Thursday, July 19, 2012

25-பிஞ்சு நெஞ்சம்.

நான் ஆசிரியையாகப் பணியேற்ற புதிது. முதலில் ஐந்தாம் வகுப்பிற்குதான் ஆசிரியையாகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.அந்த பிஞ்சுக் குழந்தைகளைப் பற்றிய போதிய அறிவும் அனுபவமும் எனக்கு அப்போது இல்லை.அதனால் எனக்குத் தெரிந்த சில விஷயங்களைக் கதை மூலமாகக் குழந்தைகளுக்குச் சொல்வது வழக்கம்.கதை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது/ அதுவும் குழந்தைகளுக்குப் பிடிக்கக்கேட்பானேன்.அப்படி ஒருநாள் அம்மாவைப் பற்றிய என் கற்பனைக் கதையைச் சொல்லத் தொடங்கினேன்.
அம்மாவின் அன்பு நம்மீது அவள் கொண்டுள்ள  ஆசை அக்கறை நமக்காக அவள் செய்யும் தியாகம் வேலைகள் என்றெல்லாம் சொல்லிவந்தேன்.சில குழந்தைகள் தன் அம்மாவும் அப்படித்தான் என பெருமையாகச் சொல்லிக் கொண்டனர். வகுப்பு மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று ஒரு கேவல் சத்தம் எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறுமி அழுவது தெரிந்தது.கண்கள் குளமாக கேவலுடன் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணைப் பார்க்க மிகவும் வருத்தமாகிவிட்டது எனக்கு. அவளை அருகே அழைத்தேன்.தயங்கியவாறு வந்த பெண் தன் அழுகையை நிறுத்தமுடியாமல் தவித்தாள்.அருகே இருந்தவள்" டீச்சர், அவளோட அம்மா இறந்துட்டாங்க அவளுக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்குமாம்." என்ற போது என் மனத்துக்குள் யாரோ சாட்டையால் அடிப்பதைப்போல் வலியை உணர்ந்தேன்.
.
ஏதோ அறிவுரை கூறுவதாக என்ணிக் கொண்டு சற்று மிகைப் படுத்திக் கூறி இந்தப் பெண்ணின் மனப் புண்ணைக் கீறி வேதனைப் படுத்தி விட்டதற்காக மிகவும் வருந்தினேன்.

பின்னர் பேச்சை மாற்றி வகுப்பை சமநிலைக்குக் கொண்டு வந்தேன். ஆனால் அந்தப் பெண்ணின் வேதனை படிந்த கண்களையும் ஏக்கத்தில் துவண்ட மனவாட்டத்தையும் என்னால் மறக்க இயலவில்லை.
 
அன்று மாலையே அவள் இல்லம் சென்று அவளையும் அவள் தந்தையையும் பார்த்துப் பேசினேன். மீண்டும் அந்தப் பிஞ்சு நெஞ்சத்தில் மகிழ்ச்சியையும் முகத்தில் மலர்ச்சியையும்  பார்த்தபிறகே என் மனம் ஓரளவு அமைதியடைந்தது.
யார் மனமும் புண்படாமல் பேசவேண்டும் என்ற அனுபவத்தை இந்த நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன்.என் மனதை விட்டு அகலாத நினைவு என்றே சொல்லலாம்.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

2 comments:

  1. ஒரு சின்ன சம்பவத்தின் மூலம் தங்களையே மாற்றிக் கொள்ளும் குணம் நிறைய பேருக்கு வருவதில்லை... ஆனால், தங்களை நினைத்து சந்தோசப்படுகிறேன்... தாங்கள் அதை இன்னும் ஞாபகப்படுத்தி பதிவாக்கி தந்தமைக்கு நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உங்கள் அனுபவம் எங்களுக்கெல்லாம் ஒரு பாடம். நினைவிலிருந்த நல்ல விஷயத்தினை எங்களுக்கும் சொல்லியதற்கு நன்றிம்மா.

    ReplyDelete