Thursday, August 30, 2012

நினைத்துப் பார்க்கிறேன்.

நினைத்துப் பார்க்கிறேன்.
என் இளமைப் பருவம்.பதினெட்டு வயதில் திருமணமாகி கணவரின் இல்லத்தில் வாசம். வீட்டில்  வேலை அத்துடன் அரசுத் துறையில்  
ஆசிரியர் பணி. வேலைப் பளு அதிகம். வீட்டிலும் மூன்று குழந்தைகள். வயதானவர், குழந்தைகள், விருந்தினர், என்று கவனித்துச் செய்யவேண்டிய நிலை. பள்ளிக்கு நேரத்தோடு செல்ல வேண்டிய நிலை.எந்தக்  குழந்தையையும் சீராட்டி பாராட்ட இயலாத நிலைமையில் அவர்களுக்கு வேண்டியதைச் செய்து விட்டு பேருந்தைப் பிடிக்க ஓடவேண்டிய கட்டாயம். மாலையில் களைத்து வந்தால் மீண்டும் இரவுக்கான வேலை. இப்படிப் போயிற்று வாழ்க்கை.
ஆனால் இன்று நாற்பது ஆண்டுகளுக்குப் பின் ஒரு உறவினர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன்.அவர்களின் மூன்று வயது மகள் எழுந்தவுடன் அழுது கொண்டேயிருந்தாள். அவளை எடுத்து அணைத்து கொஞ்சி விளையாட்டுக் காட்டி குடிக்கப் பால் கொடுத்து சுமார் ஒருமணி நேரத்துக்குப் பிறகுதான் அந்தப் பெண் சமாதானமானாள்.அதுவரை அந்தக்குழந்தையின் பெற்றோர் அவளைத் தவிர உலகமில்லை என்பதுபோல அவளுடன் கொஞ்சிக் கொண்டிருந்தனர்.
அந்தக் காட்சியைப் பார்த்தபோது நான் எவ்வளவு பெரிய சுகத்தை சுவர்க்கத்தை இழந்திருக்கிறேன் என்று புரிந்தது.இதேபோல என் இரண்டு வயது மகன் தூக்கு என்று கைகளைத் தூக்கியபோது அவன் அழ அழ அதைக் கவனிக்காது சென்றிருக்கிறேன். காரணம் வேலைப் பளுவுடன் கடமைக்காக ஓடவேண்டிய நிலை. ஆனால் இன்று தனிமையில் அந்த நாளின் நினைவு எழும்போது மனம் ஏங்குகிறது. மனம் கனக்கிறது.இந்த நிலை என்போன்ற பெண்களுக்கு வரக்கூடாது என்பதால் சிறு குழந்தைகளை அவர்களை முடிந்தவரை கொஞ்சிப் பேசுங்கள்.அணைத்து அரவணைத்து மகிழுங்கள். ஆண்டுகள் கடந்துவிட்டால் இந்த இன்பம் கிட்டாது.தான் பெற்ற குழந்தைகளைக் கொஞ்சி மகிழாமல் போனோமே என்று வயதானபின் வருந்துவதில் பயனில்லை.
'குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல்கேளா தவர்' என்று வள்ளுவரின் வாய்மொழி எவ்வளவு உண்மையானது என்று இன்று நினைத்துப் பார்க்கிறேன். 






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

1 comment:

  1. வேலைக்குப் போகும் பல பெண்களின் நிலை இதுதான்மா. பிறந்து பால் குடி மறக்காத குழந்தைகளைக் கூட விட்டு விட்டு வேலைக்குப் போகிறார்கள் இக்காலத்தில்.... சூழ்னிலை தான் காரணம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

    நல்ல பகிர்வும்மா..

    ReplyDelete