Friday, June 3, 2011

எனது முதல் அனுபவம்


பலமாதங்களாக ஷிர்டி என்னும் புண்ணிய பூமிக்குச் சென்று பகவான் ஸ்ரீ சாயி பாபாவை தரிசிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே இருந்தேன். அதற்கான நேரமும் வந்தது. நானும் என் கணவரும் ஷிர்டியை அடைந்தோம்.


அங்கே ஒரு அறையை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு இரவு தங்கினோம். இரவு ஒன்பது மணிக்கு இரவு ஹாரதியைப் பார்க்க கோவிலுக்குச் சென்று பாபாவை நன்கு தரிசித்தோம்.அனைவரும் ஹாரதியை தரிசிக்கும் பொருட்டு ஆங்காங்கே ஒளிப்படக் காட்சி தெரியுமாறு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. கூட்ட நெரிசல் இல்லாமல் வெளியில்நின்றவாறே பாபாவின் ஹாரதியைத் தரிசிக்க முடிந்தது.

திருப்தியாக தரிசனம் முடித்துக் கொண்டு அறைக்குத் திரும்பினோம். பாபாவின் கருணை பொழியும் முகமும் கண்களும் மனதில் பதிந்து போனது. மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது..மறுநாள் நாங்கள் சென்னைக்குத் திரும்பவேண்டும்.

பொழுது விடிந்ததும் நாங்கள் புறப்பட ஆயத்தமானோம். புறப்படுமுன் கோவிலுக்குச் சென்று தரிசனம் முடித்துக் கொண்டோம்.காலை உணவு குறைந்த விலையில் கோவில் வளாகத்திலேயே    வாங்கிச் சாப்பிட்டோம்.பின்னர் அறைக்குத் திரும்பி எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு அறையை காலி செய்துவிட்டு தெருவில் நடந்தோம்.அப்போது தரிசன நேரமாக இருந்ததால் தெருவில் நல்ல கூட்டம். முண்டியடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டியிருந்தது.அப்போது என்முன்னே ஒரு வயோதிகர் தன் இளைத்த கரங்களை நீட்டினார்.

சுற்றிலும் மக்கள் கூட்டம். என் கணவரோ  முன்னால் சென்று விட்டார் அவர் எங்கிருக்கிறார் எனப் பார்த்துக் கொண்டே கூட்டத்தைத தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்த என்னால் அந்தக் கிழவருக்கு எதையும் தானம் தரஇயலவில்லை. இருந்தாலும் ஏதோ உணர்வு உந்தவே என் கைப் பையைத் துழாவினேன். சோதனையாக சில்லறை எதுவும் தட்டுப் படவில்லை. நான் நடந்து கொண்டே இருந்தேன். அவரும் என்னைத் தொடர்ந்தார்.எனக்குக் காசு எதுவும் தட்டுப் படாததால் பேசாமல் விரைவாக நடக்கத் தொடங்கினேன். 


தொடர்ந்து நடந்து வந்த கிழவர் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். சற்றுத் தொலைவு சென்று நான் திரும்பிப் பார்த்தேன்.அப்பா!அந்தக் கண்கள்!அவற்றை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் எங்கே? ஆ!நினைவு வந்தது பகவான் பாபாவின் முகத்தில் அந்தக் கண்களின் தீட்சண்யத்தைப் பார்த்திருக்கிறேன்.

என் உடல் சிலீரென்று சிலிர்த்தது. பகவான் என்னை சோதித்தாரா? நான் நின்று அவருக்கு ஏதேனும் தானம் செய்திருக்கவேண்டும். கூட்டத்தைக் காரணமாக்கி நிற்காமல் சென்றது பெரும் தவறு எனப் புரிந்தது. தன் முன்னே நீண்ட கரத்தில் தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடனே கொடுத்திருக்க வேண்டும்.சற்றே அலட்சியம் காட்டியது பெரும் மன உளைச்சலைக் கொடுத்து விட்டதே என எண்ணி எண்ணி இன்று வரை மனம் சஞ்சலப் பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்குப் பின்னர் இரண்டு முறை அதே இடத்திற்குப்போய்  அந்தப் பெரியவருக்கு தானம் செய்ய எண்ணியும் நடக்கவில்லை அவரையும் பார்க்க முடியவில்லை.

அன்று முதல் தரவேண்டும் தருமம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் எதையேனும் கொடுத்து விடவேண்டும் என்றஎண்ணம் என் உள்ளத்தில் தோன்றியது.
இன்றும் ஷிர்டி என்ற பெயரைக் கேட்டாலே அந்த முதியவரின் ஏக்கம் நிறைந்த விழிகள்தான் என் கண் முன் தோன்றுகிறது. எனவே இந்த அனுபவத்தின் மூலமாக கொடுப்பதை உடனே கொடுத்துவிட வேண்டும் என்ற பெரிய உண்மையை  புரிந்துகொண்டேன்   

1 comment:

  1. தானம் கொடுக்க வேண்டும் என நினைத்தால் உடனே கொடுத்துவிட வேண்டும்... நல்லதொரு விளக்கம்... யோசித்தால் அந்த தானம் செய்யவிடாமல் நிறைய விஷயங்கள் தடுக்கும் என்பதை உங்கள் அனுபவத்தின் மூலம் அழகாய் சொல்லி விட்டீர்கள் அம்மா.

    முடிந்தால் Comment Verification என்பதை எடுத்து விடவும்... அது கருத்திட விரும்பும் நண்பர்களை தொல்லைப் படுத்தும்... எப்படிச் செய்ய வேண்டும் என்பது தெரியாவிடில் சொல்லுங்கள்...

    ReplyDelete