியே கொடுத்தார்.அந்தப் படத்தில் உண்மையாகவே நான் மிகவும் அழகாக இருப்பதாகவே தோன்றியது. எனது முதல் புகைப்படம் அல்லவா? அடிக்கடி அதை யாருக்கும் தெரியாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

அதன்பிறகு காலம் ஓடினாலும் எத்தனையோ புகைப் படங்கள் எடுத்துக் கொண்டாலும் அந்த ஒரு படத்துக்காக ஏங்கியதும் அதை எடுத்துக் கொண்ட சூழ்நிலையும் என் மனதைவிட்டு நீங்காத பசுமையோடு இருக்கிறது.ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

1 comment:

  1. கருப்பு வெள்ளை புகைப்படங்களுக்கான மஹிமை தனிதான்... அதுவும் முதல் படம் என்பது அத்தனை சிறப்பு தானே நமக்கு. அப்போது இருந்ததை விட இப்போது டிஜிட்டல் கேமராக்கள் உபயோகம் நிறைய ஆகிவிட்டதால் இன்னும் சுலபமாக எடுத்துக் கொள்கிறோம். காலம் மாறிக் கொண்டே போகிறது :) என்னுடைய முதல் படம் எனக்குத் தெரியாத வயதில் [1 வயசு] குழந்தையாக இருந்தபோது எடுத்தது... இன்னமும் என்னிடம் இருக்கிறது. :)

    ReplyDelete