Friday, October 4, 2013

கற்றுக் கொடுங்கள்.

ஒருமுறை அருகே இருந்த ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன்.எங்கள் அருகே இருந்த ஒரு பெண் தன மூன்று வயது கூட நிரம்பாத மகளுக்கு தன கைபேசி எண்ணைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.என் உடன் வந்திருந்த தோழி அதைப் பார்த்துக்  கிண்டலாகச் சிரித்தாள்.
     நான் அவளிடம் என் சிரிக்கிறாய்? என்று கேட்டேன்.அதற்கு அவள்,"
"இந்த சின்ன வயதிலேயே பத்து எண்களை இந்தக் குழந்தையால் 
எப்படி நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.இந்தப் பெண் தன மகளை இப்போவே பெரிய அறிவாளியாகக முயற்சிப்பது பைத்தியக்காரத்தனமாகப் படவில்லையா?"என்று சிரித்தாள்.
அப்போது நான் சிரித்தேன்.இந்தக் காலத்துப் பெண்களுக்கு  எத்தனை கெட்டிக்காரத்தனம்? இதை இவள் புரிந்து கொள்ளவில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.
     சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை அவளுக்குக் கூறினேன் அதையே இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
"அப்போது என் மகனுக்கு ஐந்து வயது. அப்போதுதான் சற்றுத தொலைவில் உள்ள  பெரிய பள்ளியில் சேர்த்திருந்தோம் தினமும் பள்ளி வண்டியிலேயே சென்று வந்தான்.கொஞ்ச நாட்கள் வரை எந்த பிரச்னையும் இல்லை. நிம்மதியாக இருந்தேன்.ஒருமுறை நான் விடுமுறையில் இருந்தேன். அன்று மாலையில் மகனுக்குப் பிடித்த பூரி கிழங்கு செய்து வைத்துக் காத்திருந்தேன்.
பள்ளிவிடும் நேரம் கடந்து ஒரு மணி நேரம் ஆனபின்னரும் குழந்தை வரவில்லையே என்று ஆட்டோ பிடித்துப் பள்ளிக்குச் சென்று பார்த்தபோது,  
பள்ளி காலியாக இருந்தது.எல்லோரும் போய்விட்டார்கள் யாரும் இல்லையென்று காவல்காரர் சொல்லிவிட்டார்.எனக்கு என்ன செய்வது என்று புரியவேயில்லை.வேண்டாத தெய்வமில்லை.அடுத்து ஒருமணி ஓடிவிட்டது.நான்கு மணிக்கு வரவேண்டிய பையன் ஆறு மணியாகியும் வரவில்லையே என்று தவித்தபடியே இருந்தேன். அப்போதெல்லாம் இப்போது இருப்பது போல் தொலைபேசி வசதி பரவலாக இல்லை.அதனால் என் கணவர் வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
வாசலிலேயே காத்திருந்தேன். அப்போது அடுத்தவீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது என்று அழைத்தனர். ஓடினேன். என்ன செய்தியோ என்று என் உள்ளம் தவித்தது."ஹலோ,யார் பேசுவது?"
"அம்மா, உங்க பையன் எங்க கூட இருக்காம்மா."
உடனே ஒரு நிம்மதி என் மனதில் பரவியது.மகன் நலமாக இருக்கிறான்."ரொம்ப நன்றிங்கய்யா. எந்த இடத்திலே இருக்கான்? நான் வந்து அழைத்து வரேன் "
"சரிங்கம்மா. கவலைப் படாதீங்க. பயல் ஜாலியா எங்களோட அரட்டை அடிச்சுகிட்டு இருக்காம்மா.கேக் பிஸ்கட் குடுத்து உக்கார வச்சிருக்கோம்.அடையாறு பஸ் டிப்போவுக்கு வாங்க"என்று கூறி முடித்தார் அந்த நடத்துனர்.அதே சமயம் என்கணவரும் உள்ளே வந்தார்.அவரிடம் செய்தியைச் சொன்னவுடன் அப்படியே அடையாறு நோக்கிப் புறப்பட்டார்.
                      சுமார் அரைமணி நேரம் கழித்து மகனுடன் அவர்  வந்ததைப் பார்த்தவுடன்தான் என் தவிப்பு அடங்கியது.அவன் "அம்மா, எங்கள் பள்ளி வேன் ரிப்பேர்.அதனால எங்களை பஸ்ல எத்திவிட்டுட்டாங்க.அந்த பஸ் நம்ம ஸ்டாப்புக்கு வரவேயில்லை.அதனால நான் இறங்கவேயில்லை.எல்லா பஸ்ஸும் நிக்கிற இடத்துக்குப் போயிட்டேன். அந்த அங்கிள் டீ கேக் வாங்கிக் குடுத்தாரு.அப்புறமாதான் அடுத்தவீட்டு போன் நம்பர் குடுத்து உங்களுக்கு போன் பண்ணச் சொன்னேன்.
  "போன் நம்பர் உனக்கு எப்படித் தெரியும்?"
 "நானே பார்த்து வச்சிகிட்டேன்."
நல்லவேளையாக தொலைபேசி எண் தெரிந்திருந்தது.இல்லையேல் போலீசில்தான் ஒப்படைத்திருப்பார்கள்.போன் எண்ணைப் போலவே வீட்டு விலாசத்தையும் கற்றுக் கொடுத்திருந்தால் இத்தனை கஷ்டம் இருந்திருக்காது.
இந்த அனுபவம் இல்லாமலேயே இந்தக் காலத்துப் பெண் எவ்வளவு கவனமாகக் கற்றுக் கொடுக்கிறாள். இதை நாம் பாராட்டவேண்டும்."என்றவுடன் அந்தப பெண்ணை இப்போது மரியாதையுடன் பார்த்தாள்  என் தோழி.
இந்த என் அனுபவத்தை அறிந்த பிறகேனும் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் முன் பெயர் விலாசம் தொலைபேசி எண் இவற்றைக் கற்றுக் கொடுங்கள்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

4 comments:

 1. மிகவும் பயனுள்ள பதிவு. அவசியமாகக் குழந்தைகளுக்கு வீட்டு விலாசம் தொலைபேசி எண் முதலியவற்றைத்தான் முதலில் கற்றுக்கொடுக்கணும்..

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. சிறு குழந்தைகளுக்கு தங்கள் தாய் தந்தை பெயர்களையும் வீட்டு விலாசம் தொலைபேசி எண் போன்றவற்றைத் தெளிவாகக் கற்றுக்கொடுத்தல் நல்லதே... நன்றி....

  ReplyDelete
 3. பயனுள்ள பதிவு அம்மா...

  நன்றி...

  ReplyDelete
 4. எவ்வளவு பதறினீர்களோ ருக்மணி.
  இப்பொழுது குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் சொல்லித்தான் வைக்க வேண்டும்.என் தோழியின் மருமக்ள் ப்ரீ கேஜி படிக்கும் குழந்தையின் எல்லாப் பள்ளிப் பொருட்களிலும் விலாசமும் பெற்றோர் பெயரும் எழுதிவைப்பாள். அந்தக் குழந்தைக்கும் தெரியு,. வெகு அவசியமான பதிவு.

  ReplyDelete