Thursday, March 28, 2013

மூத்தோர் மனம்

மூத்தோர் மனம் 

ஒரு முறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.அருகே இருந்த ஒரு மூதாட்டி கலங்கிய தன கண்களைத் துடைத்துக் கொண்டே வந்தார்.பார்க்கவே பரிதாபமாக இருந்தது.அருகே அமர்ந்திருந்த  அவர.கணவர் சற்றுக் கடுமையாகஅவரைக் கடிந்து கொண்டபடியே சமாதானம் செய்தபடி இருந்தார். நானும் மனம் பொறுக்காமல் அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
காரணத்தை அவர் கூறியபோது அந்த அம்மாள் எவ்வளவு கண்மூடித்தனமான பாசம் வைத்திருக்கிறார் எனப் புரிந்து கொண்டேன்.வேறொன்றுமில்லை.இவர்கள் இருவரையும் பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு போய்வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளாமல் தன மகன் திரும்பிச் சென்று விட்டதைத் தங்களை அலட்சியப் படுத்திவிட்டதாக எண்ணி அழுகிறாள் அந்தத் தாய்.
அந்தத் தாயை ஒருவழியாக சமாதானம் செய்தேன்.வெகுநேரம் கழித்தே அந்த அம்மாள் சமாதானமானார்கள்.எனக்கும் இந்தத் தாயைப் பார்த்தபோது அந்த மகன் சற்று நேரம் நின்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருக்கும் இந்தத் தாயுள்ளம். இதை இந்தத் தலைமுறை ஏன் நினைத்துப் பார்க்க மறுக்கிறது என்று தெரியவில்லை.
நான் இறங்கவேண்டிய இடம் வந்தவுடன் அவர்களிடம் குறிப்பாக அந்த அம்மாளிடம் சொல்லிக் கொண்டு இறங்கினேன்.இந்த நிகழ்ச்சி என் மனதில் பதிந்திருந்ததால் நான் அதன்பின் எங்கு சென்றாலும் வீட்டில் சொல்லிக் கொண்டு போகும் பழக்கத்தை அனைவருக்கும் சொல்லிவைத்தேன்.
அன்று பள்ளிக்குச் சென்றபோது ஒரு ஆசிரியரின் தாயார் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது.அனைவரும் அவர்களின் இல்லம் சென்றோம். அந்த ஆசிரியர் தன தாய்க்கு ஒரே பிள்ளை.தினமும் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு வெளியே செல்லும் அவர் அன்று தாயிடம் சொல்லிக் கொள்ளாமல் பள்ளிக்கு வந்துள்ளார்.அவர் வந்து ஒருமணி நேரத்தில் தாயார் திடீர் மரணமடைந்துள்ளார்.
தாயாரின் பிரிவுக்காக அழுததைவிட கடைசிநாள் தாயாரிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டேனே. அந்தத் தாயின் மனத்தைக் கடைசி நாளில் ஏங்க வைத்துவிட்டேனே என்று அவர் கதறியது மனதை உருக்குவதாக இருந்தது.
இன்றைய இளைய தலைமுறைக்கு இளமையில் உறவுகளின் அருமை பாசம் புரிவதில்லை. அந்த பாசத்தை உணரும்போது உறவுகள் இருப்பதில்லை.
இதை இளைய தலைமுறை உணர்ந்து கொண்டால் இடைவெளிக்கு எது இடம்?

















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasaye
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

2 comments:

  1. மனதை உருக வைக்கிறது அம்மா...

    உங்களின் கேள்வியும் நியாயமானதே...

    தனிக் குடித்தனம் என்று ஆரம்பித்ததோ, அன்றிலிருந்தே பலவற்றை நாம் இழந்து கொண்டுள்ளோம்..

    ReplyDelete
  2. ஒரு சிறிய நேரம்.ஒரு செகண்ட். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒதுக்க மறுக்கும் குழந்தைகளை என்ன சொல்லித் திருத்துவது.:(

    நல்லவேளை எல்லாக் குழந்தைகளும் அப்படி இல்லை.வளர்ந்த பிள்ளைகள் தான் மாறுகிறார்கள். பெண்கள் அவ்வளவாகப் பெற்றோரை ஒதுக்குவதில்லை.
    நன்றி ருக்மணி.

    ReplyDelete