Monday, February 27, 2012

15- பொக்கிஷங்கள்

ஒருநாள் என்தம்பி என் இல்லத்திற்கு வந்திருந்தார்.பழைய கதைகளைப் பேசியபோது என்னிடம் இருந்த பழைய எங்களின் சிறு வயது புகைப் படங்களைக் காட்டினேன்.மிகவும் மகிழ்ந்து இத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்ததைப் பாராட்டிவிட்டு அந்தப் படங்களைத் தான் எடுத்துப் போய் கணினியில் போட்டு வைப்பதாகவும் சொல்லி வாங்கிப் போனார்.கணினியைப் பார்த்த என் மற்ற சகோதரர்களும் அதைப் பார்த்துப் பாராட்டி மகிழ்ந்தனர்.
இன்னொரு சமயம் என் உடன் பணியாற்றும் ஆசிரியர் தனக்கு உ.வே. சா. பற்றிய ஒரு  நூல் வேண்டும் கிடைக்குமா என்றார்.என்  இல்லத்தில் நான்  மிகப் பழைய நூல்களை சேர்த்து வைப்பது வழக்கம். அதில் ஏதேனும் இருக்கிறதா என்று தேடிப்  பார்த்தேன்.மிகப் பழமையான பதிப்பு ஒன்று கிடைத்தது. அந்த நண்பரிடம் அந்த புத்தகத்தைக் கொடுத்ததும் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.அதன்பின் அவர் என்னை நண்பர்களிடம் அறிமுகப் படுத்தும் போதெல்லாம் இவரிடம் இல்லாத நூலே இல்லை. மிகப் பழைய நூல்களெல்லாம் வைத்து ஒரு நூலகத்தையே பாதுகாத்து வருகிறார். என்று அறிமுகப் படுத்தி மிகவும் புகழ ஆரம்பித்தார்.அவரது மகிழ்ச்சி எத்தகையது என்பதையே அந்தச் செயல் காட்டுவதாகப் புரிந்து கொண்டேன்.
மற்றொரு நிகழ்ச்சியும் என் மனதை விட்டு அகலாத நிகழ்ச்சியாக அமைந்தது.என் தூரத்து உறவினர் ஒருவர்நன்றாகப் பாடக்கூடியவர்.எல்லாகுடும்ப விழாக்களிலும் முன்னின்று பாடுவார்.அடிக்கடி எங்களின் இல்லம் வந்து என்னுடன் பேசிக்கொண்டு இருப்பார். எனக்கும் பாட்டில் மிகுந்த பயிற்ச்சியும் ஈடுபாடும் இருந்ததால் வெகு நேரம் இசைபற்றியும் பாடல்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்போம்.திடீரென அவர் ஒரு விபத்தில் காலமாகிவிட்டார். அவருக்கு மூன்று குழந்தைகள்.அவரதுகடைசி  பெண்ணிற்கு திருமணமாகியது.ஓராண்டு கழித்து அவரது பெண்ணை சந்தித்தேன்.அந்தப் பெண் என்னிடம் தனியாக வந்து அத்தை, என் அம்மாவின் குரலைக் கேட்கவேண்டும்போல் இருக்கிறது.நீங்கள் என் அம்மாவின் பாட்டை பதிவு செய்து வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
அந்த பதிவு நாடாவைக் கொடுத்தால் நான் பதிவு செய்து கொண்டு திருப்பிக் கொடுக்கிறேன். என்று அவள் கேட்டபோது அந்த பெண்ணின் கண்களில் நீர் நிறைந்திருந்தது.எங்களுக்கு அம்மாவின் குரலைப் பதிவு செய்யத் தோன்றாது போயிற்று.ஆனால் நீங்கள் செய்திருப்பது எங்களுக்கு உதவியாக உள்ளது. என்றாள்.அவளிடம் ஆறுதலாக பேசி அந்த ஒலிநாடாவைக் கட்டாயம் தருவதாகக் கூறியபோது அவள் என் கரங்களைப் பற்றிக் கொண்டு நன்றி கூறினாள்.
பழையன என நாம் நினைக்கும் எல்லாப் பொருள்களும் பழையன என்று ஒதுக்கக் கூடியன அல்ல.சில நினைவுச் சின்னங்களாகவும் இருக்கக் கூடும் என்ற உண்மையை நாம் புரிந்து கொண்டு இத்தகைய நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும்.ஒருசிலருக்கு இவை பொக்கிஷங்கள் போல அரியதாகவும் கூட இருக்கலாம்.என் அனுபவங்கள் எனக்கு இந்தப் பாடத்தைத் தான் கற்றுக் கொடுத்தன.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

1 comment:

  1. சில விஷயங்களின், பொருட்களின் அருமை இருக்கும் வரை தெரிவதில்லை.... இல்லாதபோது தான் புரிகிறது... பொக்கிஷங்கள் நன்றாக இருந்தது....

    ReplyDelete