Wednesday, July 22, 2015

பொருளின் அருமை.

                சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் வீடுகளி ல் இவ்வளவு பொருட்கள் நிறைந்திருந்ததில்லை. மிகக் குறைவான பொருட்களிலேயே திருப்தியாக வாழ்ந்து வந்தனர். பணத்தின் அருமை தெரிந்தவர்களாக இருந்தனர் நம் பெற்றோர்.
              ஒரு பொருள்  தொலைந்து விட்டது என்றால் அதை எப்பாடு பட்டேனும் தேடி எடுக்கின்ற உள்ள உறுதியும் உடல் உழைப்பும் கொண்டவர்களாக இருந்தனர் என்றால் அது சற்றும் மிகையில்லை.ஏனெனில் என் .சிறுவயதில் எனக்கேற்பட்ட அனுபவத்தைச் 
சொல்கிறேன்.

               ஒருமுறை என் பிறந்தநாள் வந்தது.அன்று எனக்கு ஒருஜதை  தோடும் அந்தக் காலத்தில் லோலாக்கு எனச் சொல்லும் தொங்கட்டானும்  வாங்கி எனக்கு அதைப் போட்டு அழகு பார்த்தார் என் தாயார்.அவர் மனதில் ஏகத்துக்கு மகிழ்ச்சி.அந்த மகிழ்ச்சி அவர் முகத்திலேயே தெரிந்தது.

              அப்போது  எங்கள் வீட்டுக்கு அருகிலேயே புது வீடு கட்டிக் கொண்டிருந்தனர். வீடு கட்டுவதற்காக ஒரு வண்டி மணல் வந்து இறங்கியிருந்தது.அந்தத் தெருவில் இருந்த சிறுவர் சிறுமியர் நல்ல நிலவு வெளிச்சத்தில் அந்த மணல் குவியலில் குதித்து விளையாடினோம்.வெகுநேரம் கழித்து அவரவர் இல்லம் திரும்பினோம்.கைகால் அலம்பிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்த என்னை என் அம்மா பார்த்தார்.
"ஏண்டி! காதிலே எங்கே காணோம்?" சட்டென அப்போதுதான் என் காதுகளைத் தொட்டுப் பார்த்தேன்.
'ஐயோ' வலது காதில் தொங்கட்டானும் இல்லை தோடும் இல்லை. அழுகை பொங்கி வந்தது. என் அம்மா சமாதானம் செய்து சாப்பிட வைத்தார். சற்று நேரத்தில் களைப்புடன்  தூங்கிவிட்டேன்.  

                  ஆனால் என் தாயார் தூங்கவேயில்லை. என் தந்தையார் துணை நிற்க கையில் மணல் சலிக்கும் பெரிய சல்லடையை எடுத்துக்கொண்டு மணல் குவியலின் அருகே வசதியாக அமர்ந்து கொண்டார். தந்தையாருடன் பேசிக் கொண்டே மணலை சலிக்க ஆரம்பித்தார்.நான் ஒரு இடத்திலா குதித்திருப்பேன்? எதையும் நினைத்துப் பார்க்கவில்லை. ஏதோ நம்பிக்கையில் சலித்தார் சலித்தார் சலித்துக் கொண்டே இருந்தார்.
வெகு நேரம் கழித்து திருகாணி மட்டும் கிடைத்தது. மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் மீண்டும் சலித்தார். கிட்டத்தட்ட அரைவண்டி மணல் சலித்துவிட்டார். ஒரே சமயம் தோடும் லோலாக்கும் சல்லடையில் மாட்டிக் கொண்டது.வெற்றியுடன் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து படுக்கும் போது கிட்டத்தட்ட விடிந்து விட்டது.

                     இந்தக் கதையை மறுநாள் என் தந்தையார் சொல்லித் தெரிந்து கொண்டேன். அன்றே என் காதுகளில் தொங்கட்டானை மாட்டியவர் ""அடிக்கடி காதைத் தொட்டுப் பார்த்துக்கோ.பொருள் வாங்கறது பெருசில்லே வாங்கின பொருளைப் பாதுகாக்கிற துதான்பெருசு ." என்று சொன்னபோது எட்டு வயது சிறுமியாகிய நான் தலையை ஆட்டுவது தவிர வேறு என்ன செய்ய முடியும்? ஆனால் அம்மா பட்ட கஷ்டத்தை நினைத்தபோது கண்களில் நீர் திரண்டது. அதைக் கண்டு அம்மா அணை த்துக் கொண்டார். 

              அந்த நம்பிக்கை மனஉறுதி உழைப்பு நமக்கு இப்போது இருக்கிறதா என அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.


-



-
ருக்மணி சேஷசாயி  
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

2 comments:

  1. அனுபவம் தரும் பாடம்....

    வாங்கிய பொருளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் வேண்டும் என்பதை உணர்த்திய நிகழ்வு.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா..

    ReplyDelete