Friday, April 19, 2019

55 ரயிலில் சந்திப்பு


சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வதுஎன்பது பழக்கத்தில் அதிகமாக இல்லாமலிருந்தது.ஒருமணி இரண்டு மணி நேரம் முன்பாகவே வந்து   ரயிலில் இடம் பிடித்து பயணிப்பவர்களும் துண்டு விரித்துப் போட்டு இடத்தை   விற்கும் போர்ட்டர்களும் இருந்தகாலம்..

அதுபோல் ஒரு மாலை வேளை.எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்குச் செல்லும் ரயில் வண்டி நின்று கொண்டிருந்தது.எங்கே கூட்டம் அதிகமில்லையெனத் தேடிக் கொண்டே வந்தான்  லக்ஷ்மணன் ஒரு பெட்டியில் கூட்டமும் இல்லை இடமும் காலியாக இருந்தது.உடனே தன மேல்துண்டை எடுத்துப் போட்டு ஒரு இடம் பிடித்து விட்டு அப்பாடா என்று மூச்சு விட்டான்.பெட்டிக்குள் சலசலவென்று பேச்சு சப்தம் தாங்காமலும் காற்றுக்காகவும் வெளியே வந்து நின்றான்.

மீண்டும் அவன் உள்ளே பார்த்தபோது திடுக்கிட்டான்.அவனது துண்டு மூலையில் சுருண்டு கிடந்தது ஒரு புதிய அங்கவஸ்த்திரம் அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது.வேகமாக உள்ளே நுழைந்தவன் அங்கவஸ்திரத்தைத் தூக்கி  எறிந்தான் அந்த இடத்தில் நன்றாக அமர்ந்து கொண்டான்.

வண்டி புறப்படப் போகும் சமயமாகிவிட்டதை அறிவிப்பு அறிவித்தது.அப்போது அந்த இடத்துக்கு வந்த மணி ஆக்ரோஷமாக லக்ஷ்மணன் மடியில் அமராத குறையாக அமர்ந்தான்.அவனைத் தள்ளிவிட்டவன்,"என்னய்யா, ஒருமணி நேரமாக என் துண்டு  போட்டு இடம் பிடித்திருக்கிறேன் நீ இப்போது வந்து என்னைத் தள்ளுகிறாயா."என்றான் கோபமாக
            
"இடம் காலியாக இருந்தால் யார் வேண்டுமானாலும் அமரலாம்.உங்கப்பன் வீட்டு வண்டியா இது."

"உங்கப்பன் வீட்டு வண்டி என்ற நினைப்புதான் உனக்கு.சரிதான் எழுந்து போ அந்தப்பக்கம்."

வார்த்தை கனத்தது. வண்டியில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில பெண்கள் முகம் சுளித்தார்கள்.ஆனாலும் அவர்கள் சண்டை நின்றபாடில்லை.வண்டி வேகமெடுத்தது.நுங்கம்பாக்கம் கோடம்பாக்கம் என்று ஒவ்வொரு இடமாகத் தாண்டிக் கொண்டே வந்தது.
அடுத்த நிறுத்தம் தாம்பரம்தான்.

மணி உறுமினான். "தாம்பரம் வரட்டும் உன்னைத் தூக்கி பிளாட்பாரத்தில் எறிந்து விடுகிறேன்."

இருவரும் சளைக்காமல் சண்டையிட்டுக் கொண்டே வந்தனர்.

ஒரு வழியாக தாம்பரம் வந்ததும் ரயில் உறுமியபடியே நின்றது..

லக்ஷ்மணனும் மணியும் ஒரே பாய்ச்சலில் ஜன்னலருகே வந்தனர்.மணி"கோபால், கோபால்,"எனக் கூவி யாரையோ அழைத்தான்.அதே சமயம் லக்ஷ்மணனும்,"மாமா, மாமா..'என்று
அழைத்தான்.வேகமாக வந்த கோபால் என்ற நபர் வண்டிக்குள் நுழைந்து லக்ஷ்மணனைப் பார்த்து "நல்லவேளை லக்ஷ்மணா, இடம் பிடித்தாய்"என்றபடி அமர்ந்தார்.

சட்டென்று அருகே நின்ற மணியைப் பார்த்து ,"மாப்பிள்ளை நீங்க எங்கே...",என்றார்.

"உங்களுக்கு இடம் பிடித்து வைத்தேன். அதே இடத்தை  இவரும்
பிடித்திருந்தார்.கொஞ்சம் தகராறாகிவிட்டது.இப்போது லக்ஷ்மணனும் அசடு வழிந்தார்.

"லக்ஷ்மணா, இது என் தங்கை வீட்டுக்காரர்.டெல்லியிலிருந்தவர்.

இப்போதான் சென்னைக்கு வந்திருக்கிறார்." என்றவர்"மாப்பிள்ளை இது என் மச்சினன்.தாம்பரத்தில் கடை வைத்திருக்கிறான்."என்று அறிமுகப் படுத்தவே இருவரும் கை குலுக்கிக் கொண்டே புன்னகை புரிந்து கொண்டனர். அதற்குள் ரயில் ஊதவே இருவரும் கோபாலுக்கு கை அசைத்து விடைகொடுத்தனர். ரயில் பெட்டியில் இருந்த அனைவரும் நடந்ததை நினைத்து  அப்பாடா, ஒரு பூகம்பம் வர இருந்தது எப்படியோ சரியாயிற்று என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

No comments:

Post a Comment