Thursday, August 9, 2012

26 கண்ணனின் மனம்

Lord Sri Krishna




இன்று கண்ணனின் பிறந்த நாள்..கோகுலாஷ்டமி என்று இந்த நாளைக் கொண்டாடுகின்ற சிறப்பான  நாள்.இதுபோன்ற நாட்களில் கொண்டாடுவது மட்டுமல்லாது இந்த நாள் மூலமாக இறைவன் நமக்குக் காட்டும் பல நல்ல பண்புகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கண்ணன் அரசகுமாரனாகப் பிறந்து ஆயர்பாடியில் வளர்ந்து ஆடு மாடு மேய்த்து எளிமையாக வாழ்ந்தான் என்ற கதை நமக்குத் தெரியும்.எளிய சிறுவர்களான ஆயச் சிறுவர்கள்தான்  அவனது உயிர்த் தோழர்களாக இருந்தனர்.அவர்களுடன் அவன் ஆடிப் பாடி மண்ணில் புரண்டு விளையாடி  உயிர் நண்பனாகத் திகழ்ந்தான். அந்த ஆயச் சிறுவர்களும் கண்ணனைத் தங்களின் உயிராக எண்ணி இருந்தனர்.கண்ணனையே தங்களின் தலைவனாக எண்ணி ஒவ்வொரு சொல்லும் செயலும் கண்ணனுக்காகவே என்று வாழ்ந்து வந்தனர்.
            ஒருநாள் கண்ணன் அமர்ந்திருக்கும் வேளையில் அவனைப் பார்த்த அச் சிறுவர்கள் அவனுக்கு மணி மகுடம் சூட்ட எண்ணினா வெகு நேரம் சிந்தித்தனர். அவன் அழகுக்கும் சிறப்புக்கும் ஏற்றவாறு ஒரு சிறந்த மகுடத்திச் சூட்ட எண்ணினர்.அப்போது அங்கே வந்த ஒரு மயிலைப் பார்த்தனர்.உடனே மயிலின் பின்னே ஓடி இறகுக்காகக் கையேந்தினர்.அவர்கள் கண்ணனின் நண்பர்களன்றோ.அவர்கள் கேட்டதும் கொடுப்பது எத்தனை புண்ணியம் என்று அந்த மயில் எண்ணியதோ என்னவோ.தன் மேனியிலிருந்த மயில் பீலிகளை உதிர்த்தது.அதனைப் பொறுக்கிக் கொண்டு ஓடிவந்த அந்த கோபச் சிறுவர்கள் அதனை கண்ணனின் தலையில் செருகினார்.  
கண்ணன் மகிழ்ச்சியோடு சிரித்தான்.தினமும் மயில் பீலி அவன் தலையை அலங்கரித்தது.
கம்சவதம் முடிந்தபின்பு மன்னனாகக் கண்ணன் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது மறக்காமல் மயில் பீலியைத் தன் நண்பர்களின்  அடையாளமாகக் கண்ணன் சூடிக் கொண்டதுதான் அவனது உள்ள உயர்வை எடுத்துக் காட்டுகிறது. எந்த நிலைக்கு நாம் உயர்ந்தாலும் நம் அன்புக்குரியவர்களையும் நம் மீது அன்பு செலுத்தியவர்களையும் நாம் மறக்கலாகாது என்ற சிந்தனையை இந்தப் பண்டிகை நாளில் நாம் தெரிந்து கொள்வோம்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

1 comment:

  1. நல்லதொரு நாளில் இனியதொரு பகிர்வு அம்மா... நன்றி...

    ReplyDelete