Monday, August 18, 2014

57.கண்ணனின் லீலை.

கோகுலாஷ்டமி கொண்டாடிய மகிழ்ச்சியில் அனைவரும் இருப்பீர்கள். உங்கள் வீட்டுக் குழந்தைகளும் உங்களுடன் பட்சணம் செய்ய உங்களுக்கு உதவியிருப்பார்களே.அதுதான் வீட்டில் நெய் மனமும் என்னை வாசனையும் இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறதே.
                   சரி. பூஜையும் முடித்து முறுக்கு சீடை  ஸ்வீட் பழம் பாயசம் என்று நிவேதனப் பொருட்களை எல்லாம் ஒரு பிடி பிடித்திருப்பீர்கள்.ருசியாகவே இருந்திருக்கும். ஏனென்றால் அம்மாக்களும் பாட்டிகளும் அந்தக் கண்ணனுக்காக மட்டுமல்லாமல்  தங்கள் வீட்டுக் கண்ணனையும் நினைத்துக் கொண்டு செய்கிறார்கள் அல்லவா. ருசியாகத்தானே இருக்கும்.
         அந்த ருசியோடு இன்றைய கதாநாயகனைப் பற்றிய ஒரு செய்தியையும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். கண்ணனின் லீலைஎன்னும் அந்தருசியில்  மூழ்கி மகிழுங்கள்.
      கண்ணனின் தாயாரான யசோதை கண்ணனிடம் எங்கும் போகக் கூடாது என்று சொல்லி தயிர் கடையும் இடத்தில் உட்காரவைத்துவிட்டுப் போய் விட்டாள்.கண்ணனும் சாதுவாக அமர்ந்திருந்தான்.ஆனால் அவனால்  முடியுமோ.வாசலில் நண்பர்களின் சப்தம் கேட்டவுடன் வெளியே ஓடிவந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
         யார் வீட்டில் கோபி வேலையாக இருக்கிறள் என்று பார்த்து அந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.
வழக்கம்போல வெண்ணைப் பானை உரியில் இருந்ததைப் பார்த்தான் கண்ணன்.அவனுக்குத்தான் தெரியுமே எப்படி அதை எடுப்பது என்று.உரியில் கை வைக்கும் முன்பாகவே அதில் ஒரு மணி கட்டியிருப்பதைப் பார்த்துவிட்டான் கண்ணன்.
         அந்த வீட்டு கோபி கண்ணன் வந்து உரியைத் தொட்டால் சப்திக்குமாறு ஒரு மணியைக் கட்டியிருந்தாள் .அதைப் பார்த்துவிட்டு மெதுவாக அந்த மணியிடம் சொன்னான். "ஏ மணியே, நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும் வரை மணி அடிக்காதே." மணி சம்மதித்து அமைதியாக இருந்தது.
         இப்போது முதல் பானை இறங்கிற்று. அடுத்து இரண்டாம் பானையும் இறங்கிற்று.இனி உரியில் இருப்பது ஒரே பானை தான். நண்பர்கள் வெண்ணை தின்பதைப் பார்த்து மகிழ்ந்தவாறே உரியின் மேலிருந்த பானைக்குள் தன கையை வைத்து ஒரு உருண்டை வெண்ணையை எடுத்து வாயருகே கொண்டு சென்றான் கண்ணன்.
        அதுவரை அமைதியாக இருந்த மணி கணகண
வென்று அடித்து ஒலி எழுப்பியது. வேகமாகக் கீழே குதித்த கண்ணன் "ஏ மணியே, ஏன்  அடித்தாய்?நான்தான் அடிக்காதே என்றேனே. இவ்வளவு நேரம் சும்மா இருந்துவிட்டு இப்போது ஏன்  அடிக்கிறாய்?"
        "கண்ணா, பரந்தாமா, யுக யுகமாய் உனக்கு நிவேதனம் செய்யும்போது நான் ஒலி எழுப்புவதுதானே வழக்கம் இன்று நீ வெண்ணை உண்ணும் போது எப்படி நான் ஒலி
எழுப்பாமல் இருப்பேன்?" கண்ணன் அமைதியானான்.
           அதற்குள் கோபி வந்துவிடவே எல்லோரும் வெளியே ஓடினார்கள். ஆனால் அடுத்தவீட்டு கோபி தண்ணீர் எடுக்க யமுனைக்குச் செல்வதைப் பார்த்து அவள் வீட்டுக்குள் நுழைந்தனர்.அங்கும் உரியில் மணி கட்டியிருப்பதைப் பார்த்தான் கண்ணன்.
         அவனுக்கா தெரியாது.தன ஒரு கையால் மணியின் நாக்கை ஒலிக்காமல் பிடித்துக் கொண்டு மறுகையால் வெண்ணையைத் தின்று விட்டு ஓடினான்.
இவர்கள் கூட்டமாக ஓடுவதைப் பார்த்த கோபியர் தங்களுக்குப் பயந்து ஓடும் கண்ணனின் அழகில் மயங்கி நின்றார்கள்  கோகுலாஷ்டமியன்று உரியடிப்பது, ஓடிப்பிடிப்பது, ஒளிந்து விளையாடுவது போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்கிறோம்.என்ன,
வீட்டுப் பலகாரதோடு கண்ணனின் விளையாட்டும் ருசியாக இருந்ததா?




















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

1 comment:

  1. அந்தக்குட்டிக் கண்ணனைப் போன்றே அழகான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete